’ரிஷி’யின் கவிதைகள்

0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 25 in the series 20 ஏப்ரல் 2014

 

 

  1. 1.  நுண்ணரசியல் கூறுகள்

 

அ]

 

உங்கள் எழுத்தை வெளியிட வேண்டுமா?

கண்டிப்பாக கழுத்தின் நீளத்தைக் குறைத்துக்கொண்டுவிடுங்கள்.

உங்கள் படைப்பு மொழிபெயர்க்கப்பட வேண்டுமா?

தரை மீது தலைவைத்து நடக்கப் பழகுங்கள்….

நீளும் நிபந்தனைகள்.

நுண்ணரசியலாளர்களின் கைகள் கட்டமைக்கும்

நவ கொத்தடிமை வடிவங்கள்.

 

ஆ]

 

கழுத்தை நெரித்தால் தான் கொலை; வன்முறை.

நாங்கள் படைப்பை நெரித்துக் குழிதோண்டிப் புதைப்போம்

கருத்துச் சுதந்திரத்திற்குக் குரல் கொடுத்தவாறே!

உட்கட்சி ஜனநாயகம் வேண்டிப் பதைப்பதெல்லாம்

உன்மத்தமல்லாமல் வேறென்ன?

ஆழிசூழ் உலகு தான்.

எனில் அதுவும் நாங்கள் சொல்லித்தான்

வழிமொழியப்பட வேண்டும்.

 

 

  1. 2.  மின்னஞ்சலில் முக்கிய(?)ச் செய்திகள் அனுப்பித்தந்து கொண்டிருப்பவருக்கு…

 

மன்னிக்கவும்.

’மிக்க நன்றி’ என்று சொல்ல இயலாமைக்கு வருந்துகிறேன்.

இன்றுவரை அரைக்காணி நிலமும் சொந்தமில்லை தான்

என்றாலும்

செய்தித்தாள் வாங்காதிருந்ததில்லை யொருநாளும்.

நடுநிலைச் செய்திக்காய் நாலு வாங்கும் நாட்களும் நிறையவே உண்டு.

கணினி இயக்கத்தில் மேதையில்லை எனினும்

‘கூகுள் சர்ச்’ தெரியாத அளவு பேதையுமில்லை.

கூடவே, யாரனுப்பும் செய்தியின் உள்நோக்கத்தையும் பொருள்பெயர்ப்பதும்

காலத்தே கைவந்த கலையாகிவிட்டது.

கண்டந்தோறும் நடந்துகொண்டிருப்பவற்றையெல்லாம் கணத்தில் கொண்டுவந்துசேர்க்கும் தொழில்நுட்பங்கள்

நம்மைச் சுற்றி நிறைய நிறைய.

தெரியும்தானே உங்களுக்கும்.

அலைபேசியில் கூட வளவளவென்று பேசப்பிடிப்பதில்லை.

சுருக்கமாகவே சொல்லிவிடுகிறேன்.

நீங்கள் சொல்வதற்கெல்லாம் ’ஓ!’ போடச் செய்து

என் அறிவை விருத்திசெய்யும் பிரயத்தனத்தில்

தலையும் வாலும் அற்ற ‘முண்ட’ச் செய்திகளைத்

திரும்பத் திரும்ப மின்னஞ்சல் செய்து

என் ‘செல்ல’ ஸ்பாம் பெட்டியை வீங்கிப் புடைத்து

வெடிக்கும்படி செய்துவிடாதீர்கள்.

 

 

  1. 3.  சுரண்டலின் பரிமாணங்கள் அல்லது பகற்கொள்ளைகள் பலவிதம் அல்லது ஒரு பிழைப்புவாதியின் கையில் மொழிபெயர்ப்பு அல்லது………

 

’மூத்திரம் குடித்து மலம் உண்டது பூதம்’ என்று முடித்து

கிச்சுகிச்சு மூட்டி குழந்தையை சிரிக்கவைக்கப் பிரயத்தனப்பட்டுக்கொண்டிருந்தது கதை.

பெரியவர்களின் பகற்கனவுகள் அல்லது மனவக்கிரங்களே

பிள்ளைகளுக்கான கதைகளாகிவிடுகின்றன பெரும்பாலும்.

சுத்தம் சுகாதாரம் சிதைத்து சிரிக்கவைக்கப்பார்ப்பது சரியல்ல என்றேன்.

மனம்போல் மாற்றிக்கொள்ளுங்கள் மொழிபெயர்ப்பாளரே என்றார்.

மகா கம்பீரமாய்.

குழந்தைக் கதைகளாயிற்றே என்று அரைக்கட்டணத்திற்கு மொழிபெயர்க்க ஒப்புக்கொண்டேன் ஆங்கிலத்தில்.

மின்னஞ்சலில் அனுப்பித் தந்து மூன்றுவருடங்களாயிற்ரு.

மிச்சக்காசு இன்னும் வந்துசேரவில்லை.

கேட்கும்போதெல்லாம் உடல்நிலை சரியென்றும் நிதிநிலை சரியில்லையென்றும்.

நாகூசாமல் [பொய்] சொல்லிவந்தவர்

நாளடைவில் கைபேசியில் சிக்காமல் நழுவிப் போனார்.

ஒருவழியாய் வலைவீசிப் பிடித்தபோது

வேறு கதை எழுதியிருக்கிறீர்களே என்று எகத்தாளம் பேசினார்.

உங்கள் மொழிபெயர்ப்பு பழுது என்றார்.

இன்னமும் மிச்சத்தொகைக்காய் நான் இலவுகாத்த கிளியாய்

நீதிமணியை ஒலிக்கச்செய்துகொண்டிருக்கிறேன்.

நின்றுகொல்லவாவது வேண்டும் தெய்வங்கள்..

———————————————————–

Series Navigationதிராவிட இயக்கத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் – 3ப.சந்திரகாந்தத்தின் ‘ஆளப்பிறந்த மருதுமைந்தன்’ நாவல்சீதாயணம் நாடகப் படக்கதை – 29​
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *