ஆகவே     

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

         -எஸ்ஸார்சி

SRC POTO

மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே. அந்தப் புனித நகராம் வாரனாசியில் தான் தோழர்கள் கூடியிருந்தார்கள்.ஒரு நூறுபேருக்கு இருக்கலாம். எல்லாரும் எப்படியோ ஒரு விதத்தில் இயக்கத்துக்கு தொடர்புடையவர்கள். நீங்கள் நினைக்கும் அந்த அதே இயக்கம்தான்.

என்னை ப்பொருளாதாரம் பற்றிய விரிவுரைக்கு மட்டும் அழைத்திருந்தார்கள்.ஏழு நாட்கள் தொடர்ந்து வகுப்பு காலை மாலை என இரண்டு பகுதிகள்.ஒரு நாள் காலை முழுவதும் பொருளாதாரம் பற்றிப்பேசினேன்.பொருளில்லாதவர்க்கு இவ்வுலகமில்லை. யாவருக்கும் அனுபமாகும் பெரு விஷயம். பொருளாதாரப் பிதாமகன் ஆடம்சுமித் தொடங்கி கொல்கத்தாவின் அமர்த்தியா சென் வரை சொல்லிமுடித்தேன். பாடம்தான் எப்போதும் இருக்கவே இருக்கிறது. இடையே நான் போட்ட பிட்(இடையுள்)ஒன்று உண்டு. அது மட்டும் உங்களோடு காதும் காதும் வைத்தமாதிரி சொல்லிவிட்டால் தேவலை என்பதாய் எனக்குள் சின்ன அபிப்ராயம்.

ஆ ஒன்று பற்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.வெள்ளைக்காரன் ஆட்சியேலேயே ராணுவத்தில் வேலை.எத்தனை பெரிய உத்தியோகம் விமானப்படையில் ஒரு லெப்டினெண்ட்.அந்தப் பணியின் ஆகிருதி பற்றியெல்லாம் புரிந்துகொள்வது என்பது இப்போது கொஞ்சம் சிரமம்தான்.

சிவப்பு அட்டைபோட்டுக்கொண்ட புத்தகங்கள் நான்கினை எங்ககேயோ எப்படியோ தன் பெட்டி படுக்கையோடு யாரோ ஒரு புண்ணியவான் மறைத்து வைத்துவிட அந்த மாபெரும் குற்றத்திற்காகத்தான் ஆ ஒன்றுக்கு தண்டனைப் பணி நீக்கம்.அரைகாசு பெற்றாலும் அரசாங்கச்சனம்பளம் என்கிற அந்த ஜிகினா பந்தா போய்விட்டபிறகு வேறு வழி ஒன்றும் தெரியாமல் இந்தபொதுவுடமைக்காரர்களோடு தொடர்பு வந்தது. கதை போட்டுக்கொண்ட பாதை அப்படி.. அந்தத்

தொடர்பு மொட்டாகி ப்பூவாகி காயாகி க்கனியானது. தன்னைமுன்னிறுத்திக்கொள்ளும் வித்தை கைவசம். ஆகத்தான்பொதுவுடமை தத்துவங்கள் சரியாய்ப் பயில நாடு விடுதலை அடைந்த பின்னே மாஸ்கோ இத்யாதி நகரங்கள் சென்று ஆண்டுக்கணக்காய்த்தங்கிப்படித்து தாய்நாடு திரும்பியவர் இந்த ஆ ஒன்று.எத்தனையோ பேர் லெனின் பூமிக்குப்போனார்கள். பாட்டாளி வர்க்க அரசியல் படிக்கப்போனார்கள், உடல் சுகமில்லாதவர்கள் மருத்துவம் பார்த்துக்கொள்ளக்கூடத்தான் போனார்கள்சிவப்பு வண்ணத்தில் அட்டைப்போட்டுக்கொண்ட புத்தகங்கள் தயார் செய்து ஒரு ஊர்விட்டுவிடாமல் உலகம் முழுவதும் மூட்டை மூட்டையாய் அனுப்பி அனுப்பி வைத்தே திவாலாகிப்போனவர்கள் வாசம் செய்த திருப்பதிதானே அந்த மாஸ்கோ.

ஆ ஒன்று இருக்கிறாரே அவர் சிவப்புத் தத்துவங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.மார்க்சீய அறிவியல் என்றால் அவருக்குச்சொல்லவே வேண்டாம்.கல்வி இலாகாவுக்கு அவரே பொறுப்பானார்.எத்தனையோ தத்துவ வகுப்புக்கள்.மாவோயியமா,பவுத்தமா,திராவிடமா,பாசிசமா,எதுவானால்தான் என்ன பேச ஆரம்பித்தால் இடையில் நின்றது என்கிற வார்த்தையேது.குறிப்புக்கள் எடுத்துக்கொண்டே போகலாம்.அவர் வெளியிட்ட புத்தகங்கள் எத்தனையோ.எல்லாம் அவ்வப்போது டபக் டபக்கென்று விற்றும் விடும்.அவர் எழுதி ஒரு பத்திரிகையில் வெளி வராத கட்டுரை என்று எதுவும் உண்டா என்ன.எது பற்றி வேண்டுமானாலும் கேளுங்கள்.ஆ ஒன்று எதிர்கொள்ளாத கேள்விதான் ஏதும் உண்டா புதிதாக என்னத்தை அய்யா கேட்டுவிடப்போகிறீர்கள்.

ஆனால் ஒரு விஷயம் ஆ ஒன்று இன்று நம்மோடு இல்லை.வெறும் தத்துவத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என்னசெய்ய,செயல்பாடு என்பதுவோ பூச்சியம் ஆகவே.

ஆ இரண்டு பற்றியும்சொல்லவேண்டும்.போராட்டம் போராட்டம் போராட்டம். ஆ இரண்டுக்குப்போராடாத அந்த நாள் எல்லாம் பிறவா நாளே.

சுற்றி ச்சுற்றி வரும் எத்தனைத்தோழர்கள்.மறியல் என்றால் மெய்யாலுமே மறியல்.முற்றுகை என்றால் மெய்யாலுமே முற்றுகை,புரட்சி என்றால் மெய்யாலுமே புரட்சி.உதவி செய்வது என்றால் வீழ்ந்து புரண்டு உதவி செய்வது,இயக்கத்துக்கு நிதியா வேண்டும் தேனீயாய் உழைத்து நிதி திரட்டித்தருவார்,கோஷம் போடணுமா இல்லை கொடிதான் ஒட்டணுமா இல்லை கொடி கட்டணுமா சொன்னால் போதும் இயக்க காரியம் முடிந்து விட்ட மாதிரிதான்

ஆனால் ஒரு விஷயம் ஆ இரண்டு இன்று நம்மோடு இல்லை.வெறும் செயல்பாட்டை மட்டுமே வைத்துக்கொண்டு என்னசெய்ய, தத்துவ ஞானம் என்பது பூச்சியம் ஆகவே.

ஆ மூன்று பற்றி உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம்.இவர் சிறைக்குப்போனமாதிரி யார் அய்யா போனார்கள். இந்திய மண்ணின் அத்தனைச்சிறையும் பரிச்சயம். பாரத நாட்டு விடுதலை இயக்கத்தில் பங்கேற்ற ப்பெரிய மனிதன் ஆயிற்றே.ஓடி ஒளிதல் அறியாப் பிறவி. அஞ்சுதலென்பதுதான் இவர் அகராதியிலேது. நாட்டை ஆண்டுவிட்டுப்போன அந்த வெள்ளைக்காரன் தடியால் அடித்து ஒரு கால் ஊனம் ஆனது. வெள்ளைக் கதரோடுதான் தன் கட்டை போகும் பின் வேகும் என்கிற அவரின் உறுதி பிரமிக்கத்தான் வைக்கிறது.

ஆனால் ஒரு விஷயம் ஆ மூன்று இன்று நம்மோடு இல்லை. வெறும் தியாகத்தை மட்டுமே வைத்துக்கொண்டு என்ன செய்ய,தான் பிறந்த அந்தசாதி மீது கொண்ட பற்று அவரை அவ்வப்போது ஆட்டி ப்படைக்கிறதே. ஆகவே.

ஆ நான்கு பற்றிக்கட்டாயம்சொல்லிவிடவேண்டும். இந்திய நாடு ஒரு விவசாய நாடல்லவா. விவசாயிகள் பிரச்சனை பற்றி இவரைவிடத்தெரிந்தவர்தான் இங்கே உண்டோ. இந்திய நதிகள் தேச உடமை ஆக வேண்டும் என்று உரத்துக் குரல் தந்தார்.நதி நீரை நுகர்வோர் எல்லாரும்தான் மொத்தமாய்ச்சண்டைக்குத்தான் வந்தனர் அவரோடு.சர்வதேசியம் பேசியது எல்லாம் ஒரு வழியாய் மூட்டைக்கட்டி வைத்தாயிற்றா என்று அவர் கேட்டது பெரும் பிரச்சனை ஆனது.பெரிய இடத்திற்கே கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

ஆனால் ஒரு விஷயம் ஆ நான்கு இன்று நம்மோடு இல்லை. வெறும் வேளாண் அறிவு மட்டுமே எப்படிப் போதும், சாதாரண நடைமுறைத்தந்திரம் அறியாத ஒருவரை வைத்துகொண்டு இயக்கத்தில் என்னதான் செய்வது. ஆகவே.

ஆ ஐந்து பற்றி நீங்கள் அறிவதும் நல்லதே.இலக்கியம் மொத்தமும் கரைத்துக்குடித்தவர். இது அந்த அவர்கள் மட்டும் சொன்னால் தவறாகிவிடும். ஊரே சொல்கிறதே.ஆகத்தான் நீங்களும் நாங்களும் சொல்ல வேண்டிய கட்டாயமும் வருகிறது.கம்ப ராமாயணத்தைப்பாழும் கடல் கொண்டு போனாலும் முற்றாய்ச்சொல்லிவிட ஒரு ஆள் உண்டு என்றால் அதுஇந்த இவர்தான். அத்தனை ப்பாடலும் மனப்பாடம் ஆகி இருக்கிறது என்றால் பிறகு என்ன சொல்வீர்கள்.

இலக்கிய உலகில் எல்லாமே அத்துப்படி.யார் இல்லை எங்கிறார்கள்.

ஆனால் ஒரு விஷயம்.ஆ ஐந்து இன்று நம்மோடு இல்லை.வெறும் தமிழ் அறிவு வைத்துக்கொண்டு எப்படி, கைசுத்தம் இல்லை அதோடு மட்டுமா கொஞ்சம் அந்தக்கோளாறும் உண்டு என்று குசுகுசுக்கிறார்கள்.ஆகவே.

ஆ ஆறு பற்றியும் சொல்லிவிட்டால் தேவலை.எத்தனையோ தியாகங்கள் செய்தவர்தான். சும்மா உட்கார்ந்து கை நிறைய சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்க வேலையை தூக்கி எறிந்துவிட்டு தெருத்தெருவாக அற்புதமாய்ப் பிரச்சாரம் செய்து கூட்டணிக்கட்சிக்காரருக்கு இறைவன் கொடுத்த பெரிய மனதில் சட்டசபைக்கு தேர்வு பெற்றுப்போனதுண்மை.இன்ன ஆள் என்பதாலேயே இந்தத்தொகுதி இவருக்குக்கொடுத்தார்கள் என்று மேலிடம் சொல்ல அதில் என்ன சந்தேகம் என்றபடிக்கு சுற்றி இருந்தவர்கள் ஆமாம் புசாலி போட ரோசப்பட்டு இன்னார் இந்த இனம் என்று சொல்லக் கூடாது என்றுதான் இங்கே வந்தது என்று ஆ ஆறு சொல்லாமல் இருந்திருக்கலாம். விதி வலியது யார்தான் என்னசெய்துவிட முடியும்.

ஆனால் ஒரு விஷயம். ஆ ஆறு இன்று நம்மோடு இல்லை. வெறும் தேர்தல் பிரச்சாரம் செய்யும் யுக்தி மட்டும் படித்து வைத்துக்கொண்டு எப்படி, தான் வாழும் சூழல் இன்னும் விளங்கிக்கொள்ளாமலே என்ன ரோசம் அது இது எல்லாம்.ஆகவே.

ஆ ஏழு பற்றிச்சொன்னால் ஓரளவு எல்லாம் தெரிந்து விட்டமாதிரிதான்.ஆ ஏழு ஒரு தோழியர்.தோழர் என்பது பொதுப்பால் என்கிறீர்களா அது கிடக்கிறது விடுங்கள். வந்து விட்டது மகளிருக்கு இட ஒதுக்கீடு அங்கே பார் இங்கே பார் என்று பேசலாம்.ஒரு பதவிக்கு மட்டுமாவது பெண் கட்டாயம் இருக்கட்டும் என்று கருவேப்பிலையாய்ச் சேர்த்துக்கொள்ள பட்ட பாடு கடவுளுக்கே வேளிச்சம். போயும் போயும் அடிமரத்தை வெட்டுவதற்குக்கோடரி எடுக்கும் வேலையையா அந்தப்பெண் செய்வது.

ஆனால் ஒரு விஷயம். ஆ ஏழு இன்று நம்மோடு இல்லை.பெண் என்பதால் மட்டும் பதவி கொடுத்து வைத்திருப்பது எப்படி.உலகமே கோணலாய் இருக்கலாம் அதை விடு. ஆனால் நீ எப்படி இப்படி இருக்கலாம் என்கிறார்களே.விடை யார் சொல்வது.ஆகவே.

அமர்ந்திருந்த மாணாக்கர்களில் ஒருவர் எழுந்தார்.

‘ஆனால் ஒரு விஷயம் ஆ எட்டு இன்று நம்மோடு இல்லை. அரசியல்பாடம் சொல்லும் திறமை ஒன்று மட்டுமே இருந்தால் எப்படி. தொழிற்சங்க வகுப்பு எடுக்கும் ஆசிரியர் எதைச்சொல்வது எதை விடுவது என்கிற ஞானம் வேண்டாமா விதி வலியது ,கடவுளுக்கே வெளிச்சம், இறைவன் கொடுத்த பெரிய மனது என்று எல்லாம் பேசவா இங்குவருவது.ஆகவே.’ சொல்லிவிட்டு அமர்ந்தார். அவரை அழைத்து ப்பாராட்டினேன்.

”சரியாகவே நான் பாடம் நடத்தியிருக்கிறேன் என்பது எனக்கு நிறைவு. எனக்கு ப் பின்னே நீரே கட்டாயம் அந்த ஆகவே.’சொல்லிய நான் இடையுளை(பிட்) நிறைவு செய்தேன்.

————-

Series Navigation
author

எஸ்ஸார்சி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *