நூல் மதிப்புரை எதிர்வு- நாவல்- சிதம்பர ரகசியத்தை கேள்விக்குள்ளாக்கும்

This entry is part 10 of 22 in the series 28 டிசம்பர் 2014

ethirvu

 

அதிர்ச்சிக்கும் அதிர்வுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் அறிவோம். ஒற்றைக் குரல் எதிர்ப்பாக இல்லாமல் சமுதாயம் முழுதும் விரவும் எதிர்வாக ஒருக்கப்பட்ட அனைவரின் ஒன்று பட்ட எழுச்சியே இந்த நாவலின் மையக் கரு.

 

நாவலின் செய்தி மிகவும் நேரடியானதும் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட்டதும் ஆகும். 293ம் பக்கத்தில் வரும் இந்தப் பதிவே நாவலின் சாராம்சம்: “தாய் மொழியை ஆலயத்திலிருந்து ஓரம் கட்டியது. தலித் சமுதாயத்தை சமுதாயக் கட்டமைப்பிலிருந்து ஓரம் கட்டியது. தங்கை தமக்கை தாய்மார்களை கல்விக் கூடங்களிலிருந்து ஓரம் கட்டியது. இந்த மூன்றும் சரிசெய்யப் பட்டாலொழிய இங்கே எந்த சமூக நியதியும் நிறைவு பெறாது.”

 

தலை முடியை மழித்துக் கொள்ளாதற்காக ஊரை விட்டு ஒதுக்கு வைக்கப் படும் ஒரு பிராமண விதவை, மேல்சாதிக்காரர் சதிகளை எதிர்த்துக் குரல் கொடுக்கும் ஒரு தலித் இளைஞன் மற்றும் சிந்தனையாளரான ஒரு பெரியவர் இவர்களுக்கு உறுதுணையாகத் தமிழில் தேவாரம்பாடி பூஜை செய்ய விழையும் ஒரு (அதிசய) தீட்சதர் இவர்கள் ஒன்று பட்டு நிற்கின்றனர். இவர்கள் போராடி இன்னும் பலர் இவர்கள் போல எழுந்து வர என்றேனும் விடியும் என்னும் நன்னம்பிக்கையைத் தருவது இந்த நாவல்.

 

நாவலில் என்னை மிகவும் கவர்ந்தது சரியான உதாரணத்தை எஸ்ஸார்ஸி கையாண்டது. பிற்போக்கானதும் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரானதுமான போக்கு சிதம்பரத்தில் வெளிப்படையாகத் தெரிவது. தேவாரம் ஓத ஒரு பக்தர் நீதி மன்றப் படிக் கட்டு ஏற வேண்டி வந்தது. இந்த நாவலில் தேவாரம் பாடிய ஒரு தீட்சதர் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். நாவல் கற்பனையானது என்றாலும் நிலவரம் என்னவோ இது தான்.

 

நாவலில் பல உரையாடல்கள் ஜெயகாந்தனின் பதிவுகளை நாம் நினைவு கூரச் செய்பவை. லட்சியவாதம் மிகுந்த உரையாடல்கள். ஆனால் இன்று நீர்த்துப் போனவற்றில் முக்கியமானது லட்சியவாதம். தனக்குள்ளேயே தன்னைப் பின்னிழுக்கும் பல தளைகளைச் சுமப்பவனே இலட்சியவாதி. அவனுக்கு சமூகம் தரும் நிராகரிப்பு வலி மிகுந்தது. வ உ சிதம்பரனாரின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம்.

 

நாவலை சமுதாய மாற்றத்துக்கான ஒரு கருவியாக ஆசிரியர் காண்கிறார். அவர் சுட்டும் திசையில் நாம் நாவலை வாசிக்கிறோம். இந்த நாவலில் நாம் காண்பது இரு அணிகள். சமூக ஆர்வலர் ஒரு பக்கம்- மறுபக்கம் சாதிவாதம் பேசும் சுயநலவாதிகள்.

 

நிச்சயமாக சமூக ஆர்வலர் சிறுபான்மையினரே ஏன்? விரல் விட்டு எண்ணக் கூடியவரே.

 

நல்லவர் கெட்டவர் என்பது போல சமூக ஆர்வலர்- தன்னலாமானவர் என்று இரு பிரிவு இருக்கிறதா? அப்படிப் பிரிக்கும் அணுகுமுறை சரியா?

 

பெண்ணுரிமை பற்றிக் காலம் காலமாகப் பெரிதும் ஆண்களே பேசி வருவது ஒரு நகை முரண். பெண்களில் சுமங்கலி விதவை என்னும் வித்தியாசத்தை ஏன் பெண்கள் நிராகரிக்கவில்லை? எந்தக் கொலுவுக்காவது விதவைகள் அழைக்கப் பட்டு சுமங்கலிக்கு இணையான மரியாதைக்கு உட்படுத்தப் படுகிறாரா? இந்தக் கேள்வியை ஏன் சுமங்கலிப் பெண்கள் எழுப்புவதில்லை?

 

இடைசாதி அல்லது பிற்படுத்தப் பட்டோர் என்னும் பிரிவினர் தான் காலம் காலமாக நசுக்கப் பட்டதாக அரசியல் பேசும் போது தன் சாதிக்காரனால் தலித் நசுக்கப் படுவதைப் பற்றி ஏன் பேசுவதே இல்லை?

 

தீட்சதரோ அல்லது அய்யரோ அல்லது அய்யங்காரோ தமிழில் பூசை செய்தால் தட்டில் 500 வைக்கிறேன் என்று யாரேனும் கூறினால் மறுகணம் மனப்பாடம் செய்து அமர்க்களப் படுத்தி விட மாட்டாரா? கோயில்களில் தமிழ் ஒலித்தால் மட்டும் மனித நேயமில்லாத கூட்டம் மதத்தைத் துணையாக்கிச் செய்யும் ஆதிக்கம் அழிந்து விடுமா?

 

சுமங்கலியோ அல்லது இடைசாதித் தலைவர்களோ அல்லது கோயில் அர்ச்சகர் கூட்டமோ இவர்கள் தமக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தில் அல்லது அங்கீகரிப்பில் கிறங்கிக் கிடப்பவர்கள். அதை விட்டு விட்டு சமுதாய மறுமலர்ச்சி- மண்ணாங்கட்டி- தெருப்புழுதி என்று உளற அவர்களுக்கு என்ன கிறுக்கா பிடித்திருக்கிறது?

 

அதிகாரம் தரும் போதை- அங்கீகரிப்பு தரும் ஈர்ப்பு – கைத்தட்டலும் ஜால்ராவும் தரும் இன்னிசை இதைத் தாண்டியவன் எவனாவது இது வரை பிறந்திருக்கிறானா?

 

காவி உடை பூண்டவனுக்கு ஊடகமும் சீடரும் பொதுமக்களும் தரும் வணக்கம் எவ்வளவு வருடலாக இருக்கிறது?

 

அரசியல் தலைவனும் அவ்வாறே. எழுத்தாளனுக்கே இன்று ஒரு வாசகர் வட்டம் மாவட்டம் ரசிகர் மன்றம் என்று அதிகார-அங்கீகரிப்பு வேட்கை பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டுகிறது இல்லையா? ஜால்ரா சத்தம் கேட்காவிட்டால் அவனுக்குத் தூக்கமே வருவதில்லையே.

 

எங்கே அதிகார வேட்கை இல்லையோ, எங்கே அங்கீகரிப்புக்கான அரிப்பு இல்லையோ அங்கே மட்டுமே அற உணர்வு நீர்க்காமல் நிமிர்ந்து நிற்கும்.

 

நீர்த்துப் போய் போலி அற விழுமியப் பதாகைகளைத் தூக்கிக் கொண்டு அலையும் இவர்களுக்கு நடுவே அறம் என்றுமே கனல் வீசாது.

 

நிமிர்ந்து நிற்கும் அச்சமின்மையும் எதற்கும் விலை போகாத ஆன்மீக நோக்கும் உள்ள பெண், தலித் அல்லது எழுத்தாளன் மட்டுமே புதியதோர் உலகின் தடங்களைக் கண்டு உலகுக்கே உரைக்க முடியும். ஆன்மீகம் வழிபாட்டுத்தலங்களைத் தாண்டி ‘இதுவே அறம்’ என்னும் தெளிவுக்கு மட்டுமே புலனாவது.

 

தேடல் உள்ளோர் யாரும் ஆன்மீகத்தில் இணைவார்கள். அரிய சகபயணிகளை இனம் கண்டு மனம் நிறைவார்கள்.

 

எஸ்ஸார்ஸியின் பதிவுகள் மாற்றத்தைக் கோருபவை. அந்தத் திசையில் நம்மை இட்டுச் செல்லும் படைப்புகள் தமிழில் அதிகம் இல்லை. அவருக்கு என் பணிவான வணக்கங்கள்.

 

 

 

 

 

Series Navigationபுத்தாண்டு வரவுஷா பானு வழக்கும் ஜசோதா பென் RTI கேள்வியும்
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *