சிறுகுடல் கட்டிகள்

This entry is part 17 of 20 in the series 26 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

SI இரைப்பையிலிருந்து பெருங்குடல்வரையுள்ள பகுதி சிறுகுடல். இதன் நீளம் 6 மீட்டர் அல்லது 20 அடி. உணவை ஜீரணம் செய்யும் முக்கிய பணியை சிறுகுடல் செய்கிறது. இங்குதான் உணவின் சத்துகள் உறிஞ்சப்பட்டு இரத்தக் குழாய்களில் புகுந்து இருதயத்தை அடைந்து உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசெல்லப்படுகிறது.
சிறுகுடலில் கட்டிகள் வருவது மிகவும் குறைவு. புற்றுநோய் வகைகளில் 5 சதவிகிதத்துக்கும் குறைவான அளவில்தான் சிறுகுடலில் உண்டாகிறது.பெரும்பாலானவை பெருங்குடலில்தான் ஏற்படுகிறது. ஆனால் உங்களுடைய தோழியைப்போல் ஒருசிலருக்கு சிறுகுடலிலும் கட்டிகள் வளரலாம் இதில் வயிற்று வலிதான் முக்கிய அறிகுறியாகும். அது தவிர வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்.

அறிகுறிகள்

* வயிற்று வலி – வலி வயிற்றின் நடுப்பகுதி அல்லது அனைத்துப் பகுதிலும் தோன்றும். வலி வருவதும் போவதுமாக இருக்கலாம்.
* வயிறு வீக்கம் ​ – வயிற்றினுள் காற்று அடைத்துக்கொண்டது போன்ற உணர்வு.
* வாந்தி
* பசியின்மை
* இரத்தக் கசிவு – சிறுகுடலில் இரத்தக்கசிவு உண்டாகும். அது கரு நிறத்தில் மலத்துடன் கலந்து வெளியேறும்.
* இரத்தச் சோகை
* எடை குறைவு ​- புற்று நோய் எங்கிருந்தாலும் எடை குறைவு என்பது முக்கிய அறிகுறியாகும்.
* பலவீனம்
* காய்ச்சல்
* சிறுகுடல் அடைப்பு – இது உண்டானால் வலி கடுமையாக இருக்கும்.
* லிம்போமா கட்டிகள் – சிறுகுடலில் இத்தகைய கட்டிகள் வளரலாம்.

நோய் இயல்

SI2 பெருங்குடலைப்போன்று சிறுகுடலில் அதிகமாக கட்டிகள் தோன்றுவதில்லை. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. சிறுகுடலினுள் ஜீரனமான திரவம் வேகமாக தள்ளப்படுகிறது. சிறுகுடலினுள் எதிர்ப்புசக்தியை உண்டுபண்ணும் ” லிம்ப் ” அதிகம் உள்ளதால் அங்கு கிருமிகளின் வளர்ச்சியும் குறைவுதான்.

சிறுகுடலில் தோன்றும் கட்டிகள் இரண்டு வகைப்படும். அவை வருமாறு :
புற்று நோய் இல்லாத கட்டிகள் – இதில் அடினோமா, லேயோமா, லைப்போமா போன்ற கட்டிகள் அடங்கும்.
புற்று நோய்க் கட்டிகள் – இதில் அடினோகார்சினோமா ( 50 சதவிகிதம் ), லிம்போமா ( ( 25 சதவிகிதம் )ஆகியவை அடங்கும். இத்தகைய புற்றுநோய்க் கட்டிகள் சிறுகுடலில் பெரிதானால் அவை அடைப்பை உண்டுபண்ணுவதோடு இரத்தக் கசிவையும் உண்டுபண்ணும்.இதை உடனடியாகக் கவனிக்கவில்லையெனில் சுற்றுப் பகுதி உறுப்புகளுக்கு பரவும். அல்லது இரத்தத்தில் கலந்து உடலின் வேறு உறுப்புகளிலும் பரவும்.

பரிசோதனைகள்

SI3 * எண்டோஸ்கோப்பி பரிசோதனை – இதில் நுண்ணிய படம் எடுக்கும் கருவி பொருத்தப்பட்ட குழாய் வாய் வழியாக வயிறு, குடலின் மேல்பகுதிக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அதன் மூலம் அங்கு கட்டிகள் உள்ளதைக் கண்டறியலாம்.அப்படி இருந்தால் அதன் ஒரு சிறு பகுதி அகற்றப்பட்டு ” பையாப்சி ” பரிசோதனை செய்யப்படும்.

* பேரியம் எக்ஸ்ரே பரிசோதனை – இதில் பேரியம் திரவம் குடிக்கத் தந்து வயிற்றுப் பகுதியில் அது செல்வதை எச்ஸ்ரே மூலம் பார்த்து படம் எடுக்கப்படும். அதில் கட்டிகள் இருப்பது தெரியவரும்.

* சி.டி. ஸ்கேன் பரிசொதனை​ – இதில் கட்டிகளின் அளவு கண்டறியலாம்.

* லேப்பரோடோமி – இதில் வயிற்றில் அறுவை செயப்பாட்டு கட்டிகளை நேரில் பார்க்கப்படும். அதன்பின்பு அவற்றை அகற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

சிகிச்சை முறைகள்

கட்டிகள் உள்ளது நிரூபிக்கப்பட்டபின்பு அவற்றை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிடுவதே சிகிச்சையின் முக்கிய நோக்கம். ஒருவேளை சிறுகுடலின் ஒரு பகுதியும் கட்டியுடன் அகற்றப்படலாம். புற்று நோய்க் கட்டிகளாக இருந்து அகற்றப்பட்டபின்பு ” கீமோதெராப்பி ” என்ற சிகிச்சையில் மருந்துகள் தரப்படும்.
முதலில் உங்களுடைய தோழிக்கு எந்தவிதமான கட்டி உள்ளது என்பதை மேற்கூறியுள்ள பரிசோதனைகளின் வழியாக நிர்ணயம் செய்தாகவேண்டும். அதன்பின்புதான் அது ஆபத்தானதா இல்லையா என்று தெரியவரும். அது எத்தகையதாக இருந்தாலும் நிச்சயம் அதை அகற்ற அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

( முடிந்தது )

Series Navigationஹாங்காங் தமிழோசைஉல்லாசக்கப்பல் பயணம் – நூல் விமர்சனம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *