சுந்தரி காண்டம் 5. அபிராமி அற்புத சுந்தரி

This entry is part 5 of 24 in the series 13 செப்டம்பர் 2015

சுந்தரி காண்டம்
5. அபிராமி அற்புத சுந்தரி

ரெட்டியாரின் ஒண்டுக்குடித்தன வீடுகளுக்கு முன்வீடு யாதவர்கள் வீடு. பசு மாடுகளும் எருமை மாடுகளும் வைத்து அமோகமாகப் பால் வியாபாரம் நடந்த காலம் அது. அப்போது அரசு பால் பண்ணையிலிருந்து கண்ணாடி பாட்டில்களில் பால் வரும். நீல/சிகப்பு கோடு போட்ட தகடு மூடி வைத்து பால் நிரப்பப் பட்டிருக்கும். தகர மூடிகளை எடைக்கு வாங்கிக் கொள்ள பழைய தகர வியாபாரி காத்திருப்பார். ஆனாலும் கறந்த மாட்டுப்பாலின் மவுசு போகாத காலம் அது.
யாதவர்கள் வீட்டில் நான்கே அடி உயரம் இருந்த நந்தன் கடைக்குட்டி. அவனுக்கு முன்னால் இரண்டு ஆண் பிள்ளைகளும், மூன்று பெண் பிள்ளைகளும் பால்காருக்கு உண்டு. பால்கார் வயசாளி போல தோற்றம் தருவார். ஆனாலும் அவர் பனிரெண்டு எருமைகளையும் அதற்கு ஈடான பசுக்களையும் ஒற்றை ஆளாக தீவனம் வைத்து, பால் கறந்து, மேய்ப்பது பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும்.
பால்காரின் மனைவி வெள்ளையம்மா பேருக்கு ஏற்றார்போல் வெள்ளையாக இருந்திருக்க வேண்டும். இப்போது அவள் அவ்வளவு வெள்ளையாக காட்சி தரவில்லை. வயதின் சுருக்கங்கள் அவள் முகத்தை மேலும் இருட்டாக்கி இருந்தன. அவளுக்கு எப்படியும் அறுபது வயதிருக்கும். பெரிய தோடு அணிந்திருப்பாள் காதுகளில். அவள் முழங்கைகளில் ஏதோ பச்சை குத்தியிருக்கும். அவளுக்கு நந்தன் என்றால் கொள்ளை பிரியம்.
பால்கார் வீட்டில் இரண்டு குடித்தனம் இருந்தது. அதில் ஒன்றில் சினிமா துணை நடிகை இருந்தாள். இன்னொன்றில் அருள் வாக்கு சொல்லும் ஒரு பெண்மணி குடியிருந்தாள். அவளது அருள் வாக்கு அந்தப் பகுதியில் மிகப் பிரபலம். அபிராமி உபாசனை செய்து வந்ததால் அவள் இயற்பெயரை யாரும் அறிந்திருக்கவில்லை. அருள் வாக்கு அபிராமி என்றே அவள் அழைக்கப் பட்டாள்.
நந்தன் பிறந்த முன்று ஆண்டுகள் வரை அவன் ஏதும் பேசவில்லை. அவன் நான்காவது வயதை அடைந்த போதுதான் அபிராமி அந்த வீட்டிற்கு குடிவந்தாள். அவளது பக்தர்கள் கூட்டத்தைக் கண்ட பால்காரி தன் மகனின் பேசாத் தன்மையை அவளுக்கு தெரிவித்தாள்.
அபிராமி அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள்.
“ ஏய் சொல்றன் கேட்டுக்க .. போன சென்மத்துல உன் மவன் ஒரு பொட்டப் பொண்ணை நாசம் பண்ணிட்டு, அவளை சாவடிச்சு பாழுங்கிணத்துல தூக்கிப் போட்டுட்டான். அதன் வெனைதான் அவனை இப்படி ஆட்டுது. ஊமைப் பொண்ணையோ இல்ல பேச்சு சரியா வராத ஒரு பெண்ணையோ அவனுக்கு கட்டி வைக்கிறேன்னு வாக்கு குடு. ஆறு மாசத்துல தானா சரியாயி பேச ஆரம்பிச்சுடுவான்”
நான்கு வயசு நந்தனுக்கு பேச்சு வரவேண்டுமென்ற ஆசையில் பால்காரி வேகமாக தலையசைத்தாள்.
ஐந்தாவது வயதில் நந்தன் பேச ஆரம்பித்தான். ஆனாலும் அவனது பேச்சு ஒரு வித மழலையாகத்தான் இருந்தது. அதற்கும் காரணம் சொன்னாள் அபிராமி.
“ ஒரு பொண்ணை நாசம் பண்ணானில்ல உம் பையன். அப்ப அவளோட அவ வயத்துல கொழந்தையும் இருந்தது இல்ல.. அதான் உன் பையன் தெளிவில்லாம பேசறான் “
பால்காரி அதையும் நம்பினாள். நாசம் பண்ணவுடனே எப்படிடி கொழந்தை வரும்னு அப்பவே கேட்டிருந்தாள்னா விசயம் வேரு பிடிச்சிருக்காது.
நந்தன் பதினாறு வயது நெருங்கும்போதுதான் அபிராமி அம்மாளுக்கு ஒரு குடும்பம் இருப்பது தெரிய வந்தது. நெல்லைச்சீமையிலிருந்து அவர்கள் ஒருநாள் விடியலில் வந்திறங்கினார்கள்.
அபிராமி அம்மாளின் புருசன் குடுகுடுப்பைக்காரனைப் போல் கலர் கலராக உடை அணிந்து கொண்டிருந்தான். அவன் கையைப் பிடித்தபடி பதினான்கு வயதில் துடிப்பாகவும் களையாகவும் ஒரு இளம் பெண் இருந்தாள். தாமிரபரணி தண்ணீரின் ஊட்டம் அவள் உடம்பில் செழுமை கூட்டியிருந்தது. திரட்சியான மார்பகங்களுடன் அவள் “திண்” என்று இருந்தாள். இன்னும் தாவணி போட ஆரம்பிக்கவில்லை என்பதால் அவளது பாவாடை சட்டை அவளது அழகை மறைக்க முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.
அவள் அணிந்திருந்த உடை கொஞ்சம் வினோதமாக இருந்தது. ஆண்களைப் போல் காலர் வைத்த சட்டை அணிந்திருந்தாள். ஆனாலும் ஆண்களைப் போல் முழுதாக கீழ் வரையிலும் பித்தான்கள் அதில் இல்லை. மேலே இரண்டோ மூன்றோ பித்தான்கள்தான். அவள் கழுத்து வரையிலும் பித்தான்களை அணிந்திருந்தாள்.
அவளது வயிறு லேசாக புடைத்துக் காணப்பட்டது. அதனாலேயே அவளது பாவாடை அவளது திரண்ட கால்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு தவித்தது. அவளது ஆரோக்கியத்தை பறை சாற்றும் விதமாக அவளது புட்டம் அகன்று காணப்பட்டது. பதினான்கு வயதில் அவள் ஒரு சிற்றானைக் குட்டி போலக் காட்சியளித்தாள்.
“ அன்னலட்சுமி “என்று அவளை வாஞ்சையோடு அழைத்தாள் அபிராமி அம்மாள். அன்னம் என்பது அவளது சுருக்கப்பட்ட செல்லப் பெயர். அவளது உருவத்திற்கு அவளுக்கு ஆனை லட்சுமி என்றே பெயர் வைத்திருக்கலாம் என்று அங்குள்ளோர் பேசிக் கொண்டனர். அவள் அரைப்படி சோற்றை உள்ளே தள்ளுவதைப் பார்த்தவர்கள் பெயர் பொருத்தம் பற்றி சிலாகித்தனர்.
நந்தன் வெளியூரில் இருக்கும் அத்தை வீட்டிற்கு சென்ற நேரத்தில்தான் அன்னலட்சுமி சென்னையில் தரை தட்டினாள். அவள் காலை உணவாக பத்து இட்லிகளை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் ஒரு காலைப் பொழுதில் நந்தன் வீடு திரும்பினான். நந்தனைப் பார்த்த அன்னம் அன்னத்தையே மறந்தாள். வாயில் முழுங்காத முழு இட்லியுடன் “ அவ்வா அது ஆரு ‘ என்று வினவினாள்.
அவளது இட்லி அடைத்த குரலைக் கேட்ட நந்தன் வெண்தேவதைகள் புடைசூழ கனவு டூயட்டிற்கு தயாரானான். அருள் வாக்கின்படி பேச்சு சரியா வராத பெண்ணையே தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற கட்டளை அவன் மூளையில் மாறாத பதிவாக இருந்ததால் இவளே தனது மனைவி என்று முடிவு செய்து கொண்டான்.
ஊரில் அத்தைப் பெண் கோகிலவாணி அவனைக் கவர செய்த பிரயத்தனங்களையும், அதில் அவனுக்கு ஏற்பட்ட ருசியும் அவனை ஒரு புது மனிதனாகவே ஆக்கிவிட்டிருந்தது.
கோகிலவாணி கொஞ்சம் கறுப்பு. நந்தன் அம்மா போல் வெளுப்பு. அதனாலேயே கோகிக்கு அவனைப் பிடித்து போய்விட்டது. அதோடு கூட அத்தையும் “ இவதாண்டா நீ கட்டிக்கப் போறவ “ என்று அடிக்கடி சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
“ அதெல்லாம் ஆவாது. அருள்வாக்கு என்னா சொல்லிருக்கு தெரியுமா.. ஊமை இல்லன்னா பேச்சு சரியா வராத பொண்ணுதான் நான் கட்டற பொண்ணாம் “
அத்தைக்காரி சென்னையில் சொந்த இடம், மாடு என இருக்கும் மருமவனை வளைத்துப் போட மகளின் நாக்கை வெட்டி ஊமையாக்கக் கூட தயாராக இருந்தாள்.
கோகிலா பதினைந்து வயதுக்காரி. சமைந்து மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. கிராமத்து வயல் வேலை, நெல் குத்துதல், மாவு அரைத்தல் என அவளது உடம்பு கோயில் தூண் போல் இருந்தது. அவளைச் சிற்பமாகச் செதுக்க நல்ல உளி தேடி அலைந்தாள். கிராமக் கட்டுப்பாடு காரணமாக அவள் யாரோடும் நெருங்கி பழக முடியாத அந்த நேரத்தில்தான் அத்தைக்காரிக்கு பிறந்த வீட்டு பரிசாக சேங்கன்னு ஒன்றை ஓட்டிக்கொண்டு நந்தன் வந்தான். சேங்கன்னு புது இடத்தில் பழகற வரையிலும் பத்து பதினைந்து நாள் அவன் தங்குவதாக ஏற்பாடு.
நான்கடி உயரம் இருந்த நந்தன் உயரக்குறையை ஈடு கட்ட கரணையான புஜங்களும் தொடைகளும் கொண்டு ஒரு மல்லன் போல் இருந்தான். வேட்டியை கீழ்ப்பாய்ச்சி கட்டிக் கொண்டு அவன் மாட்டுக் கொட்டடியில் வேலை செய்வதை விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் கோகிலா.
சாணி அள்ளுகிறேன் பேர்வழி என்று கொட்டடிக்கு கூடையுடன் வந்த கோகி கால் வழுக்கி பால் கறந்து கொண்டிருந்த நந்தன் மேல் விழுந்தாள். நிலை தடுமாறிய நந்தன் குவளையோடு மல்லாக்க விழுந்தான். உருண்டோடும் குவளையை பிடிக்க எழுந்த நந்தனும், விழுந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல், எழுந்திருக்க அனிச்சையாக ஒரு பிடிமானத்தை தேடி நந்தனின் வேட்டியைப் பிடித்த கோகியும் மறுபடியும் கீழே விழுந்தார்கள். செருகிய வேட்டி அவிழ்ந்ததும், கோகியின் குட்டைப் பாவாடை மேலேறியதும் இந்தக் கதையின் விவரிக்க வேண்டாத காட்சிகள்.
அதன்பிறகு கோகிலாவும் நந்தனும் அடிக்கடி கொட்டடியில் சந்தித்துக் கொண்டார்கள். ஒரு மருத்துவ ஆராய்ச்சி மாணவரைப் போல் உடற்கூறு ரகசியத்தை இருவரும் அறிந்து கொண்டார்கள்.
அருள் வாக்கு தெய்வக்குத்தம் என்று நந்தன் தன் அச்சத்தைச் சொல்ல, அடுத்த நாளிலிருந்து கோகி குழறி குழறி பேச ஆரம்பித்தாள்.
“ புள்ள ஏதோ பாத்து பயந்துருச்சி “ என்று ஆத்தாகாரி வேப்பிலை அடிக்க, நந்தன் சென்னை போகும் நாளும் வந்தது.
அப்பனிடம் பேசி கோகிலாவைக் கூட்டி வரவேண்டும் என்ற முடிவிலிருந்த நந்தன் அன்னலட்சுமியின் குரலால் ஆடிப்போனான்.
அன்னமா கோகியா என்ற மனக் குழப்பத்தில் இருந்த அவனுக்கு ஆறுதலாக வந்தது செய்தியொன்று..
கோகிக்கு தூரத்து மாமன் உறவில் பையன் பேசி முடித்தாகிவிட்டது. தைமாசம் திருமணம். இனி தனக்கு அன்னம் மட்டும்தான் என்று நந்தன் முடிவு செய்த நேரத்தில் அபிராமி அம்மாள் தன் குடுகுடுப்பை புருசனை வீட்டை விட்டு விரட்டி அடித்தாள். துக்காராம் தெருவில் தோட்டிச்சி ஒருவளுடன் அவன் ரகசிய குடும்பம் நடத்துவது அவளுக்கு தெரிய வந்ததுதான் காரணம்.
பால்காரி தன் மகனின் விருப்பத்தை அபிராமி அம்மாளிடம் தெரிவிக்க, தெய்வக்குத்தம் அது இது என்று கொஞ்சம் பிகு செய்துவிட்டு அவள் குடியிருந்த போர்ஷனை மகள் பெயருக்கு கிரயம் பண்ணிக் கொடுத்தால் பரிகாரம் செய்து கல்யாணம் செய்து கொள்வதாக வாக்களித்தாள்.
ஒரு சுப முகூர்த்தத்தில் மூன்றாவது பாளையத்தம்மன் கோயிலில் தாலி கட்டி கல்யாணம் நடந்தது.
முதல் இரவில் நந்தன் ஆசையோடு உள்ளே நுழைந்தபோது முழு அதிரசத்தை வாயில் அடைத்தபடி “ வாழ்ங்க “ என்றாள் அன்னலட்சுமி.
0

Series Navigationபாவப்பட்ட ஜென்மங்களின் கதை [ உதயகண்ணனின் ’இருவாட்சி’ வெளியீடாக வர இருக்கும் நாவல் குமாரகேசனின் “அரபிக்கடலோரத்தில்” நாவலுக்கான அணிந்துரை ]]’பஞ்சரத்தினத்தின் வடிவியற்கட்டம் (Pancharatnam geometric phase) தளவிளைவுற்ற ஒளியும் நவீன குவாண்டத் தொடர்பு அறிவியலும்
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    சிறகு இரவிச்சந்திரனின் ” அபிராமி அற்புத சுந்தரி ” எளிமையான சிக்கல் இல்லாத கதை. நடையில் நகைச்சுவை மிளிர்ந்துள்ளது அருள் வாக்கு அபிராமி பாத்திரப்படைப்பு காலத்துக்கு ஏற்ற படைப்பு. பால்கார் என்பது வழக்குச் சொல்லா? பால்காரர் என்போம் நாங்கள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *