ஸ்ரீரங்கம் சௌரிராஜன் எழுதிய ‘ கவிதையும் என் பார்வையும் ‘ —– ஒரு பார்வை

author
0 minutes, 9 seconds Read
This entry is part 12 of 24 in the series 13 செப்டம்பர் 2015

பொன். குமார்
சேலம்

எழுத்தில் பல வகை இருப்பினும் கவிதையே எழுத்தின் உச்சம் ஆகும். கவிதை எழுதுவது ஒரு காலத்தில் கடினமாக இருந்தது. வானம்
பாடிக்குப் பின் கவிதை எழுதுவது எளிதாகப் பட்டது. புதுக் கவிதையில் தொடங்கி நவீனம் , பின் நவீனம் எனத் தொடர்ந்தது. விமர்சனத்தின்
மீதும் விமர்சனம் உண்டு. விமர்சனம் ஒரு படைப்பாகக் கருதப்படுவதில்லை. படைப்பின் மீதான விமர்சனமும் ஒரு படைப்பே.
விமர்சகர்களும் படைப்பாளிகளாக இருந்துள்ளனர். இருந்தும் வருகின்றனர். க.நா.சு, வல்லிக் கண்ணன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிஞரும் விமர்சகரும் ஆவார். தான் படைப்பதை விட பிறர் படைப்பதை , விமர்சிப்பதிலேயே தீவிர கவனம்
செலுத்தி வருகிறார் என்பதற்குச் சான்றாகப் பல விமர்சனங்கள் வந்துள்ளன. அவ்விமர்சனங்கள் தற்போது ஒரு தொகுப்பாக வெளி
வந்துள்ளது. ‘ என் பார்வையில் கவிதைகள் ‘ என்று வெங்கட் சாமிநாதனும் , ‘ ஒரு விமர்சகனின் பார்வையில் ‘ என்று பேரா.க.பஞ்சாங்கமும்
‘ ஒரு படைபாளியின் பார்வையில் ‘ என்று பொன். குமாரும் , ‘ என் பார்வையில் சில படைப்புகள் ‘என்று எழுஞாயிறும் பார்த்த பார்வை
விமர்சன வெளியில் உண்டு. மற்ற விமர்சகர்களிடமிருந்து ஸ்ரீரங்கம் சௌரிராஜனின் பார்வை மாறுபட்டுள்ளது. ‘ ஒரு கவிதை வாசகனின்
பார்வைப் பதிவு ‘ என்று ராஜன் , பார்வைக்கு விளக்கம் அளித்துள்ளார்.
விமர்சகர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் ஒத்த சிந்தனை எல்லா நேரங்களிலும் இருப்பதில்லை. படைப்பாளியின் மனப்பான்மை
விமர்சகர்களிடம் இருப்பதில்லை. விமர்சனங்களை படைப்பாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வதில்லை. சிலர் முரண்படுவதும் உண்டு.
ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிஞர்களைக் குறித்துக் கவலைப் படாமல் கவிதைகளை விமர்சித்துள்ளார். ராஜனின் விமர்சனத்தில் பாகுபாடற்று
அனைத்து வகைப் படைப்பாளிகளும் இடம் பெற்றுள்ளனர். இளையவரும் உண்டு : மூத்தவரும் உண்டு : எதார்த்த படைப்பாளியும் உண்டு.
பின் நவீன படைப்பாளியும் உண்டு. விமர்சனத்தில் விமர்சகர் சொல்ல வந்ததைச் சொல்லிவிடுகிறார். வாசகர்களையும் வாசிக்கத் தூண்டுகிறார்.
ஒவ்வொரு விமர்சனத்தின் தொடக்கத்திலும் தவறாமல் அத்தொகுப்பில் எத்தனை கவிதைகள் உள்ளன என்று எண்ணிச் சொல்லியுள்ளார்
இத்தொகுப்பில் 80 கட்டுரைகள் உள்ளன. அவற்றுள் ஒன்று கவிதை குறித்த கட்டுரை. ” சொற்களின் புன்னகை ” என்று கவித்துவமாகத்
தலைப்பிட்டு , கவிதகளில் கவித்துவம் குறித்துப் பேசியுள்ளார். லா.ச.ரா. , உமா மகேஸ்வரி , மனுஷ்ய புத்திரன் ஆகியோர் உரை நடையிலும்
கவித்துவத்தைக் காண முடிகிறது என்கிறார். ” வாழ்க்கை ஆயிரமாயிரம் கவிதைகளை நமக்குக் கொடுக்கத் தயாராக இருக்கிறது. அதைக்
கண்டு கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிற போதெல்லாம் கவிதை கிடைக்கும் ” என்று கவிதையைக் கண்டு கொள்வதற்கான தருணத்தைத்
தெரிவித்துள்ளார்.
கவிஞரான விமர்சகர் , தொகுப்பில் காணப்படும் நல்ல கவிதைகளை அடையாளம் காட்டத் தவறவில்லை. நல்ல கவிதை என்றும் ,
ஆகச் சிறந்த கவிதை என்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்.
பகலின் வெளிச்சத்தை
மழைத் துளிகளை
பூவின் வாசத்தை
உயிரின் காமத்தைக் கடத்தும்
இந்தக் காற்று
சில நேரங்களில்
தானே வார்த்தையாயும் ஆகி விடுவதுண்டு
கவிஞர் சக்தி ஜோதியின் ‘ கடலோடு இசைத்தல் ‘ தொகுப்பில் ‘ தேவ வார்த்தைகள் ‘ என்னும் கவிதையை இத்தொகுப்பின் சிறந்த
கவிதைகளுள் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு பல தொகுதிகளிலிருந்து எடுத்துக் காட்டியுள்ளார். கவிதை அல்லாதவற்றையும்
விமர்சனத்தில் அடையாளம் காட்டியுள்ளார்.
கவிதைகளில் புரியாமல் எழுதுவதும் , புரியக் கூடாது என்று எழுதுவதும் உண்டு. அவ்வகையான கவிதைகளுக்கு இருண்மைக் கவிதைகள்
என்று பெயர். இருண்மைக் கவிதைகள் அடங்கிய தொகுப்பு மீது விமர்சனம் வைக்க முயன்றுள்ளார். இருண்மைக்குள் கவிஞரால் செல்ல
முடியவில்லை. இருண்மையை வெல்ல முடியவில்லை. ” இருண்மைக் கவிதைகளை நான் விரும்புவதில்லை. அதே நேரத்தில் சில
பத்திரிகைகள் விரும்பி வெளியிடுகின்றன. பலரும் புரியவில்லை என்று சொல்கிறார்கள் ” என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இருண்மை புரிகிறது என்று பொய்யான மேதாவித்தனத்தைக் காட்டிக் கொள்ளாதது பாராட்டுக்குரியது. கவிஞர் தேவ தேவனுடைய
கவிதைகள் ‘ எனக்கான கவிதை இல்லை ‘ என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று தலைமுறைக் கவிஞர்களை விமர்சித்துள்ளதன் மூலம் அனைத்துத் தரப்பு தொகுப்புகளையும் கவிஞர் வாசித்துள்ளதை அறிய
முடிகிறது. தமிழ் நாடன் , விக்ரமாதித்யன் , த. பழமலய் , நீலமணி போன்றவர்கள் மூத்த படைப்பாளிகள். கல்யாண்ஜி , பெருமாள் முருகன் ,
ஆனந்த் , மனுஷ்ய புத்திரன் , நெய்வேலி பாரதிக்குமார் , பாவண்ணன் , ரவி சுப்பிரமணியன் , ஆகியோர் இடைப்பட்ட தலை முறையினர்.
அதற்கடுத்த தலை முறையினரும் உண்டு.
மூத்த தலைமுறையினரை விமர்சிக்கும் போது கவிஞர் அவர்தம் காலத்தைக் கணக்கில் , கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ இரவுகள்
அழகு ‘ என்னும் த. பழமலயின் தொகுப்பின் மீதான விமர்சனத்தில் ” பழமலயின் சொற்கள் கவிதையாக மறுக்கின்றன ” என்று ஒற்றை
வரியில் விமர்சித்துள்ளார். பழமலயின் பாணி புதுமையானது. கலை கலைக்காக என்று ஒரு வகையும் , கலை மக்களுக்காக என்று
ஒரு வகையும் இருந்து வருகிறது. கவிஞர் பழமலய் மட்டுமே கலையில் அதாவது கவிதையில் மக்களையே பாடியுள்ளார். அவர் கவிதையில்
வரிகள் இருக்காது . வாழ்க்கை இருக்கும் . சொற்கள் இருக்காது. மனிதர்கள் இருப்பர். ராஜன் விமர்சித்த ‘ எழுத்தெம்ப ‘ என்னும் தமிழ்
நாடனின் தொகுப்பு கவிதைத் தொகுப்பு அல்ல. கவிஞர்கள் எப்படி எழுத வேண்டும் என்று அறிவுறுத்தல் தொடர்பானது. விமர்சகரே
‘ கவிதைகள் அறிவுரைப் பாணியில் அமைந்துள்ளன ‘ என்கிறார்.
கவிஞர் , அர்த்தப் பிழைகளை மட்டும் பார்க்காமல் அச்சுப் பிழைகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். கவிஞர் சுகிதாவின் தொகுப்பில்
‘ பெயர் ‘ கவிதையில் கொல்லை என்னும் சொல் கொள்ளை என்று தவறாக உள்ளது என்கிறார். இத்தொகுப்பில் ‘ சொற்களின் புன்னகை ‘
யில் ‘ இலக்கணம் ‘ என்பது இலக்கம் என்று அச்சாகியுள்ளது.
‘ கவிதையும் என் பார்வையும் ‘ என்னும் தொகுப்பு ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதை மீதான ஆர்வத்தையும் விமர்சிக்க வேண்டும் என்னும்
வேட்கையையும் காட்டுகிறது. கவிதையின் நுட்பங்களை அறிந்து கூறியுள்ளார். கவிதை தனக்குப் பிடித்திருந்தால் ஏன் பிடித்துள்ளது என்றும்
பிடிக்காத போது அதற்கான காரணத்தையும் வசகர்களுடன் பகிர்ந்துள்ளார். கவிதையில் படிமம் , குறியீடு , உள்ளடக்கம் , உருவம்.
சொல்லாட்சி , மொழியாளுமை , ஆகியவற்றையும் அறியச் செய்துள்ளார். இவர் பார்வையில் ஒப்புநோக்கும் உள்ளது. சௌரிராஜன்
விமர்சனங்கள் வாசிப்புக்கு வழி வகுத்துள்ளன. இதை விமர்சனங்கள் என்று ஒதுக்காமல் விமர்சனத்தை ஒரு படைப்பாக ஏற்றுக் கொள்வதே
ஸ்ரீரங்க ராஜனுக்குச் செய்யும் சிறப்பாகும் !
வெளியீடு ; சௌ. ராஜேஷ் பதிப்பகம் , 12 – பி சரஸ்வதி தோட்டம் 3 – ஆம் தெரு., ராகவேந்திரபுரம் , ஸ்ரீரங்கம் , திருச்சி – 620 006
விலை ரூ. 250 [ பக்கங்கள் 320 ]

Series Navigationதினம் என் பயணங்கள் -45 இலக்கை நோக்கிய பயணம்!திரு. ஈரோடு. கதிர் அவர்களின் கட்டுரைத் தொகுப்பு, கிளையிலிருந்து வேர் வரை – திறனாய்வு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *