திவ்யா ஆவுடையப்பன்
(1)
ஆதி கண்விழித்தப்போது கடைசி ஹெலிக்காப்டரும் போய்விட்டிருந்தது. அருகில் பஞ்சுபொதிப்போல் உறங்கும் அம்முவை பார்த்தான்.
“என்னை மன்னித்துவிடு அம்மு. இது உனக்கு நடக்க கூடாது! ஆனால் எனக்கு வேறு வழித் தெரியவில்லை. நான் உன்னை கொன்றே ஆக வேண்டும் அம்மு.”
குனிந்து அவள் உதடுகளை உறுத்தாமல் மெல்லிய முத்தமிட்டான். லேசாக அசைந்துவிட்டு மறுபடியும் தூங்கிப்போனாள். அவள் உதட்டில் ஒரு அழகான சிறு புன்னகை நிரந்தரமாக குடியிருந்தது. எந்த கனவில் என்ன ஆசை நிறைவேறியதோ…
கீழே சென்று காபி கலந்து எடுத்து வரும்போது அவள் முழித்துவிட்டாள்.
“குட்மார்னிங்…” என்றான். அவளருகில் அமர்ந்து அவள் தலையை கோதிவிட்டு அவள் முகத்தையே பார்த்திருந்தான்.
அவனை பார்த்தவுடன் மெல்ல புன்னகைத்தாள். “என்னடா பார்க்கறே… காலையிலயே ரொமான்ஸா…” என்றாள் சிரித்தப்படி. ஆதியின் மனம் சற்றே கனத்தது. “இவளையா கொல்லப் போகிறேன்!!!.”
அம்மு மெல்ல எழுந்து உட்கார்ந்தாள், ஒவ்வொரு அசைவிலும் முனங்கி கொண்டு. ஆதி அவளை ஏறிட்டு பார்த்தப்போது மனதுக்குள் திடுக்கிட்டான். கன்னங்கள் ஒட்டிப்போய், கண்களின் கீழே கருவளையதுடன், ஒரு நடமாடும் எலும்புக்கூடாகியிருந்தாள்.
“சரி! காலைக்கு என்ன பண்ண…?” என்றான்.
அம்மு சோகமாய் சிரித்தாள். “எப்படி மாறிட்டேடா… ஒரு காலத்துல உனக்கு சுடுத்தண்ணிக் கூட வைக்க தெரியாது… என்னாலத்தானே…” அவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன.
“ச்சே! லூசு… அப்படியெல்லாம் இல்லை… இன்னைக்கு ஸ்பெஷல் டே… அழக்கூடாது… புரிஞ்சதா?…” என்றான் ஆதி.
“என்னடா ஸ்பெஷல்?…” என்றாள் அம்மு கண்களை துடைத்தப்படி.
“சொல்ல மாட்டேன். சஸ்பென்ஸ்… சாப்பாட்டுக்கப்புறம் சொல்றேன்… சரி! என்ன வேணும் சொல்லு…” என்றான்.
ஓரு கணம் அவனை செல்லமாக முறைத்துப் பார்த்தவள் பின் யோசித்து “ உனக்கு என்ன பிடிக்குதோ அதை பண்ணு” என்றாள்.
சரியென்று அவன் எழ போனப்போது, “ஆதி! ரொம்ப குளிருது… AC நிறுத்திட்டு, ஜன்னல் தொறந்து விடேன்” என்றாள்.
“இல்லை அம்மு! வெளியே எதோ வேலை பார்க்கறாங்க… ஒரே தூசி. அதான் சொன்னேனே…” என்றான்.
“என்ன 3 நாளாவா வேலை பார்க்கறாங்க?”
“ஏதோ பெரிய கட்டிடம் கட்டறாங்க. சரி! நீ ரெஸ்ட் எடு..” என்று விலகப் போனவனைத் தடுத்து TV யாச்சும் போடேன்…” என்றாள்.
“கேபிள் ரிப்பேராயிடுச்சுடா! அன்னைக்கே சொன்னேன்ல…!” என்றான்.
“பாவி! 3 நாளா என்ன நடக்குதுன்னே தெரியலை. இப்படி ரூமுக்குள்ளயே விட்டு போரடிக்குது” என்று சிணுங்கினாள்.
பீரோவை திறந்து ஒரு பழைய நோட்டை எடுத்தான். “இன்னைக்கு இதைப்படியேன்!” என்றான்.
அம்மு சிரித்தாள். அது அவன் அவளை காதலித்தப்போது அவளுக்காக எழுதிய நோட்டுப்புத்தகம்.
அவளை அணைத்து முத்தமிட்டு, “ நான் கடைக்கு போய் சாமான் வாங்கிட்டு வந்துடறேன்” என்று அவன் வெளியே சென்றான்.
(2)
ஆதி கடையிலிருந்து வீடு திரும்பியபோது அவன் பாக்கெட்டில் பாட்டில் கனத்தது. வழி முழுவதும் அம்முவின் ஞாபகங்கள் மட்டுமெ அவன் மனதில் நிரம்பியிருந்தன.
அம்முவை அவன் சந்தித்த நாளை அவன் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆதியின் சராசரி வாழ்வு ஒரு தேவதை கதையாய் மாறிய நாள். தேவதைகள் சொல்லிக்கொண்டு வருவதில்லை. எங்கிருந்தோ மிதந்து வந்து உங்கள் வாழ்வில் இறங்குகிறார்கள். அம்முவும் மிதந்து வந்தாள் – காலையின் இளஞ்சூரியன் ஒளியில். தனியாய், கன்னங்களில் சூரியன் பிரதிபலிக்க அவள் மைதானத்தை நோக்கி வந்ததில் ஒரு சோகமிருந்தது. அந்த சோகத்தை துடைத்து விட வேண்டுமென்று ஆதிக்கு தோன்றியது. இவளை சிரிக்க,ரசிக்க வைப்பதே தன் பிறவிப்பயன் என்று ஆதி உணர்ந்தான்.
அவள் திரும்பி இவன் பக்கம் பார்த்தப்போது அந்த கண்களில் கலந்து போனான். தட்டென்று அவன் தலையில் பாஸ்கெட் பால் விழுந்தப்போதுதான் சுயநினைவுக்கு திரும்பினான். “அம்மா!” என்றப்போது எழுந்த கோபம் அவளின் சிரிப்பில் கரைந்துப்போனது. தலையின் புடைப்பையும் மீறி சிரிக்கத்தோன்றியது.
ஆதி பெரூமூச்சு விட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான். “அன்னைக்கே அவளிடம் பேசியிருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்” ஆதியின் வகுப்புக்கள் அதன்பின் அவளின் உருவங்களாய் மாறிப்போயின. இருந்தும் அவன் அவளிடம் பேசவில்லை. ஏன்? தெரியவில்லை. அவர்கள் இணைந்ததிற்கு ஒரு காதல் கடிதமே காரணம்.
அவன் பையிலிருந்தவற்றை எடுத்து வைத்துக்கொண்டே சிரித்தான். “சந்துரு! சந்துரு!…” சந்துரு வகுப்பின் ரவுடி. அவன் அம்முவின் பின்னால் சுற்றுவது ஆதிக்கு தெரியும். வகுப்பில் பாதி பேர் அதைதான் செய்வதால் அவன் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் காலேஜ் டேயன்று அம்மு ஒரு காகிதத்தை கையில் வைத்துக் கொண்டு தனியாக அமர்ந்திருப்பதை பார்த்தப்போது அவனால் தாண்டிச்செல்ல முடியவில்லை. மெல்ல அவளை நெருங்கி “அம்மு!” என்று அழைத்தான். அவன் மனம் ஆயிரம் முறை உச்சரித்திருந்தாலும் உதடுகள் முதல் முறை உச்சரிக்கும் போது அவன் உடம்பு சிலிர்த்தது. நிமிர்ந்து சோகம் அடர்ந்த கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
“ஏங்க இங்க தனியா உக்கார்ந்திருக்கிங்க?”
அம்மு ஒரு கணம் அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்தாள். பின் எதுவும் பேசாமல் அந்த காகிதத்தை நீட்டினாள். வாழ்கையை சிறு செயல்களே மாற்றியமைக்கின்றன. அவன் வாழ்வில் அந்த செய்கையில் அவள் நுழைந்தாள். அது காதல் கடிதமென்று அதை வாங்கும் முன்பே அவனுக்கு தோன்றியது. அதில் சந்துரு தமிழை மென்று கொன்று ஆங்கிலத்தை தடவி அவன் காதலை துப்பியிருந்தான். இறுதியில் “இதுக்கு நீ பதில் சொல்லாட்டி உங்க வீட்டுக்கு வந்து வாசல்ல நின்னு சத்தம் போடுவேன். So ஒழுங்கா சீக்கிரம் பதிலை சொல்லு” என்று மிரட்டலுடன் முடித்திருந்தான். ஆதி படித்தவுடன் “இவன் உங்களை லவ் பண்றானா இல்லை மிரட்டுறானா” என்றான். அம்மு மெலிதாய் சிரித்து, “தெரியலியேப்பா!” என்றாள் நாயகன் பாணியில். இருவரும் கண்களில் நீர் வர சிரித்தனர்.
“நிஜமா என்ன பண்றதுன்னு தெரியலீங்க. எங்க வீட்டுல் என்னைக் கொன்னுடுவாங்க” என்றாள் அம்மு.
“பேசாம உங்களுக்கு ஒரு லவ்வர் இருக்கறதா பொய் சொல்லிடுங்க. மாமா பையன். அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்லிடுங்க” என்றான் ஆதி. அவளை அந்த யோசனைக்கு சம்மதிக்க வைத்துவிட்டு அவள் வீட்டுப் போன் நம்பரையும் மறக்காமல் வாங்கிவிட்டு நடந்தப்போது அவள்தான் தன் காதலியென்று ஆதிக்கு உறுதியாக தோன்றியது.
அதன்பின் நீங்க வாங்க போய் வா போவை கடந்து வாடா போடாவென்று அவர்கள் நெருக்கம் வளர்ந்தது. சந்துருவும் அவன் தொல்லைகளும் முடிந்து அவர்களின் 20 வருட வாழ்க்கையும் மற்றும் பல இனிய முட்டாள்த்தனங்களும் அவர்கள் பேச்சை ஆக்கிரமித்தப்போதுதான் ஆதி தன் காதலை சொன்னான்.
காய்களை நறுக்க ஆரம்பித்தான் ஆதி. அவளிடம் என்றுமே ஐ லவ் யூ சொன்னதில்லை. அதை அவள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் சுட்டிக்காட்ட தவறுவதில்லை. அன்று அவளிடம் போனில் நான் உன்னுடன் வாழ ஆசைப்படுகிறேன் என்று சொன்னபின் நிலவிய மவுனத்தில் அவன் தன் இதய துடிப்பை உணர்ந்தான்.
“நிறைய பிரச்சனை வரும்டா!” என்றாள்.
“அது வரும் போது தீர்வும் வரும். அப்போ உனக்கு சம்மதமா?” என்றான் வேகமாக.
“ம்ம்…”
என்ன சொல்வதென்று தெரியாமல் “தேங்க்ஸ்!” என்றான். காரணமில்லாமல் சிரித்தான்.
ஆதி அடுப்பை மூட்டியப்படியே சிரித்தான். வெளியே வெப்பம் அதிகமாயிருந்தது. பறவைகளின் சப்தமில்லாமல் ஒரு அமைதி நிலவியது. அடுப்பில் காய் போடும் சப்தம் சொரீரென்று ஒலித்தது. அவர்கள் காதலை வீட்டில் சொல்லுவதற்குள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியத்தை காதல் அவர்களுக்கு தந்திருந்தது. ஆனால் அம்முவை பார்த்த அடுத்த கணமே அவன் பெற்றோர் அவளை நேசித்தனர். அவள் கண்களில் ஏமாற்றத்தை காண முடியாத அளவுக்கு அவள் பெற்றோர் அவளை நேசித்தனர். அவர்கள் திருமணம் நடந்தப்போது உலகில் சந்தோஷத்தை தவிர வேறில்லை என்றே தோன்றியது. முதலிரவில் அவளை இறுக்கி அணைத்து அவள் கழுத்தில் அழுதப்போது சந்தோஷக் கண்ணீரை அறிந்தான், நிஜ கண்ணீர் நிறைந்த நாட்கள் சற்று தொலைவிலிருப்பதையறியாமல்.
இன்றும் அவன் மனதை உறுத்துவது சற்று முன்பே கவனித்திருக்கலாமோவென்ற எண்ணம்தான். காதலி மனைவியானப்பின் ஒரு அலட்சிய உரிமை வந்து விடுகிறது. விட்டு செல்ல மாட்டாள் என்ற உறுதியில் அவளை தினம் தினம் கவர வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. அம்மு அடிக்கடி உடம்பு முடியவில்லையென்று படுக்கும் போது அவன் பெரிதாக நினைக்கவில்லை. பக்கத்து வீட்டு சுதா தான் முதலில் அவள் மெலிந்திருப்பதை கவனித்தாள். டாக்டரை போய் பாருங்கள் என்ற அவள் யோசனைக்கு பின் தான் ஆதியும் அதை உணர்ந்தான்.
“அம்மு! அம்மு!…. நீயாவது சொல்லியிருக்கலாமில்லையா…. என்னைப் பத்தியே யோசிச்சுட்டு உன்னை விட்டுட்டேனே அம்மு. எல்லா வலியையும் உள்ளடக்கிட்டு எப்படி உன்னால சிரிக்க முடிஞ்சது. நான் போனப்புறம் இருந்த தனிமையில எத்தனை கண்ணீர் சிந்தியிருப்ப…” ஆதி குலுங்கி குலுங்கி அழுதான். அவன் கண்ணீர்த்துளிகளும் காய்கறிகளுடன் வெந்தன.
CANCER – ஆறு வார்த்தைகள் அதன் பயங்கரத்தை காட்டுவதில்லை. பாதி வேலையில் போய் படுக்க வைக்கும் சோர்வை சொல்லுவதில்லை. சின்ன காய்ச்சல் கூட 10 நாள் நீடித்து தரும் அவஸ்தையை, வலியால் மடிந்து துடிக்கும் சோகத்தை உணர்த்துவதில்லை. அம்மு ஒரு முறை அப்படி வலியில் துடிக்கும் போதும் சிரித்தாள், “நம்ம லவ் எந்த எதிர்ப்புமில்லாம போச்சுன்னவுடனே தமிழ்ப்படத்துல வர மாதிரி எனக்கு cancer வந்துடுச்சுப் பாத்தியா…”
படத்திலாவது நாயகி 2 மணி நேரம்தான் கஷ்டப்படுவாள். அம்மு 2 வருடம் போராடுகிறாள். கான்சர் அவளை உருக்கி விட்டிருந்தது. அவளின் சிரிக்கும் கண்களை தவிர எலும்புக்கூடு மட்டுமே மிஞ்சியிருந்தது.
மனித மனத்தின் மிக பெரிய சொத்து நம்பிக்கை. ஆதிக்கு நம்பிக்கையிருந்தது. எப்படியாவது காப்பாற்றிவிடலாமென்று தோன்றியது. 100 வருடம் வாழுவோமென்று ஆரம்பித்த காதல் இவ்வளவு சீக்கிரம் முடியாதென்று தோன்றியது – ஆஷாவை பார்க்கும்வரை.
ஆதி சாம்பாரை இறக்கி வைத்து விஷத்தை அதில் ஊற்றினான்.
(3)
ஆதி அவர்கள் அறைக்குள் நுழைந்தப்போது அம்மு அழுதுக் கொண்டிருந்தாள். அமைதியாக அவளருகே அமர்ந்து அவள் கையை அழுத்தினான்.
“சாரிடா!” என்று அவனை கட்டியணைத்து அழுதாள். “உன்னை ஏமாத்திட்டேன்ல். ஏன்டா என்னை லவ் பண்ணி தொலைச்சே…” என்று புலம்பினாள். ஆதி பதில் பேசாமல் அவளை இறுக்கி கொண்டிருந்தான். அவன் சோகப்பட்டு சோகப்பட்டு ஒரு வெறுமையை அடைந்திருந்தான்.
“சாப்பிடப்போலாமா?” என்று அவள் அழுகை சற்றே அடங்கியப்பின்.
அவன் தலையை முட்டி கன்னத்தில் முத்தமிட்டாள். தூக்கிக்கொள் என்பது போல கையை நீட்டினாள். ஆதி அவளை வளைத்து தூக்கிக்கொண்டு படிகளில் இறங்கினாள்.
“ஏண்டா ஜன்னலை அடைச்சிருக்க?” என்றாள்.
“வெய்ட்…” என்று தீப்பெட்டியை எடுத்து அறை முழுவதுமிருந்த மெழுகுவர்த்திகளை கொளுத்தினான். அம்மு கண்களில் ஆச்சர்யம் படர சிரித்தாள்.
“தூள் கிளப்பிட்ட…!”
“கிளம்புடா…!” 3 நாள் முன்பு போனில் ஒலித்த அம்மா குரல் ஞாபகம் வந்தது.
“அவளை விட்டுட்டா….” என்றான், அவன் குரலில் கேலி கலந்து.
அம்மா பதில் சொல்லவில்லை. அவன் அவளை விட மாட்டான் என்றுத் தெரிந்தது. 25 வருடம் தான் வளர்த்த மகன் தன் வாழ்வை அழிக்கிறானென்ற வருத்தம் அவளை பேச வைத்தது. “பேசாம அவளை கொன்னுடு!!!….”
“அம்மா…” ஆதி கத்தி விட்டான்.
“யோசிச்சு பாருடா! இப்படி ஒரு சாவு வேதனை அவளுக்கு தேவையா… அவளுக்கு புரியும்டா… அவளே அதைத்தான் விரும்புவா… நீ எங்கயிருந்தாலும் நல்லா இருக்கனும்னுத்தான் நினைப்பா… ப்ளீஸ்… யோசி….”
ஆதி ஆத்திரத்துடன் போனை வைத்து விட்டான். அதன்பின் போன்கள் வேலை செய்யவில்லை.
சமையலறையில் நுழைந்த ஆதி சாம்பாரை வெறிக்கப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
“ஆதி….!” அம்முவின் குரல் கேட்டு திடுக்கிட்டு திரும்பினான்.
“என்னாச்சு?” என்றாள் கண்களில் கேள்வி மின்ன.
“ஒண்ணுமில்லை! என்று ஆதி அவளை நெருங்கி தாங்கிப் பிடித்துக் கொண்டான். “ஏன் இப்படி கஷ்டப்பட்டு எழுந்து வர..?” என்று அவளை நடத்தி உட்கார வைத்தான்.
அவளுக்கு உணவு பரிமாறியப்போது அவன் கைகள் நடுங்குவதை அவள் கவனித்தாலும் கேட்கவில்லை. உணவையே வெறித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று சாப்பிட ஆரம்பித்தாள்.
அந்த அமைதியில் மின் விசிறியின் சப்தம் மட்டுமே எதிரொலித்துக்கொண்டிருந்தது.
“நீ சாப்பிடலையா?…” என்றாள்.
இல்லையென்று தலையசைத்தான். அவன் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அம்மு சட்டென்று அழ ஆரம்பித்தாள்.
“ஏன்டா…? ஏன்டா…? உன்னாலயும் முடியலியா? சொல்லியிருந்தா நானே சாப்பிட்டுருப்பேனே… நீ ஏன்டா என்னை கொல்றே?… நீ கொடுத்த விஷத்தை விட அதை நீ கொடுத்தன்றதுதான்டா என்னைக் கொல்லுது!…ஏன்டா இப்படி பண்ண?…”
அவன் புரியாமல் பார்க்க, “ப்ளீஸ்… நான் சாகப் போறப்போ பொய் சொல்லாத… நான் அந்த பாட்டிலை பார்த்துட்டேன். ப்ளீஸ்… பொய் சொல்லாத… ப்ளீஸ்…!”
அவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்துப் போய் அலமாரியை திறந்து அந்த தினசரியை எடுத்து அவள் முன் வைத்தான். ஜன்னலை திறந்து விட்டு அவளருகில் மண்டியிட்டு அமர்ந்தான். அதிர்ச்சி மாறாமல் தினசரியை பார்த்திருந்தவள் மெல்ல அவன் பக்கம் திரும்பி அவனைக் கட்டியணைத்துக் கொண்டாள்.
“சாரிடா… சாரிடா… ஏன் நீ போகலை?… எனக்காகவா?…”
அவன் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்திருந்தான். என்ன சொல்ல… எதை சொல்ல… வார்த்தைகள் சொல்ல இயலாததை அவன் அவள் உதட்டிலிட்ட முத்தம் சொல்லியது.
தன் தோளில் சாய்ந்த அம்முவின் முகத்தை தடவிக் கொடுத்தான். கண்களை திறந்தபடியே அம்மு இறந்திருந்தாள். அவனை கவர்ந்த அந்த கண்களில் இன்னும் உயிரிருந்தது.
மெல்ல அவளை வாரி அணைத்துக் கொண்டு மாடிப்படியேறினான். ஒவ்வொரு படியும் அவர்கள் நினைவை எதிரொலித்தது.
“நம்ம 2 பேருக்கு இவ்வளவு பெரிய வீடு தேவையா…
அதுக்கென்ன?… இன்னைக்கு நைட்டே மூணு ஆக்கிடலாம்…
ச்சீய்… அசிங்காம பேசாத…”
படுக்கையறை கதவை திறந்தான்.
“என்னப் பார்க்கிறே…
நீ மட்டும் எப்படி அம்மு இப்படி அழகா இருக்க… ஒண்ணு சொல்லட்டுமா… நான் சாகறப்போ கூட உன்னைப் பார்த்துட்டு இருக்கணும்..
லூசுத்தனமா பேசாத….”
அவளை படுக்கையில் கிடத்தி அவளை அணைத்தப்படியே படுத்து அவள் கண்களைப் பார்த்து கண்ணீர் கலந்த குரலில் கிசுகிசுத்தான்.
“ ஐ லவ் யூ அம்மு…”
சிறிது நேரத்தில் கீழே அடிவானத்தில் கிளம்பிய வெளிச்சம் ஜன்னல் வழியாக நுழைந்து
“ஆஷா விண்கல் இன்னும் 3 நாட்களில் சென்னை மீது மோதும் – பேரழிவு நிகழுமென எச்சரிக்கை.
நோயாளிகள், முதியோரை தவிர மற்றவர்கள் நகரை காலி செய்ய அரசு ஏற்பாடு…”
என்ற அந்த தினசரியின் செய்தியை நனைத்து பரவியது.
- ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்தது.
- ஆஷா
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 8
- திரும்பிப்பார்க்கின்றேன் பவளவிழா நாயகன் பத்மநாப ஐயரும் கலை – இலக்கிய பதிப்புலகமும்
- கவிஞர் அம்பித்தாத்தா
- பழக்கம்
- தொடுவானம் 134. கண்ணியல்
- சூழல் மாசு குறித்த கவிதைகள் சில
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ 4
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 3
- ‘ இளைய ராணியின் நகைப் பெட்டி’ – 2
- குறுநாவல் இளைய ராணியின் நகைப் பெட்டி – 1
- காப்பியக் காட்சிகள் 18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்
- பகீர் பகிர்வு
- சிறந்த சிறுகதை எழுத்தாளர்கள் – சிறு குறிப்புகள் -1
- வேழப் பத்து—11
- விழியாக வருவாயா….?
- சபாஷ் தமிழா…! – காவிரி பற்றி பேசும் தகுதி நமக்கு உள்ளதா?
- தள்ளுபடியில் தள்ளாடும் குடும்பத்தலைவர்
- மிக அருகில் கடல் – இந்திரன்