உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 9- சமீம் சரீஃப்பின் இரண்டு படங்கள்

author
1
0 minutes, 10 seconds Read
This entry is part 3 of 8 in the series 10 ஜூன் 2018

அழகர்சாமி சக்திவேல்

திரைப்பட விமர்சனம் –

இந்திய வம்சாவளிப் பெண் இயக்குனரான திருமதி சமீம் ஷரீஃப், இங்கிலாந்தில் வாழும் பெண்மணி. அவர் இயக்கிய இந்த இரண்டு பிரபல காதல் படங்களுமே,  உலகின் பலரால் பேசப்பட்ட படங்கள் ஆகும். சமீம் ஷரீஃப்பின் இந்த இரண்டு படங்களிலுமே,  இந்திய வம்சாவளிப் பெண்களே லெஸ்பியன் கதாநாயகிகளாக நடித்து இருக்கிறார்கள். ‘The World Unseen’ என்ற ஒரு திரைப்படம், 1950-இல் தென்னாப்பிக்காவில் நடந்த, வெள்ளையர்களின் இனவெறியை களமாகக் கொண்ட இந்தியக் காதல் கதை ஆகும். ‘I can’t think straight’ என்ற இன்னொரு திரைப்படமோ, ஜோர்டானின் பாலஸ்தீனக் கிறித்துவக் கலாச்சாரத்தையும், லண்டனின் வாழும், இந்திய முஸ்லிம் கலாச்சாரத்தையும் களமாகக் கொண்ட மற்றுமொரு இந்தியக் காதல் கதை ஆகும். ஒரு பெண், ஒரு ஆணைக் காதலிக்கும் காட்சிகளில் இருக்கும் அந்தரங்கச் சுவையை விட, ஒரு பெண், இன்னொரு பெண்ணைக் காதலிக்கும் காட்சிகளில் இருக்கும் அந்தரங்கச் சுவை இன்னும் கொஞ்சம் அலாதியானது என்று சொல்லாமல் சொல்லும் பல காட்சிகள், சமீமின் இரண்டு படத்திலுமே இருக்கின்றன. குறிப்பாய் அந்த இரண்டு கதாநாயகிகளின் அழகிய பேசும் விழிகளையும். மௌனமாய்ப் பரிமாறும் லெஸ்பியன் காதல் ஜாடைகளையும், நிச்சயம் நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. இரண்டு படங்களிலுமே, காதுக்கினிய பாடல்கள் நிறைய இருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் கதைக்களத்தோடு இழைந்தோடும் அந்த ரெட்ரோ என்ற மேற்கத்திய மெல்லிசை, பாலஸ்தீனக் கதைக்களத்தின் பின்னால், பிரமாதப்படுத்தும் அந்த அரேபிய மற்றும் மேற்கத்திய இசை, மேற்சொன்ன இரண்டு இசைகளுக்கும் ஏற்றவாறு படமாக்கப்பட்டு இருக்கும் காட்சிகள் என, படம் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் பல விஷயங்களை, படம் நிறைய வைத்து இருப்பது, இயக்குனர் சமீமின் சிறப்பு ஆகும். மலைமீதில் இருந்து, கீழ் நோக்கி பள்ளத்தில் விழும், அருவியின் ஆரவார சத்தத்தை, இயக்குனர் சமீமின் படங்களில் எங்கும் பார்க்கமுடியாது. மாறாய், பள்ளத்தாக்கில், ஒரே மாதிரியாய் சலசலத்து ஓடும், ஆற்றின் அமைதியான சத்தத்தை, சமீமின் படம் முழுக்கக் காணலாம். படம் தென்னாப்பிரிக்காவில், 1950-இல் நடப்பதால், தென்னாப்பிரிக்காவில் அன்று நடந்த இனக்கொடுமைகள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

அபார்திட் என்று சொல்லப்படுகிற இனப்பிரிப்புச் சட்டம், 1948-இல், தென் ஆப்பிரிக்காவை ஆண்ட வெள்ளையர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகும். இந்த இன துவேச சட்டம், தென் ஆப்பிரிக்க மக்களை, வெள்ளையர்கள், கஃபீர் என்று ஏளனமாய்ச் சொல்லப்பட்ட கருப்பர்கள், இந்தியர்கள் மற்றும் கலப்புத்திருமணம் செய்துகொண்டோர் என நான்கு பிரிவுகளாகப் பிரித்தது. வெள்ளையர் தவிர, மற்றவர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க, மேல்சொன்ன அபார்திட் சட்டம் வழிவகை செய்தது. நாட்டில் எந்த இடத்திற்குச் சென்றாலும், இந்த அடையாள அட்டைகளை வெள்ளையர் அல்லாதோர் எடுத்துக்கொண்டு செல்லவேண்டும் என்பது கட்டாயமாக்கப் பட்டது. வெள்ளையர்கள் மட்டுமே நகரங்களில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர். மற்ற மூன்று பிரிவினரும், நகரங்களில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, நகரங்களைத் தாண்டிய தொலைதூரப் பகுதிகளில், வலுக்கட்டாயமாகக் குடியேற்றப்பட்டனர். அந்தந்த இனத்தைச் சேர்ந்தவர்கள், அந்தந்த இனத்தவர்களுக்கென கொடுக்கப்பட்ட இடங்களில்தான் வசிக்கவேண்டும். நகர்ப்புற கல்விக்கூடங்கள், உயர்பதவிகள் போன்றவற்றில், வெள்ளையர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கூலிவேலை செய்ய மட்டுமே கருப்பர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவை அனைத்துக்கும் மேலாக, கலப்பு மறுமண தடைச்சட்டம், ஒழுக்கக்கேடு சட்டம் என்ற இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. முதல் சட்டப்படி, வெள்ளையரையோ, அல்லது தனது சொந்த இனமல்லாத மற்ற இனத்தவரையோ கலப்புமணம் செய்து கொள்வது, கடுமையாய் தண்டிக்கப்பட்டது. இரண்டாவது சட்டப்படி, வெள்ளையரோடு செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் வெள்ளையர் அல்லாத மற்ற இனத்தவர்கள், கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். பீச், பார்க், பஸ், புகைவண்டிகள் போன்ற பொது இடங்களில் வெள்ளையர்களுக்கென இடங்கள் ஒதுக்கப்பட்டன. அது போன்ற இடங்களை, மற்ற இனத்தவர்கள் உபயோகிக்க முடியாது. இப்படிப்பட்ட அடிமைச் சட்டத்தின் பிடிகளுக்குள் மாட்டிக்கொண்ட மூன்று காதல் ஜோடிகளின் கதைதான், The World Unseen படத்தின் கதை ஆகும்.

இனி இரண்டாவது கதைக்களமான ஜோர்டான் பற்றி தெரிந்துகொள்வோம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதாய் சொல்லப்படும் நாளில் இருந்தே, ஜோர்டானில், பாலஸ்தீனக் கிறித்துவர்கள் வசித்துவந்தனர். ஆரம்பத்தில் இருபது சதவிகிதம் ஆக இருந்த ஜோர்டானின் பாலஸ்தீனக் கிறித்துவர்கள், காலப்போக்கில், இஸ்லாமியரின் புதுக்குடியேற்றத்தால், வெறும் நான்கு சதவிகிதத்திற்குச் சுருங்கினர். பாலஸ்தீனிய கிறித்துவக் கலாச்சாரத்தின் சிறப்பு என்னவென்றால்,  அது இஸ்லாமிய வழக்கங்களை தன்னகத்தே இணைத்துக் கொண்டது ஆகும். சில கிறித்துவர்கள், பரம்பரை பணக்காரர்கள் ஆக இருந்தனர். அப்படி பணபலம் கொண்டோர், தங்கள் பிள்ளைகளை, இங்கிலாந்து, அமேரிக்கா போன்ற கிறித்துவ நாடுகளுக்கு அனுப்பி படிக்க வைத்தார்கள். I can’t think straight என்ற இரண்டாவது படத்தின் நாயகி,  இது போன்ற பணக்காரக் குடும்பத்தில் பிறந்து, லண்டனுக்கு படிக்கப்போய், அங்கேயே, தனது இஸ்லாமிய லெஸ்பியன் காதலியைத் தேடிக்கொண்டதாக படத்தின் கதை போகிறது.

சமீமின் இந்த இரண்டு படங்களுமே, ஓரினச்சேர்க்கை உலகிற்கு மிகவும் பரிச்சயமான படங்களாகும். ஆஸ்கர் போன்ற பிரபலமான விருதுகள், சமீமின் படங்களுக்குக் கிடைக்காவிட்டாலும், பற்பல மற்ற உலகவிருதுகளை, இவரின் இந்த இரண்டு படங்கள் வாங்கியிருப்பதை, இங்கே குறிப்பிட்டாக வேண்டும். முக்கியமாய் இரண்டு படத்தின் பாடல்களுமே, மேற்கத்திய இசை உலகில் மிகவும் விரும்பிக் கேட்கப்படும் பாடல்கள் ஆகும். பாடகி லியோனா காசனோவாவின் மனதை வருடும் மெல்லிசைப்பாடல்கள் சமீமின் இரண்டு படங்களிலுமே இடம் பெற்று இருப்பது, படத்தின் குறிப்படத்தக்க சிறப்பு. இனி  இரண்டு படங்களின் கதைகளைப் பற்றி பேசுவோம்.

‘The World Unseen’ – இந்தத் திரைப்படத்தின் கதை, தென்னாப்ப்ரிக்காவில் நிறவெறி உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் இருந்து தொடங்குகிறது. கதையின் நாயகியான ஆமினா, ஒரு சுதந்திரப் பெண் பறவை. தென்னாப்பிரிக்கா, வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டு இருந்த போதும், கொடுமைப்படுத்தியபோதும், அதையெல்லாம் தைரியமாய் எதிர்கொள்ளும் மனநிலையோடு வாழ்கிறாள் ஆமீனா. இந்தியர்கள், கருப்பர்கள், மற்றும் வெள்ளையர் உடன் மற்ற இந்தியர் அல்லது கருப்பர்கள் கலந்து பிறந்த கலப்பின மக்கள், ஆகிய இவர்களுக்காய் ஒரு விடுதி வைத்து நடத்துகிறாள் ஆமீனா. ஆமீனா நடத்தும் விடுதியின் இன்னொரு பங்குதாரர் ஜேக்கப். ஜேக்கப் ஒரு வெள்ளையருக்கும், கருப்பருக்கும் பிறந்த கலப்பினர் ஆவார். தென்னாப்பிரிக்கா சட்டப்படி, ஜேக்கப் எந்த வித வர்த்தகமும் செய்யமுடியாது. இருப்பினும், ஆமீனாவின் ஊக்குவிப்பால், ஆமீனா நடத்தும் விடுதியில், ரகசிய பங்குதாரர் ஆகிறார். ஜேக்கப், ஜேக்கப், மெக்டலின் என்ற வெள்ளைக்காரப் பெண்ணை காதலிக்கிறார். ஒரு வெள்ளையரை, வெள்ளையர் அல்லாதோர் காதலிப்பது என்பது சட்டப்படி குற்றம் ஆகும். இருப்பினும் ஜேக்கப்-மெக்டலின் காதல் ரகசியமாகத் தொடர, ஆமினா உதவி செய்கிறாள். தென்னாப்பிரிக்கா நிறவெறி சட்டப்படி, நகரத்துக்கு வெளியே இந்தியர்களுக்கு, வீடு கட்ட நிலம் ஒதுக்கப்படுகிறது. அப்படி கட்டப்பட்ட ஒரு வீட்டில் மிரியம் என்ற பெண் வசிக்கிறாள். மிரியத்திற்கு மூன்று குழந்தைகள். மிரியத்தின் கணவன் ஓமர் நகருக்குள் சென்று வியாபாரம் செய்கிறான். ஆணாதிக்கம் நிறைந்த ஓமர், நகருக்குள் இன்னொருத்தியை வப்பாட்டியாகவும் வைத்துக் கொள்கிறான். மிரியம் கண்டு மனம் வெதும்பினாலும் குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்துப் போகிறாள். ஓமரின் தங்கை ரெஹ்மத், நகரில் உள்ள ஒரு வெள்ளைக்காரரை, சட்டத்தை மீறி கல்யாணம் செய்து கொள்கிறாள். காவல்துறை அதை மோப்பம் பிடித்துவிடுகிறது. ரேஹ்மத்தை கைது செய்ய அண்ணன் ஓமர்- மிரியம் தம்பதி வீட்டிற்கு வருகிறது. மிரியம் வீட்டில் இருந்து தப்பிக்கும் ரேஹ்மத்துக்கு, ஆமீனா தனது விடுதியில் அடைக்கலம் தருகிறாள். அதைபார்க்கும் மிரியம், ஆமீனாவுக்கு நன்றி சொல்கிறாள். ஆமீனா – மிரியம் இந்த இரண்டு பெண்களுக்குள்ளும் அடக்கி வைத்து இருந்த லெஸ்பியன் காதல் மறுபடியும் பூவாய் மலர்கிறது. ஓமர்-மிரியம் தம்பதிகளின் வீட்டுத் தோட்டத்தை செப்பனிடும் வேலை நிமித்தமாய், மிரியம் வீட்டிற்கு வருகிறாள் ஆமீனா. மிரியம்= ஆமீனா லெஸ்பியன் உறவு இன்னும் வளர்கிறது. மிரியம்-ஆமீனா லெஸ்பியன் காதல் வெற்றி பெற்றதா.. ஜேக்கப்-மெக்டலின் கலப்பினக் காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, ரேஹ்மத்தின் கலப்பினத் திருமணத்தால், ரேஹ்மத் சிறை சென்றாளா என்பதையெல்லாம் சொல்லும் படமே ‘The World Unseen’.

‘I can’t think straight’ என்ற படத்தின் கதைக்களமோ வேறு. நாயகி தாலா, ஜோர்டானில் வசிக்கும் ஒரு பாலஸ்தீன கிறித்துவக் குடும்பத்தில் பிறந்தவள். மேல் படிப்பு படிப்பதற்காய் லண்டன் வருகிறாள் தாலா. படிக்க வந்த இடத்தில், இன்னொரு நாயகி லெய்லாவை சந்திக்கிறாள் தாலா. லெய்லா, லண்டனில் வசிக்கும் ஒரு இந்திய முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவள். லேய்லாவின் அம்மா, லண்டனில் வசிக்கும் அலி என்பவனுக்கு லேய்லாவை மணம் முடித்துக் கொடுக்க ஆசைபடுகிறாள். லேய்லாவும் அலியும், தனிமையில் மனம் விட்டுப் பேச லேய்லாவின் அம்மா, லேய்லாவை ஊக்குவிக்கிறாள். இது தொடர்பாய் அலியோடு வரும் தாலாவை சந்திக்கும் லேய்லாவுக்கு, தாலா மீது லெஸ்பியன் காதல் வளருகிறது. தனியே விடுதியில் தங்கும் இரு பெண்களும் லெஸ்பியன் உறவு கொள்கிறார்கள். இருப்பினும், பழமைவாதம் நிறைந்த கிறித்துவக் குடும்பத்தில் பிறந்த தாலாவால் லெஸ்பியன் உறவை உடனே ஏற்றுக்கொள்ள முடியாமல் போக, தனது சொந்த ஊரான ஜோர்டானுக்கே திரும்பிச் செல்கிறாள். தாலாவுக்கு ஜோர்டானில், திருமண ஏற்பாடு நடக்கிறது. இப்போது லேய்லாவின் லெஸ்பியன் உறவை நினைத்து மனம் தடுமாறுகிறாள் தாலா. தாலா, தனது காதலி லேய்லாவுடன் கடைசியில் இணைகிறாள்.படம் முடிகிறது.

வேறு வேறு சரித்திரக் களங்களின் பின்னால் நின்றுகொண்டு, திரைப்படம் தருவது பெண் இயக்குனர் சமீமின் சிறப்பு ஆகும். லெஸ்பியன் உறவுக்கதை என்று தனித்துப் பார்த்தால் சமீமின் படக்கதைகள் சாதாரண கதைகள்தான். ஆனால் அதே லெஸ்பியன் கதைகளை, உலக வரலாற்றுக் களப் பின்னணியில் சொல்லும்போது , அவரது படங்கள் ஒரு தனித்துவம் பெறுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

அழகர்சாமி சக்திவேல்

Series Navigationதிருவிழாக் கூட்டநெரிசலும் தொலைந்துபோகும் குழந்தைகளும்கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *