பாடம்

This entry is part 4 of 17 in the series 12 பெப்ருவரி 2023

கே.எஸ்.சுதாகர்

சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது.

சூரியகுமாரின் அக்காவும் அத்தானும் மகள் ஆரபியும் நான்கு நாட்கள் முன்பதாகவே வீட்டிற்கு வந்துவிட்டார்கள். அக்கா தான் வீட்டிற்கு மூத்தவள். அதற்கடுத்து வரிசைக்கிரமமாக ஐந்து ஆண்கள். சூரியகுமார் கடைக்குட்டி.

அப்பா துரை சாய்வனைக்கதிரைக்குள் ஒருக்களித்துச் சரிந்தபடி எல்லாவற்றையும் அவதானித்தபடி இருக்கின்றார். அவரால் முன்னையைப்போல ஓடியாடி வேலைகள் செய்ய முடிவதில்லை. அவர் தனது மகளுக்கும், மூத்த மருமகளுக்கும் துரோகம் இழைத்துவிட்டதாக நினைத்து இன்று மனம் மறுகுகின்றார். மூத்தவள் இன்று எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாகக் கணவருடன் குடும்பம் நடத்துகின்றாள் என எண்ணுகின்றார்.

மறந்துவிடக்கூடிய சாதாரண நிகழ்வா அது! அவரின் மனம் அங்கே தாவுகின்றது.

பள்ளியால் வந்த மகள் புத்தகப்பொதியைத் தொப்பென்று போட்டுவிட்டு, வீட்டு வளவிற்குள் வேலிக்கரையோரமாக ஓடுகின்றாள். அவளது அவசரத்தை அவதானித்த அப்பா, வீட்டைவிட்டு வெளியேறி வீதிக்கு வந்து எட்டிப் பார்க்கின்றார். வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் கிடுகுவேலியுடன் கதை பேசியபடி நிற்கின்றான். துரையைக் கண்டவுடன் வேலிக்குள் எதையோ மறைத்துவிட்டு மாயமாக அந்த இடத்தைவிட்டு நழுவிவிட்டான். வேலிக்குள் சொருகியிருந்த கடிதத்தை எடுத்து வந்தார் துரை. மகளைக் கூப்பிட்டார்.

“இதை முற்றத்திலை போட்டு என் கண் முன்னாலே எரி” தீப்பெட்டியை நீட்டினார் அப்பா. கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்பதை அவளும் அறியாள், அப்பாவும் அறியார்.

அத்துடன் மகளின் படிப்பு இடையில் நின்று போயிற்று. பதிலுக்கு திருமணம் என்ற பேச்சு ஆரம்பித்தது.

மகளுக்கு அழகிருந்தும் சீதனம் போதாமையால், திருமணம் பல வருடங்கள் தள்ளிப் போயிற்று. கடைசியில் அவளைப் போலவே வயதில் முதிர்ந்த ஒரு இராஜகுமாரன் வந்து கரம் பிடித்தார். அவர் சீதனமாகக் கேட்டது  ஐம்பதினாயிரம். ஆனால் அது இன்னமும் நிலுவையில் இருக்கின்றது.

துரை நிறைஞ்ச சைவ பக்தர். சரியான கோபக்காரன் என்று ஊரில் பெயர் எடுத்தவர். எந்தத் தெய்வங்களினாலும் தணிய வைக்கப்படாத கோபம், மனைவியின் கட்டுக்குள் அடங்குமா? அவருக்கு அடங்கிப் போவதைத் தவிர மனைவி பார்வதிக்கு வேறு வழி தெரியவில்லை.

ஆனால் மூத்த மகனின் விடயத்தில் எல்லாமே தலைகீழாகிப் போனது. அவனின் செயலால் குடும்பமே ஆட்டம் கண்டிருந்தது. ஆனந்தகுமார் படிக்கவுமில்லை, பண்பாக நடந்து கொள்ளவும் இல்லை என்பார் அப்பா.

தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆனந்தகுமாருக்கும், பள்ளியில் படிப்பிக்கச் சென்றுகொண்டிருந்த மேரிக்கும் `அது’ என்று காத்துவாக்கில் விழ ஆரம்பித்ததும், அப்பா துரை ஆடிப்போனார். தான் ஒரு ஆண்டியாகப் போய்விட்டதாக உணர்ந்தார்.

மருமகள் வேதம். அது அவருக்குப் பிறகுதான் தெரிய வந்தது. தெரியவந்தபோது கோபம் தலைக்கேறி, போக வழி தெரியாமல் வாய் வழியே பிதுங்க, தேவாரம் எல்லாம் தூஷணமாக வந்து விழுந்தது.

அதிகாலையில் ஐந்து மணிக்கு விழித்தெழுந்து, ஸ்நானம் செய்து, முற்றத்தில் பூக்கள் கொய்து, சுவாமிக்கு முன்னால் நின்றார் என்றால் தேவாரங்கள் ஆற்றொழுக்காகப் பாய்ந்து வரும். சமீப காலங்களாக அவரது தேவாரத்தின் சுருதி கூடிக்குறைவதை நித்திரைத் தூக்கத்திலும் அவதானித்து வந்தான் சூரியகுமார். ஒருநாள் விழித்திருந்து பார்த்தபோது, தந்தையார் தேவாரங்களைப் பாடியபடியே பிள்ளைகளின் சட்டை கழிசான் பொக்கற்றுகளைச் சல்லடை போடுவதைக் கண்டுகொண்டான். தினமும் துரை பொக்கற்றுகளைச் சல்லடை போடுவதும், சூரியகுமார் கண்ணை இடுக்கி இடுக்கிப்  பார்ப்பதும் ஒரு `கேம்’ போலாகிவிட்டது. ஒருநாள் ஆனந்தகுமாரின் சட்டைப் பொக்கற்றுக்குள்ளிருந்து ஒரு புதையலைக் கண்டெடுத்த அப்பா, அதையே உற்றுப் பார்ப்பதைக் கண்டுகொண்டான் சூரியகுமார். அவர் பார்த்துவிட்டு வைத்துவிட்டுப் போனதும் சூரியகுமாருக்கும் அதைப் பார்க்கவேண்டும் போல ஒரு ஆசை வந்தது. அது ஒரு பெண்ணின் படம். அதுவே மேரி என்று அவன் மனம் சொன்னது. சேலையில் அழகான பதுமையாக இளவயதில் எடுத்த புகைப்படம் அது.

துரையின் கடும் பிடிவாதத்தால் ஆனந்தகுமாரும் மேரியும் தங்கள் பாட்டில் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். மேரியின் பெற்றோருக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், அவர்கள் இருவரையும் அரவணைத்துக் கொண்டார்கள்.

மூன்று வருடங்களாக கடும்பிடியாக நடந்துகொண்ட துரை, ஆனந்தகுமாரையும் மனைவியையும் வீட்டிற்குள் நுழையவே விடவில்லை. தூது வந்தவர்கள் எல்லாரையும் தூரத்திலே வைத்துக் கொண்டார்.

துரைக்கு துப்பி விளையாடுற பழக்கமொண்டு உண்டு. பொழிச்செண்டு எதையும் பாராமல், எவரையும் வஞ்சனை இல்லாமல் காறாப்பிச்சு சிங்காரித்து விடுவார். அப்படித்தான் ஆனந்தகுமார், தனது மனைவியுடன் முதன் முதலாக வீட்டிற்கு வந்து அவர்களின் இரும்புக்கதவைத் தட்டியபோது, கதவைத் திறந்த துரை மருமகள் மீது பொழிச்சென்று துப்பினார். வேணுமெண்டு செய்தாரோ, தெரியாமல் தான் செய்தாரோ கடவுளுக்குத்தான் வெளிச்சம். இந்த ஜல அபிஷேகத்தின் மகிமை தெரிந்தோ என்னவோ மனைவியை முன்னிறுத்தி தான் பின்னாலே ஒளிந்துகொண்டான் ஆனந்தகுமார். அப்பா அம்மாவுக்கு விருப்பமில்லாமல் நடந்த கலியாணம் என்பதால் ஏற்பட்ட பயம் காரணமாக, தன்னை முன்னே தள்ளிவிட்டு பின்னாலே கணவன் ஒளிந்து கொண்டான் என மேரி நினைத்துக் கொண்டாள்.

துரைக்கு மருமகளைப் பார்த்த மாத்திரத்தில் முதலில் குதிரை தான் நினைவுக்கு வந்தது. அதற்குக் காரணம் மருமகளின் பின் தலையிலே இறுக வரிந்து தொங்கிய குதிரைவால் குஞ்சம்.

“நான் அவனைப் படியடா எண்டு சொல்லி ரியூசனுக்குக் காசைக் குடுத்தா, அவன் சினிமா பாத்து குடியும் கூத்துமா திரிஞ்சான். இப்ப ஃபக்டரியிலை பரிசுகெட்ட லேபர் வேலை செய்யுறான்.

அவன் தான் அப்பிடி எண்டா, உமக்கு எங்கை மூளை போச்சு. நீர் ஒரு ரீச்சர் பெம்பிளையல்லே! நீ ஒரு ஆள்மயக்கி.”

`ஆள்மயக்கி’ என்றதும் மேரி திகைத்துப் போனாள். `மாமா’ என்று வாயெடுக்கும் முன்னர்,

“நான் உங்கள் இரண்டு பேரையும் வீட்டுக்குள்ளை எடுக்க மாட்டன்” இரும்புக் கேற்றை அடித்துச் சாத்தினார் துரை. உள்ளுக்கு நின்றபடியே, “அங்குசம்  இல்லாத  யானையும்  கடிவாளம்  இல்லாத  குதிரையும்  அடங்காது” என மருமகளுக்குக் கேட்கும் வண்ணம் சொன்னார்.

காலத்துடன், மூத்தவன் போன வழியில் அடுத்தவர்களும் போனார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலானது. மூத்தவன் மீது கடும் கோபம் கொண்டிருந்த துரை, அவர்கள் வீட்டில் நடந்த எந்தவொரு காரியத்திற்கும் ஆனந்தகுமாரைத் தள்ளியே வைத்தார்.

ஒவ்வொரு திருமணத்தின் போதும் மூத்தவள் வந்து `தனது ஐம்பதினாயிரத்தையும் தரவில்லையே’ என மூக்கால் சிணுங்கிவிட்டுச் செல்வார்.

ஒரு தடவை வரும்போது, “இது போக்கிரித்தனமான செயல். இவ்வளவு காலமும் பேக்காட்டக்கூடாது” என அத்தான் புறுபுறுத்தார். மருமகன் தன்னைப் போக்கிரி என்று சொல்லிவிட்டதாக மனம் குமுறிக்கொண்டு திரிந்தார் துரை. அது முதற்கொண்டு அவர் மருமகனுடன் முகம் குடுத்தும் பேசுவதில்லை.

“நல்ல காலம்… மருமகன் நல்லவர் எண்டபடியாலை இவ்வளவு காலமும் பொறுத்துக் கொண்டிருக்கிறார். இல்லாட்டி இம்மட்டுக்கு மகளைக் கொண்டுவந்து தள்ளிவிட்டுப் போயிருப்பார்” என்பார் பார்வதி.

எல்லாம் ஒரு புள்ளியில் முடியத்தானே வேண்டும். முடித்து வைக்க ஒரு பேத்தி பிறந்தாள்.

ஆனந்தகுமாரும் மேரியும் குழந்தையுடன் வந்து நிற்கின்றார்கள் என அறிந்ததும், துரை பின் வளவிற்குள் ஓடிப் போய்விட்டார். சும்மா நின்ற மாமரம் ஒன்றிற்கு நீர் இறைக்கத் தொடங்கிவிட்டார். பார்வதி அப்போதுதான் தனது மருமகளை முதன்முறையாகப் பார்க்கின்றார். நிமிர்ந்துதான் பார்க்கவேண்டியிருந்தது. ஆசிரியருக்குரித்தான மிடுக்கான தோற்றம். ‘பொல்லாதவராக இருப்பாளோ? என்ன இருந்தாலும் ஹோம்ஸ்சயன்ஸ் ரீச்சர் தானே!’ மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

குழந்தையை வாங்கிக் கொஞ்சிவிட்டு, “என்ன பெயர்?” என்று கேட்க “கெளசி மாமி” எனப் பதில் தந்தார்.

“அப்பப்பா பின் வளவுக்குள்ளைதான் நிக்கிறார். அவரிட்டையும் ஒருக்காக் குழந்தையைக் காட்டும்.”

மருமகள் பின் வளவிற்குள் தயங்கித் தயங்கிப் போனார்.

“மாமா… குழந்தையைப் பாருங்கோ…” துப்பல் விழாத தூரத்தில் நின்றாள் மேரி.

அவர் வேண்டா வெறுப்பாக முகத்தை வேறுபுறம் திருப்பி ஒரு மூசு மூசினார். மருமகள் குழந்தையைக் கிள்ளிவிட அது வீறிட்டு அழுதது. கல்லினைக் கரைக்கும் குரலுக்கு உருகாதோர் யாருமுண்டோ? அவர் ஓடிவந்து குழந்தையை வாங்கி நெஞ்சினில் சரித்துக் கொண்டார். மயிர்க்கால்கள் கீச்சுமூட்ட, குழந்தையின் பன்னீர் சூடாக அவர் மார்பில் இறங்கியது. அத்தனை வருடப் பகை அந்தப் பன்னீரின் வாசனையில் கரைந்தது.

இன்று ஆனந்தகுமார் தம்பதியினருக்கு பெண்ணும் ஆணுமாக இரண்டு பிள்ளைகள் பிறந்துவிட்டார்கள்.

வார இறுதி வந்துவிட்டால் சூரியகுமார், ஆனந்தகுமார் வீட்டுக்குப் போய் விடுவான். இரண்டு குழந்தைகளிலும் அவனுக்குக் கொள்ளை ஆசை. எந்த நேரமும் அவர்களுடன் விளையாடியபடியே இருப்பான். பின் வளவிற்குள் மாமரத்தில் தொங்கும் ஊஞ்சலில் குழந்தைகளை இருத்தி ஆட்டி விடுவான். அண்ணி… அண்ணி… என்று தேன் ஒழுகக் கூப்பிடுவதும், மச்சான் என்று பாச மழை பொழிவதிலும் வீடு கலகலத்துப் போய்க் கிடக்கும்.

ஆனந்தகுமார் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஓமானிற்கு வேலைக்குப் போன பிற்பாடு, அடுகிடை படுகிடையாக அவர்கள் வீட்டில் ஒட்டிக்கொண்டான் சூரியகுமார். அண்ணியின் சாப்பாட்டில் ஒரு சுற்றுப் பெருத்தும் விட்டான்.

இப்போது சூரியகுமாருக்குக் கலியாணம்.

“தம்பியின்ரை கலியாண எழுத்துக்கு நானும் வரப்போறன்” என்றான் ஓமானில் இருந்து ஆனந்தகுமார்.

“உங்களுக்கென்ன விசர் பிடிச்சுப் போயிட்டுதா? எவ்வளவு கடன் பட்டு உங்களை ஓமானுக்கு அனுப்பி வைச்சிருக்கிறன். பிறகு தம்பியின்ரை கலியாணவீட்டுக்கு வாருங்கோ… நான் இஞ்சை என்னத்துக்கு இருக்கிறன். நான் போவன் தானே!” என்றாள் மேரி.

“ஏன் நானும் வந்தா நல்லா இருக்குமெண்டு…”

“ஏன் உங்கடை கடைசித்தம்பி செல்லத்தம்பி சூரியகுமாரும் எங்கடை கலியாணத்தை எதிர்த்தவன் தானே! அதை மறந்து போனியளோ?”

“அப்ப அவனுக்கு ஒரு பத்துப் பன்னிரண்டு வயது இருக்கும். அவன் அப்பா அம்மாவின்ரை சொல்லுத்தானே கேட்டு நடப்பான். அக்காவின்ரை சீதனக்காசு குடுபடாமல், அவா மூக்காலை அழுது கொண்டிருந்தா அவன் என்ன செய்வான்?”

சரி… அடுத்தமுறை வரேக்கை பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு வாரும். அதுகளின்ரை குரலைக் கேட்கவும் ஆசையாக் கிடக்கு.”

“நீங்கள் ஒண்டுக்கும்  யோசியாதையுங்கோ… நாங்கள் எல்லாரும் தம்பியின்ரை கலியாண எழுத்தை நல்ல சிறப்பாக நடத்தி முடிப்பம். நான் தானே கலியாண எழுத்துக்கு கேக் செய்யப்போறன்.”

“ஓகோ… ஹோம்சயன்ஸ் ரீச்சரின்ரை திறமையை ஊருக்குக் காட்டப் போறீர் போல.”

அவர்களின் தொலைபேசி உரையாடல் முடிந்தது.

“அம்மா… அண்ணி வீட்டை கேக் எடுக்கப் போறன்.”

“அவா நாளைக்கு வரேக்கை கொண்டு வருவா தானே!”

“இனி எத்தினை மணிக்கு வாறாவோ தெரியாது. சைக்கிளிலை தான் வருவா. இரண்டு பிள்ளையளோடை அவாவுக்கு கஸ்டத்தை ஏன் குடுப்பான். அதுகள் கேக்கை கவனமா சைக்கிளிலை வைச்சுக் கொண்டு இருக்காதுகள்.”

“விடிஞ்சாக் கலியாண எழுத்து. எனக்கெண்டா நீ வெளியிலை போறது விருப்பம் இல்லை. ஆரையாவது துணைக்குக் கூட்டிக் கொண்டு போ.”

சூரியகுமார் அக்காவின் மகள் ஆரபியைக் கூட்டிக்கொண்டு புறப்பட்டான். இந்தத் தடவை அக்காவின் முகம் புன்சிரிப்பால் விரிந்திருந்தது. சுளையாக சீதனக்காசு கிடைக்கவிருக்கின்றது.

சூரியகுமார் அண்ணியின் வீட்டிற்குச் சென்றபோது, அவர் குசினிக்குள் சமைத்துக் கொண்டிருந்தார். பிள்ளைகள் வளவிற்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

“அண்ணி… நான் கேக் எடுக்க வந்திருக்கிறன்.”

“இன்னும் கொஞ்சம் டெக்கறேஷன் இருக்கு. ஒரு மணித்தியாலம் போதும்.  முடிச்சிட்டுத் தாறன்.”

“அண்ணி… எனக்கு நிறைய வேலையள் இருக்கு. நீங்கள் நாளைக்கு வரேக்கை கொண்டு வாருங்கோவன்.”

“நான் நாளைக்கு வருவன் எண்டு சொல்லவில்லையே!”

மேரி, சூரியகுமார் மீது வெடியைக் கொழுத்திப் போட்டார். அக்காவின் மகள் ஆரபி பேயடித்தது போல ஏங்கி நின்றாள்.

“என்ன? நீங்கள் நாளைக்கு கலியாண எழுத்துக்கு வரமாட்டியளா?”

“இல்லை.”

“ஏன் அண்ணி?”

மேரி ஒன்றும் சொல்லவில்லை.  இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் உற்றுப் பார்த்தார்கள்.

“என்ரை செல்லத் தம்பியல்லே! கொஞ்ச நேரம் பிள்ளையளைப் பிராக்காட்டிக்கொண்டிரு. நான் டக்கெண்டு முடிச்சிட்டுத் தந்திடுவன்.”

சூரியகுமாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மூளை கிறுகிறுத்துச் செயலிழந்தது போல இருந்தது. மனம் சிந்தனையில் இருக்க பிள்ளைகளை மாறி மாறி ஊஞ்சலில் வைத்து ஆட்டினான். `கேக் வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுப் போய்விடலாமா? மனம் ஊஞ்சல் போல் ஆடியது.

கேக் றெடியாகிவிட்டது. சூரியகுமார் சைக்கிளில் ஏறிவிட்டான். அண்ணி ஆரபியின் கைகளில் கேக்கைக் குடுத்து, “பத்திரமாகப் பிடிச்சுக் கொள்.” என்றார்.

“சூரி… என்ன கேக் எண்டு பாக்கேல்லை…”

“என்னவெண்டாலும் எனக்குச் சரிதான்…”

“சும்மா பாரன்…”

ஆரபி கேக்கை மெதுவாகத் திறந்து சூரியகுமாருக்குக் காட்டினாள்.

குதிரையின் கால்களுக்குப் போடப்படும் லாடங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று கொழுவிக் கொண்டு நின்றன.

`இதுவா றிஜிஸ்ரேஷன் கேக்’ சூரியகுமாரின் மனம் திக்கென்றது. முகத்தைச் சுருக்கிக் கொண்டான். அவனின் முக வேறுபாடுகள் அண்ணியின் முகத்தில் மலர்ச்சியை உண்டுபண்ணியது.

அன்றொருநாள் `ஆள்மயக்கி’ என்று சொன்னதும், குதிரைக்குக் கடிவாளம் போட்டதும் மேரியின் மனதில் ஆழப் பதிந்து கிடந்தது. `குதிரைக்குக் கடிவாளம் போட்டா மட்டும் போதுமா? அதுக்கொரு லாடம் அடிக்க வேண்டாம்!’ மேரி மனதிற்குள் கறுவிக் கொண்டாள்.

“நான் போட்டு வாறன் அண்ணி. நாளைக்குக் கட்டாயம் வந்திடுங்கோ…” சொல்லிவிட்டு சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

“மாமா… ஒரு கலியாண எழுத்துக்குச் செய்யக்கூடியதாக எத்தனை விதம் விதமான அலங்காரங்கள் இருக்கு. படபடக்கிற வண்ணாத்துப்பூச்சி, அழகழகான பூக்கள், ஹார்ட் ஷேப்… இது என்ன குதிரை லாடம்? எனக்குச் சத்தியமாப் பிடிக்கேல்லை மாமா…” என்றாள் ஆரபி.

`உறவின் சாட்சியாக இந்தக் குதிரை லாடங்களே இருக்கட்டும்’ நினைத்துக் கொண்டான் சூரியகுமார்.

`அண்ணி கலியாண எழுத்துக்கு வரமாட்டாவாம். ஆனா றிஜிஸ்ரேசன் கேக் செய்து தருவாவாம். இது என்ன ஒரு புதுவிதமான எதிர்ப்பு?’ சூரியகுமாருக்குப் புரியவில்லை.

வீட்டில் இரவு முழுவதும் மேரியைப் பற்றியே கதையாக இருந்தது.

“அவள் நல்லவள், கெட்டிக்காரி. நான் தான் கொஞ்சம் அப்பிடி இப்பிடியா நடந்து போட்டன்.” அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார் துரை.

காலை ஆறு மணி இருக்கும். வெளித்துவிட்டது. வீட்டிற்கு முன்னால் சைக்கிள் பெல் சத்தம் கேட்கின்றது. அண்ணி நிலத்திலே ஒரு காலை ஊன்றியபடி ஆடாமல் அசையாமல் சைக்கிளில் வீற்றிருக்கின்றார். பின்னாலே கரியரில்  சுட்டிப்பையன் அம்மாவின் இடுப்பை இறுக வரிந்தபடி தம் அடக்கி இருக்கின்றான். முன் சைக்கிள் பாரில் இருக்கும் மகளைத் தெரியாதவாறு மூடி மறைத்து அடுக்கடுக்கான கோபுரம் போல எழுந்து நிற்கின்றது கேக்.

Series Navigationஇது நியூட்டனின் பிரபஞ்சம்பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *