புகை உயிருக்கு பகை

author
0 minutes, 47 seconds Read
This entry is part 15 of 18 in the series 5 மார்ச் 2023

முனைவர் என்.பத்ரி

           இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன், ஸ்பெயின், கனடா உட்பட உலகம் முழுவதும் இளைஞர்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருவது வேதனைக்குரியது.புகைபிடிக்கும் ஒருவர், ஒருமுறை புகைபிடிக்கும்போது தன்னுடைய வாழ்நாளில் ஐந்து நிமிடத்தை இழக்கிறார். ’வாழ்நாள் முழுவதும் புகைபிடித்துக் கொண்டே இருப்பவர் தன்னுடைய ஆயுட்காலத்தில் 10 முதல் 11 ஆண்டுகள்  வரை

 இழந்து விடுகிறார்’ என்கிறது உலக சுகாதார அமைப்பு. உலகம் முழுவதும் புகையிலையால் ஒவ்வொரு 8 வினாடிக்கும் ஒருவர் உயிரிழக்கிறார்’ என்கிறது அந்த அமைப்பின் அறிக்கை.  உலகம் முழுவதும் புகைப்பிடிக்கும் 110 கோடி பேர்களில் 50 சதவிகிதம் பேர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்கிறார்கள்.  ஒவ்வொரு வருடமும்,  உலகம் முழுவதும் 71 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துவதால் மட்டுமே உயிரிழக்கின்றனர். இதில் ஏறத்தாழ  9 லட்சம் பேர், புகைப்பவரின் அருகிலிருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள். சாதாரணமாக  51 லட்சம் ஆண்களும், 20 லட்சம் பெண்களும் புகைக்கு அடிமையாகி உயிரிழக்கிறார்கள்.

                       இந்திய மக்கள் தொகையில் புகைபிடிக்கும் பழக்கம் உள்ள 17.8 சதவிகிதம் பேர்களில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில், 6 லட்சத்து 25 ஆயிரம் பேரும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 கோடியே 36 லட்சத்து 14 ஆயிரம் பேரும் அடங்குவர்.   பீடி, சிகரெட், சுருட்டு தவிர்த்து, இதர புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2.1 சதவிகிதமாக உள்ளது. இதில், பெண்கள் 0.8 சதவிகிதம் பேர்.

                      புகையிலையில் கலந்துள்ள நிகோடின், கார்பன் மோனாக்சைடு, ஆர்சனிக் , ஹைட்ரஜன் சயனைடு, நாப்தலின், கந்தகம், ஈயம் போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 69 வகை ரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியவை. ஒருவர் புகைப்பிடிக்கும்போது, உள்ளே இழுக்கும் புகையைவிட வெளியே விடும் புகையே அதிகம். இரண்டிலுமே புற்றுநோய்க்கு வழிவகுக்கும் நச்சுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. வீட்டில் ஒருவருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அது மற்றவர்களின் உடல் நலத்தையும் கண்டிப்பாக பாதிக்கும்.

                  புகைப்பிடிப்பதால்,  கண், மூளை, முடி, மூக்கு, பல், வாய், தொண்டை, காது, நுரையீரல், இதயம், மார்பு, வயிறு, கல்லீரல், சிறுநீர்ப்பை, கைகள், தோல், எலும்புகள், முழங்கால், தசை, ரத்த நாளங்கள் போன்ற அனைத்து உறுப்புகளும் பாதிக்கப்படுகின்றன. ஒரே நேரத்தில் 30 மி.கி. முதல் 60 மி.கி. அளவிலான நிகோடின் ஒருவருடைய உடலுக்குள் சென்றால், அவருக்கு மரணம் கூட நேரலாம். ஒரு சிகரெட்டில் 12 மி.கி.நிகோடின் உள்ளது.  தொடர்ந்து புகைப்பிடிக்கும் ஐந்து ஆண்களில், ஒருவர் மனதளவில் பாதிக்கப்படுகிறார். சிகரெட் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் 10 பெண்களில் ஏழு பேர் பல்வேறு விதமான நோய்களுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். ஹெச்.ஐ.வி, காசநோய், வாகன விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவற்றால் ஏற்படும் மரணத்தைவிடப் புகையிலையினால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்.

                 புகைக்க ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே, அதிலுள்ள ரசாயனங்கள் மூளைக்குச் செல்வதால், சாந்தமாகவும் புத்திக் கூர்மையுடனும் இருப்பதுபோல அவர்களுக்கு  தோன்றும். நாளாக, நாளாக இயல்பாக இருப்பதற்கே புகைக்க வேண்டிய அபாயம் உருவாகும். புகையிலைப் பயன்படுத்துவோரில் 90 சதவிகிதம் பேருக்கு வாய்ப்புற்றுநோய் ஏற்படுகிறது. புகையிலை மெல்லும்போது, சிகரெட் புகைப்பதைவிட மூன்று மடங்கு அதிகமாக நிகோடின் நம் உடலில் கலக்கிறது. இதனால், கன்னம், நாக்கு, உணவுக்குழாய், சுவாசக்குழாய் உள்ளிட்ட இடங்களில் வெள்ளைத்திட்டுக்கள் உருவாகி, நாளடைவில் புற்றுநோயாக உருவெடுக்கும். மேலும், சொரியாஸிஸ், கண்புரை நோய், தோல் சுருக்கம், காது கேளாமை, பற்சிதைவு, சுவாசக்குழாய் அடைப்பு, எலும்புப்புரை நோய், இதயநோய், வயிற்றுப்புண்கள், விரல்கள் நிறமாற்றம், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் கருச்சிதைவு, ஆண்மைக் குறைவு உள்ளிட்டவையும் ஏற்படலாம். புகைப்பவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைவதால், விரைவாக அவர்கள் இறக்க நேரிடலாம். ஒரு நிமிடத்தில் ஆரம்பித்த புகைப்பழக்கத்தை ஒரே நொடியில் விட்டுவிட மன உறுதி தேவை.  புகைப்பழக்கத்தினால் சீரழிந்திருக்கும் உடலை யோகா, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றின் மூலம் மீட்டு எடுக்கமுடியும். பொருளாதாரரீதியான பிரச்னைகளை ஓரளவுக்கு சமாளிக்கப் புகைப்பதை கைவிடுவதே சிறந்த வழி.

                  புகைக்கும் பழக்கத்தை நிறுத்திய இருபதாவது நிமிடத்திலிருந்து நம் உடல் சுத்தமாவதால், ரத்த ஓட்டமும் இதயமும் சீராக இயங்கத் தொடங்கும். ஒன்பது மாதங்களில் இருமல், மூச்சுத்திணறல் போன்ற நோய்கள் குணமாகும். ஐந்து வருடத்தில் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் நீங்கும். 30 வயதில் புகைப்பழக்கத்தை கைவிடும் ஒருவருக்கு 10 ஆண்டுகளும்,  50 வயதில் புகைப்பழக்கத்தைக் கைவிடும் ஒருவருக்கு  6 ஆண்டுகளும் ஆயுட்காலம் கூடும்  வாய்ப்பு உண்டு.

              புகையிலையை நிறுத்த ஆரம்பித்த சில நாள்களில் ஏற்படும் கோபம், எரிச்சல் போன்றவற்றை தவிர்க்க, தண்ணீர் அருந்துவது, உடற்பயிற்சி செய்வது, புத்தகம் படிப்பது ,ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை பயன்படுத்துவதன் மூலம், புகைபிடிக்கும் எண்ணத்தைக் கட்டுப்படுத்த முடியும். கேரட், வெள்ளரிக்காய் மற்றும் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. புகைபிடிப்பதிலிருந்து விடுபட அதற்குரிய மருத்துவர்களை கலந்தாலோசித்து, தேவைக்கேற்ற மருந்துகளை எடுத்துக்கொண்டால் புகைப்பழக்கத்திலிருந்து எளிதில் வெளியே வரமுடியும். புகையிலையின் பயன்பாட்டை குறைக்க, புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் என உலக சுகாதார மையம் இந்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது

                   புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசும், பொதுநலத்தொண்டு நிறுவனங்களும் பல வடிவங்களில் விழிப்பு உணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டாலும், கஞ்சா போன்ற விதவிதமான போதைப்பொருள்கள் சந்தையில் அறிமுகமாகி, இளையோரின் வாழ்வைச் சீரழிக்கவே செய்கின்றன.பள்ளிகளிலும்,கல்லூரிகளிலும் இது சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும்.திரைப்படங்களிலும். தொலைக்காட்சி தொடர்களிலும்  நடிகர்கள் புகைக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும். சமூக பிரச்சனையாக மாறிவிட்ட புகைப்பழக்கதை  வேரறுக்க நமது கூட்டு முயற்சி ஒன்றே வழி.

தொடர்புக்கு:63/2 ,A.E. கோயில்தெரு,செங்குந்தர்பேட்டை, மதுராந்தகம்-603 306.கைப்பேசி 9443718043/7904130302 nbadhri@gmail.com

Series Navigationவிவசாயிவாங்க ” டீ” சாப்பிடலாம்.!!!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *