‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

This entry is part 5 of 18 in the series 5 மார்ச் 2023
  1. நேரக்கூடும் தற்கொலையும் கையறுநிலைக் கவிதையும்

அக்கம்பக்கத்தில்
தற்கொலையின் நெடி அல்லது வாடை அல்லது வீச்சம்
கிளர்ந்தெழுந்து பரவிக்கொண்டிருப்பதாக உணரும் மனதில்
விலகிய பார்வையாய் வலிபோல் ஒன்று…..
அவ்வளவுதான்
ஏதும் செய்யவியலாது.
இடைத்தூரத்திற்கு அப்பாலானது இயலாமை.
தற்கொலை செய்யத் துணிந்தவர்
கோழையா தைரியசாலியா
என்ற பட்டிமன்றம் காலங்காலமாய் நடந்துகொண்டிருக்கிறது.
பிறர் தன்னைக் கொலைசெய்யாமலிருக்கும் பொருட்டோ
தான் பிறரைக் கொலைசெய்யாமலிருக்கும்
பொருட்டோ
நடக்கின்றன தற்கொலைகள் என்று எந்த உளவியலாளரேனும் சொல்லியிருக்கிறார்களோ, தெரியவில்லை.
அரை மயக்க நிலை அல்லது ஜன்னிகண்ட நிலை
அல்லது முழுவிழிப்பு நிலையில் எதற்கென்றே தெரியாத
அரைகுறை நம்பிக்கையில்…..
நடுக்காட்டில் நள்ளிரவில் நின்றுபோன வண்டியில்
இல்லாத பெட்ரோல், அல்லது
இருந்தாற்போலிருந்து மறந்துபோன வண்டியோட்டல்,
அல்லது செயலிழந்துபோய்விட்ட கைகால்கள்,
மங்கலாகிவிட்ட பார்வை,
எங்கும் மூடிக்கொண்டுவிட்ட திசைகள்…..
கற்பனையாய் குழந்தைகள் நடித்துக்காட்டும்
சுருக்கிடல்
சமயங்களில் உண்மையாகிவிடுவதுண்டு.
மாஜிக்கல் ரியலிஸமாகவும் சிலர் தம்மைத்தாம்
சாகடித்துக்கொண்டு
மீண்டும் உயிர்த்தெழுவதுண்டு.
அந்நியமாதலின் கொடுந்தழல்
அடுத்த அடி எடுத்துவைக்க
பல்லாயிரத்தடி பள்ளத்தில் விழல்
அடுத்தநாளில் விழித்தல்
வரவாக்கும் மரணபயத்தில்
வற்றிப்போகும் வாழ்வுக்கான விழைவு….
ஒரு புதிர்ச்சுழல்பாதையில் புகுந்தபின்
வெளியேற வகையறியாது
மருகும் மனதிற்குப் புலப்படும் ஒரே வழி.
பழிவாங்கலாயும் சமயங்களில் நடந்தேறும்.
மரித்த பின் பரவசத்துடன் ஆவிபார்க்குமோ
பழிவாங்கப்பட்டவரின் மிகுதுயரை?
முப்பத்தியிரண்டு வயது முற்றிய புற்றுநோயாளி யொருவர்
மனைவிக்கும் சிறு மகள்களுக்கும் தந்த நஞ்சு திருப்திகரமாய்
வேலை செய்ய
தனக்குத் தந்துகொண்டது தோல்வியடைந்ததில்
உயிருக்கு ஊசலாடிக்கொண்டிருக்கிறார் குடும்பத்தலைவர்
_ இன்றைய செய்தித்தாளில்.
இனியான இவர் வாழ்க்கை இப்போதிருப்பதன் நீட்சியா இல்லை
இறப்பிற்குப் பிறகானதன் நீட்சியா?
தற்கொலையாளர்களின் நிர்க்கதி
கற்பிதமா கணநேரக் குரூர உண்மையா
ஒப்புநோக்க வீதியோரப் பிச்சைக்காரர்களின்
வாழ்வீர்ப்பு மெச்சத்தக்கதா – அல்லது
இஃதொரு ஆக்கங்கெட்ட கொச்சையான
அவதானிப்பா
ஒரு தற்கொலை மற்றவர்களையும் ஏதோவொரு விதத்தில்
தங்களுடைய மேற்பரப்பிலிருக்கும் தர்மவான்களைத் தாண்டி
அடியாழத்திலிருக்கும் மனசாட்சியிடம் அண்டச் செய்கிறது
அடுத்த சில நிமிடங்களுக்காவது…..
அண்டச்செய்தால் நல்லது
அவர்களுக்கும் அடுத்தவர்களுக்கும்….
அடி முடி யறியா வாழ்வின்
அகால மரணம் போலாகுமா மிக் கவிதையும்……

  1. நான் யார் நான் யார் நீ யார்…..

நான் நான் நான் நான்…
நாமைப் பற்றிப் பேசினாலும் சரி
நீயைப் பற்றிப் பேசினாலும் சரி
அவளை அவனை அவரை அவர்களை
அதை அவற்றை _
யாரைப் பற்றிப் பேசினாலும் சரி
அந்த நானுடைய பேச்செல்லாம்
நான் நான் நான் தான்….
எனில்
இந்த உலகம் நான்களால் ஆனது
ஒரு நானால் அல்ல
நானாவிதமான நான்களால் ஆனது
ஒரேவிதமான நான்களால் அல்ல.
இதைப் புரிந்துகொள்ளாத ஒரு நான்
பல நான்களாகக் கிளைபிரிந்து
பேசிக்கொண்டேபோகிறது.
அந்தப் பாதைகளில், திசைவழிகளில் முளைக்கும்
புல் பூண்டு செடி கொடி பெருமரம் எல்லாமும்
அந்த ஒரு நானின் பல நான்களில் மட்டுமே
வேர்பிடித்து வேர்பிடித்து.
மெய்யான இயற்கையை, வாழ்வை
தரிசிக்கும் ஆர்வங்கொண்டோர்
அந்தப் பாதைகளில் புகுவதை
கவனமாகத் தவிர்த்து
அப்பால் சென்று
தனது நானின் நான்களுக்கேற்ற
பிறரது நான்களை அடையாளங்காணும்
முனைப்பில்
அடுத்தடுத்து விரிந்திருக்கும் பாதைகளில்
நுழைந்து நடந்தவண்ணமே.
எந்த நானும் எந்த நானுக்கும்
பிரதிநிதியாகிவிட முடியாது
எல்லா நான்களுக்கும் பதிலியாகிவிட
ஏலாது
தன் நான்களைத் தேடப்புகாத ஒரு நான்
அடுத்தவன் நான்களை
அடையாளங்காட்டலாகுமா என்ன
யாரும் நுழையாத அந்த நானின் நான்களின்
ஆளரவமற்ற பாதைகள் கிளைப்பாதைகள்
நீண்டுகொண்டே போகின்றன…..
நாராசமாய் வீறிட்டுக்கொண்டிருக்கிறது
அதன் அனர்த்த மூச்சுக்காற்று…

Series Navigationவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்வெனிஸ் கருமூர்க்கன் – ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் அங்கம் -1 காட்சி -2 பாகம் : 10
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *