நிறைவு

author
0 minutes, 4 seconds Read
This entry is part 4 of 12 in the series 21 மே 2023


பா. ராமானுஜம்

பந்தலிலேயே நின்றுவிட்டேன்.
‘நான் இங்கேயே இருக்கிறேன்,
நீ போய்ப் பார்த்துவிட்டு வா.’
‘என்ன ஜென்மமோ! ஆனால்
இது ஒன்றுதான் நிஜம் –
மெய்யுறுதி,’
கடிந்துகொண்டே உள்ளே சென்றாள்
அந்த வேதாந்தி.
மூப்பு, இறப்பு இரண்டுமே
எனக்கு ஒவ்வாதவை.
உரமிழந்த உடலாகட்டும்,
உயிரற்ற உடலாகட்டும்,
இரண்டுமே என்னை
அருவருக்க வைக்கின்றன.

‘ஆகிவிட்டதா?’ என்றார்.
என்னது ஆகிவிட்டதா?
குழப்பத்துடன் ‘இல்லை’ என்றேன்.
‘அப்ப வாங்க, போய் விசாரிக்கலாம்.’
கையைப்பற்றி
இழுத்துக்கொண்டு போனார்.

வடக்கு தெற்காகக் கிடத்தியிருந்தார்கள்.
உடலைப் பார்க்காமல்
இருக்க என்ன செய்வது?
இரங்கல் சொல்பவர்கள் பக்கம்
திரும்பினேன்.
‘ஐம்பது வயதுகூட ஆகவில்லை,
இறைவனுக்குக் கண்ணில்லையா?’
‘இது சாதாரண இழப்பு இல்லை.’
‘காலம் முழுதும் சேவையில்
கழிந்த வாழ்க்கை.’
‘பிறர்க்கென்றே வாழ்ந்தவர்.’
‘நிறைவான வாழ்க்கை!’

உள்ளுணர்வு உந்த
பிணத்தின் பக்கம் திரும்பினேன்.

இளமையான முகம்.
அழகான முகம்கூட.
புன்னகை முழுவதும்
மறையாத முகம்.
இதோ விழித்துக்கொண்டேன்
என்று சொல்வது போன்ற
உயிரான முகம்.
உயிர் போகும்போது
எதை நினைத்துப்
புன்னகைத்திருப்பாள்?
அல்லது இது
குறுமுறுவல் எப்போதும்
பதிந்து கிடக்கும்
முகங்களில் ஒன்றா?
என்ன ஒரு நிறைவு!
குமிண் சிரிப்புடன்
நிறைந்திருக்கும்
அந்த இறப்பை
கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்.

Series Navigationவளவ துரையன் – இலக்கியச் செயல்பாடுகளில் இவர் ஒரு தீராநதி.மாசற்ற ஊழியன்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *