This entry is part 17 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆர் வத்ஸலா

எனது‌ உடலின் வயதும் 

காலி வயிற்றில்

அதன் இனிப்பும்

எண்பதும்

இரு நூறும்

என்பதாலும்

பிள்ளைகள்

பெரியவர்களாகி

என்னைப் போலல்லாமல்

பேரறிவுடன்

இப்போதிருந்தே

‘டயட்’டில்

என்பதாலும்

பேத்தி

‘ஸ்விக்கி’ சரணம்

என்பதாலும்

பல ஆகாரங்கள்

எங்கள் வீட்டில்

‘ஆதார்’ தொலைத்தன 

சுற்றுப்புற சூழல் மாசைக்‌ கருதி

பட்டாசு‌க்கு வீட்டில் தடை 

‘கொலாஸ்ட்ரால்’ அச்சத்தில்

காசி செல்லாமலேயே

வடையை‌  விட்டோம்

தலைவலிக்கு பயந்து

எண்ணெக்குளி 

‘ஷாம்பு’ குளியாகி

‘கீசர்’ குழாயில்

கங்கை கண்டோம்

மற்றவர் 

புது தினுசு அமேசான் உபய ஆடைகளில்

புலனக்குழு

முகநூல்

இன்ஸ்டா

ட்விட்டர்

வாழ்த்துகளில்

அமிழ

நான் 

வசதியான

கால் தடுக்காத

புது ‘நைட்டி’யில்

மேடை துடைத்து

விளக்கேற்றி

உள்ளிருக்கும்

நரகனின் ஆதிக்கத்தை 

அடுத்த ஆண்டுக்குள் 

ஓரளவாவது குறைக்க வேண்டுகிறேன்

அனைத்து‌ 

மத சாமிகளையும் 

ஒவ்வொரு ஆண்டும்

நம்பிக்கையுடன்

Series Navigationபொறாமையும் சமூகநீதியும்