ரவி அல்லது
கைகளசைத்த
இடப்பக்கம் நின்றுருந்த
இரு சிறுவர்களின்
கையிலிருந்தது
இனிப்பாக இருக்குமென
நினைத்தேன்.
வேகமாக
வாகனத்தில்
வந்தபொழுது
அவதானிக்க தவறியதால்.
கூப்பிடு தூரத்தை
கடந்துவிட்ட போதும்
திரும்ப நினைத்தது
பிறந்த நாளுக்கு
இனிப்பு கொடுக்க
நினைத்திருக்கும்.
அவர்களின்
அறச் சிந்தனையை
உதாசீனம் செய்யலாகாது.
ஆட்களைப் பார்த்து
வருவது இல்லை
அறமென்பதனால்.
முன்பொரு முறை
சுட்டெரிக்கும் வெயிலின்
மதியப்பொழுதில்
கல்லூரி மாணவர்கள்
கரும்பு பானம்
வாங்கிக் கொடுத்தார்கள்
தாகத்தணிதலாக
கடந்து செல்கிறவர்களுக்கு.
பிறந்த நாளுக்கென்று
சொன்னாலும்
கைபேசியின்
விருப்பு எண்ணிக்கை கூடலின்
ஆசையென்பதை
மறுக்கவியலாது
நற்பயனாக
வந்தவர்களின்
உள்ளம் குளிர்ந்தாலும்.
திரும்பிச் சென்ற
பிறகுதான்
தெரிந்தது.
வீதியோர
வழிபாட்டு பாடல்களால்
விளைந்தது
இச் சிறுவர்களின்
மகிழ்ச்சி பொழுதுகளென்பது
நம்பிக்கையை
பாலத்தின் திண்டில் வைத்து
பூக்கள் தூவி இருந்ததால்.
மீச்சிறு
நிகழ்வு கூட
ஆழப் புரிதலுக்குள்
தள்ளுகிறது.
புறங்களை மறக்க
வைக்கும் படியாக.
வீதியோரங்களில்
விண்ணதிர
பாடல்கள் ஒலித்தாலும்
சிந்தயைச்
சிதைக்காத பயணமாக
வாய்க்கிறது.
இப்போதெல்லாம்
யாவரின்
மீதான கரிசனமாக.
பிறகொரு நாள்
வரும்
பிறந்த நாளில்
பிரித்து எடுத்துக்கொள்ளுங்களென
ஐம்பது ரூபாய் கொடுத்தேன்
ஆதுரச் சிரிப்பில்.
‘டேய்…
ஆளுக்கு இருபத்தஞ்சிடா’ என்றான் ஒருவன்
என்னைப் பார்த்தவாறு.
‘சமமாக பங்கிட்டுக்கொள்ளுங்கள்.
அதில்
சகோதரம் திளைக்கும்.
பிரித்துதான்
இருப்பீர்கள்.
அது
ஒன்று கூடி இருக்கும்’
என்றேன்.
எதிர்புறமிருந்த
சிறார்கள்
என்ன நினைத்தார்கள் என்பது தெரியாது.
இவர்கள்
மகிழ்ந்த கணங்கள்தான்
எனக்குள்
பூரிப்பை
மடை மாற்றியது
வியாபிக்கும்
வாய்க்கால்
நீராக.
உற்சாகத்தில்
உடலை மூழ்க வைத்து.
-ரவி அல்லது.
07/09/24.
- மேவிய அன்பில் திளைக்கும் கருணை
- உயிரே!
- யாவிற்குமான பொழிதல்.
- சிறுகதை ஒன்றை வாசித்தேன்!
- அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்.