This entry is part 1 of 13 in the series 18 ஜனவரி 2026

கவிதைகள்–  கு. அழகர்சாமி

(1)

இறந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள்

இறந்தவர்கள் விழிக்காமலேயே மீளா உறக்கம் கொள்கிறார்கள், அவர்களை நீ இறந்து போனவர்களென்றறிய-

இறந்தவர்கள் இறந்தவர்களென்பதால் கனவு காண்பதில்லை, உன் கனவுகளில் நீ அவர்களைக் கண்டாலொழிய-

இறந்தவர்கள் சதா பின்தொடரும் நிழல்களிலிருந்து தம்மைத் துண்டித்து சுதந்திரமாக்கிக் கொள்கிறார்கள்-

இறந்தவர்கள் சேர்த்த எல்லாவற்றையும்- ஒருவேளை தாமிருந்த  உருவில் அருவெளியைத் தவிர- விட்டு விட்டுப் போகிறார்கள்.

இறந்தவர்கள்  வாழ்வை நிரூபிக்கிறார்கள் உன் இப்போதைய இருப்பை  விட உனக்கு முன் வாழ்ந்து காட்டியவர்களென்பதால்–

இறந்தவர்கள் அச்சுறுத்துவதில்லை, அவர்களைக் கண்டு உனக்கும் ஒருநாள் நேரும்இறப்பையெண்ணி நீயே உன்னை அச்சுறுத்திக் கொண்டாலன்றி-

இறந்தவர்கள் இனிப் பேச மாட்டார்கள்- மரணத்தைத் தவிர- அதுவும்  பேசாமல் பிரத்தியட்சமாய் உன் முன்-

இறந்தவர்கள் இனி என்றும் அமைதி காப்பர் என்பதால், அவர்களின் இறப்பில் உன் அழுகையை விட உன் அமைதியையே வேண்டுகிறார்கள்-

கடைசியாய் வாழ்வும் மரணமும் நேரெதிர் சந்தித்து இமை இமைக்கும் கடைசிக் கணத்தில்யார் அவர்கள்?-

இருந்தும் இறந்தவர்களா அல்லது இறந்தும் இறக்காதவர்களா ?

(2)

என் கனவுகளில் இறந்தவர்கள்

இறந்தவர்கள் என் கனவுகளில்

உயிரோடிருப்பவர்கள்  போலவே வருகிறார்கள்;

உரையாடுகிறார்கள்; நடமாடுகிறார்கள்.

இறந்த பின்னால் அவர்கள் 

ஆவிகளாகி விடுகிறார்கள் என்கிறார்கள்.

ஆனால் அவர்களைக் கனவுகளில்

அடையாளம் காண முடிகிறதே-

அவர்கள் ஆவிகளில்லையென்றும் 

இயம்ப முடியவில்லை.

தொட்டு அவர்களை உறுதி செய்யும் முன் 

காணாமல் போக அவர்கள்

திடுக்கென்று விழித்துக் கொள்கிறேன் 

என் கனவுகளிலிருந்து 

நான்.

இறந்தவர்கள் நனவில் இனி 

இல்லாது போய் விட்டார்கள் 

என்பது மட்டுமே அவர்கள் இறந்தவர்களென்று 

உறுதி செய்யும் ஒரே காரணமாய் 

எடுத்துக் கொள்ள முடியவில்லை என்னால்.

அது ஒரு தேவையான காரணம்.

அதோடு

கனவேயாகி விட்ட அவர்கள் 

கனவிலிருந்து நனவுக்கு

மீண்டும் திரும்பிவிட முடியாதென்பதால்

அவர்கள் இறந்தவர்களென்ற

மற்றுமொரு போதுமான காரணத்தாலும் எனக்கு

கனவுகளின் மேல் நம்பிக்கை ஏற்படுகிறது.

என் கனவுகளின் கண்கூடான பலன்

இறந்தவர்களை மறுபடியும் 

கனவுகளில் கண்டுகொள்வதோ?

கண்ணாடியில் என்னை நான் கண்டுகொள்ளும் எனக்கும்

கனவில்  நான் கண்டுகொள்ளும் இறந்தவர்களுக்குமிடையில் 

என்ன  வித்தியாசம்?

இறந்து போன பின்னால் இருக்கும்

ஒரு பெரிய செளகரியம்:

’கனவு காண வேண்டாம்’.

Series Navigationபோராளி