இரா.ஜெயானந்தன்
நமது சிறுகதைகள் மரபிலக்கிய வகைமையில் தோன்றி, நமது தாத்தா-பாட்டிக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தது.
ஒருவனுக்கு ஒருத்தி.
கணவனே கண் கண்ட தெய்வம்.
கற்புக்கரசி கண்ணகி.
ஒரு இல்,ஒரு சொல்,ஒரு வில்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். எல்லாமே ஒரு ஒழுங்குமுறையில் செல்லும்.
வாழ்க்கை செக்கு மாடுகள் போல் சுற்றி,சுற்றி வந்தது.
வீடு, வாசல்,கோயில்,குளம், பண்டிகை,அறுவடை, திருவிழாக்கள். வாழ்க்கை சுமூகமாக சென்றது. வெறும் வானொலி பெட்டிகளோடு வாழ்க்கை ஜொலித்தது.
நடுத்தர மக்களுக்கு, குழந்தை பெற்றுக்கொள்வதே, ஒரு பொழுது போக்காக இருந்தது.
70-80 பின், இந்திய பொருளாதாரத்தில், அந்நிய நாடுகள் பங்கெடுத்தன.
தீடீரென வாழ்க்கையில் சூடு பிடிக்கின்றது. விவசாயம் குறைந்து, வியாபாரம் பெருகின.
நகர வாழ்க்கையில், பலவகைப்பட்ட மாறுதல்கள் நடக்கின்றன.
சமூக மீறல்கள் நடக்கின்றன. வாழ்க்கையில் பலவகைப்பட்ட சிக்கல்கள் பின்னப்படுகின்றன.
புதுமைப்பித்தன் பொன்னகரத்தை காண்பிக்கின்றார். புதிய அகலிகை அவர் எழுத்தில் எழுந்து வருகின்றாள்.
பகடியும், நையாண்டி நக்கலுமாக அவரது எழுத்து சமூகத்தை பிரதிபலித்தது.
அந்த சமயத்தில்தான் ஜெயகாந்தன் என்ற மனிதர், சென்னை வீதிகளில் அலைகிறார். இருட்டு சந்தினுள் நுழைகிறார். குடிசை வாசிகளுடன் பழகுகிறார். ஏழை எளியவர்களின் வாழ்க்கையை உற்று நோக்குகின்றார்.
நடைப்பாதை வாழ்க்கையை பார்க்கின்றார். முதல் இரவை ஒரு பொது பூங்காவில், இருட்டின் மடியில், ஒரு ஏழை தம்பதி அனுபவிப்பதை கண்டு கண்ணீர்மல்க எழுதுகின்றார்.
அதே நேரத்தில் செல்வ சீமான்களின் அட்டகாசமான வாழ்க்கையையும் பார்க்கின்றார். அங்கே நடக்கும் மீறல்கள் அவரை மூர்க்கமடைய வைக்கின்றது.
அங்கே தான், கங்கா வருகின்றாள்.
ஒரு கன்னிப்பெண் மழையில் நனைந்த மா வடுபோல் நிற்கின்றாள். செல்வ சீமான் கண்ணில் படுகின்றாள். அவனது மழைக்கால,காமத்திற்கு இரையாகின்றாள்.
வருகின்றான், நவீன எழுத்தாளன்.
பேனாவில் அக்னியை ஊற்றி சமூக சாட்டையால், அதுவரை ஊறிக்கிடந்த பழமைவாத போக்கினை அவனது முற்போக்கு சிந்தனையால், ஒரு சமூக மாற்றத்தினை, ஏழ்மையின் பிடியில் சிக்கி, பழைய பஞ்சாங்கத்தில் ஊறிப்போன, கங்காவை கங்கையில் கழுவி கரை சேர்க்கின்றார் ஜெயகாந்தன். அக்னி பிரவேசம் அக்ரஹாரத்தில்.
இதுதான் நவீன பார்வை, படைப்பு.
ஒரு ஏழை பெண்ணிற்கு கிடைத்த வாழ்க்கை. அதன்பிறகு அவள் படித்து வேலைக்கு சென்று, பல ஆண்களை சந்திக்கின்றாள்.
பலவீனங்கள் கொண்ட பல ஆண் காளைகளை சந்திக்கின்றாள்.
பெண் திமிரோடு நிற்கின்றாள்.
ஏனெனில், இன்றைய வாழ்க்கையில்
ஒரு கற்பழிப்பு நடந்தவுடன், அதில் சம்பந்தப்பட்ட ஆணை, சட்டம்-ஒழுங்கு தண்டித்துவிடும். கற்பிழந்த பெண், தற்கொலை செய்துக்கொள்வாள். அல்லது பெற்றோர்கள் தூக்கு மாட்டிக்கொள்வார்கள். மீண்டும் அந்த பெண் அநாதைதான். இந்த சட்டம் ஒழுங்கு அவளுக்கான வாழ்க்கையை தருவதில்லை.
கங்காவுக்கு அடுத்த தலைமுறை பெண்கள் இன்றைய பெண்கள்.
வீட்டை விட்டு வெளியே வந்த பெண்கள்.
படித்த பெண்கள். பாரதி கண்ட பெண்கள். பாரதி காணாத பெண்கள்.
ஏகப்பட்ட வாழ்க்கை சிக்கலில் மாட்டிக்கொண்ட பெண்கள். ஐ.டி.தொழிற் நுட்பத்தில் பங்கெடுக்கும் பெண்கள். இரவில் பல ஆண்களோடு பழகி, வேலை செய்யும் பெண்கள். ஆண்களுக்கான அத்தனை உணர்வகளையும் பெற்ற பெண்கள்.
திருமண பந்தங்கள் அறுந்து, மறுமணம் செய்துக்கொள்ளும் பெண்கள்.
திருமணமாகாமல், பல ஆண் நண்பர்களோடு சுற்றும் பெண்கள்.
திருமண சடங்கை உடைத்தெறியும் பெண்கள். பெரியார் கண்ட பெண்கள்.
குரோனா காலத்தில் இளம் விதவையான பெண்கள் மறுமணம் செய்துக்கொண்டு வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளும் மன பக்குவம் வந்து விட்டது .
பொருளாதார சுதந்திரம் தன்னம்பிக்கையை தருகின்றது.
தன்னை சமமாக மதிக்கும் ஆண்களை, இன்றைய பெண்கள் விரும்புகின்றனர்.
குடும்ப பாரத்தை சரிசமமாக ஏற்கும் மனத்தெளிவுள்ள ஆண்கள் உருவாகி விட்டனர்.
பெண்கள் அதிகாரம் (Women’s empowerment ) என்பது பெண்களை மேம்படுத்தும் ஒரு செயல்முறையாகும். அதிகாரமளித்தல் என்பது பல வழிகளில் வரையறுக்கப்படலாம். இருப்பினும், பெண்கள் அதிகாரம் பற்றி பேசும்போது, அதிகாரமளித்தல் என்பது முடிவெடுக்கும் செயல்முறைக்கு வெளியே இருக்கும் மக்களை (பெண்களை) ஏற்றுக்கொள்வதையும் அனுமதிப்பதையும் குறிக்கிறது. அதனுள். “இது அரசியல் கட்டமைப்புகள் மற்றும் முறையான முடிவெடுப்பதில் பங்கேற்பதற்கும், பொருளாதாரத் துறையில், பொருளாதார முடிவெடுப்பதில் பங்கேற்க உதவும் வருமானத்தைப் பெறுவதற்கான திறனுக்கும் வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது.”
இன்றைய வேலைக்கு போகும் பெண்களின் பிரச்சனை ஏராளம்.
குடும்பத்தினுள்ளே வன்முறை நிகழ்கின்றது.
ஒரு அலுவலகத்தில் ஆபாச வன்முறை, தனியார் நிறுவனமென்றால் எதற்கும் வளைந்துக்கொடுக்கும் தன்மையை மேலிடம் எதிர்ப்பார்க்கின்றது. படுக்கை விரிக்க அழைக்கின்றது.
மறுத்தால், வேலை பறிப்பு.
பொது இடங்களில், பாலியல் சீண்டல். பெண்களை கடத்துவது.
பெண்களை பாலியல் தொழிக்குள் தள்ளுதல்.
பொருளாதார பற்றாக்குறையால் ஏழை பெண்கள் படும் அவஸ்தை ஏராளம்.
இன்னமும் ஆணாதிக்க, சாதிய கண்ணோடடத்தில் , இந்த சமூகம் செயல்படுகின்றது.
அரசியல்வாதிகளின் பிடியில் சட்டம்-ஒழுங்கு இருப்பதால், பணக்கார பச்சோந்திகளுக்கு பாலியல் தொல்லைக்கு ,அரசியல்வாதிகளின் துணை பக்க பலமாக இருக்கின்றது.
மாறிவரும் கலாச்சார பீடத்தில், ஆபாச சினிமாக்களும், போதை கலாச்சாரமும் பெண்களுக்கு எதிராக செயல்படுகின்றது.
இந்த காரணங்களால், பெண்ணியவாதி என்ற பிரிவே, பெண்களில் தோன்றி, போராட வெளியே வந்து விட்டனர்.
இப்படிப்பட்ட ஒரு கலாச்சார சீரிழிவு நேரத்தில் தான், அறம்பாட எழுத்தாளன் எழந்து வருகின்றான்.
இரா.ஜெயானந்தன்.