This entry is part 7 of 8 in the series 1 பிப்ரவரி 2026

பாலமுருகன்.லோ

“ஏம்பா.. சுகுமார், உங்க பக்கம் வர வேண்டியவங்களெல்லாம் வந்தாச்சா?”

“சார், எங்க சைடுலிருந்து எல்லாரும் இருக்கோம். மேனேஜ்மென்ட்டிலிருந்துதான் இன்னும் வரல.”

அந்த மீட்டிங் ரூமில் பெரிய டேபிள் மற்றும் இருக்கைகள் இருந்தன. ஒரு பக்கம் ஊழியர் பிரதிநிதிகள், மறுபக்கம் கம்பெனி ஸ்டாஃப்ஸ் உட்காருவதற்கு என்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்தது. முகப்புக் கதவை மூடியவுடன் ரூம் முழுவதும் ஒரு நிசப்தம். உள்ளே உள்ள காற்று வெளியே போவதற்கு இடமில்லை. ஜன்னல் எதுவும் இல்லை. ஏசி ஓடும் சத்தம் மட்டும் இருக்கும் எப்போதும் மனிதர்கள் உள்ளே இருந்தால். டேபிளுக்கு நேரே புரொஜெக்டர் இருந்தது. இங்குதான் புரொடக்‌ஷன் மீட்டிங் மற்றும் முக்கியமான முடிவுகளெல்லாம் எடுப்பார்கள். இங்குதான் இவர்களும் கூடியிருந்தனர்.

“இதோ வந்துடுவாங்க, மீட்டிங்கிற்கு முன்னாடி டைரக்டர், சேர்மனுடன் பேசிட்டு வரப் போயிருக்கார். அவர் பேசிட்டு நேரே இங்கேதான் வருவார்.”

இதைக் கேட்ட பிரதிநிதிகளுக்கு, அவர் என்ன பேசியருப்பார் சேர்மனுடன். ஒரு வேளை நமது கோரிக்கை நிராகரித்து விடுவார்களோ? என்று எண்ணத்தொடங்கினர்.

“என்ன லோகேஷ் சார், இன்னும் எவ்வளவு நாட்கள் இது இழுத்துக்கிட்டே போகும்?”

“சுகுமார், எல்லாமே உங்க கையில்தான் இருக்கு. நீங்கதான் இழுத்துக்கிட்டே போயிட்டு இருக்கீங்க. இதுக்கு கம்பெனி எப்படிப் பொறுப்பேற்கும்?”

“லோகேஷ் சார், எல்லாமே தெரிஞ்சும் நீங்களே இப்படி அவங்க பக்கம் இருந்தா நாங்க என்ன செய்யறது?” மறுமுனையில் லோகேஷ், “அது அப்படி இல்லை சுகு,” என்று கையைப் பிசைந்துகொண்டே சுகுவிடம் சொன்னார்.

“சுகு, நீ அப்படியெல்லாம் யோசிக்காதப்பா.. நான் எப்பவுமே உங்க பக்கம்தான். என்ன, மேனேஜ்மென்ட் சைடுல இருக்கிறதால என்னால எதுவும் பேச முடியலை. என்னதான் இருந்தாலும் நான் என் பதவிக்குப் பாதகம் வராம, உங்களுக்கும் பாதகம் வராமதான் பேச வேண்டியது இருக்கு. என்ன செய்யச் சொல்ற?”

“காலம் கலிகாலமா இருக்கு. நீங்க எப்படியோ, அப்படியேதான் நானும்.”

“ஏம்பா நானும் ஒரு வேலையாளுதான்” என்றதற்கு, “நீங்க பேச்சுக்கு வேணும்னா இதைச் சொல்லலாம். ஆனா நீங்க முழுக்க முழுக்க மேனேஜ்மென்ட் சைடுதான்னு எங்களுக்கும் தெரியும்,” என்று சொல்லிச் சிரித்தனர் பிரதிநிதிகள்.

“சரிப்பா, நீ எந்த சைடு, நான் எந்த சைடு என்ற தர்க்கத்துக்குள்ள போக வேண்டாம். இன்னும் கொஞ்ச நேரத்துல டைரக்டர் வந்திடுவார். அவரிடமே உங்க கோரிக்கையை மீண்டும் எடுத்து வையுங்க. என்ன இந்த முறை சொல்றார்னு பார்ப்போம்.”

‘உங்க சைடுல, ஏகாம்பரம், வீரமணி, பரஞ்சோதி, கைலாசம் எல்லாரும் ரெடிதானே?’

‘நாங்க முன்னமே சொன்ன மாதிரி எல்லாரும் தயாராதான் இருக்கோம்.’ “இந்த முறையாவது கொஞ்சம் சாதகமாகப் பேசி முடித்துக் கொடுங்கள் சார்.”

“ஆகட்டும்பா..”

“ஏம்பா, ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். டைரக்டர் வந்தவுடன் கொஞ்சம் எழுந்து வணக்கம் வையுங்கப்பா.”

“சார், இதெல்லாம் போய் சொல்லிக்கிட்டு… எங்களுக்கும் தெரியும் சார்,” என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்.

“குட்மார்னிங் சார்” என்று அனைவரும் எழுந்து சொன்னதற்கு, “குட்மார்னிங் டு எவ்ரிவொன், ஹௌ ஆர் யூ?”

“சார், வி ஆர் ஃபைன்.”

“சரி, சொல்லுங்க. உங்க கோரிக்கையை ஒண்ணு ஒண்ணா சொன்னா, நாம இப்ப அதைப்பத்திப் பேசலாம்.”

“என்ன லோகேஷ், எல்லாரும் வந்திருக்காங்களா? இன்னைக்காவது முடிவாகிடுமா?”

“சார், இன்னைக்கு நம்ம ஒரு முடிவுக்கு வந்திடலாம் சார். ஒண்ணும் பிரச்சனை இல்லை,” என்று லோகேஷ் பிரதிநிதிகளை பார்த்து.. “சுகு, உங்க முதல் கோரிக்கையை டைரக்டரிடம் சொல்லுங்க.”

“சார், முதல்ல போனஸைப் பத்திப் பேசிடலாமா?”

“இல்லப்பா, போனஸைப் பத்திக் கடைசியில பேசலாம். முதல்ல மத்த கோரிக்கைகளை ஒண்ணொண்ணா சொல்லுங்க, கேட்போம், பார்ப்போம்.”

“நாங்க எங்க கோரிக்கையில தெளிவா இருக்கோம்.” 

1. பேசிக் சேலரி இப்ப இருக்கிறதை விட அதிகப்படுத்தணும். 

2. ஓவர் டைம் சார்ஜஸ் மணிக்கு இப்ப கொடுக்கிறது ரொம்பக் கம்மியா இருக்கு, மத்த கம்பெனிகளைக் காட்டிலும். 

3. இங்க டெம்பரவரி ஊழியர்கள்தான் அதிகம். இதனால என்னன்னா, அவங்க ஒரு வருஷம் ஆனவுடனே போயிடுறாங்க. புதுசா ஆள் வர்றான். எவ்வளவு நாளைக்குத்தான் டிரெய்னிங் கொடுக்கிறது? 

4. எங்க பக்கமும் கொஞ்சம் யோசிங்க. ஒரு லையனுக்கு மூணு பேரு வேணும். அவங்களையாவது பர்மனென்ட் செய்யணும். நாங்க லைன் இன்சார்ஜ் இருக்கோம், ஒவ்வொரு ஷிஃப்ட்டுக்கும் ஒரு சூப்பர்வைசர் தேவை. அவர் பர்மனென்ட் ஊழியரா இருக்கணும். 

5. கேன்டீன் கான்ட்ராக்ட்டை மாற்ற வேண்டும். இப்ப இருக்கிற கான்ட்ராக்ட்காரன் சாப்பாடு நல்லாவா போடுறான்? வாயில வைக்க முடியல. 

6. போனஸ், இப்ப நீங்க தரேன்னு சொல்ற போனஸ் பத்தவே பத்தாது. நாங்க எதிர்பார்க்கிறது 20%.

“சரிப்பா, அவ்வளவுதானா? இல்ல இன்னும் இருக்கா?”

‘என்ன ஏகாம்பரம், வீரமணி, பரஞ்சோதி, கைலாசம், சுகு சொன்னது மட்டும்தானா? இல்ல இன்னும் ஏதாவது இருக்கா? ஏதாவது இருந்தா இப்பவே சொல்லிடுங்க. ஒண்ணொண்ணா அப்புறமா யோசிச்சு சொல்லக்கூடாது.’

(அனைவரும்) ‘சார், நாங்க முன்னமே பேசினதுதான். சுகு சொன்னது மட்டும்தான்.’

‘என்ன லோகேஷ், இப்ப நம்ம தரப்பு என்ன நினைக்கிறாங்க என்று ஒண்ணொண்ணா பார்ப்போமா!’ என்றார் டையரக்டர். அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கையின் நுனிக்கே வந்துவிட்டனர்.

‘பேசிக் சேலரி, நீங்க மத்த கம்பெனியைக் கேட்டிருப்பீங்க, இல்ல பார்த்திருப்பீங்க. அங்கேயும் இங்கேயும் ஒரே மாதிரிதான் இருக்கு. மேலும், இங்க எல்லாரையும் கூட்டிட்டு வர, கொண்டு போய் விட தனியா வண்டி இருக்கு. ஓவர் டைம் பார்க்கிறவங்க லேட்டா வீட்டுக்கு போகும்போது இங்கிருக்கிற கேன்டீன்ல சாப்பிட்டுட்டுப் போகலாம். எந்தப் பாகுபாடும் இல்லாம எல்லாருக்கும் யூனிஃபார்ம், ஷூ எல்லாம் கொடுத்திருக்கிறோம். கம்பெனியில கிளினிக் இருக்கு, வெல்னஸ் ரூம் இருக்கு. இது எல்லாம் யாருக்காக? எல்லாம் நம்ம ஊழியர்களுக்காகத்தான்.’

‘நீங்க ஒண்ணு புரிஞ்சுக்கணும், உங்க நலனில் எங்களுக்கும் அக்கறை இருக்கு. அதைச் சரியா புரிஞ்சுக்கணும்.’

“இதைக் கேட்ட சுகு மற்றும் அவனது சகாக்கள் மனதில், ‘பசுந்தோல் போர்த்திய புலிதானே’ (என்ற எண்ணம் ஓடியது).” கம்பெனி எப்பவுமே இப்படித்தான் ஏதாவுது சொல்லிக்கிட்டே இருக்கம் என்று மேலும் நினைத்தனர். எப்படியாவது இவர்களைச் சமாளித்து இதிலிருந்து வெளிவர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே எண்ணமாக இருக்கும் என்று பிரதிநிதிகள் நம்பினார்கள்.

‘இப்ப ரெண்டாவது பாயின்டுக்கு வருவோம். எல்லாத்தையும் நீங்க கம்மின்னா எங்க போறது? நீங்க எட்டு மணி நேரத்தில் அவுட்புட்டைக் கொடுத்தால் ஓவர்டைம் எதற்கு? நீங்க என்னடான்னா, எட்டு மணி நேரத்துல அஞ்சு மணி நேரம் அல்லது ஏழு மணி நேர அவுட்புட்தான் போடுறீங்க. அப்புறம் எப்படி ஓவர்டைம் குறையும்? ஒவ்வொரு வாரமும் கட்டாயம் ஓவர்டைம் செய்தால் மட்டுமே புரொடக்‌ஷனை அச்சீவ் செய்ய முடியும். உங்களுக்குத் தெரியுமா? கம்பெனிச் சட்டத்தின் கீழ், கூடுதல் நேர வேலைக்கு வழக்கமான சேலரி விகிதத்தை விட இரு மடங்கு சேலரி தான் தருறோம். வேணும்னா நான் சேர்மனிடம் பேசுறேன். அவங்க ஒழுங்கா அவுட்புட் போடுறாங்களாம். அடுத்த மாசம் நாம அவுட்புட்டை அச்சீவ் செய்துட்டோம்னா, வரும் காலங்களில் ஓவர்டைம் சார்ஜை இப்ப இருக்கிறதை விட 1.5% அதிகப்படுத்தலாம்னு. நீங்களே யோசிங்க, நீங்களும் வளரணும், அதே சமயம் கம்பெனியும் வளரணும்.’

“ஏம்பா, நான் சொல்றது சரிதானே?”

“சார், நாங்க மாடு மாதிரி வேலை செய்யுறோம், ஆனா போதிய ஊதியம் இல்ல. எங்க வேர்வையை ரத்தமா சிந்துறோம்.”

“சார், நீங்க சொல்ல வந்ததை முழுசாச் சொல்லி முடியுங்க. அப்புறம் நாம எது சரி, எது தவறுன்னு பேசலாம்.”

‘இனி நாம மூணாவது பாயின்டுக்குப் போகலாம். சரிப்பா, நீங்க சொன்ன மாதிரி உங்க கஷ்டத்தை நாங்க புரிஞ்சுக்கிட்டோம்ல, அதனால நாங்க என்ன நினைக்கிறோம்னா, நீங்க கேட்ட மாதிரி ஒவ்வொரு லைனுக்கும் மூணு சூப்பர்வைசர் கொடுக்கிறோம். ஆனா, நீங்கதான் எந்த நபர்னு தேர்வு செஞ்சு கொடுக்கணும். இப்ப இருக்கிற ஆட்களை உங்களுக்குத்தான் தெரியும், யாரு நல்ல வேலை தெரிஞ்சவன்னு.’

‘சரிதானே? எப்ப நீங்க சொல்றீங்களோ, அடுத்த மாசம் அவங்களைப் பர்மனென்ட் செஞ்சுடுவோம். நீங்க சொன்ன மாதிரி’ என்று தன் தாவாங்கட்டையைத் தடவிக்கிட்டே பேசினார் டைரக்டர். லோகேஷும் தன் தலையைக் கோதிக்கிட்டு, சுகு மற்றும் மற்ற நபர்களைப் பார்த்து, டைரக்டர் சொன்னது சரிதான் என்று ஆமோதிக்கிற மாதிரி தலையை ஆட்டவும் செய்தார்.

பிரதிநிதிகளிடம் நான் கலந்து பேச வேண்டும், கலந்து பேசின பிறகு நான் உங்களுக்குச் சொல்றேன் சார்,” என்றான் சுகு.

“ஏம்பா லோகேஷ், குடிக்க சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதும் ஏற்பாடு செய்யலையா?”

“சார், எல்லாம் ரெடி செய்து வைத்துவிட்டுத்தான் மீட்டிங் ரூமுக்கு வந்தேன்.”

“அப்ப கொண்டு வரச் சொல்லுப்பா?”

“இதோ, இப்ப கூப்பிடுறேன். ஹலோ மணி, காபி, பிஸ்கட், கூல் டிரிங்ஸ் எல்லாத்தையும் மீட்டிங் ரூமுக்கு கொண்டு வா!” என்றார்.

சிறிது நேரத்திற்கெல்லாம் லோகேஷ் போனில் சொன்ன மாதிரி காபி, பிஸ்கட், கூல் டிரிங்ஸ் எல்லாம் மீட்டிங் ரூமுக்கு வந்தது. “ஏம்பா சுகு, எல்லோரையும் எடுத்துக்கச் சொல்லுப்பா!”

‘என்ன ஏகாம்பரம், வீரமணி, பரஞ்சோதி, கைலாசம் எல்லோரும் எடுத்துக்குங்கப்பா, கூச்சப்பட வேண்டாம். பத்து நிமிஷம் பிரேக் எடுத்துக்கலாம்,’ என்றார் லோகேஷ்.

“என்ன சார்?” என்றனர் கைலாசம், ஏகாம்பரம், வீரமணி மற்றும் பரஞ்சோதி. பதிலுக்கு லோகேஷும், “என்னங்கப்பா?” என்றார்.

“என்ன, எங்களுக்கு டீ, காபி, பிஸ்கட் கொடுத்து சரிகட்டிடலாம்னு பார்க்கிறீங்களா?”

“ஏம்ப்பா, அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. உங்களுக்குத் தெரியாததா?” என்றார் லோகேஷ்.

‘எல்லாரும் சாப்பிடுங்க, நான் இன்னும் பத்து நிமிடத்துல திரும்பவும் வரேன்,’ என்று உட்கார்ந்திருந்த டைரக்டர் எழுந்து அவருடைய ரூமுக்கு சென்றார்.

‘என்ன சுகு, இதுவரைக்கும் டைரக்டர் சொன்னது சரிதானே!’

“லோகேஷ் சார், இது இப்ப பேசற விஷயம் இல்லை. இன்னும் மூணு பாயின்ட் இருக்கு, பிறகு பார்க்கலாம்,” என்றான் சுகுமார்.

“சாப்பிட்டீங்களா?”

“இப்ப அடுத்த மூணு பாயின்டைப் பத்தி பேசலாமா?”

“பேசலாம் சார்.”

“அடுத்து நீங்க கேட்ட நாலாவது பாயின்ட், மூணோடு சேர்த்தாச்சு. இப்ப நேரா அடுத்த பாயின்டுக்கு போகலாம்.”

“ஏம்பா லோகேஷ், இதைக்கூட நீ பார்க்க மாட்டியா? நம்ம ஊழியர் நல்லா சாப்பிட்டாதானே ஒழுங்கா வேலையை செய்ய முடியும். இதெல்லாம் என்கிட்ட கொண்டு வரணுமா? நீயே பார்த்து சரிபண்ணக் கூடாதா?”

“நீ என்ன பண்ற, உடனே இந்த கேன்டீன் காரனைக் கூப்பிட்டு வார்னிங் கொடு. அப்படியும் அவன் திருந்தல, நல்ல சாப்பாடு போடல என்றால் உடனே கேன்டீனை மாத்து.”

“லோகேஷ், இதை நீ உடனே செய்யணும்,” என்று கண்டிக்கும் தொனியில் சொன்னார் டைரக்டர்.

“சார், அப்படியே செஞ்சுடுறேன், கவலைப்படாதீங்க. ஊழியர் வெல்ஃபேர்தான் முதல்.”

“சொல்லாத, முதல்ல செய்யி,” என்றார் டைரக்டர்.

இப்ப கடைசீப் பாயின்ட்டுக்குப் போகலாம். போனஸ். “ஆமாம் சார் போனஸ்.”

இதுவரைக்கும் கம்பெனி உங்க நலனுக்காகத்தான் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கு. நீங்க கேட்ட 20% ரொம்ப அதிகம். உங்களுக்குத் தெரியுமா போன குவார்ட்டரில் நம்ம எவ்வளவு அச்சீவ் செய்திருக்கிறோம்? 15%-இல் இருந்து 20% கம்மியாகத்தான் செஞ்சிருக்கோம். ஆனா இதை எப்படிச் சரிபண்ணியிருக்கோம் தெரியுமா? ஒவ்வொரு வாரமும் ஓவர் டைம் வைத்துச் சரிசெஞ்சிருக்கோம்.

கொஞ்சம் நீங்களும் யோசிக்கணும், டவுன் இல்லாம எப்படி அவுட்புட்டை இன்கிரீஸ் செய்யறது என்று தினமும் யோசித்து அவுட்புட்டைக் கொடுத்தீங்கன்னா, நாம ஓவர் டைம் இல்லாம புரொடக்‌ஷன் செய்தோம்னா கட்டாயம் நீங்க கேட்கிற 20% கொடுக்கலாம். நானும் சேர்மனிடம் பேசியிருக்கேன், நம்ம ஊழியருக்கு அட்லீஸ்ட் 8%-இல் இருந்து 10% கண்டிப்பாகக் கொடுக்கணும்னு. அவரும் யோசிச்சுக்கிட்டு இருக்காரு.

நீங்களே நல்லா யோசிச்சு ஒரு நல்ல முடிவாச் சொல்லுங்க. எவ்வளவு நேரம் வேண்டும் உங்களுக்கு? பத்து நிமிஷம் போதுமா, இல்ல இருபது நிமிஷம் வேண்டுமா? எடுத்துக்கோங்க, ஆனா நல்ல முடிவாச் சொல்லுங்க.

ஒண்ணே ஒண்ணு உங்களிடம் நான் இந்தக் கம்பெனி டைரக்டராச் சொல்லுறேன். நீங்கதான் மத்த ஊழியரோட பிரதிநிதிகள். நல்லது கெட்டது அனைத்தையும் நீங்கதான் யோசிச்சுச் செய்யணும். பாரபட்சமா எந்தச் செயலையும் செய்யக்கூடாது. நீங்க கம்பெனிக்கும் ஃபேவராவும் இருக்கணும், ஊழியருக்கும் ஃபேவராவும் இருக்கணும், அப்பத்தான் நல்லபடியா இருவரும் கம்பெனியை ஓடவைக்க முடியும் என்று தனது பெரிய உரையை முடித்தார்.

கம்பெனி தனது இறுதி முடிவைச் சொல்லிவிட்டது. இனி நாம்தான் அவர்களுடன் சேர்ந்து ஒரு நல்ல முடிவை எடுக்கணும் என்று மனதளவில் யோசித்தான்.

சுகுவுடன் சேர்ந்து ஏகாம்பரம், வீரமணி, பரஞ்சோதி, கைலாசம் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் முன் எடுத்து வைத்த ஆறு பாயின்ட்டையும் பேசினர். ஏகாம்பரமும் வீரமணியும், “ஏம்பா, நாமளும் எவ்வளவு நாட்களாக இதை இழுத்துக்கிட்டு இருப்பது?” என்றனர்.

அதற்கு பரஞ்சோதியும் கைலாசமும், “நமக்கு முடிவு தெரியுற வரைக்கும் அப்படியே இழுத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்,” என்றனர்.

உடனே சுகு, வீரமணி, ஏகாம்பரம் எல்லாரும், “அவங்க சொல்றதையும் நாம யோசிக்கணுமில்லையா? நாம நல்லா அவுட்புட் போட்டோம்னா ஓவர் டைம் குறையுமில்லையா? இதை ஏன் நாம யோசிக்க மாட்டேங்கிறோம்?” என்றனர்.

இதைக் கேட்ட பரஞ்சோதியும் கைலாசமும் யோசித்து, தங்களது ஒப்புதலையும் தெரியப்படுத்தினர்.

“நமது கோரிக்கையை முழுசா ஏத்துக்காம இல்லை, முடிந்த அளவுக்கு கம்பெனி ஏத்துக்கிட்டு நமக்கு ஃபேவரா இறங்கி வரப்ப நாமும் முரண்டு பிடிக்காம விட்டுக்கொடுக்கத்தான் வேண்டும்” என்றனர். சுகு, வீரமணி, ஏகாம்பரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

ஒரு ஐந்து நிமிடம் அமைதி நிலவியது அந்த மீட்டிங் ஹாலில். ஊழியர் பிரதிநிதிகள் ஒரு நல்ல முடிவை நோக்கிச் செல்ல அந்த ஐந்து நிமிட மௌனம் கைக்கொடுக்கும் என்று லோகேஷும் டைரக்டரும் எண்ணினார்கள். சுகுமார், தராசு முள் எப்படி நடுநிலையாக இருக்குமோ, அப்படி அனைவருடனும் கலந்து பேசி ஒரு நடு நிலையான முடிவை முன்வைக்க வேண்டும் என்று தனது ஆழ் மனதில் நினைத்தான். மற்றவர்களுடன் கலந்துரையாடியதில் அனைவரும் ஒப்புக்கொண்டதால், ‘ஊழியர்களுக்கு’ நல்லதுதான் நடக்கப்போகிறது என்று எண்ணினான். “ஆனாலும், அவனுக்குச் சரியானதைச் செய்தோமா என்ற லேசான சந்தேகமும் இருந்தது. ஆனால், இதுதான் சாத்தியமான சிறந்த தீர்வு என்ற நிம்மதியும் அவனது ஆழ்மனதில் ஒருசேர எழுந்தது.”

-பாலமுருகன்.லோ-

Series Navigationமழை புராணம் : 17பெண்ணியம் என்னும் பெருநிலை