This entry is part 2 of 8 in the series 15 பிப்ரவரி 2026

              மீனாட்சி சுந்தரமூர்த்தி

                                              

வடிவு  மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டு  மாடியிலிருந்து இறங்கி வந்தாள். இன்னும் அதிகமாகப் பூக்க ஆரம்பிக்கவில்லை, வீட்டின் முன்புறமாக முல்லையும், பக்கவாட்டில் சாதிமல்லியும் மாடிக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தன. அதிகமாகப் பூக்கும் காலங்களில்  பறிப்பதற்கே அரைமணி நேரத்திற்கு மேல் ஆகும். இப்போது ஒரு முழம்தான் வருகிறது. சாமி படங்களுக்கு  வைத்துவிட்டு  தன் தலையிலும் கொஞ்சம் சூடிக்கொண்டாள். விளக்கேற்றி விட்டு  கையில் காபியோடு ஊஞ்சலில் வந்து அமர்ந்தாள். தொலைக்காட்சியில் வீட்டு விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. நிமிடத்தில் மனை வாங்கி வீடுகட்டி புதுமனைப் புகுவிழா நடத்தி விட்டார்கள். இப்படியொரு மாயாஜாலம் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

மாதவன் கேட்டைத் திறக்கும் சத்தம் கேட்டது. நிலைக்கதவைத் திறந்து

அவர் கையிலிருந்த பையை வாங்கினாள். 

‘ நீ சொன்னதெல்லாம் இருக்கா பார்’

சரி என்று தலையை அசைத்துவிட்டு முன்னே செல்லும் மனைவியைப் பார்த்தார் மாதவன். ஐம்பத்தெட்டு வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் ஆனால் , ஏனோ இரண்டு வருடங்களாக வயிறு மட்டும் பெரிதாக இருக்கிறது. ‘உடற்பயிற்சி செய்’ என்று சொல்லிப் பார்த்துவிட்டார். வீட்டு வேலையே சரியாக இருக்கிறது நேரமில்லை என்பாள்.

‘ காபி குடிக்கறீங்களா’

‘வேண்டாம், முரளி வந்திருந்தார் அவரோடு  காபி குடிச்சிட்டேன்’

‘ சரி போன வேலை என்னாச்சு?

”நான்கைந்து வீடுகள் பார்த்துட்டேன், எதுவும் புடிக்கலை.’

‘ஏன்’?

‘நம்ம வீட்டு வசதி வராது வடிவு, வீடு மாற வேணாம்’

‘நீங்க சொல்றது சரிதான், ஆனா இந்த ஜனங்க பேசற பேச்சு கேக்க முடியலையே’

‘ பேசிட்டுப் போறாங்க விடு, நாம யார் வீட்டு விசேஷத்துக்கும் போகவேணாம்’

தாலுகா ஆபீசில் குமாஸ்தாவாகப் பணியாற்றி நான்கு வருடங்கள் ஆகிறது மாதவன் ஓய்வு பெற்று. விவசாயக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர். இவருடைய தந்தைக்கு.  இரண்டு காணி நிலமும், ஒரு ஓட்டு வீடும் மட்டுமே சொந்தமாக இருந்தது, நான்கு பெண்களும், ஒரு மகனுமாக ஐந்து பிள்ளைகள் . ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் அன்றாடத் தேவைகளுக்கேப் போராட்டம்தான். இவருடைய அன்னையார் வீட்டுத்தோட்டத்தில் கத்தரி, வெண்டை,,கொத்தவரை, அவரை பசலை, சுரை, பூசணி, மிளகாய், தக்காளி என்று வளர்த்து காய்கறித் தேவையைப் பார்த்துக் கொண்டார். அதுமட்டுமல்லாது, நீண்டு , பரந்த புழக்கடை ஆனதால், வாழை, முருங்கை, கொய்யா, மாமரங்களும் கைகொடுத்தன. மாதவன் மட்டுமே கல்லூரி சென்றவர்.அதுவும் இளங்கலை வரலாறு பட்டப்படிப்பு  படித்து வேலைக்கு அலைந்து  ஒருவாறாகத் தேர்வெழுதி குமாஸ்தா வேலை பெற்றவர். 

தந்தைக்கு உதவியாக குடும்பச்சுமை ஏற்றுக் கொண்டார். தங்கைகளை விரும்பிய அளவு படிக்கச் சொன்னார். ஆனால் பள்ளிப்படிப்பு  முடித்தவுடன் அத்தை, மாமன் மகன்கள் பெண்கேட்டு மணம் முடித்துக்கொண்டனர். ஒருவகையில் அதுவும் நல்லதாகவே முடிந்தது. இருபது சவரன் நகை போட்டு, சீர்வரிசை செய்து ஒரு குறையுமில்லாமல் திருமணம் செய்ய முடிந்தது. இரண்டு காணி நிலத்தை மட்டும் விற்க வேண்டியதாயிற்று. 

கிராமத்து வீடு இன்னும் அப்படியே இருக்கிறது.தங்கைகளின் சம்மதத்தோடு இவர் பெயருக்கு எழுதி விட்டார் இவருடைய தந்தை.

வடிவும் இவருடைய மாமன் மகள்தான். தங்கைகளுக்கு அண்ணன் என்றால் உயிர்.. இன்று வரை உறவுகள் பாசத்தோடும்,நேசத்தோடும் இருக்கிறார்கள். 

‘ அத்தான் பரிமளா பேசினா’

நினைவு தடைபட்டு எழுந்தார் மாதவன்.

‘ என்ன சொன்னா?’

‘அம்மாவை அனுப்பச் சொன்னா’

‘ அப்புறம்’

‘ இப்பல்லாம் பாட்டிக்கு காது சரியா கேக்கறதில்ல, கண்பார்வையும் மங்கல்னு சொன்னேன்’

‘அப்போ நீ போறியா வடிவு’

‘ஆமாங்க போய்தானே ஆகணும், சனிக்கெழமை என்னை ஏத்தி விட்டுடுங்க’

‘சரி வடிவு, வீடு மாத்த வேணாம், பார்த்துப்போம்’

என்று டைரியில்  அன்றைய செலவினங்களை எழுத முற்பட்டார் மாதவன்.

வடிவு தோசை வார்க்கச் சென்றாள்.

இவர்களுடைய  ஒரே மகள் பரிமளா , பொறியியல் பட்டதாரி 

படித்து முடித்தவுடன் பெங்களூரில் ஐ.டி கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. ஒரு வருடம் வேலை பார்த்தாள் வடிவும், மாதவனும் வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  ஒரு வரன் அமைந்திருந்தது.பையன் தூரத்துச் சொந்தம். அரசுக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருந்தான். ஜாதகம் பொருந்தியிருந்தது. பெண்பார்க்க வந்தார்கள்  எல்லோருக்கும் பிடித்துப்போனது, இதுவேண்டும் அதுவேண்டுமென்று எதுவும் சொல்லவில்லை,  இரண்டு பக்கத்திலும், ஒத்துப் போனார்கள். திருமணத்திற்கான நாள் குறிக்க ஏற்பாடானது. ஒருவார விடுமுறையில் பரிமளம் வீட்டிற்கு வந்திருந்தாள்.

செல்லப்பெண் என்பதால் தயக்கம் எதுவும் இல்லாமல்,

‘அப்பா எனக்கு வேறு ஒருத்தரைப் பிடிச்சிருக்கு பா.’

‘ ஏம்மா இதை மொதல்லயே சொல்லியிருக்கலாமே’

‘உனக்கு நெறையச் செல்லம் கொடுத்துட்டோம்’

‘ வடிவு, பேசாம இரு, சரிமா, நீ அந்தப் பையனை அப்பா அம்மாவோட வரச்சொல்லு’

நாகை மாவட்டத்துச் சிற்றூர் ஒன்றில் அரை ஏக்கர் நிலமும் ஒரு  ஓட்டு வீடும் சொந்தமாக இருந்தது கணேசனுக்கு, அப்பா இல்லை, அம்மா தான் இருந்தாள்.

பி.ஏ. படித்துவிட்டு மருந்தகம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.

இயற்கை வைத்தியம் பற்றிய சிறப்புப் பயிற்சி முகாம்  ஒன்றில் பரிமளமும் அவள் தோழியும் கலந்து கொண்டபோது ஏற்பட்ட பழக்கம் காதலாகிக் கல்யாணம் வரை வந்து விட்டது.

மகளின் விருப்பப்படி  எல்லா செலவும் செய்து கல்யாணத்தை நடத்தினார் மாதவன்.

பரிமளம் வேலையை விட்டுவிட்டாள்.கணேசனும் வேலையை விட்டுவிட்டு தன் சொந்த ஊரில் காய்கறிகளை நிலத்தில் பயிரிட்டுக்கொண்டிருந்தான்.

வளைகாப்பு நடத்தி மகளை அழைத்துக் கொண்டு வந்தார்கள், 

‘ பரிமளம் இன்னக்கி அஞ்சு மணிக்கு ஆஸ்பிடலுக்குப் போகணும்’

‘ எதுக்குங்க பா?’

‘ குழந்தை எப்படி இருக்குதுன்னு பார்ப்பாங்க மா, பிரசவம் இங்கதான் பார்க்கப்போறோம்’

‘ வேணாம் பா’, எல்லாம் அவர் வந்து சொல்லுவாரு’

‘ யாரு மா, கணேசனா?’

‘ ஆமாம்’ என்று தலையசைத்தாள். மறுநாள் வந்த மருமகன் 

இயற்கை முறையில் மக்ப்பேறு இவர்களே பார்த்துக்கொள்வார்கள் என்று சொன்னதைக் கேட்டு கணவனும், மனைவியும் அதிர்ந்து போனார்கள்.

மகள் பெற்றோருக்குத் தைரியம் சொன்னாள். எதிர்பார்த்த நாளும் வந்தது.

இரவு எட்டு மணிக்கு மருமகன் கேட்டவற்றைத் தயார்செய்து தந்து விட்டு அறைக்கு வெளியில் இவர்கள் தவியாய் தவித்திருக்க மருமகன் கணேசன் பரிமளத்திற்கு மகப்பேறு பார்த்தான்.

ஒரு வழியாக குழந்தை பிறந்துவிட்டது, பிறந்த குழந்தையின் தொப்புள் கொடி அறுத்து, குளிப்பாட்டி என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையும்  மருமகன் செய்தார்.சரி மருத்துவமனைக்குப் போகலாம் என்றால் இப்போதும் வேண்டாமென்று தடுத்து விட்டார்கள்

வீட்டில் முறையான மருத்துவ வசதி இல்லாமல்  குழந்தை பெறுவது வெளியில் தெரிந்தால் என்ன ஆகுமென்று ஒரு புறம் அச்சம், இன்னொரு புறம் தாயும்,சேயும் நலமாக இருக்க வேண்டுமென்ற தவிப்பு. ஐந்து மாதம்வரை வைத்திருந்து மகளை அனுப்பி வைத்தார்கள், அடுத்த வருடமே மறுபடியும்  மகப்பேற்றுக்கு வந்தாள்.முதல்முறை போலவே இந்த முறையும் மருமகனே பிரசவம் பார்த்தார்.

இப்படியே இந்த எட்டு வருடத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துவிட்டன. முதல் குழந்தை மட்டுமே ஆண், மற்றவை பெண்கள் நான்காவது பிள்ளைப் பேற்றின்போது மருமகனிடம் மாதவன்  இத்தனை குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டாமா ? அதோடு மகளின் உடல்நலம் என்னாவது ? என்று கேட்டார். 

‘அதெல்லாம் நல்லா இருக்கும், மரம் வச்சவன் தண்ணீ ஊற்றுவான் ‘ என்றாள் கணேசனின் அம்மா. அதன்பின் எதுவும் கேட்பதில்லை இவர்கள்.

. அக்கம் பக்கம் இலேசாகத் தெரிந்து கேட்க ஆரம்பித்தார்கள்.இந்த சமயத்தில் யூ. டியூப் சேனல் ஒன்றிற்கு  பரிமளமும், கணேசனும்  இந்த குழந்தைப்பேறு பற்றி பேட்டி கொடுத்தது வெட்ட வெளிச்சமாகி விட்டது. உறவும், நட்பு வட்டமும்  பேசுவது வருத்தம் தந்தது. அதுமட்டுமல்லாமல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வைத்திருப்பதும் அதிகமான துன்பமானது.

விளையாட வேண்டிய வயதில் எதற்குப் பள்ளிக்குப் போகவேண்டும் .நிதானமாக வீட்டிலேயே படித்துப் பொதுத் தேர்வு எழுதலாம். என்றார் மருமகன். மகளும் ஆமோதித்தாள்.

பேரக் குழந்தைகள் போதிய வசதி இன்றி உழல்வது மாதவனுக்கும், வடிவுக்கும் பெருங்கவலை ஆனது. இவர்கள் படித்தவர்களா?. போதிய வருமானமில்லாமல் அதிகமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது சரிதானா? மகளை எப்படியெல்லாம்  வளர்த்தோம் கடைசியில் பிள்ளை பெறும் எந்திரம் போலாகி விட்டாளே, என்று குமைந்தார்கள்.

அவ்வப்போது வடிவின் அம்மா  சென்று குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாள். வீதியில், மண்ணில், கசங்கிய உடைகளோடு ஆடும்  பிள்ளைகள்.இரண்டு குழந்தைகளையாவது தாமே படிக்க வைக்கலாமென்றால் அதற்கும்  மறுக்கிறார்கள் என்ற ஆதங்கம் மாதவனுக்கு. இப்போது ஆறாவது முறையாக பிள்ளைப்பேற்றுக்குத் தயாராகி இருக்கிறாள் மகள். அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும், ஏற்கனவே அக்கம்பக்கம் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்றுதான் வேறு வீடு மாற்ற வேண்டும் என்றாள் வடிவு.

உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த மாதவன்,

‘ வடிவு நாளைக்கு நம்ம பொண்ணுகிட்டப் பேசு, நான் சொல்ற மாதிரி சொல்லு”

கணவன் சொன்னபடியே மறுநாள் மகளை அழைத்து,

‘ பரிமளம் இந்த முறை பிரசவத்தை ஆஸ்பத்திரியில் பார்த்து, குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கறதா இருந்தா நான் வரேம்மா’ என்றாள் வடிவு.

Series Navigationகொண்டாடும் தீ… கொல்லும் புகை…அன்பைப் பரிமாறும் தினம்