This entry is part 5 of 8 in the series 15 பிப்ரவரி 2026

‘தேவவிரதன்’

நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்று கிட்டத்தட்ட பதினைந்து வருஷங்களாகி விட்டன.  உடன் வேலை செய்த ஓர் சில  நண்பர்கள் மட்டுமே தொடர்பில் இருக்கின்றனர். எல்லோராலும் தொடர்ந்து தொடர்பு வைத்துக் கொள்ள இயலுவதில்லை. அதிக பட்சமாக உலகெங்கும் எல்லா நேரங்களிலும் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் ‘வாட்ஸ் அப்’ செய்திகள்தான் அவ்வப்போது வந்து கைபேசியில் ‘டிங், டிங்’ என்று விழுந்துகொண்டிருக்கும். அவைகளும் பெரும்பாலும் பொது, ஆன்மிக, அல்லது அக்கப்போர் விஷயங்களே. சில நேரங்களில் திருமண அழைப்பிதழ்கள் கூட இதன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு விடுகின்றன. ஓர் சிலர் போன் செய்து நினைவு படுத்துவதுண்டு. பலர் அதுவும் செய்வதில்லை. 

இவற்றை எல்லாம் நான் குற்றமாக காணவில்லை; காலத்தின் கட்டாயம். போக்கு வரத்து நெரிசல், சிறு சிறு உடல் நல குறை பாடுகள், அழைக்க மேற்கொள்ள வேண்டிய பயணங்களை தவிர்க்க செய்கிறது. 

***

சமீபத்தில், ஓர் பொது நண்பரின் திருமண விழாவில் மற்றொரு பழய நண்பரை சந்திக்க நேர்ந்தது. ஓர் காலத்தில் நானும் அவரும் மிக நெருங்கிய தோழர்கள்தான். ஆனால், அவருக்கு முன் நான் ஓய்வு பெற்று விட்டதால் தொடர்பு கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து கிட்டத்தட்ட  அறுந்து விட்டது. 

திருமணத்தில் இருவரும் சந்தித்து பேசியது சற்று மகிழ்ச்சியை தந்தது.  

அவர் சற்று வசதியான குடும்பத்திற்கு மாப்பிள்ளை ஆகி இருந்ததால், கல்யாணம் ஆன சில நாட்களிலேயே பெரிய ஓர் மூன்று படுக்கையறை கொண்ட செழிப்பான பகுதிக்கு குடியேறி விட்டார். அழகாக ஓர் பிள்ளை; ஓர் பெண். பெண்ணின் திருமணம் ‘கோவிட்’ காலத்தில் நடந்ததால், அவரும் அழைக்கவில்லை. நானும் போகவில்லை. காதல் திருமணம் என்று கேள்விப்பட்டேன். அவர் சொல்லவில்லை. மகன் எல்லா மகன்களையும் போல் பொறி இயல் படித்து கொண்டிருந்தான். 

நான் கல்யாணம் செய்து கொள்ளாதவன். என்னை எல்லோரும் பெரிய பணக்காரன் என்று நினைத்து கொண்டிருப்பார்கள். ஆனால், உண்மை அதுவல்ல. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டி இருந்தது. மூன்று பேர்கள். இருவர் இறந்து விட்டனர். இருந்தாலும், எனக்கும், எவரும் பெண்ண தர முன் வரவில்லை. அதற்கு காரணங்கள் பல. அது இந்த கதைக்கு தேவையில்லை. அதோடு நான் சில விஷயங்களில் ஊதாரி. புத்தகங்கள் வாங்குவது, ஊர் சுற்றி பார்ப்பது, உடைகள் வாங்குவது என்று. 

‘வெறுமே தானே இருக்கிறாய்? ஓர் நாள் வீட்டுக்கு வா,’ என்று அழைத்தார். நானும் பார்த்து பேசி வெகு நாட்கள் ஆனதால் ஓர் நாளை குறிப்பிட்டு அன்று மாலை வருவதாக ஒப்புக்கொண்டேன். 

****

குறிப்பிட்ட நாள் மாலை எதற்கும் முன்பே போனில் தொடர்பு கொண்டு பேசி விட்டு சென்றேன். 

பெரிய வீடுதான். நல்ல நேர்த்தியான முறையில் வீடு அலங்கரிக்க பட்டிருந்தது. அவர் மனைவியும் வெளியே வந்து என்னை வரவேற்றார். 

ஹாலில் அமர்ந்து பேசி கொண்டிருந்தோம். ஓர் படுக்கை அறையின் கதவு சாத்தி இருந்தது. 

எங்கள் இருவருக்கும் சிற்றுண்டி, கொண்டு வந்து வைத்த அவர் மனைவி நிர்மலா ‘அனு வந்திருக்கிறாள். அவள்தான் அந்த அறையில் அமர்ந்து எதோ கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கிறாள்,’ என்றாள். அனு அவர்களின் மூத்த மகள்; திருமணமாகி சென்னையின் மற்றோர் பகுதியில் இருப்பவள். 

நாங்கள் மூவரும் ஏதோ பொதுவான விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம். 

அப்போது அந்த அறையின் கதவை திறந்து கொண்டு அவர்களின் மகள் அனு வெளியில் வந்தாள். நான் அவளை வெகு நாட்கள் முன் குழந்தையாக அப்புறம் ஒரு முறை கல்லூரி படிக்கும் காலத்தில் பார்த்தது. 

அவளுக்கு என்னை நினைவிருக்கும் என்று உறுதியாக சொல்வதற்கில்லை. இருந்தாலும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நண்பனோ, அவன் மனைவியோ நான் இன்று வருவதாக சொல்லி இருக்க மாட்டார்களா? 

அனு சற்று பருமனாகி இருந்தாள்; ஆனால், உடலை ஒட்டியிருக்கும் ஓர் முக்கால் கால் சட்டையும், அதே போல் மேலே ஓர் இறுக்கமான சட்டையையும் அணிந்து இருந்தாள். தலை முடி தோள்வரையில் கத்தரிக்கப்பட்டு இருந்தது. நான் அவளை பார்ப்பதை கண்டதும் ஓர் சிறு புன்னகையுடன் ‘ஹாய் அங்கிள், ஹவ் ஆர் யு?’ என்று கேள்வியை வீசி விட்டு, ‘மம்மி, நான் ‘வாக்’ போகிறேன்.’ என்றபடி வெளியே சென்றாள்.

நானும் பதிலுக்கு ‘ஹை, ஹவ் ஆர் யு?’ என்ற கேள்விக்கு ,’குட்’ என்று  பதில் அளித்தபடியே  வெளியே சென்று விட்டாள்.

நாங்கள் தொடர்ந்து பேசி கொண்டிருந்தோம். அப்போது அவர் மகன் உள்ளே நுழைந்தான். நான் அவனை குழந்தையாக பார்த்தது தான். இன்று நன்கு வளர்ந்து மீசை தாடி, வாராத தலை (இன்றைய நாகரிகம்) என்று இருந்தான். இடையில் ஓர் அழுக்காக  அங்கும் இங்கும் கிழிசல்களுடன் இருந்த ஜீன்ஸ் பாண்ட். எதோ பூவும், காயும் போட்ட டி ஷர்ட் என்று இளம் இந்திய அசல் பிரதிநிதியாக இருந்தான். அவன் என் பக்கம் திரும்பவே இல்லை. என் நண்பர்தான் வலுவில் ‘நான் சொல்லி இருக்கிறேனே, என் ஆபீஸ் நண்பர் குமரன்,’ என்று அறிமுகம் செய்தார். நான் இருப்பதை அப்போதுதான் பார்த்தவன் போல் என் பக்கம் திரும்பி ‘ஹை, ஹவ் ஆர் யு ?’ என்று கேள்வியை வீசி விட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் தன் அறையை நோக்கி சென்றான். 

நண்பருக்கும், அவர் மனைவிக்கும் முகத்தில் ஓர் மாற்றமும் தோன்றவில்லை. 

ஏதோ ஓர் பொறி இயல் கல்லூரியில் படிக்கிறான் என்பதை தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. நானும் எதுவும் கேட்கவில்லை. ஐந்து நிமிஷத்தில் அவன் வெளியே வந்து ‘எனக்கு இன்று ‘பிரெண்ட்ஸ்’ கூட பார்ட்டி. சாப்பாடு வேண்டாம். ‘லேட்டா’க வருவேன்.’ என்று சொல்லிவிட்டு பதிலை கூட எதிர் பார்க்காமல் வெளியேறினான். சில நொடிகளில் கார் கிளம்பும் ஒலி கேட்டது. 

‘நாம் சொல்வது எதுவும் அவன் காதில் ஏறாது. இனிமேல் வருவது ராத்திரி எத்தனை மணிக்கோ?’ என்று நிர்மலா முணுமுணுத்தது என் செவிகளில் விழுந்தது. அதற்குள் நண்பர் இடையில் பாய்ந்து ‘சின்ன வயசு…வாழ்க்கையை அனுபவித்து விட்டு போகட்டுமே? என்ன குமரன்? நம் காலத்தில் எல்லாம் எத்தனை கட்டுப்பாடுகள், கட்டாயங்கள்? இவர்கள், இன்று சுதந்திரமாக இருக்கிறார்கள். வசதி இருந்தாலும் அனுபவிக்க தெரிய வேண்டுமல்லவா? நமக்கு எல்லாம் அந்த வாய்ப்பே கிடைக்கவில்லை, என்ன சொல்கிறாய்?’ என்றார் என்னை பார்த்து. 

நான் பதில் சொல்லவில்லை, புன்னகை செய்தேன். அவரே தொடர்ந்து ‘உனக்கென்ன? நீ என்றுமே தனிக்காட்டு பறவை. உன் இஷ்டப்படி இருந்திருக்கலாம்.’ என்றார் சிரித்தபடி. 

நான் இதற்கும் பதில் தராமல் வாய் விட்டே சிரித்தேன். 

சற்று நேரத்தில் அவன் மகள் அனு வந்து விட்டாள். நேராக தன் அறைக்கு சென்று கதவை மூடி கொண்டாள். பேச்சின் நடுவில் நண்பனின் மனைவி ‘நீங்கள் அந்த நாட்களில் படம் வரைவீர்கள் இல்லை? இப்போதும் உண்டா?’ என்று கேட்டாள். 

‘ஓ, உண்டே. ஆனால் எப்போதாவதுதான். வேண்டுமானால் காட்டுகிறேன். இப்போதுதான் கைபேசியில் எதை வேண்டுமானாலும் பதிவு செய்ய முடிகிறதே?’ என்று என் போனை எடுத்து அதில் நான் பென்சில் சித்திரமாக கருப்பு வெள்ளையில்  வரைந்திருந்த அன்னை தெரசாவின் படத்தை காட்டினேன். 

‘அட…தத்ரூபமாக வரைஞ்சிருக்கீங்களே?’ என்று அவன் மனைவி பாராட்டினாள். என் நண்பனும் அதை பார்த்து விட்டு ‘உனக்கு நல்ல பொழுதுபோக்குகள் இருக்கு,’ என்றார். 

நிர்மலா என் போனை கையிலெடுத்து கொண்டு மகள் இருந்த அறைக்கு சென்றாள். ஒரு நிமிஷத்திற்கெல்லாம் திரும்பி வந்து ‘அனு கூட ‘நன்னாயிருக்கு’ என்று சொன்னாள்,’ என்று போனை என்னிடம் திரும்ப கொடுத்தாள். 

பிறகு ஏதோ சற்று நேரம் பேசி கொண்டிருந்து விட்டு நான் கிளம்பினேன். அனு என்ற அந்த பெண் அப்போதும் வெளியில் வரவில்லை. 

****

இந்த சந்திப்புக்கு பிறகு நாங்கள் மறுபடியும் பார்த்துக் கொள்ளவில்லை. சில ஆண்டுக்குப்பின் வேறு யாரோ ஒருவர் மூலமாக அந்த நண்பர் குடும்பத்தை பற்றிய சேதி வந்தது. நல்ல செய்தி அல்ல. 

அனு கணவனை பிரிந்து தாய் வீட்டோடு வந்து விட்டதாகவும், அவளும் எதோ ஓர் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்வதாகவும் சொன்னார்கள். 

மகன், சிறிது காலம் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்து, பின் தேறி, இங்கு கல்யாணம் செய்து கொண்டு வேலையில் இருந்த மென்பொருள் நிறுவனத்தின் வாயிலாக யு,எஸ் சென்று அங்கு மனைவியுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு அந்த பெண் பிரிந்து சென்று விட்டதாகவும், என் நண்பரும், அவர் மனைவியும் அவனுக்கு மறுபடி பெண் தேடிக்கொண்டு இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். 

எனக்கு வருத்தமாக இருந்ததோடு நான் அவர்கள் வீட்டுக்கு சென்ற  போது ஏற்பட்ட அனுபவம் நினைவுக்கு வந்தது. 

அந்த பெண், என்னுடன் சரி சமமாக அமர்ந்து பேச வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை. ஓர் பெரியவர், அப்பாவுடன் வேலை பார்த்தவர், ஓர் ஓவியர் என்ற அளவில் ஓர் சில நிமிடங்கள் என் முன் வந்து அமர்ந்து பேசி இருக்கலாம். ‘சித்திரம் நன்றாக இருக்கிறது’ எனபதை தாய் மூலம் தான் சொல்லி அனுப்ப வேண்டுமா? ஆதாரமான மரியாதை கூட இல்லாத பெண் என்று எனக்கு அப்போதே தோன்றியது. மகனை கேட்கவே வேண்டாம். இளமையின் வீராப்பும், அகந்தையும் தலைக்கு மேல் இருந்ததை நானே பார்த்தேன், வீட்டுக்கு அப்பாவின் அலுவலக நெடுநாள் நண்பர் என்ற மரியாதைக்காவது உட்கார்ந்து இரண்டு வார்த்தைகள் பேசி விட்டு போகும் கண்ணியம் கூட இல்லாதவனாகத்தான் என் கண்களுக்கு தோன்றினான். 

காரணம், இன்றய சமூகம் மட்டுமல்ல. பெற்ற தாய் தந்தையும் கூட. மனித வாழ்க்கைக்கு ஆதாரமான மரியாதை, அடக்கம், யாரிடம் எப்படி பழக வேண்டும் என்ற குணம், எதையுமே  தெரிய விடாமல் வளர்த்த அந்த பெற்றோர்கள்தான் காரணம். 

சில மாதங்களுக்கு முன் தமிழ் பட்டிமன்றங்களில் பிரபலமாக பேசும் ஒருவர், தான் அமெரிக்கா சென்று ஒரு நண்பர் வீட்டில் தங்கிய அனுபவம் பற்றி வருத்தத்துடன் தெரிவித்தார். நண்பரும் அவர் மனைவி இருவரும் வேலைக்கு சென்ற பின் வீட்டில் இருந்த பள்ளி செல்லும் இளம் மகளிடம் மாலை வேளைகளில் இந்த ‘அங்கிளு’டன் எதாவது பேசிக்கொண்டிரு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், அந்த இளம் பெண் வெளியில் வராததோடு அன்றி, அவர் கிளம்பும் தினம் ‘இவர் போன்ற மனிதர்களை இனி வீட்டுக்கு அழைத்து என்னை பேச சொல்லி துன்புறுத்தாதே… நான் இவர்களை வெறுக்கிறேன்,’ என்று உரக்க கூறிவிட்டு உள்ளே சென்றது. சென்று விட்டது. ‘எங்களுக்கு நாம் ஏன் இவர்கள் வீட்டு, குடும்ப நிலைமை தெரியாமல் இங்கு வந்து தங்கினோம்?’ என்று மிகுந்த வருத்தம் உண்டானது,’என்று வெளிப்படையாக சொன்னார். 

சில மாதங்களுக்கு முன் வலைத்தளத்தில் வெளியான ‘பதின்மவயது’ (Adolescence) என்ற யு.கெயில் வெளியான திரைப்படம் பற்றி மிகவும் பேசப்பட்டது. காரணம் அந்த படத்தில் ஓர் பத்து வயது சிறுவன் தன்னுடன் படிக்கும் ஓர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விடுவான். அதற்கான காரணங்களை போலீஸ் விசாரிக்கும் போது வெளியாகும் தகவல்கள், பள்ளி மற்றும் அவனது நட்பு சூழல்கள் எந்த அளவு அந்த சிறுவனை குற்றம் செய்ய தூண்டி இருக்கிறது என்பதை பார்த்தவர்கள் மனதில் அச்சத்தை தோற்றுவிப்பதாக இருந்தது.  

ஓர் இளம் ஆணையோ, பெண்ணையோ உயர்த்தவோ சீரழிக்கவோ இன்று வெளி உலகத்தில் நிறைய வழிகள் இருக்கின்றன; தாராளமாக பணம், நினைத்ததை எல்லாம் செய்ய வழி கொடுக்கும் சமூகம் மட்டுமல்ல.  ஆனால், வீட்டிலும் அதே போல் பிள்ளைகளுக்கு ‘சுதந்திரம்’ என்ற பெயரில் ஆதாரமான மரியாதை குணங்களைக் கூட கற்று தராத பெற்றோர்களும் தான் காரணம். 

இவர்களால், எந்த உறவுகளையும் மதிக்கவோ, மரியாதை தரவோ முடியாது. தனி மனித சுதந்திரம், உரிமை என்ற பெயரில் மனம் போன போக்கில் இருப்பதை இறுகப் பற்றிக்கொண்டு இருக்கும் இந்த தலைமுறை இப்படித்தான் இருக்கும். 

பண்பு வேறு; புத்திசாலித்தனம் வேறு. 

வேர்கள் ஆழமாக இருந்தால்தான் மரமோ செடியோ ஒழுங்காக வளரும். இவர்கள் வேரற்ற செடிகள். இப்படி தாறு மாறாக விருட்சங்களாக வளர்வதையோ, வீழ்வதையோ தடுக்கவே முடியாது. அதை உணராமல், உற்சாகப்படுத்தி விட்டு, பின்னர் வருந்துவதோ, திருத்த முயல்வதோ, ஆதரவு தருவதோ வயதானவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டி இருப்பது  காலத்தின் கட்டாயம். 

G Swaminathan

Contact: 9840289671

Series Navigationஸ்பெஷல் வார்டுஎன் பெயர் முகுந்தன் C/o சினிமா