பி.கே. சிவகுமார் குடும்ப அறக்கட்டளை – எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருதை 2026 முதல் வழங்க உள்ளது.
விருதுத் தொகை: ரூபாய் ஐம்பதாயிரம்
தமிழ் இலக்கியத்தில் வாழ்நாள் சாதனை செய்த எழுத்தாளர் ஒருவருக்கு – 2026 முதல் ஆண்டுதோறும் – இந்த விருது வழங்கப்படும்.

2026-ஆம் ஆண்டுக்கான எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது பெறும் தமிழ் எழுத்தாளர் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.
ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகம் நடத்தும் இலக்கிய மெரினா விருது நிகழ்ச்சியில், ஓர் அமர்வாக, எழுத்தாளர் பி. ச. குப்புசாமி இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர் கௌரவிக்கப்பட்டு, விருது பெறுவார்.
பி.கே. சிவகுமார் குடும்ப அறக்கட்டளைக்காக எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது நிகழ்ச்சியை வருடந்தோறும் இலக்கிய மெரினா விருது நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை தேநீர் பதிப்பகம் நடத்தித் தந்து உதவ உள்ளது.
விருதின் பெயர் தாங்கும் எழுத்தாளர் பி.ச. குப்புசாமி – சில குறிப்புகள்:
எழுத்தாளர் ஜெயகாந்தனுடன் தனக்கிருந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான அணுக்கமான நட்பை வைத்து – ஜெயகாந்தனின் ஆளுமையின் பல்வேறு சித்திரங்களைச் சிறப்பாகத் தீட்டிக் காட்டிய – ஹிந்து தமிழ் திசையில் வெளியான “ஜெயகாந்தனோடு பல்லாண்டு” என்ற தொடரை எழுதியவர். ஜெயகாந்தனையும் அவர் எழுத்துகளையும் நன்கறிந்த, சரியாகப் புரிந்து கொண்ட நான்கு நண்பர்களுள் ஒருவராக இவரை, “ஜெயகாந்தன் ஒரு பார்வை” தொகுப்பின் ஆசிரியர் கே.எஸ்.சுப்ரமணியன் குறிப்பிடுகிறார்.
வார்த்தை இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து இவர் எழுதிய “ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்” தொடர் நல்லாசிரியர்களுக்கான கையேடு. அதன் ஒரு அத்தியாயம் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்திலும் பின்னர் சேர்க்கப்பட்டது. இவர் எழுதிய “கங்கவரம்” சிறுகதை எழுத்தாளர் விட்டல்ராவ் தொகுத்த 20ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றது. 1943-ல் அப்போதைய வடாற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் பிறந்த இவர், எழுத்தாளர் வையவனுடன் இணைந்து ஆனந்த விகடனின் வடாற்காடு மாவட்டச் சிறப்பிதழை 1960களில் தயாரித்திருக்கிறார். இவர் சிறுகதைகளை நட்சத்திரக் கதைகளாக தினமணி கதிர் வெளியிட்டது. தமிழ் இலக்கியத்தில் குறிப்பாக பக்தி இலக்கியத்தில் தோய்ந்த புலமை கொண்டவர். கம்பன் முதல் பாரதிவரை விரல்நுனியில் வைத்திருந்த புகழ்பெற்ற மேடைப் பேச்சாளர். ஜெயகாந்தன் தயாரித்த குமுதம் இதழில் வெளியான இரண்டு சிறுகதைகளில் ஒன்று இவருடையது. “தெரிந்த முகங்கள்” என்ற தலைப்பில் இவரின் சிறுகதைத் தொகுப்பு வெளியாகியுள்ளது.
பெயர் அறியப்படாத குக்கிராமங்களில் ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர் பணியை விருப்பமுடன் செய்து முடித்தவர். இடதுசாரி ஆசிரியர் இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றி, ஆசிரியர்களுக்காக இருமுறை சிறை சென்றவர். காடுகள், மலைகள், இயற்கை எனத் தேடிச் சென்று வாழ்ந்தவர். சிறந்த மரபுக் கவிஞரும். சந்திரமௌலி, குயிலி உள்ளிட்ட புனைப்பெயர்களிலும் எழுதியிருக்கிறார்.
Thanks and Cheers
Sivakumar PK
- கொண்டாடும் தீ… கொல்லும் புகை…
- மரம் வைத்தவன்…
- அன்பைப் பரிமாறும் தினம்
- ஸ்பெஷல் வார்டு
- வேர்களின்றி வளரும் விருட்சங்கள்
- என் பெயர் முகுந்தன் C/o சினிமா
- எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது
- மழை புராணம் – 19