வளைக்காப்பு

author
0 minutes, 0 seconds Read
This entry is part 36 of 40 in the series 26 மே 2013


டாக்டர் ஜி. ஜான்சன்

வழக்கம்போல் வெளிநோயாளிப் பிரிவு ” பசார் மாலாம் ” போன்று பரபரப்புடனும், பெரும் இரைச்சலுடனும் இயங்கியது .

காலை மணி பனிரெண்டைத் தாண்டியபோதும் காத்திருக்கும் கூட்டம் நீர்த்தேக்கம் போன்றே நிறைந்திருந்தது.

மருத்துவர்களைப் பார்த்த நோயாளிகள் வெளியேறிக் கொண்டிருந்தத போதிலும் புது நோயாளிகள் வந்துகொண்டே இருந்தனர்.

நீர்த் தேக்கத்தில் நீர் வந்துகொண்டும் வெளியேறுவதுமாக இருந்தால் அதன் அளவு சற்றும் குறையாமல் அதே அளவில்தான் இருக்கும் . எனக்கு எப்போதுமே அந்த குறையாத கூட்டம் நீர்த்தேக்கத்தையே நினைவூட்டும்.
அது குளுவாங் அரசு மருத்துவமனை.நான்கு அறைகளில் வெளிநோயாளிகள் பார்க்கப்படும். வரும் நோயாளிகளை சமமாகப் பிரித்து நான்கு அறைகளுக்கும் அனுப்பப்படுவார்கள்.

ஒவ்வொரு மருத்துவரும் அன்றாடம் குறைந்தது நூற்று ஐம்பது நோயாளிகளைப் பார்த்தாக வேண்டும். இதனால் நாங்கள் துரிதமாகவே செயல்படுவோம். இதனால் பல்வேறு விமர்சனத்துக்கும் ஆளாவது இயல்பே.

வேகமாக செயல்படுவ்தைப் பம்பரத்திற்கு ஒப்பிடுவர். பம்பரம் விட்டதும் ஒரு சுற்று சுற்றியபின் ஒரே இடத்தில் சுழலும். அது போன்று இருக்கையில் சுழலும் பம்பரமாக நான் செயல்பட்டேன்.

தேவைப் படும்போதுதான் இருக்கையை விட்டு எழுந்து நோயாளியைப் படுக்க வைத்து பரிசோதனை செய்வது வழக்கம். பெரும்பாலும் இருக்கையில் அமர்ந்தவாறே பரிசோதனையை முடித்து மருந்து எழுதி தந்து விடலாம்.

அப்போது ஒரு தமிழ்ப் பெண் வந்து எதிரில் அமர்ந்தாள் . அவளுக்கு வயது இருபது. கழுத்தில் மஞ்சள் பூசிய தடித்த தாலி புரண்டத்து..முன்பே நல்ல நிறத்தில் இருந்த அவளின் முகம் மஞ்சள் பூசப்பட்டுள்ளதால் ஆரஞ்சு நிறமாக மாறி இருந்தது ..கண்களுக்கு மைதீட்டி நெற்றியில் குங்குமப் போட்டு இட்டிருந்தாள். வயிறு வெளியே தள்ளி அவளை கர்பவதியெனக் காட்டியது. கைகள் நிறைய பல வண்ண கண்ணாடி வளையல்கள் கலகலத்தன. வளைக்காப்பு முடிந்திருப்பதை நான் உணர்ந்துகொண்டேன். அவளின் பெயர் மஞ்சுளா. அதனால்தான் அவ்வாறு மஞ்சளுடன் மங்களகரமாகத் தென்பட்டாளோ?

அவளுடன் கணவன், மாமியார், மாமனார் வந்திருந்தனர். இது முதல் குழந்தை என்பதால் அனைவருமே மிகவும் உற்சாகமாகவே காணப்பட்டனர்.

” மஞ்சுளா. இது எத்தனையாவது மாதம் ? ” அவளின் கையைப் பிடித்து நாடியை எண்ணியபடி கேட்டேன்.

இப்போதெல்லாம் மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்ப்பதில்லை என்பது பெருங்குறை. தமிழ்த் திரைப்படங்களில் ஒரு பெண் மயங்கி வீழ்வாள். உடன் வரும் மருத்துவர் அல்லது நாட்டு வைத்தியர் அவளின் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு , ” பயப்பட ஒன்றும் இல்லை. எல்லாம் நல்ல செய்திதான் . இவள் தாயாகப் போகிறாள் .” என்று கூறி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுவார்.அவர் எப்படி நாடியைப் பார்த்தே கர்ப்பம் என்று கூறுகின்றார் என்று நான்கூட வியந்ததுண்டு..

மருத்துவம் நவீனமாகி நிறைய கருவிகள் வந்தபின், எல்லாவற்றையும் கருவிகளே பார்த்துக் கொள்வதால் நாடி பிடித்துப் பார்ப்பது பழங்கதையானது.

ஆனால் நாடி பிடித்துப் பார்ப்பது நல்லது. அதன் மூலம் பல நோய்களின் தன்மைகள் தெரிந்து கொள்ளலாம் . அவற்றில் இருதய நோய்கள் முக்கியமானவை. கருவிகளும் நாடித்துடிப்பை பதிவு செய்யும். ஆனால் அதில் துடிப்பின் தன்மை தெரியாது. நாடியைக் கை பிடித்து பார்த்தால் அதன் எண்ணிக்கையுடன், அதன் தன்மையும் புலப்படும்.

” ஏழு மாதம் டாக்டர் . ” அவளின் குரலில் ஒருவித சோர்வும் சோகமும் தென்பட்டது.

” சிவப்பு புத்தகம் உள்ளதா ? ” முதல் மாதத்திலிருந்து அரசு கிளினிக்கில் பொதுவான பரிசோதனைகள் செய்து இந்த புத்தகம் தரப்படும்.

” இல்லைங்க டாக்டர். இப்போதான் பார்க்க வந்துள்ளோம். ” இது கேட்டு நான் வியந்தேன் இக் காலத்திலும் இப்படியா?

” .கர்ப்பமானதும் டாக்டரைப் பார்க்கலையா? ”

” இல்லைங்க டாக்டர். இப்போ எனக்கு வயிறு வலிக்குது. அதனால் என்னவென்று பார்க்க வந்தேன். ”

இரத்த அழுத்தம் பார்த்தபடி, ” எத்தனை நாளாய் இந்த வலி ? ” என்று கேட்டேன்.

” ஒரு வாரமா …அதுக்கு முன்னாடியும் லேசான இருந்தது..இப்போ அதிகமாக வலிக்குது..”

” வாந்தி உள்ளதா ? ”

” இல்ல .”

” வயிற்றுப் போக்கு? ”

” இல்ல .”

“சரி…அங்கே படு. பரிசோதித்து பார்க்கிறேன். ” நர்ஸ் மரியம் அவளை அழைத்துச் சென்று படுக்கவைத்தாள் .

ஏழு மாத வயிறுதான் அது. அழுத்திப் பார்த்தபோது மிகவும் கடினமாகத் தோன்றியது. ஸ்டெத்தஸ்கோப் வைத்து கேட்ட போது குழந்தையின் இருதத் துடிப்பு கேட்கவில்லை!

உள்ளே இருப்பது குழந்தைதானா என்ற சந்தேகம் உண்டானது.!

” மஞ்சுளாவை நான் வார்டில் அட்மிட் செய்தாக வேண்டும். ” அவளின் கணவனிடம் கூறினேன்.

” ஏதும் சீரியசா டாக்டர்? எதற்கு அட்மிட் பண்ணப் போறீங்க? ” பதற்றமுற்றவனாகக் கேட்டான்.

:” சில பரிசோதனைகள் தேவைப் படும். முக்கியமாக ஸ்கேன் செய்யவேண்டும். ஸ்பெஷ லிஸ்ட ஒப்பினியன் வேண்டும். ” நான் காரணத்தைச் சொன்னேன்.

” சரிங்க டாக்டர். இப்போதான் வளைக்காப்பு செய்து முடித்தோம். வந்த விருந்தாடிகள் இன்னும் ஊர் திரும்பல .அதான் கேட்டேன் . ” அவன் சம்மதம் தெரிவித்தான்.

பிரசவத் துறையின் நிபுணர் டாக்டர் குமாருக்கு போன் செய்து இது பற்றி தெரிவித்தேன் அவர் வெளிநோயாளிகள் பார்த்தபின் வார்டுக்குச் செல்வதாகக் கூறினார். அப்போது என்னை அங்கு வரச் சொன்னார்

மதியம் இரண்டு மணிக்கு டாக்டர் குமார் வந்து மஞ்சுளாவை பரிசோதனை செய்து விட்டு ஸ்கேன் செய்தார் அது குழந்தை இல்லை!

அடிவயிற்றில் அவளுக்கு பெரிய சினைப்பைக் கட்டி ( ovarian tumour ) இருப்பது தெரிய வந்தது அதை உடனடியாக அகற்றியாக வேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை அவர்களிடம் எப்படி பக்குவமாகச் சொல்வது என்று சற்று தயங்கினேன். முதல் குழந்தை என்று அவர்கள் ஆசைஆசையாக வளைக்காப்பு செய்து உற்றார், உறவினர்,நண்பர்களுடன் கொண்டாடியுள்ளனர். அவர்களுக்கு இது எவ்வளவு ஏமாற்றமாகும் என்பதை எண்ணிப் பார்த்தேன்.

அப்பாவியாகப் படுத்திருந்த மஞ்சுளாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.அவள் தாய்மை அடைந்து விட்டதாக என்னென்ன கனவுகள் கண்டிருப்பாள். இந்தத் துயரச் செய்தியை அவள் எப்படித் தாங்குவாள்? அவளின் மாமியார் இதை எப்படி ஏற்பாள் ? அவள் மீது அன்பு செலுத்துவாளா அல்லது வெறுத்து ஒத்துக்குவாளா ?

ஒருவாறு சமாளித்துக் கொண்டு பக்குவமாகத்தான் அந்த துயரச் செய்தியை அவர்களிடம் கூறினேன். அவர்கள் அனைவரும் கண்கலங்கி கதறி அழுதனர்!

மருத்துவப் பணியில் இதுபோன்ற துயரங்களை சந்திக்க நேர்கின்றதே என்று மனம் வெதும்பிய நிலையில் குனிந்த தலை நிமிராமல் நான் வெளியேறினேன்!

Series Navigationஅக்னிப்பிரவேசம்-35 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்நீங்காத நினைவுகள் -4
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *