விலை 

This entry is part 3 of 6 in the series 9 ஜூலை 2023

ஸிந்துஜா 

‘பதினோரு மணி ஆகி விட்டதே, இன்னும் இந்தப் பெண் வந்து சேரவில்லையே’ என்று ஜானகிராமன் பாதிக் கவலையுடனும் பாதிக் கோபத்துடனும் பால்கனி அருகே வந்த போது கீழே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து வெளியே வந்தாள் சாயா. அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவளருகே இருவர் வந்து நின்றனர். 

சாயா தங்கள் வீட்டை அவர்களிடம் காண்பிப்பதும் அவர்கள் அவளிடம் ஏதோ கூறி விட்டுச் சென்றதும் அவர் கவனத்தில் விழுந்தது. யார் அவர்கள்? எதற்காக இந்த நேரத்தில் வந்து சாயாவைப் பார்த்து விட்டுப் போகிறார்கள்?  தெரு விளக்கு வெளிச்சத்தில் அவர்களின் முகங்கள்   தெளிவாகத் தெரியவில்லை. ஒருவன் கட்டைக் குட்டையாகவும் இன்னொருவன் அதற்கு நேர் மாறாக உயரமாகவும் இருந்தார்கள். 

கீழே காரை ஷெட்டில் விட்டு விட்டு லிப்டில் ஏறி  சாயா வந்ததும் அவர் கதவைத் திறந்தார். “ஹாய் டாடி!” என்றபடி உள்ளே வந்தவள் கைப்பையை சோஃபா மீது தூக்கியெறிந்தாள்.   

“காட், வாட் எ ஹாரிபிள் டே?” என்றபடி இன்னொரு சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். 

“சாயா, யார் அவங்க? என்ன ஆச்சு?” என்று ஜானகிராமன் கேட்டார்.

“ஒண்ணுமில்லே டாடி. வரப்போ ஒரு சின்ன ஆக்சிடென்ட்”  என்றாள் அவள். “லெவென்த் கிராஸ் டௌன்லே கனரா பாங்க்  

ஜங்க்ஷனைக் கிராஸ் பண்ணறப்போ  ஒரு மொபெட்காரன் தப்பா வந்து கார்லே விழுந்துட்டான்.”

“ஐயையோ, யாருக்கானும் அடி கிடி…” 

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. இப்போ நீங்க பால்கனிலேர்ந்து 

பாத்தேளே ரெண்டு பேர, அவாதான் மொபெட்லே வந்தவா.    யாருக்கும் அடிபடலே. நம்ம காருக்கும் ஒன்னும் டேமேஜ் அவ்வளவா இல்லே.”   

“அப்பாடா, நல்ல வேளை, குருவாயூரப்பன் காப்பாத்தினான்” என்றார் ஜானகிராமன். “காலங் கிடக்கிற கிடப்பிலே ராத்திரி இத்தனை நாழிக்குத் தனியா ஒரு பொண் ஆக்சிடென்ட் அது இதுன்னு மாட்டிண்டா? நல்ல வேளையா மனுஷா யாருக்கும் ஒண்ணும் 

ஆகலையே” என்று தலையை உலுக்கிக் கொண்டார்.”

“இல்லே டாடி, அந்த மொபெட்டுக்குக் கொஞ்சம் டேமேஜ் ஆயிடுத்து. திடீர்னு பாத்தாப் பத்துப் பதினஞ்சு பேர் கூடிட்டா. தலைக்குத் தலை ஒவ்வொருத்தரும் சத்தம் போட்டுக் கலாட்டா பண்ண ஆரம்பிச்சா. போலீசுக்குப் போகலாம்னு ஒருத்தன் கத்தறான். மொபெட்  டேமேஜ் ஆயிடுத்து பணம் குடுன்னு இன்னொருத்தன் கலாட்டா பண்றான். இப்போ இங்க வந்தவங்கள்லே நெட்டையா இருந்தானே 

அவன்தான் வண்டியோட ஓனர். அவன் அந்த இடத்தில் கடை வச்சிருக்கான். அவன்தான் எல்லாரையும் பேசாம இருங்கன்னு 

அடக்கினான். அப்புறம் என்கிட்டே வீடு எங்கே இருக்குன்னு 

கேட்டான். சொன்னேன். சரி உங்களை வீட்டிலே கொண்டு போய் விட்டுடறோம். லேடீஸ்லாம் இந்த மாதிரி நேரத்திலே நடு ரோடுலே நிக்கறது சரியில்லே.நீங்க கிளம்புங்க. காலேலே மத்ததையெல்லாம் பேசிக்கலாம்னான். வீட்டிலே பெரியவங்க இருப்பாங்க. அவங்ககிட்டே பேசறதுதான் நல்லதுன்னான்” என்றாள் சாயா.

“போகட்டும் போ. யாரோ நல்லவனா இருக்கக் கொண்டு வம்பு பண்ணாம துணைக்கு வேறே வந்து வீட்டிலே கொண்டு வந்து விட்டுட்டுப் போறானே.அதைச் சொல்லு. காலம்பற வருவானா?”

“ஆமா. வந்து ஆயிரம் கொடு ரெண்டாயிரம் கொடுன்னு கேக்கப்  

போறான். ஒழியறதுன்னு ஒரு ஐந்நூறோ ஆயிரமோ அழ வேண்டியதுதான்” என்று எழுந்து தன்னறைக்குச் சென்றாள்.  

அவர் படுக்கையில் சாய்ந்தார். ஆனால் தூக்கம் வரவில்லை.

“‘இந்தப் பொண்ணு பயம் என்கிற ஊர்லேயே பிறக்கலே’ என்று அவர் மனைவி அடிக்கடி அலுத்துக் கொள்வாள். சிறு வயதிலிருந்தே சுதந்திரமாக வளர்ந்து விட்டாள்  அவர் பயப்பட்ட விஷயங்கள் எதுவும் அவள் பார்வையில் அஞ்சத்  தகுந்ததாகத் தோன்றியதில்லை. இது இந்தத் தலைமுறையின் பார்வை, பழக்கம் என்று அவர் மூளை சொன்னாலும் மனது கேட்கவில்லை. கார் ஓட்டும் விஷயம் ஒன்று போதும், அவளைச் சுட்டிக் காட்ட.  சிட்டிக்குள் ஐம்பது அறுபது கிலோமீட்டர் வேகத்தில் அவர் ஓட்டினாலும் ஏம்ப்பா இப்படிக்  கட்டை வண்டியை ஓட்டற  மாதிரி இவ்வளவு ஸ்லோவா போறே என்று அலுத்துக் கொள்வாள். இன்று நடந்த அசம்பா

விதத்தில் கூட காரை வேகமாக ஒட்டி வந்திருப்பாளோ என்று ஒரு சந்தேகம் அவரை அரித்துப் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அவரை அப்படிக் கேட்க அவள் விடுவாளா? இரவு நேரம். வாகனப் போக்குவரத்து அவ்வளவாக  இல்லை என்னும் தைரியத்தில் வேகமாக ஒட்டிக் கொண்டு வந்திருப்பாள்.

ஆனால் இவ்வளவு கெட்ட நேரத்திலும் கொஞ்சம் நல்ல நேரம் இருந்திருக்கிறது. இல்லாவிட்டால் அவர்கள் இருவரும் விபத்து போலீஸ் கேஸ் என்று அவரை அலைக்கழிக்க முனைந்திருந்தால்?

மறுநாள் காலை எட்டரை மணி இருக்கும். அவர் எகனாமிக் டைம்ஸ் படித்துக் கொண்டிருந்தார்.  ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிப் பத்தி பத்தியாக வரைந்து தள்ளுகிறார்கள் என்று அவர் நினைத்தார். இதைப் பற்றி அவரது மருமான் சொன்ன ஜோக் ஒன்று அவர் ஞாபகத்துக்கு வந்தது. கோர்ட்டில் நின்ற குற்றவாளியிடம் நீதிபதி “நான் கேக்கற ஒரே ஒரு கேள்விக்கு நீ சரியா பதில் கொடுத்தேன்னா உன்னை விடுதலை செஞ்சிடறேன்” என்றாராம். குற்றவாளியும் சந்தோஷத்தோடு அதற்கு ஒப்புக் கொண்டானாம். நீதிபதி அவனிடம் “இந்த ஸ்பெக்ட்ரம்  ஊழல்லே ஏற்பட்ட நஷ்டத்தில் எவ்வளவு சைபர் இருக்கு?” என்று கேட்டாராம். அவன் தலையைத் தொங்கப் போட்டபடி “சாமி, எனக்குப் பணத்தை  எடுக்கத்தான் தெரியுமே ஒழிய எண்ணத் தெரியாது” என்றானாம். பொழுது விடிந்தால் கொலை கொள்ளை கற்பழிப்பு ஊழல் என்றுதான் செய்திகள் வருகின்றன என்று விசனத்துடன் நினைத்துப் பேப்பரைக் கீழே வைத்தார்.

அப்போது சாயாவின் மொபைல் ஒலித்தது. எடுத்துப்  பேசிய அவள் அவரிடம் “அப்பா, அந்த ரெண்டு பேரும் வந்திருக்கா. கீழே நிக்கறாளாம்” என்றாள்  அவர் கீழே போவதற்காக எழுந்தார். தானும் உடன் வருவதாகச் சாயா கூறினாள். அவர் வேண்டாம் என்று சொல்லி வீட்டுக் கீழே சென்றார்.அவர்கள் வாசல் கேட் அருகே நின்றிருந்தார்கள். குட்டையாய் இருந்தவன் தான் பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டைக் கீழே போட்டு விட்டுக் காலால் அதை நசுக்கினான். உயரமாக இருந்தவன்  “சார் என் பேர் கேசவ், இவர் நம்ம பிரெண்டு, கெம்பராஜுன்னு பேரு” என்று அறிமுகப்படுத்திக் கொண்டான்.

“சரி, மேலே போகலாமா? வாங்க” என்றார் ஜானகிராமன்.

“வேணாம் சார். இங்கியே நின்னு பேசலாம்” என்றான் கேசவ். “நேத்திக்கு ஆக்சிடென்டு ஆன விஷயம் உங்களுக்குத் தெரியுமில்லே?”

“ஆமா. என் பொண்ணு சொன்னா. நேத்திக்கு அந்த நேரத்திலே நீங்க செஞ்ச உதவியை நான் மறக்க மாட்டேன். ரொம்ப தேங்க்ஸ்” என்றார் ஜானகிராமன்.

“இதிலே என்ன சார் இருக்கு? நேரங் கெட்ட நேரத்துலே ஒரு பொண்ணு தனியா மாட்டிக்கிட்டா உதவி செய்யறதுதானே சார் மனுஷத்தனம்?  இதுக்கு நடுவிலே பக்கத்துக் கடைப்பசங்க ஓடி வந்து கலாட்டா பண்ண ஆரமிச்சாங்க. எல்லோரையும் அடக்கி அனுப்பிச்சி வச்சிட்டு மேடத்தை இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போனோம்” என்றான் கேசவ்.

ஜானகிராமன் அவனை நன்றியுடன் பார்த்தார். “சரி, நான் இப்போ என்ன செய்யணும் சொல்லுங்க” என்றார்.

“வண்டி கம்ப்ளீட்டா நசுங்கிக் கிடக்கு.”

“இல்லியே. லேசா டாமேஜ் ஆயிருக்குன்னுதானே என் பொண்ணு சொன்னா”

“உங்களுக்கு நேத்தி ராத்திரி என்ன ஆச்சு, எப்பிடி ஆக்சிடென்டு 

ஆச்சுன்னு பூராத்தையும் உங்க பொண்ணு சொல்லலியா? 

அவன் மேலே சொல்லட்டும் என்று மௌனமாக ஜானகிராமன் அவன் முகத்தைப் பார்த்தார்.

“சார், உங்களுக்கு வையாலிக்காவல் போலீஸ் ஸ்டேஷன் தெரியுமில்லே, அதுக்கு நேர் எதித்தாப்பிலே மல்லேஸ்வரம் லெவன்த் கிராஸ் ரோடு போகுதில்லே? அந்த ரோடு அப்பிலேந்து டெவுனுக்குப் போயி மறுபடியும் டெம்பிள் ரோடு கிட்டே மேலே போக ஆரம்பிக்கும். உங்க பொண்ணு படு ஸ்பீடா எழுபது ஐம்பது கிலோமீட்டர் வேகத்திலே ஒட்டிக்கிட்டு வந்திருக்காங்க. அவ்வளவு சின்ன ரோடுலே அப்பிடியொரு வேகத்திலே வரலாமா? யாரவது நடந்து போறவனோ,சைக்கிளை ஓட்டிகிட்டுப்  

போறவனோ ஏதாவது குறுக்கு சந்திலேந்து வெளியே வந்து கிராஸ் பண்ணியிருந்தா, ஆள் அங்கியே அவுட்டு. என்னோட போறாத காலம் உங்க பொண்ணோட நல்ல காலமும் கூட. நா என் கடையை மூடிட்டு வெளியே வந்து மொபெட்டை எடுத்து ரோடைக் கிராஸ் பண்ணப் போனேன். வந்து இடிச்சிச்சு பாருங்க உங்க காரு. நான் ஒரு பக்கம் போய் விழுந்தேன். மொபெட் நாலஞ்சு அடி தள்ளி ஒரு பக்கம் தூக்கி எறிஞ்சு கீழே கெடந்துச்சு.  கார் பிரேக் பிடிச்ச பெரிய சத்தத்தைக் கேட்டு ஆளுங்க ஓடி வந்தாங்க. இப்ப உங்களால புரிஞ்சுக்க முடியுதா என் வண்டிக்கு என்ன ஆகியிருக்கும்னு.”    

கேசவ் பேச்சை நிறுத்தி விட்டு அணிந்திருந்த முழுக்கைச் சட்டையின் வலது கைப்புறத்தை மடித்துக் காட்டினான். இன்னும் ரத்தம் உலர்ந்திராத சிராய்ப்புக் காயங்கள் பல இடங்களில் தெரிந்தன. குனிந்து வலைப்பக்கக் கால்சராயை உயர்த்திக் காட்டினான். தொடையிலும் காலிலும் காயங்கள்.

“சார், நீங்க கடைக்கு வந்து மொபெடைப் பாருங்க. அப்பத்தான் எவ்வளவு டேமேஜ் ஆகியிருக்குனு தெரியும்.”

அவர் “அதெல்லாம் வேணாம்ப்பா. நா வந்து பாத்து என்ன ஆகப் போகுது? ரிப்பேர் செலவு ஐநூறோ ஆயிரமோ நா கொடுத்திடறேன்” என்றார்.

கேசவ் மெல்லச் சிரித்தான். அவரை அலட்சியமாகப் பார்த்தான்.

“நா இவ்வளவு சொல்லியும் உங்களுக்குத் புரியலையா, இல்லே புரிஞ்சிக்க வேண்டாம்னு பாக்கறீங்களான்னு எனக்குத் தெரியலே” என்றான்.

“இல்லேப்பா. அவ்வளவுதான் ஆகும்னு என் பொண்ணு சொன்னா.”

“சரி. அப்ப நீங்களே சரி பண்ணிக் கொடுத்திருங்க” என்றான் கெம்பராஜு.

அவர் அவனை உற்றுப் பார்த்தார். அவனை அவருக்கு ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை.

கேசவ் “இந்த வண்டி எங்கப்பா எனக்குக் கொடுத்திட்டுப் போனது. போன வாரம்தான் இருபத்தி அஞ்சாயிரம் கொடுத்துப் புது வண்டி கணக்கா ஆக்கி வச்சேன். நேத்தி உங்க பொண்ணு எல்லாத்தையும் ஒரு நிமிஷத்திலே நாசமாக்கிருச்சு” என்றான்.

ஜானகிராமன் திடுக்கிட்டார். இவன் பெரிய பணத்துக்கு அடி போடுகின்றானா?

“இதோ பார்ப்ப. ஏதோ சின்ன ஆக்சிடென்ட் ஆயிருச்சு.  திடீர்னு நீ பாட்டுக்கு இருபத்தி அஞ்சாயிரம் ஆச்சுன்னு குண்டைப் போடறே. அல்சூர்லே செகண்ட் ஹாண்ட் மொபெட்டை அஞ்சாயிரத்துக்குப் போட்டுக் கூவிக் கூவி விக்கறான். நீ கேக்கறதிலே ஒரு நியாயம் இருக்க வேணாமா, சொல்லு” என்றார். அவன் முன்னால் தான் இறைஞ்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டதாக நினைத்தார்.

இதற்கு அவர் அடி மனதில் சாயாவின் மீது இருந்த சந்தேகம் காரணமாக இருக்கலாம். அது போகட்டும். இப்போது இந்த சிக்கலிலிருந்து விடுபட்டு வெளியே வர வேண்டும்.

சார், திரும்பத் திரும்ப நான் உங்க கிட்டே பேச விரும்பல. இங்க வாரத்துக்கு முன்னாலே காரேஜ்காரனைக் கூட்டி கிட்டு வந்து வண்டியைக் காமிச்சேன். அவனுக்கு கண்ணுலே தண்ணி வந்திடுச்சு. இப்ப அவன் முழுக்க சரி பண்ண பதிமூணாயிரம் கேக்கறான். இது ஜாஸ்தின்னு உங்களுக்குத் தோணிச்சுன்னா, நீங்களே உங்களுக்குத் தெரிஞ்ச காரேஜில் கொடுத்து சரி பண்ணிக்க கொடுங்க” என்றான்.

அவருக்கு எரிச்சல் உண்டாயிற்று. இவன் என்னை ஏமாளி என்று நினைக்கிறானா?

“நானும் சும்மா பேசிக்கிட்டே இருக்க விரும்பலே. ஏதாவது நியாயமா ஒரு வழி சொன்னா நானும் ஏத்துக்கிறேன்” என்று சற்றுக் கோபத்துடன் சொன்னார்.

“வண்டிய வந்து பாருங்கன்னு சொன்னா அதுவும் மாட்டேங்கிறீங்க” என்று” அலுப்பான குரலில் சொன்னான் கேசவ்.

ஜானகிராமன் ஒரு நிமிடம் மௌனம் சாதித்தார். அவன் உடலில் அவர் பார்த்த காயங்கள் அவரை உறுத்தின. அவன் போலீசுக்குப் போயிருந்தால்? அல்லது ஒரு நர்சிங் ஹோமில் போய்ப் படுத்துக் கொண்டு செலவை இழுத்து விட்டு அவரைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளி விட்டால்? நினைத்துப் பார்க்கவே அவருக்குப் பயமாக இருந்தது.

அப்போது சாயா மாடியிலிருந்து இறங்கி வந்தாள்.

“என்னப்பா ஆச்சு? என்று கேட்டபடி கேசவைப் பார்த்து ஒரு அரைப் புன்னகை சிந்தினாள். 

“டேமேஜ் ஆன மொபெட்டுக்கு பதிமூணாயிரம்  கேக்கறார்” என்றான் ஜானகிராமன்.

“வாட்? பதிமூணாயிரமா? என்ன புது மொபெட் வாங்கித் தரணும்னு கேக்கறீங்களா?” என்று கேசவிடம் கேட்டாள்.

“மேடம். இவ்வளவு நேரமா சார் கிட்டே சொல்லியாச்சு.  நேத்திக்கு ராத்திரியே போலீஸ் கேஸ் ஆயிருக்கணும். லேடீசா இருக்கீங்

களேன்னு பரிதாபப்பட்டது தப்பாயிருச்சு” என்றான் கேசவ்.  

“என்ன எதுக்கெடுத்தாலும் போலீஸ் போலீஸ்னு பயமுறுத்திக்கிட்டே இருக்கீங்க. நான் என்ன லைசன்ஸ் இல்லாம ஒட்டினேனா? இல்லே ராங் சைடில் வந்தேனா?” என்று சாயா கோபத்துடன் கேட்டாள்.

“ஓ ரொம்ப நல்லா இருக்கு அம்மா பேசுறது” என்று கெம்பராஜு குரலை உயர்த்திப் பேசினான். “நேத்தி ராத்திரி நீங்க இந்தப்  

பாயிண்ட்டெல்லாம்  எடுத்து விட்டிருந்தா நல்லா இருந்திருக்கும். உங்களைப் போக விடக் கூடாதுன்னு எங்க பசங்க எல்லாம் சத்தம் போட்டப்ப அதைக் கேக்காம அவங்களை அடக்கி வச்சோம் பாருங்க, அதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும். ஏய் கேசவா வா போகலாம். எப்படி இவங்ககிட்டேர்ந்து பணத்தை வாங்கறதுன்னு நமக்குத் தெரியும்.”    

சாயா எதோ பேச வாயெடுத்த போது அவர் அவளைப் பேசாமல் இருக்கும்படி சைகை செய்தார். பிறகு கேசவைப் பார்த்து “முடிவா என்னதாம்ப்பா சொல்றே?”  என்று கேட்டார். சாயா கோபத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

“சார் நீங்க வந்து பாருங்க. அப்போதான் தெரியும்” என்றான் கேசவ். அவர்களுடன் அவர் கிளம்பிச் சென்றார்

                                                                  &  &  &

கேசவின் கடையை அடைந்த போது பக்கத்துக் கடைகளிலிருந்து

ஏழெட்டு பேர் வந்து  நின்றர்கள்.  அவர்கள் பார்வையில் மிதந்த 

அலட்சியத்தை அவரால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. கேசவ் கடையை ஒட்டியிருந்த சந்தில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியைக் காண அவரை அழைத்துச் சென்றான். மற்றவர்களும் அவர்களுடன் வந்தார்கள். விபத்துக்குள்ளான வண்டி அங்கே சுவரில் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் நசுங்கல்களும் கீறல்களும் சேத விவரத்தை உணர்த்தின.

“நேத்தி காலேலே புத்தம் புது வண்டியா கொண்டு வந்து நிறுத்தினாரு. இப்ப காயலாங்கடைல கெடக்கற நசுங்கலா இருக்கு” என்றான் ஒருவன். அங்கு நின்றிருந்த தாடிக்காரன் ஒருவன் “ஐயோ, நேத்திக்கு கார் வந்த வேகத்துக்கு கேசவு அவனோட வண்டியிலே இருந்திருந்தா இந்நேரம் பரலோகம் போயிருப்பான்” என்றான். கூட்டத்தில் பலர் பேச ஆரம்பித்தார்கள்.

கேசவ் அவர்களிடம் “நா இதைப் பாத்துக்கிறேன். கூட கெம்பு இருக்கான். நீங்க உங்க இடத்துக்குப் போங்க” என்றான். அவர்கள் கலைந்து சென்றார்கள்.  

“சார், நீங்களே பாருங்க. புதுசா அடிச்ச பெயிண்டு காயறத்துக்குள்ளே எல்லாம் நாஸ்தியாயிருச்சு. பிரேக்கு, இஞ்சினு எல்லாம் டேமேஜா

யிருச்சுன்னு மெக்கானிக் சொன்னான். நீங்களே பாத்துக்குங்க” என்றான் கேசவ்.

“அதெல்லாம் சரிதாம்ப்பா. ஆனா பதிமூணாயிரம் எல்லாம் என்னாலே கொடுக்க முடியாது.”

“சரி, அப்ப எவ்வளவுதான் தருவேன்னு சொல்றீங்க?”

“மொதல்ல ரெண்டாயிரத்துக்கு மேலே கொடுக்க முடியாதுன்னு நினைச்சேன். அப்புறம் என் பொண்ணோட ட்ரைவிங்காலையும் கொஞ்சம் தப்பு நடந்திருக்கும். அதைஎல்லாத்தையும் விட நேத்தி ராத்திரி நீங்க நடந்த விதத்துக்கு நான் என்னோட நன்றியைக் காமிச்சாகனும். அதனாலே நாலாயிரம் ரூபா தரேன். என் பொண்ணை விட்டா அவ இதுக்கு சம்மதிக்க மாட்டா” என்றார் ஜானகிராமன்.

கேசவ் அவர் சொன்னதை ஒப்புக் கொள்ள மறுப்பது போலத்

தலையை அசைத்தான்.

சில வினாடிகள் மௌனத்தில் கழிந்தன

இப்போது கெம்பராஜு அவரைப் பார்த்து “சார், அவங்க அப்பா வச்சிருந்த வண்டின்னு அவன் அது மேலே உசிரையே வச்சு பணத்தைக் கணக்குப் பாக்காம செலவழிச்சுப் புதுசா ஆக்கி வச்சான். அது உங்க கண்ணுக்கு ஏதோ சாதாரண பழைய வண்டியா  

இருக்கலாம். ஆனா அவனுக்கு அது அவனோட அப்பாவோட நினைவில இருக்கற சொத்து. அது மேலே உயிரையே வச்சிருக்கான். அந்த வண்டியைப் பழைய மாதிரி ஆக்காம அவனால தூங்க முடியாது. உங்க பொண்ணு தப்புக்காக அவன் எதுக்கு அவனோட கைக்காசை செலவழிக்கனும் சார். அது என்ன நாயம்? நான் ரெண்டு பேருக்கும் பொதுவா சொல்லுறேன். பத்தாயிரம் ரூபா கொடுத்திடுங்க. சரிதானே கேசவ்?”என்று கேட்டான். 

ஜானகிராமன் எதுவும் சொல்வதற்கு முன்னால் கேசவ் இதைத் தன்னால் ஒத்துக் கொள்ள முடியாதென்றான். ஜானகிராமனும் தனக்கு ஒப்புதல் இல்லை என்றார். .

யாரும் எதுவும் பேசாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.

திடீரென்று கேசவ் கெம்பராஜுவின் பக்கம் திரும்பி “அப்படீன்னா 

அந்தப் பேப்பரை எடுத்து சாருக்கு காமி” என்றான்.

கெம்பராஜு அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சாம்பல் நிறப் பேப்பரை எடுத்து அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு அவரிடம் காட்டினான். மல்லேஸ்வரம்  போலீஸ் ஸ்டேஷன் என்ற நீல  நிறசீல் கண்ணில் பட்டது. முந்தின இரவு போலீஸ் ஸ்டேஷனில் பதிவான புகார் பற்றியது. விபத்து நடந்த விவரம், காரை ஒட்டி வந்தது ஒரு பெண். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் விரைந்து விட்டதால் நம்பர் தெரியவில்லை, விபத்துக்கு ஆளான வண்டி, கேசவுக்கு அடிபட்ட விவரங்கள் ஆகியவை இருந்தன.

“இப்ப நீங்களே முடிவு செய்யுங்க. ஒரு அரை அவர் விட்டுப் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி கார் நம்பர் கிடைச்சிருச்சின்னு தகவல் கொடுத்திட்டு வரேன். இப்பிடி செய்ய எனக்கும் மன இல்லே. ஒரு பக்கம், பாவம் பொம்பளைப் பில்ளைன்னு இருக்கு. ஆனா அதுக்காக நான் என் கையைச் சுட்டுக்க முடியாதே” என்றான் கேசவ்.

ஜானகிராமன் அந்தச் சூழ்நிலையின் அபத்தத்தை நினைத்து வியந்து ஒரு நிமிடம் நின்றார். ஒரே சமயத்தில் இவன் எப்படி இவ்வளவு   நல்லவனாகவும் போக்கிரியாகவும் இருக்கிறான்?

அப்போது கேசவுக்குப் போன் வந்தது. அதை எடுத்துக் கொண்டு சற்று   தூரம் தள்ளிச் சென்றான்.

கெம்பராஜு  “சார், இளநி இல்லாட்டி கூல் டிரிங்ஸ் எதாவது சாப்பிடுறீங்களா?” என்று கேட்டான். அவர் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

கெம்பராஜு திடீரென்று அவரைப் பார்த்து “நீங்க தப்பா நினைக்க

லேன்னா நான் ஒரு கேள்வி கேக்கலாமா?” என்றவன் அவர் பதில் தரும் முன்பாகவே “சார், மேடத்துக்கு டிரிங்ஸ் பழக்கம் உண்டா சார்?” என்று கேட்டான்.

ஜானகிராமனுக்குச் சூட்டைக் காய்ச்சி இழுத்தாற் போலிருந்தது.

“எதுக்குன்னா, நேத்திக்கு அவங்க வந்த ஸ்பீடை நீங்க பாத்திருக்கணும். ஏதோ நெல தடுமாறி கண்ட்ரோல் இல்லாம வந்தவங்க மாதிரி இருந்தாங்க.” 

ஜானகிராமனுக்கு அவனை அங்கேயே காலால் மிதித்துக் கொல்ல 

வேண்டும் போல ஆவேசம் ஏற்பட்டது. தன்னை மிகவும் பலவந்தப்படுத்தி  அடக்கிக் கொண்டார். இது இவனைப் போன்ற அயோக்கியர்கள் நிரம்பிய இடம். அடி தடி என்று ஏற்பட்டால் மேலும் பல சாக்கடை  வாய்கள் சூழ்ந்து கொண்டு இரைச்சலிடும். அந்தக் குமட்டல்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கில்லை என்று அவர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.

கேசவ்  நாலாயிரத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டான் என்று அவருக்குத் தெளிவாக இப்போது தெரிந்து விட்டது. அவன் கேட்ட பணத்திலிருந்து மூவாயிரம் குறைத்து விட்டான். சமாதானமாக அவரும் முன்பு சொன்னதை விட   மூவாயிரம் ரூபாய் அதிகம் தருவதாக ஒப்புக் கொள்வது நல்லது என்று நினைத்தார். இல்லை போலீஸ் கேஸ் என்று போனால் கேசவ் ஏதாவது ஒரு பக்கி ஆஸ்பத்திரியிலிருந்து ஐயாயிரம் ஆறாயிரம் செலவு என்று பில் கொண்டு வருவான். வீட்டையே நர்சிங் ஹோம் என்று அழைத்து நடத்தும் பல கண்ராவி டாக்டர்கள் ஊரில் பெருகி விட்டார்கள். போலீஸ்காரன்  வந்து சாயாவைக் கூப்பிடுவான். அக்கம் பக்கத்து மனிதர்களின் தலைகள் எட்டிப் பார்த்து வம்பு பேசும். வக்கீலுக்கு எவ்வளவு அழ வேண்டியிருக்குமோ? இதையெல்லாம் விட இந்தக் கெம்பராஜு சாயாவைக் கூண்டில் நிறுத்தி மானம் போகும் கேள்விகளைக் கேட்பதைத் தடுத்து நிறுத்த முடியாது. மானத்தின் விலை என்று எவ்வளவு பணத்தை வைத்து அளப்பது?

அவர் கேசவின் வருகைக்காகக் காத்து நின்றார்.

Series Navigationமுதியோர் காப்பக நுழைவு அனுபவம் – 3ஐஸ்லாந்தின் நிலவதிர்வால் எரிமலை வெடிக்குமா?
author

ஸிந்துஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *