விஸ்வரூபம் – கலைஞன் எதைச் சொல்வது எதை விடுவது ?

This entry is part 39 of 40 in the series 26 மே 2013

kamalமீண்டும் மீண்டும் கலைஞனின் முன்னுள்ள கேள்வி எதைச் சொல்வது எதை விடுவது என்பது பற்றித்தான். இந்தக் கேள்வி கலைஞனின் முன்னாள் மட்டுமல்ல, ஒரு சமூகத்தின் முன்னாலும் உள்ளது. ஒரு விமர்சகனின் அணுகுமுறை ஏன் இது சொல்லப் பட்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதும், அதன் பின்னால் உள்ள மனநிலையை, செய்தியை வெளிக்கொணர்வதும் தான். ஆனால் தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும்.
தேவர் மகனும், விருமாண்டியும் வன்முறையின் வேர்களை ஆய்வு செய்கிறது. இந்திய சமூகத்தின் நிதர்சனமான சாதியத்தினை இரண்டு படங்களினால் முழுக்க ஆய்வு செய்ய முடிந்து விடாது என்றாலும் ஒரு முயற்சியை இந்தப் படங்கள் மேற்கொள்கின்றன. சாதியம் எனது சமூகத்தின் அதிகார மையத்தினை யார் அடைவது என்பது பற்றிய போராட்டம். படிநிலை மற்றும், தீண்டாமை என்ற வன்முறை ஒரு விதமான ஒழுங்கு படுத்தப் பட்ட பின்பு, அதன் பரிணாமம், சாதியின் படிநிலைகள் மாறி வருவதையும், ஏற்ற இறக்கங்கள் கொள்வதையும் காணலாம். நவீன உலகில் இந்த சாதிச் சர்ச்சைகளுக்கு என்ன அவசியம் என்ற மேல்தட்டு கேள்விகள் எழும்போதே , கலப்புத் திருமணத்திற்கு எதிரானக் குரல்கள் எழுவதையும் நோக்கினால், சாதியின் அடிப்படையான பிரிவுகள், பிரசினைகள் மீண்டும் மீண்டும் பேசப் படவேண்டும் என்ற உணர்வு வலுப்படவேண்டும். இதை ஏன் இப்போது பேசவேண்டும் என்ற கேள்விக்கு பதில், பின் எப்போது என்பது தான்.

சொல்லப் போனால் சாதி பற்றியும், தீண்டாமை பற்றியும் பேசும் படங்கள் வந்தததே இல்லை என்று சொல்லிவிடலாம். “நத்தையில் முத்து”, “அச்சுத் கன்யா ” போன்ற சர்க்கரைப் பொட்டலங்களைத் தவிர்த்துப் பார்த்தால் சத்யஜித் ரேயின் “சத்கதி” யும் , மிருணாள் சென்னின் “ஒக ஊரி கதா”வும் தான். இரண்டுமே மகத்தான இலக்கியகர்த்தா பிரேம்சந்தின் கதைகள் என்பது சிறப்பாக நோக்கப் படவண்டிய விஷயம். பாமாவும், குணசேகரனும் எழுத்தில் தம் அனுபவங்களைப் பதிவு செய்யக்கூட தமிழில் எத்தனை ஆண்டுகள் ஆகியுள்ளன?

கமல் ஹாசனின் “விருமாண்டி” யும், “தேவர் மகனும்” செயல்படும் தளம் கலைச்சிறப்புக் கொண்ட ரேயின் தளம் அல்ல. வெகுஜன சினிமா என்ற பெருவாரியான மக்களைச் சென்றடையும் தளம் தான். அதனாலேயே அவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அவை இனிப்பு மிட்டாய் ரகத்தவையும் அல்ல. அவை முன்வைக்கும் உலகம் அதிகாரமும் தன் சாதியினரிடம் செல்வாக்கும் தலைமையும் வேண்டி, தன் சாதியின் முன்வரிசை மனிதர்களுடம் மோதி தன் இருப்பை நிலைநாட்டிக் கொள்கிற மனிதனைச் சித்தரிக்கும் தேவர் மகன். ( “தேவர் காலடி மண்ணே போற்றிப் பாடடி பெண்ணே” என்று புகழ் பாடும் காட்சியுடனேயே, “பொத்திகிட்டு இரியும்” என்று நாசர் ஏற்றிருக்கும் பாத்திரம் கர்ஜிக்கும் அபஸ்வரமும் உண்டு. ) தன் சாதியினரிடம் தலைமைகொண்டு பிறசாதியினர் மேல் வெறுப்பை வளர்க்கும் சாதியம் தோய்ந்த, அந்த வெறுப்பை முதலீட்டாக்கி எப்படி செல்வம் சேர்க்கலாம் என்று அலையும் மக்களை முன்வைத்து விமர்சிக்கும் படம் “விருமாண்டி”.
holocaust என்று அழைக்கப் படும் யூதப் பேரழிவு பற்றி ஆயிரக் கணக்கான புத்தகங்கள் எழுதப் அப்ட்டிருக்கின்றன. நிறுக் கணக்கான படங்கள் வ்ளியாகியுள்ளன ஆனால் அதைவிட மோசமான நிகழ்வுகள் ஆவணப் படுத்தப் படவில்லை எனபது மாடுமல்ல அவற்றின் வரலாறு கூட பூசி மெழுகப் பட்டுத்தான் கிடைக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் வங்கதேசத்தில் லட்சக்கணக்கில் கொன்று குவித்து பெண்களை பலாத்காரம் செய்தது பற்றி என்ன எழுதப் பட்டிருக்கிறது? எந்தப் படங்கள் உண்டு? குஷ்வந்த் சிங்கின் ஒரு “ட்ரெயின் டு பாகிஸ்தான்” தவிர பிரிவினையின்போது கொல்லப் பட்ட மக்களைப் பற்றி என்ன ஆவணங்களோ படங்களோ உள்ளன?

———–

யமுனா ராஜேந்திரன் விமர்சனம் முன்முடிவுகளாலும், வெறுப்பினாலும் மிகையாக உந்தப் பட்டு தர்க்கமும், அரசியல் நோக்கும் தவறிய ஒன்று.

கமல் ஹாசன் அமெரிக்க ஆதரவாளர், அதனால் அவர் முஸ்லிம் வெறுப்பாளராய்த் தான் இருக்க வேண்டும் என்று இஸ்லாமிஸ்ட் கண்ணோட்டத்தை முற்றிலும் சுவீகரித்து எழுதப் பட்டிருக்கும் விமர்சனத்தில் சமநிலையை எதிர்பார்க்க முடியாது. விஸ்வரூபம் பற்றிய விமர்சனத்திலும் அவர் ஹே ராம் பற்றிய விஷத்தைக் காக்க தவறவில்லை.

“தேசப் பிரிவினையின் போது வட இந்திய மாநிலங்களில் நடந்த இந்து முஸ்லிம் கலவரங்களின் விஷம் தமிழ் மனதைத் தீண்டிப் பார்ப்பதற்கான வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் காந்தியைக் கொல்ல முயற்சிப்பதான தமிழ் பாத்திரத்தை ஹே ராமில் உயிர்ப்பித்ததன் வழி இந்து-முஸ்லிம் வெறுப்பின் ஆதாரங்களை தமிழ் உளவியலுக்குள் அவர் கொணர்ந்தார்.” என்று குற்றம் சாட்டுகிறார்.

வரலாற்றினை அறியாவிடில் வரலாற்றின் கொடூர சம்பவங்கள் மீண்டும் நிகழும் என்று சொல்வார்கள். அதனால் யமுனா ராஜேந்திரனை தமிழ் நாட்டின் வரலாற்றை மின்னும் ஒரு முறை பயிலுமாறு கேட்டுக் கொள்கிறேன். முஸ்லிம் லீகின் பிரிவினை கோரிக்கையும், எப்படி மதராஸ் பிரதேச முஸ்லிம் லீக் இந்தக் கோரிக்கையை ஆதரித்தது என்பதையும், எப்படி ஈ வே ரா பெரியார் ஜின்னாவிடம் திராவிடஸ்தான் கோரிக்கையை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பதையும், எப்படி அவர் மறுத்தார் என்பதையும், பாகிஸ்தான் கோரிக்கைக்கு எப்படி திராவிட இயக்கம் ஆதரவு அளித்தது என்பதையும் குறித்து ஏராளமான வரலாறு உள்ளது. குறிப்பாக “The Political Evolution of Muslims in Tamilnadu and Madras, 1930-1947” By J B P More இது குறித்து விரிவாகப் பேசுகிறது. எல்லா வரலாற்றுப் புத்தகங்களிலும் கிடைக்கக் கூடிய வரலாறு தான் இது. தமிழ் மனநிலையில் நீறு பூத்த நெருப்பாக பிரிவினைக்கு எதிராக இருந்த மனநிலையை அதன் தீவிரம் அடையாமல் காத்தது காங்கிரசும், மகாத்மா காந்தியின் ஆளுமையின் ஈர்ப்பும் தான்.

ஹே ராம் ஒரு கற்பனைப் படம். கமல் ஹாசன் மிஜோரத்தைச் சேர்ந்தவரே இருந்திருந்தால், நாயகன் மிஜோவாக இருந்திருப்பான். இப்படி நடந்திருந்தால் என்று கற்பனையில் சில கேள்விகளையும் முன்வைக்கிறார் கமல் ஹாசன். பாலஸ்தீனப் பிரசினையினால் தமிழ் உளவியல் தீவிரம் பெறும் என்றால், இந்தியாவில் நடந்திருந்த ஹிந்து முஸ்லிம் கலவரங்களால் தமிழ் மனம் ஏன் தீவிரம் பெற்றிருக்க முடியாது என்பது கேள்வி.

Series Navigationசெம்பி நாட்டுக்கதைகள்……வேர் மறந்த தளிர்கள் 3
author

கோபால் ராஜாராம்

Similar Posts

Comments

  1. Avatar
    smitha says:

    தேர்ந்த விமர்சகர்கள் தன் மனதில் ஆழப்புதைந்துள்ள முன்முடிவுகள், வெறுப்புகள், விருப்புகள், ஆதாரமற்ற புறக் காரணிகள் இவற்றைத் தாண்டி படைப்பினை அணுகவேண்டும்.

    This applies to you also, gopal.

    குஷ்வந்த் சிங்கின் ஒரு “ட்ரெயின் டு பாகிஸ்தான்” தவிர பிரிவினையின்போது கொல்லப் பட்ட மக்களைப் பற்றி என்ன ஆவணங்களோ படங்களோ உள்ளன?

    You have not seen the hindi fim “tamas”?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *