பாடம்

author
0 minutes, 52 seconds Read
This entry is part 11 of 19 in the series 25 ஜூன் 2023

ஸிந்துஜா 

சோணமுத்து நடைப்பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு வாசல் கதவைத் திறந்தான். அவன் அணிந்திருக்கும் உல்லன் உடைகள் தன்னைத் தாக்குப் பிடிக்குமா என்று கேட்பதை போலச் சில்லென்று மார்கழிக் குளிர்க் காற்று உடலில் பாய்ந்து பரவியது. அவன் நிலைப்படியருகே நின்று தெருவின் இரு முனைகளின் மீதும் பார்வையைச் செலுத்தினான்.

குளிருக்குப் பயந்து தெருவே கல்லென்றிருந்தது. தெருவிளக்குத் தூண்

களிலிருந்து கொட்டிய மஞ்சள் வெளிச்சம் தரையைக் கூடத் தூங்கப் பண்ணி விட்டது போல அவ்வளவு ஆழ்ந்த நிசப்தம். இந்த ஊரே எட்டு மணிக்கு எழுந்திருக்கும் ஊர். அதிகாலையில் வாசலில் போட வேண்டிய கோலத்தைக் கூட இந்த ஊர்ப் பெண்மணிகள் முதல் நாள் மாலையும் இரவும் சந்திக்கும் நேரத்தில் போட்டு விடுகிறார்கள். விட்டால் திருப்பா

வையைக் கூட முதல் நாள் மாலையிலேயே படித்து விடுவார்கள் போல!

அவன் வீட்டை விட்டு வெளியே வந்து இடது பக்கம் திரும்பினான். சற்று நடந்தால் சம்பிகே ரோடு ஆரம்பித்து விடும். அவனிருந்த மூன்றாம் கிராஸிலிருந்து மல்லேஸ்வரம் முடியும் பதினெட்டாம் கிராஸ் வரை சம்பிகே ரோடு ஒரே நேர் கோடுதான். இந்த அதிகாலையில் அதிக வாகன, மானிட நடமாட்டம் இல்லாத பொழுதுதான் நடைபயிற்சிக்குத் தோதான சமயம் என்று அவன் தேர்ந்தெடுத்திருந்தான். ஏழரை எட்டு மணிக்கு மேல் வாகனங்கள் அவைகளே வெளிப்படுத்தும் ராட்சசப் புகை மூட்டத்துக்கு

உள்ளே சிக்கியபடியே மிகுந்த இரைச்சலுடன் விரையும் போது இயற்கையை நாகரிகம் எப்படிப் போட்டுப் பந்தாடுகிறது என்று பலமுறை சோணமுத்து நினைத்திருக்கிறான்.  

அவன் நினைவு செல்லும் பாதையில் குறுக்கிட வேண்டும் என்பது போல அவனருகில் லேசான உறுமல் சத்தம் கேட்டது. அவன் திரும்பிப் பார்த்த போது அந்த நாய் அவனைப் பார்த்தபடி பின் தொடர்ந்து கொண்டிருந்தது. வெள்ளையும் கறுப்பும் கலந்த நிறத்தில் சோனியாகவுமில்லாமல் திட

காத்திரமாகவும் இல்லாமல் ஒருவித இரண்டுங்கெட்டான் உடலை வைத்துக் கொண்டு வந்த அதை நேற்றுதான் முதல் தடவையாக அவன் 

வீட்டின் வெளியே பார்த்தான். அப்போதும் நேரம் இதே அதிகாலைதான். 

வீட்டை விட்டு வெளியே வந்த அவனைப் பார்த்த அது எழுந்து நின்று வாலை ஆட்டியது. அது நட்புத் தோற்றம் தருகிறது என்று நினைத்து அவன் பாம்பு விரலையும் கட்டை விரலையும் சேர்த்து சாகிப்தாம் எழுப்பினான். வலது கையை அசைத்து அதை வா வா என்று அழைத்தான். அது நகராமல் அவனைப் பார்த்தபடி நின்றது. அதை உற்சாகப்படுத்த அவன் உதடுகளைக் குவித்து விசில் அடித்தான். அது லேசாகப் பின் வாங்கி அவனைப் பார்த்துக் குரைத்தது. அவன் நாயை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைத்தான். அது மேலும் பலமாகக் குரைக்கத் தொடங்கிற்று. அந்த அதிகாலை நேர நிசப்தத்தில் அதன் சப்தம் பெரிதாகக் கேட்டது. 

இரண்டு வீடு தள்ளி இரவு பூராவும் தூங்காது பகலில் ஒய்வு எடுக்கும் ராகவாச்சார் அவரது வீட்டுக் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தார். நாயையும் அவனையும் பார்த்து விட்டு ஒரு புன்னகையைச் செலுத்தியபடித் 

திரும்பவும் வீட்டுக்குள் போய் விட்டார். அந்தப் புன்னகை தனக்கு நாய்க்கா என்று அவன் ஒரு வினாடி குழம்பி விட்டுக் கோபத்துடன் நாயைப் பார்த்து சூ சூ என்று விரட்டியபடி கையை ஓங்கினான். அது நகராமல் நின்றது.

அவன் சோர்வுற்றுத் தன வேலையைப் பார்க்க நகர்ந்தான். சற்றுத் தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்த போது நாய் அங்கேயே நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது…

இப்போது அதே நாய்தான் அவன் பின்னால் வந்து கொண்டிருக்கிறது. அவன் திரும்பி நின்று அதனைப் பார்த்தான். அதுவும் நின்று விட்டது. திடீரென்று அது அவனை ஒட்டினாற் போல விரைந்து வந்து ஓடியது. அவன் அந்த அருகாமையைக் கண்டு பயந்து விட்டான். ஓடிய நாய் சற்று முன்னால்  போய் நின்று திரும்பி அவனைப் பார்த்தது. சோணமுத்து கோபத்துடன் தரையில் கிடந்த கல் ஒன்றை எடுத்து நாயைப் பார்த்து எறிந்தான். அது இம்மாதிரித் தாக்குதலை ஏற்கனவே சந்தித்தத் 

திறமையுடன் வாகாக ஒதுங்கிக் கொண்டு அவனைப் பார்த்தபடி நின்றது. உடலை நடனமாடுவது போல ஆட்டியது. கேலி செய்கின்றதா? அவனுக்கு அது ஒரு சவாலைப்  போலத் தோற்றமளித்தது.  

‘அவ்வளவு தெனாவெட்டா உனக்கு?’ என்று வாய் விட்டுச் சொல்லியபடி மறுபடியும் ஒரு கல்லை எடுத்து நாயை நோக்கி எறிந்தான். இப்போதும் அது குறி தவறி விட்டது. கொஞ்சமும் பயப்படாமல் அது நிற்கும் தோரணை அவனது முயற்சிகளைக் கேலி செய்வது போல அவன் நினைத்தான். அதனால் மீண்டு ஒரு கல்லை எடுத்துக் கொண்டு அந்த நாயை நோக்கி ஓடினான். அது திரும்பி அவனுக்கு முன்னால் வேகமாக ஓடியது. சோணமுத்து தன்  வேகத்தை அதிகரித்து நாயை நெருங்கிய போது அது திடீரென்று திரும்பி அவனைப் பார்த்து நின்று விட்டது. அதைப் பார்த்து அவனும் திகைத்து நின்று விட்டான்.  சுதாரித்துக் கையில் இருந்த கல்லை அதன் மீது ஏறிய முயன்ற போது அது வேகமாக ஓடத் துவங்கியது. 

ஒரு வழியாக ஒழிந்தது என்று சோணமுத்து மேலே நடந்தான். அவன் நடந்த சாலையின் பிளாட்பாரம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்ததென்று 

அவன் எதிர்ப் பிளாட்பாரத்தை அடைந்து நடந்தான். அன்றைய தினசரி

களையும் வார இதழ்களையும் ஒவ்வொரு டெலிவரி பையனும் அவனது ஏரியாவுக்கு எடுத்துச் செல்லவென்று ஆள்கள் பிளாட்பாரத்தில் அவற்றை வைத்துப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.ஐந்தாறு பேர் அந்த இடத்திலிருந்தே அவர்கள் வீட்டுக்கு வர வேண்டிய தினசரி, வார இதழை வாங்கிக் கொண்டிருந்தார்கள். தினமும் பார்க்கும் காட்சிதான். ‘சுடச்சுட’ ‘செய்திகளை முந்திப் பெறும் ஆசாமிகள்’ என்று அவன் அவர்களைப் பற்றி நினைத்துக் கொள்வான். சட்டென்று அந்தச் சிறிய கூட்டத்தில் அண்ணாமலையும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் பார்வை விழுந்த அதே சமயம் அவரும் அவனைப் பார்த்தார். ஒரு வினாடியில் முகம் மாறிப்பார்வையைத்

திருப்பிக் கொண்டார். 

சோணமுத்து ‘அயோக்கிய சிகாமணி’ என்று மனதுக்குள் திட்டியபடி

ஆறாவது கிராஸைக் கடந்து மேலே நடந்து சென்றான். இங்கேதான் கனகா குடியிருந்தாள். பழக்கம் முறியும் வரை இந்த மனிதன் எப்படி அவன் காலடியில் விழுந்து கிடந்தார்? அப்பனும் பெண்ணும் ஆடிய நாடகத்தில் மயங்கியது அவன் குற்றம் என்று பின்னால்தான் தெரிந்தது. எவ்வளவு புடவைகள்! சல்வார் கமீஸுகள்! கிரிஜாவிலும் போத்தியிலும் வேலை பார்க்கும் சிப்பந்திகள் அவனை மல்லேஸ்வரம் தெருக்களில் பார்த்தால் நின்று பேசி விட்டுப்   போவார்கள். கனகாவின் மீது இருந்த மயக்கத்தைக் காதலாகவும் திருமணமாகவும் கனவு கண்ட நாள்களில் கனகாவின் வீட்டில் மிக்சி, ஃபேன், டி வி என்று சாமான்கள் சேர்ந்தன. கனகாவும் அவள் 

குடும்பத்தினரும் அந் நாள்களில் பேசிய போது அவனுக்குச் சொத்து சேர்ப்பதில் ஆர்வங் கொண்டவர்களாகத் தங்களைக் காண்பித்துக் கொண்டு தங்கள் வீட்டை நிரபிக் கொண்டார்கள்.  (மாப்பிள்ளை இப்பவே தன்னோட 

வீட்டுக்கு சாமான்களை சேத்து வைக்கறாரு!)  திடீரென்று ஒரு நாள் கனகாவுக்குத் துபாய் மாப்பிள்ளை கிடைத்திருப்பதாகக் கூறி அவன் அவசியம் திருமணத்துக்கு வர வேண்டும் என்று அவர்கள் வீட்டு ஹாலில் உட்கார்ந்திருந்தவனைத் தெருவில் தூக்கிப் போட்டார்கள்…  

அவன் எட்டாவது கிராஸைக் கடக்கையில் திடுக்கிட்டான். அந்த நாய் அவன் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தது. அதுவும் பிளாட்பாரம் மாறி வந்து.. என்ன நெஞ்சழுத்தம்! சட்டென்று அது நடப்பதை நிறுத்தி விட்டு அவன் வருவதை பார்த்து நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலட்சியமாய் நின்றது. இன்று ஒரு முடிவு கட்டி விட வேண்டியதுதான் என்று சோணமுத்து அந்த நாயை நோக்கி வேகமாக ஓடினான். அது அவன் ஓடி வருவதைப் பார்த்து அவனை விட வேகமாக ஓடியது. அதன் வேகத்துக்கு அவனால் ஓட முடியவில்லை. இருந்தாலும் வீம்புடன் அவன் அதை விரட்டிக் கொண்டு ஓடினான். ஆனால் பதினைந்தாவது கிராஸ் அருகே அவனுக்கு மிகவும் மூச்சு வாங்கியது. அங்கிருந்த பஸ் ஸ்டாப் பெஞ்சு மேல் உட்கார்ந்து விட்டான். ஆணும் பெண்ணுமாய் இரண்டு கல்லூரி மாணவர்கள். காதலர்களாக இருக்க வேண்டும். அவன் கெஞ்சக் கெஞ்ச அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள். இன்னொரு கனகா. அப்பா, இந்தப் பெண்கள் என்ன மாதிரி சரசமாடு

கிறார்கள்! அவர்கள் கோபம் பொய்யானது என்று தெரிந்தும் இவன் அவள் மேல் விழுந்து கெஞ்சுவது அவளுக்குத் திருப்தியைத் தரும் என்பதாலா? என்ன விதமான உத்தமத் தியாகிகள்!

அவன் உட்கார்ந்து மூச்சு வாங்கினான். அவன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இந்த பஸ் ஸ்டாப்பில்தான் வந்து இறங்குவான். கூடவே நித்யானந்தனும். அப்போது சோணமுத்துவின் வீடு பதினாறாம் கிராஸில் இருந்தது. நித்யாவின் வீடு பக்கத்து சந்தில். இருவரும் கல்லூரியில்  ஒரே வகுப்பு. சோணமுத்து எப்போதும் லஞ்சு பாக்ஸ் எடுத்துக் கொண்டு வரமாட்டான். கல்லூரிக் காண்டீனிலோ பதினேழாம் கிராஸ் நாயர் கடையிலோ வாங்கிச் சாப்பிடுவான். அப்படிப் போகும் போதெல்லாம் கம்பனி என்று நித்யாவையும் கூட்டிக் கொண்டு போவான்  நித்யா கொஞ்சம் வசதிக் குறைவான வீட்டில் பிறந்தவன். ஒரு முறை சோண

முத்து அவனுடைய தந்தையிடம் சொல்லி நித்யாவுக்கு ஒரு டேர்ம் பீஸ் கொடுத்து உதவினான். கல்லூரியில் அவனும் நித்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது. ஆனால் அதுவே சோணமுத்து ஏமாந்து போனதற்கு அல்லது நித்யா அவனை ஏமாற்றுவதற்கு வழி வகுத்து விட்டது. 

ஒவ்வொரு வருஷமும் கல்லூரி வளாகங்களில் தனியார் மற்றும் அரசாங்க நிறுவனங்கள் கடைசி வ்ருடப் படிப்பை முடிக்கும் நிலையில் உள்ள மாணவர்களைத் தங்கள் நிறுவனங்களில் பணியாற்றத் 

தேர்ந்தெடுப்பார்கள். அம்மாதிரி நிகழ்வு இவர்கள் படிக்கும் கல்லூரி

யிலும் நடந்தது. அத்தேர்வு நடக்கும் ஒரு வாரம் முன்னதாக சோணமுத்து ஒரு ஸ்கூட்டர்  விபத்தில் சிக்கி ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டிய

தாயிற்று. அவன் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு வந்த இரண்டு நாள் கழித்துத் தேர்வு நடந்தது. 

தேர்வு நடந்த மாலை அவன் தந்தை ஹாலில் உட்கார்ந்திருந்த அவனிடம் வந்து “முத்து, இன்னிக்கி உங்க காலேஜிலே கேம்பஸ் செலக் சனாமே! வழியிலே உங்க புரபசரைப் பார்த்தேன். அவர்தான் கேட்டாரு, நீ ஏன் வரலேன்னு.”

அவன் திடுக்கிட்டு “என்னப்பா சொல்றீங்க? எனக்கு ஒண்ணும் யாரும் சொல்லலியே” என்றான்.

“உன் பிரெண்டுக்குத் தெரியாதா? அவனுக்கும் உண்டுல்லே?”

“அவன் ரெண்டு மூணு நாளாஅவங்க வீட்டுப்பக்கமே  வரதில்லேன்னு நம்ம ரெண்டு வீட்டிலேயும் வேலை பாக்கிற தாயம்மா மத்தியானம் சொல்லிச்சு. அவனோட அப்பாம்மா கூட ஏதோ கல்யாணம்னு போன வாரமே

திருச்சிக்குப் போயிருக்காங்களாமே” என்றான் சோணமுத்து.

அவன் இருப்புக் கொள்ளாமல் அவனுடைய பேராசிரியரை மறுநாள் காலை சென்று பார்த்தான்.

அவனது உடல்நலத்தை விசாரித்து விட்டு “இந்த ஆக்சிடென்டுனாலே உன்னால கேம்பஸ் செலெக் சனுக்கு வர முடியாமப் போயிருச்சோ? தபால்ல அனுப்பிச்சா லேட்டா கிடைக்கும் இல்லேன்னா தவறிப்

போயிரும்னு தானே இன்டெர்வியு கார்டை நான் உன் பிரெண்டு கிட்டே 

கொடுத்து அனுப்பிச்சேன்?”

“அவன் கொண்டு வந்து தரலே சார்.”

“என்னது?”

“அவன் நாலஞ்சு நாளா அவனோட வீட்டுப்பக்கமே போகலையாம்.”

“ஆனா நேத்து அவன் இன்டெர்வியுக்கு வந்தானே. அவனுக்கு அப்புறம் நீ வருவேன்னு நான் நினைச்சுகிட்டு இருந்தேன். கடைசியிலே நீ வரப் போறதில்லேன்னு தெரிஞ்சப்ப பேசாம இருந்திட்டேன். புரஃபஸரா நான் தேர்வு நடக்கற அன்னிக்கி உன்னைப்  பாத்துப்  பேசறது சரியில்லையே!”

என்றார் அவர் வருத்தத்துடன்.

நித்யா தன்னை ஏமாற்றியதை சோணமுத்து உணர்ந்தான். சில நாள்கள் கழித்து தேர்வில் அவனும் வெற்றியடையவில்லை என்று தெரிந்தது. ஆனால் அவன் தன்னுடைய சான்சைக் கெடுத்து விட்டதை சோண

முத்துவால் மறக்க முடியவில்லை. முதுகில் கத்தியை வைத்துக் குத்தியவனை அவன் ஒதுக்கி விட்டான்…

இன்னமும் அந்த இளைஞனும் பெண்ணும் தங்கள் ஊடல்களை நிறுத்த

வில்லை. ‘கிளம்புங்கடா’ என்று அவன் தன் மனதுக்குள் கத்தினான். அதைக் கேட்டவர்கள் போல அப்போது வந்து நின்ற பஸ்ஸில் அவர்கள் ஏறிக் கொண்டார்கள். சோணமுத்து எழுந்து பதினெட்டாம் கிராஸை நோக்கி நடந்தான். தினமும் அவன் அது வரை சென்று விட்டு வீடு திரும்புவான். அவன் கையில் இன்னும் வைத்திருக்கும் கல் உறுத்தியது. அவன் நாய் போய்விட்டதா என்று தேடினான். இப்போது அது அவனுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தது. அவனுக்கு ஒருசேரக் கோபமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. இந்த நாலுகால் பிராணி என்ன நினைத்துக் கொண்டு அதிகாலை வேளையில் அவனைத் தொற்றிக் கொண்டு தொந்திரவு பண்ணும் உரிமையை எடுத்துக் கொண்டிருக்கிறது?

திடீரென்று அவன் மீது விழுந்து எழுந்து நாய் முன்னால் ஓடியது. அவன் திடுக்கிட்டு ஒரு நிமிடம் நிலை குலைந்து விட்டான். அந்த அதிர்வலைகள் ஏற்படுத்திய கடுங்கோபத்தைத் தாள முடியாமல் சோணமுத்து அந்த நாயை நோக்கி வெறியுடன் ஓடினான். முன்பைப் போலவே அவனுக்குச் சிக்காத வேகத்தில் அது ஓடிற்று. அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த சிலர் வேடிக்கையாக இதைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தனர். அது சோண

முத்துவின் ஆத்திரத்தை இன்னும் அதிகப்படுத்தியது. அவன் தலை தெறிக்க நாயின் பின்னால் ஓடினான். அதைப் பிடிக்க முடியவில்லை. அவனுக்கு மூச்சு வாங்கிற்று. நின்றால் தோல்வியை ஒப்புக் கொள்வது போல ஆகி விடுமே என்ற எண்ணம் அவனை நிற்க விடாமல் விரட்டியது. ஆனால் மல்லேஸ்வரம் பஸ் ஸ்டான்ட்டுக்குத் திரும்பும் இடத்தில் இனிமேல் நிற்காவிட்டால் தான் கீழே விழுந்து விடுவோம் என்று தோன்றி நின்று விட்டான். அந்த நாயும் அவன் நிற்பதை பார்த்து நின்று விட்டது. இன்று எதற்காகத் தன் வாழ்க்கையில் கீழே விழுந்த அல்லது விழுத்தாட்டப்பட்ட நினைவுகள் வந்து தன்னைத் துன்புறுத்துகின்றன என்று அவனுக்கு ஆயாசம் ஏற்பட்டது. பணிவுக்குப் பதில் முதுகெலும்பு உள்ளவனாக நடந்து கொள்ளாதது ஏன்?

அப்போது திடீரென்று எங்கிருந்தோ முளைத்த ஒரு காவி நிற நாய் குரைத்துக் கொண்டே ஓடி வந்து கருப்பு வெள்ளை நாயைத் தாக்கியது. எதிர்பாராத அந்தத் தாக்குதலால் கீழே விழுந்து விட்ட  கறுப்பு நாய் 

ஆத்திரத்துடன் காவி நிற நாய் மேல் பாய்ந்தது. அதன் முன்னங்

கால்கள் இரண்டும் காவி நாயின் கழுத்தை இறுக்கப் பிடித்தன. தன்னுடைய வாயால் காவி நாயின் வாயை மூர்க்கமாகக் கவ்விப் பிடித்துக் கொண்டது. இப்போது காவி நாய் வலி பொறுக்காமல் பெரிதாக ஊளையிட்டுக் கொண்டே தன்னை விடுவித்துக் கொள்ள அங்கும் இங்கும் திமிர முயன்றது. அந்த அசைவுகளால் வலி மேலும் அதிகமாகி விடக் காவி நாய் தாங்க முடியாமல் கீழே சரியத் தொடங்கியதை சோணமுத்து பார்த்தான். அது முழுவதுமாகத் துவண்டு போகும் வரைப் பிடியைத் தளர்த்தாது இருந்த கறுப்பு நாய் கடைசியில் தன் பிடியை விட்டுக் கொடுத்தது. கீழே சரிந்த நாய் க்ஷணத்தில் குதித்து எழுந்து எதிர்த்த திசைக்கு ஓடிச் சென்று மறைந்தது.

சோணமுத்து கையில் இருந்த கல்லைப் பார்த்து விட்டு நாயைப் பார்த்தான். அது அவனைப் பார்த்தது. அவன் கல்லைத் தரையில் விட்டெறிந்தான். பிறகு முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு தரையில் உட்கார்ந்து விட்டான். சில வினாடிகள் கழித்து அவனருகே  மூச்சு விடப்படும் சத்தம் கேட்டுத்  தலை  நிமிர்ந்தான். நாய் மௌனமாக அவனைப் பார்த்தது. அது தனது முன்னங் கால்களைத்  தூக்கி அவனது தலை மேல் வைத்துத் தடவிக் கொடுக்கப் போகிறதோ என்று ஒரு வினாடி அவன் நினைத்தான்.  

       .      

.

Series Navigationகாற்றுவெளி மின்னிதழ் – அமரர்.செம்பியன்செல்வன் ஞாபகார்த்த சிறப்பிதழ்முதியோர் காப்பக  நுழைவு அனுபவம் – 1
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *