மாணவர் சேர்க்கையும் பேராசிரியர்கள் நிலையும்

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 19 in the series 25 ஜூன் 2023


முனைவர் ம இராமச்சந்திரன்


பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகி விட்டன. தமிழ்நாடு முழுவதும் உயர் கல்விக்குச் செல்வதற்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவம் பொறியியல் கலை மற்றும் அறிவியல் பாலிடெக்னிக் மற்றும் பல படிப்புகளில் சேர்ந்து அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளிலோ அரசு வேலை வாய்ப்பிலோ தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முக்கியமான காலகட்டமாக இக்காலம் விளங்குகிறது.


பெற்றோரின் வசதிக்கேற்பவும் மாணவர்களின் திறன்சார் ஆற்றலுக்கு ஏற்படவும் மாபெரும் கல்விப் போராட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மருத்துவமும் பொறியியலும் எட்டா கனியாக இருக்கும் பட்சத்தில் பெரும்பாலான மாணவர்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்ந்து தங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்வதற்கான முயற்சியில் ஈடுபடும் காலம் இது. இத்தகைய சூழ்நிலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் கல்விப் பணியில் இருந்து சற்றே விலகி மாணவர் சேர்க்கை ப் பணியில் நிறுவனங்களால் ஆயத்தப்படுத்தப்படுவதும் நிர்ப்பந்தப்படுத்தப்படுவதும் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் துறை சார்ந்த அறிவும் ஆற்றலும் கொண்ட உதவிப் பேராசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு தேவையாக இருந்தனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் துறை சார்ந்த அறிவும் ஆற்றலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு மாணவர் சேர்க்கையில் யார் அதிகமான சேர்க்கையைச் செய்கிறார்களோ அவர்கள் சிறந்த பேராசிரியர்களாக அடையாளம் காணப்படுவதும் அவர்கள் ஊக்கப்படுத்தப்படுவதும் நடைபெறும் காலமாக இக்காலம் விளங்குகிறது.


இன்றைய தலைமுறை உதவிப் பேராசிரியர்கள் துறை சார்ந்த வாசிப்போ, துறை சார்ந்த நவீன போக்குகளை அறிவதில் ஆர்வமோ, துறை சார்ந்த ஈடுபாடோ இல்லாமல் இன்றைய கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மாணவர் சேர்க்கையில் தங்கள் திறமையை மேம்படுத்திக் கொள்வதற்காக மாணவர்களோடு ஐக்கிய படுவதும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வதும் ஆசிரியர் என்ற நிலையிலிருந்து நண்பர் என்ற நிலைக்குத் தங்களை மாணவர்களிடம் தகவமைத்துக் கொள்வதுமான போக்குகள் நடைபெற்று வருகின்றன.


மாணவர்களுக்குத் தேவையான நட்பு சார்ந்த, மதிப்பெண் சார்ந்த உதவிகளைச் செய்யும் பேராசிரியர்கள் சிறந்த பேராசிரியர்களாகவும்

2


வகுப்பறையில் அறிவு சார்ந்த கருத்துக்களைக் கூறும் பேராசிரியர்கள் ‘போரடிக்கும்’ பேராசிரியர்களாகவும் மாணவர்களால் மதிப்பீடு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதன் காரணமாகப் பேராசிரியரிடமிருந்து கடத்தப்பட வேண்டிய அறிவு தொகுப்பு கடந்த 10 ஆண்டுகளாகத் தேங்கிய குட்டையாக நின்று விட்டிருப்பதைக் காண முடிகிறது. இச்சூழலில் கல்வி பயின்று வெளிவரும் மாணவர்கள் திறமையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் சுய சார்பு அற்றவர்களாகவும் துறை சார்ந்த அறிவும் ஆற்றலும் அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். இத்தகைய மாணவர்கள் பல துறைகளில் தங்களை இணைத்துக் கொள்வதற்குப் போராடும் சூழலில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தங்களின் மாணவர் சேர்க்கைக்கான மனித வளமாக, உழைப்பு வெளிப்பாடாக இவர்களை உதவிப் பேராசிரியர்களாகவும் ஆய்வக உதவியாளர்களாகவும் நியமித்துக் கொண்டு கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதன் காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கடைநிலை ஊழியராகச் செயல்படுபவர்களாக உதவிப் பேராசிரியர்கள் விளங்குகின்றனர். அதிகமான மாணவர் சேர்க்கை செய்த உதவிப் பேராசிரியர்கள் கல்வி பணிக்குத் தகுதி உடையவர்களாகவும் அதிகமான மாணவர் சேர்க்கைக்கு உதவ முடியாத பேராசிரியர்கள் கல்விப் பணிக்குத் தகுதியற்றவர்களாகவும் கருதப்படும் சூழல் உயர்கல்விக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சிக்கலாக இருப்பதை உணர வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை என்பது முக்கியமான பணியாக இருந்தாலும் அப்பணியைச் செய்வதற்கு உதவிப் பேராசிரியர்கள் நிர்பந்தப்படுத்தப்படுவதும் ஒத்துழைக்காத பேராசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவதுமான செயல்பாடுகள் உயர்கல்வியில் அறிவு சார்ந்த செயல்பாட்டுக்கு மூடு விழாவையும் அறிவு சாரா செயல்பாட்டிற்கும் பொழுதுபோக்கான செயல்பாட்டிற்கும் ஊக்கத்தையும் வழங்கப்பட்டு வருவதைத் தமிழ்நாடு முழுவதும் காண முடிகிறது.


இத்தகைய போக்குகள் உயர்கல்வியில் தரமான ஆசிரியர்களையும் தரமான மாணவர்களையும் உருவாக்குவதற்கு பதிலாக பொழுதுபோக்கு அம்சங்களோடு கூடிய சுய சார்பற்ற துறை சார்ந்த அறிவில் ஆளுமையற்ற தன்மைகளைப் பரவலாக உருவாக்கி வருவது மாபெரும் சமூக கேடாக இருப்பதை உணர வேண்டும்.


மாணவர் ஆசிரியர் உறவில் கண்ணியமும் அறிவு பகிர்மானத்தில் சுயமரியாதையும் கொண்ட சூழ்நிலை இன்றைய காலத்தில் இல்லாமல் இருப்பதையும் ஆசிரியர்களைப் பற்றிய மாணவர்களின் மதிப்பீடு

3


குறைந்து கொண்டே வருவதையும் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களைக் கூலி தொழிலாளர்களாக எண்ணும் போக்கு உருவாகி வருவதையும் நோக்கும்போது இளைய தலைமுறையின் உருவாக்கத்தில் மிகப்பெரிய தொய்வும் வெற்றிடமும் ஏற்பட்டு வருவதை உணர வேண்டும்


பெற்றோர்களிடமிருந்து விடுபட்டு கல்வி நிறுவனங்களில் தங்களை ஒப்படைத்துக்கொண்ட மாணவர்கள் சமூகப் பொறுப்பு மிக்கவர்களாகவும் அடுத்த தலைமுறையை உருவாக்க கூடியவர்களாகவும் மாறுவதற்கு பதிலாக உதிரித்தன்மை சார்ந்த போக்குகளும் யாரையும் எளிதாக அவமரியாதை செய்யும் மனநிலையும் எதன் மீதும் நம்பிக்கை இல்லாத கலிவிரக்கம் கொண்ட மனநிலையும் யார் மீதும் உயர் மதிப்பு இல்லாத விட்டேதி தனமும் இன்று அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது


மாணவர்கள் சமூகத்தின் மாபெரும் மனித ஆற்றல். அத்தகைய ஆற்றலைச் சீர்படுத்தும் பணியில் ஈடுபடும் உதவிப் பேராசிரியர்கள் இன்று மாணவர் சேர்க்கை என்ற பெயரில் அவமானப்படுத்தப்படுவதும் கீழ்மைப்படுத்தப்படுவதும் சுயமரியாதை அற்ற போக்குகளில் செல்வதுமான செயல்பாடுகள் மாணவர் ஆசிரியர் உறவில் மாபெரும் மதிப்பீட்டு இழப்பை உருவாக்கி இருக்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்வதற்கான மாபெரும் முன்னுதாரணத்தை இழந்திருப்பதும் ஆசிரியர் என்ற மகத்தான உயர்நிலை மாணவர் மனதில் உடைந்திருப்பதும் இன்றைய காலத்திற்கு ஆரோக்கியமான போக்கல்ல. தமிழ்நாடு அரசும் உயர்கல்வியைத் தனியார் மயமாக்கிய பிறகு கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டை உற்று நோக்குவதோ கல்வி நிறுவனங்கள் உதவிப் பேராசிரியர்கள் உறவு முறையில் பின்பற்றப்பட வேண்டிய அடிப்படை நெறிமுறைகள் பற்றியோ பெரும்பாலும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இன்றைய சூழலில் பெரும்பாலான சுயநிதி கல்வி நிறுவனங்கள் முறையான ஆசிரியர் நியமனத்தையோ முறையான வகுப்பு முறைகளையோ நடைமுறைப்படுத்துவதில்லை என்பது பரவலான விமர்சனம். மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாமலேயே வகுப்புகளுக்குச் செல்லாமலேயே தேர்வு எழுதுவதும் பட்டங்களைப் பெறுவதும் இன்று சர்வ சாதாரணமாக ஆகிக் கொண்டு வருவது கவலை அளிக்கக்கூடிய செயல்பாடாகும். இத்தகைய பின்புலத்தில் பயின்று வரும் மாணவர்கள் உதவிப் பேராசிரியர்களாகவும் பள்ளி ஆசிரியர்களாகவும் நியமிக்கப்படும் பொழுது கல்வியின் தரமும் மாணவர்களின் எதிர்காலமும் மிகப்பெரிய கேள்விக்கு உள்ளாகி இருப்பதைத் தமிழ்ச் சமூகம் கவலையில்லாமல் கடந்து சென்று கொண்டிருப்பது மாபெரும் கவலையை உருவாக்குகிறது. தமிழக அரசு தமிழ்நாட்டில் இயங்கி வரும் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பல்கலைக்கழகங்கள் மூலமாக மட்டுமல்லாமல் உயர்கல்வி துறையின் மூலமும் ஆழமாகக் கண்காணிப்பிற்கு

4


உட்படுத்தப்பட வேண்டும். உதவிப் பேராசிரியர்கள் நியமனத்திலும் அவர்களின் பணி பகிர்விலும் முறையான நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக மட்டுமே தரமான மாணவர்கள் சமூகத்திற்கு கிடைக்கப்படுவார்கள்.

Series Navigationபழித்தலும் பழித்தல் நிமித்தமும்நாவல்  தினை              அத்தியாயம் இருபது             பொ.யு 1900
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *