This entry is part 6 of 8 in the series 26 ஏப்ரல் 2026

பாலமுருகன் லோ.

“சுமதி, ஏண்டி கவலையா என்னமோ போல இருக்கே? எதாயிருந்தாலும் என்கிட்ட சொல்லலாமில்ல?”

“ராமாயிக்கா, என்னத்த சொல்லச் சொல்லுற? எல்லாம் நான் பெத்த பசங்களப் பற்றித்தான்.”

“என்ன ஆயிப்போச்சுன்னு நீ இப்பிடி கவலையில இருக்க? நல்லா ராஜாக் கணக்காத்தானே ரெண்டு பேரும் இருக்காங்க!”

“ஏன்னுங்கக்கா, காலக் காலத்துல இவனுங்களுக்கு கல்யாணம் காட்சின்னு செஞ்சு, பேரப்பிள்ளையை கையில் எடுத்து கொஞ்சணும்னு நெனச்சேன்.”

“அதுக்கென்ன ஆயிப்போச்சு? கல்யாணம் செய்யலாமுல்ல?”

“ஏங்கக்கா, பொண்ணைப் பெத்தவங்க இப்ப ஊருப்பட்ட கண்டிஷன் போடறாங்க. என்னத்தச் சொல்ல?”

“ஏண்டி சுமதி, என்னச் சொல்லற? நிஜமாவா?”

“அட, சத்தியமா சொல்லுறேன். இப்பெல்லாம் முன்ன மாதிரி இல்ல.”

“ஏன்னுங்கக்கா, இப்படித்தான் போன மாசம் பெரியவனை அழைச்சுக்கிட்டு சுக்காம்பட்டிக்குப் போயிருந்தேன்.”

“சரி, சொல்லு. போயிருந்த புறவு என்ன நடந்தது அங்கு? அதுவும் நம்ம கம்மாவூரு மாதிரி ஒரு கிராமம்தானே?”

“ஆமாங்கக்கா, கிராமம்தான். இல்லேன்னு சொல்லல. ஆனா இப்ப கிராமம்கூட நகரம் மாதிரி மாறிக்கிட்டு வருதில்ல. எல்லாப் புள்ளைகளும் நல்லா படிக்குதுங்க; பெரிய பெரிய வேலைக்குப் போகுதுங்க; கைநிறைய சம்பாதிக்குதுங்க; தன் கால்ல நிக்குதுங்க.”

“சரி, அதுக்கென்ன இப்போ? உன் புள்ளைக்கு நீ பார்க்கப் போன பொண்ணு ஒத்து வரலையா? உயரம் கம்மியா இருந்தாளா? இல்ல நிறத்துல உன் புள்ளையைக் காட்டிலும் குறைவா? இல்ல அவன் படிச்ச படிப்புக்கு ஏற்றாற்போல இல்லையா?”

“இல்லக்கா. அவனைக் காட்டிலும் அவ நல்லாவே படிச்சிருக்கா. பட்டணத்துல வேலை செய்யுறா.”

“அப்புறம் என்ன? பேசி முடிக்க வேண்டியதுதானே?”

“அங்கத்தானே சிக்கலே இருக்கு.”

“என்ன சிக்கல்?”

“அவுங்கிட்ட சொன்னேன், ‘என் புள்ள சொந்தத் தொழில் பண்ணிட்டு இருக்கான்; மாதம் இவ்வளவு சம்பாதிக்கிறான்’ன்னு.”

“இதுதான் ஊருக்கே தெரியுமே! அவன் நல்லா சம்பாதிக்கிறான்னு. அதுல என்னத்த புதுசா கண்டுபிடிச்சாங்க?”

“இல்ல. வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதமா என்று கேட்கிறாங்க. அவுங்க பொண்ணு பட்டணத்துல வேலை செய்யறதால, அங்கேயே ஒரு வீடு எடுத்து போகலாம்னு இருக்காளாம். கேட்டா, பெத்தவங்களையும் கூட்டிக்கிட்டு போகப்போறாளாம். நமக்கு ஆட்சேபனை இல்லேன்னா, இங்க பார்க்கிற தொழில அங்க வந்து செய்யச் சொல்லுறாங்க.”

“ஏங்கக்கா, நான் ஒண்ணு கேட்கிறேன்… அவுங்களுக்கு மறை கழண்டு போச்சா? என்ன, என் புள்ளைப் போயி வீட்டோட மாப்பிள்ளையா வரச் சொல்லுறாங்க?”

“ஓ… இதுதான் சங்கதியா? இதுல நீ என்ன முடிவெடுத்த?”

“நான் என்ன இதுல முடிவெடுக்கிறது? எப்படி அவனை அவுங்ககிட்ட தூக்கிக்கொடுக்குறது? ஊரு உலகம் என்னச் சொல்லும்? அதான் யோசிச்சுப் புறவு சொல்லறோம்னு சொல்லிட்டு வந்துட்டோம்.”

“அப்படியா சேதி? சரி, சுமதி, நேரம் ஆயிப்போனதே தெரியல. உம் மாமன் — அதான் என் வீட்டுக்காரர் — மத்தியான சாப்பாட்டுக்கு வந்துடுவாரு. நான் போயிட்டு புறவு வரேன். நீயும் போய் உன் மூத்தவன் சாரங்கன் வந்துடுவான், அவனுக்கு சோறு போடு.”

ராமாயி கிளம்பியபின், சுமதி அடுப்பங்கரைக்குப் போனாள். கொதித்த பானையை கவனமாக இறக்கி ஊற்றினாள். ஏதோ யோசனையிலிருந்தபடி கையை பாத்திரத்தின் விளிம்பில் தொட்டுவிட, சுடு தாங்காமல் “ஆ…” என்று சற்றுக் கத்தினாள். உடனே கையைத் தண்ணீரில் காட்டினாள். பிறகு பிடித்துணியை எடுத்து, பானையை ஒழுங்காக இறக்கி வைத்தாள்.

பக்கத்திலிருந்த சாம்பார், ரசம், பொரியல், வறுவல் எல்லாவற்றையும் தனித்தனியாகப் பாத்திரங்களில் போட்டு மூடி வைத்தாள். வேலை முடிந்ததும், அப்படியே சுவரோரம் சாய்ந்து நின்றாள்.

அவள் மனசுல ஓராயிரம் யோசனைகள் ஓடிச்சு:

நாம்தானா தவறு செய்துட்டோமோ?
இது என் புள்ளையோட வாழ்க்கை.
அவனை அவன் இஷ்டப்படி சுயமா சிந்திக்க விட மாட்டேங்கிறோமா?
இவனுக்கு கல்யாணம் ஆகலேனா, பிறகு அவனோட தம்பிக்கு எப்படி கல்யாணம் ஆகும்?

காலம் மாறிப்போச்சு போல. காலத்திற்கேற்ப நாமும் மாற வேண்டிய கட்டாயம் வந்துருக்குதோ? ஒரு காலத்துல பொட்டப் புள்ளங்கதான் புகுந்த வீட்டுக்கு வந்தாங்க. ஆனா இக்காலத்துல பசங்களே போறாங்களே! இது நடைமுறைக்கு ஒத்துவருமா? நம்மைச் சுற்றி இருக்கிறவங்க என்ன நினைப்பாங்க? கேலி பேச மாட்டாங்களா?

அப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், “அம்மா… அம்மா… சாப்பாடு ரெடியா?” என்றபடி சாரங்கன் வீட்டுக்குள் நுழைந்தான்.

அவன் உள்ளே வந்தவுடனே சுமதியின் முகத்தைப் பார்த்து, “அம்மா, என்னம்மா? பகல் கனவா?” என்றான்.

“ஏண்டா, நான் என்ன வயசுப் புள்ளையா பகல் கனவு காண? எல்லாம் உன்னைப் பத்திதான் யோசிச்சுக்கிட்டு இருந்தேன்.”

“என்னைப்பத்தியா?”

“எல்லாம் உன்னோட கல்யாணத்தைப்பத்திதான்.”

“ஆரம்பிச்சுட்டாயா உன்னோட வேலையை? கொஞ்ச நாளாவது சும்மா இரும்மா.”

“என்னடா, சும்மா இருக்க சொல்ற? உன்னைப் பத்தி கவலைப்படறத விட்டு நான் அடுத்த வேலையைப் போய்ப் பார்க்கணுமா?”

“நான் வேணும்னா அவுங்க வீட்டுக்கே போயி பேசிப் பார்க்கிறேன்.”

“நீ என்னடாப் பேசப்போற? அவுங்க வீட்டுல போயி என்ன சொல்லப்போறே?”

“இல்லம்மா, அங்க போயி அவுங்களுக்கு ரெண்டு விருப்பம் சொல்லப்போறேன்.”

“என்ன விருப்பம்?”

“நான் முதலில் அங்கப் போயிப் பேசிட்டு புறவு வந்து சொல்லுறேன்.”

“சரிடா, என்னமோ சொல்லுற; நானும் கேட்டுக்கிறேன்.”

சாரங்கன் அவன் அம்மாவிடம் சொன்ன மாதிரி பெண் வீட்டிற்கு சென்றான். சாரங்கனைப் பார்த்த பெண் வீட்டார் அவனை உபசரித்தனர். காபி, தண்ணீர் கொடுத்தனர்.

பெண்ணோட அம்மா அவனைப் பார்த்து, “தம்பி, என்ன விஷயமா வந்தீங்க?” என்று கேட்டாள்.

“நீங்க உங்க விருப்பத்தை அன்னைக்கு சொன்னீங்க; நாங்களும் யோசிச்சுப் பார்த்தோம். உங்களிடம் இரண்டு விஷயம் சொல்லணும்; சொல்லலாமா?”

“தாராளமா சொல்லுங்க.”

“முதல் விஷயம் — நீங்க எப்படி உங்க பெத்தவங்களை கூட்டிக்கிட்டு பட்டணத்துக்கு போறீங்களோ, அப்படியே நானும் என்னைப் பெத்தவங்களைக் கூட்டிக்கிட்டு பட்டணத்துக்கு வந்துருவேன். எல்லாரும் ஒண்ணா, கூட்டுக்குடும்பமா இருக்கலாம். இப்பெல்லாம் எல்லாரும் தனிக்குடும்பமா போயிடுறாங்க; நாம ஏன் ஒண்ணா இருக்கக்கூடாது?

இரண்டாவது — ஒண்ணா இருக்கிறது சரிப்பட்டு வராதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா, மேல்கீழ் வீடா பார்த்துக்கலாம். ஒருத்தர் மேலேயும், இன்னொருத்தர் கீழேயும் இருப்போம். ஆக மொத்தத்தில், தனித்தனியா உடைந்து போகாம இருக்கலாம்.

யாரையும் விட்டு யாரும் பிரிய வேண்டாம். கல்யாணத்திற்கு முன்பு வெவ்வேறு குடும்பமாக இருந்த நாம், இப்போது ஒரே குடும்பமாக இருக்கலாம். ஏன் நாமே முன்னுதாரணமாக இருக்கக்கூடாது? சொல்லுங்கள்.”

சாரங்கன் சொல்லி முடித்ததும், பெண் வீட்டார் — குறிப்பாக மைதிலியின் அம்மாவும் அப்பாவும் — ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ‘என்ன தம்பி, புதுசாக ஏதோ சொல்கிறாரே! ஒன்றும் புரியலையே… அது சாத்தியமா?’ என்று அவர்கள் கண்களாலேயே பேசிக்கொண்டனர்.

“தம்பி, நீங்க இப்படி ஒரு யோசனை சொல்வீங்கன்னு நாங்க நினைக்கல,” என்று மைதிலியின் அப்பா சொன்னார்.

“நான் சொல்லும் கருத்து உங்களுக்கெல்லாம் புதுசாக இருக்கலாம். யாரும் பிரிந்து வாடக் கூடாது. நான் சொல்றதை கொஞ்சம் யோசிச்சு பதில் சொல்லுங்க,” என்றான் சாரங்கன்.

அந்த நேரம் வரை அமைதியாக இருந்த மைதிலி மெதுவாக வெளியே வந்து நின்றாள். எல்லாருடைய பார்வையும் அவள் மேல் திரும்பியது. அவள் சிறிது தயங்கினாள். பிறகு மெதுவாகச் சொன்னாள்:

“நீங்க பேசினதைத்தான் முன்னமே யோசிச்சு வைத்திருந்தேன். நீங்க சொல்லக்கூடாத எதையும் சொல்லல. பெரியவங்களுக்கு இது கொஞ்சம் புதுசா இருக்கும்; அதனால அவங்க இதை எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. ஏன் அவங்க யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுக்கக்கூடாது? அவங்களும் இதை நல்லா யோசிச்சுட்டு அப்புறம் நல்ல முடிவா எடுக்கலாமே.”

வீடு திரும்பி வந்து நடந்ததைச் சொல்லியபின், சுமதி அவனைப் பார்த்து தயக்கத்தோடு கேட்டாள்:

“என்னடா, அது சரிப்பட்டு வருமாடா?”

“ஏம்மா, ஏன் சரிப்பட்டு வராது?”

“அங்க என்ன சொன்னாங்க?”

“அவுங்க யோசிச்சுப் பதில் சொல்லறோம்னு சொன்னாங்க. அதுவும்…” என்று சிறிது இடைநிறுத்தம் எடுத்தான்.

“அதுவும் என்னடா?”

“மைதிலியும் பேசினா. நான் சொன்னதை முன்னமே யோசிச்சு வைத்திருந்தேன்னு சொன்னா. பெரியவங்களுக்கு இது புதுசா இருக்கும்; அவங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுக்கணும்னும் சொன்னா.”

சுமதி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஆச்சரியமும் சிந்தனையும் கலந்திருந்தது.

சாரங்கன் சிரித்தபடி சொன்னான்:

“காலம் மாறுதும்மா; நாமும் கொஞ்சம் மாறித்தான் ஆகணும்.”

அவன் சொல்லியதைக் கேட்ட சுமதி, ஆச்சரியமாக அவன் முகத்தையே நோக்கிக் கொண்டிருந்தாள். சுமதியின் கண்களில் அமைதியோடு ஒரு புரிதல் தெரிந்தது.

பாலமுருகன் லோ.


Series Navigationஆண் பால் – 8இணைய இயலாத இதயங்கள்