This entry is part 7 of 8 in the series 26 ஏப்ரல் 2026

‘தேவவிரதன்’

அன்புள்ள நண்பர் சேகருக்கு,

உங்களை இனிமேலும் கணவர் என்ற பெயர் சொல்லி செயல் படுவது முறையானது என்று என் மனதிற்கு தோன்றவில்லை. அதனால்தான் உங்கள் பெயரை ஓர் நண்பரை குறிப்பிடுவது போல் பதிவு செய்கிறேன்.

கிட்டத்தட்ட மூன்று நீண்ட வருஷங்களுக்கு பின் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன் என்பதை விட தள்ளப்பட்டிருக்கிறேன் என்ற வார்த்தையே பொருத்தமானதாக இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. நம் கல்யாணம் ஒன்றும் காதல் திருமணம் அல்ல; ‘நாலும் தெரிந்ததாக’ கூறிக்கொள்ளும், நம் ஊர் பெரியவர்கள் பார்த்து இணைத்த உறவுதான் இது. உண்மைதான். நம் நிச்சயதார்த்தம் ஆன பின்னர் நாம் ஓர் சில சமயங்களில் சந்ததித்து பேசியது உண்மைதான். ஆனால், அந்த பேச்சில் எந்த மன உணர்வுகளும் பகிர்ந்து கொள்ள படவில்லை என்பதும் உண்மைதான். ஏதோ பேசினோம். மகிழ்ச்சி அடைந்தோம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நம்மிடையே பகிர்ந்து கொள்ள நம் அலுவலக விஷயங்கள், ஓர் சில நண்பர்கள் தவிர வேறு எதுவுமே இல்லை. எனக்கு சங்கீதம் கர்நாடகமோ, மெல்லிசையோ பிடிக்கும். உங்களுக்கு விளையாட்டு அதுவும் குறிப்பாக கிரிக்கெட் என்ற விளையாட்டை தவிர வேறெதுவும் தெரியாது. அதிலும் உங்களுக்கு எந்த ஆழ்ந்த ஆர்வமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

உங்களின் ஆர்வம் எல்லாம் பணம் சேர்ப்பதில் மட்டுமே இருந்தது. அதனால் பல நேரங்களில் நீங்கள் மிகவும் கேவலமாகவும், கருமித்தனமாகவும் நடந்து கொள்வதை என்னால் கட்டாயமாக சகித்து கொள்ள முடியவில்லை. என் சம்பளத்தை கூட பைசா விடாமல் வாங்கி கொள்கிறீர்கள். இதை நான் குற்றமாக கருதுவதில்லை; ஆனால், இந்த ஆக்ரமிப்பு இந்த காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது என்பதை என்னால் மறுக்க முடியாது.

தவிர, எந்த வகையிலும், எனக்கு உங்களுக்கும் ஓர் சந்திக்கும் புள்ளியே இல்லை. எல்லாமே வேறு வேறாகவே இருக்கிறது. இது உங்கள் குணம். அதற்கு எதிர்மறையானது என் குணம். அவரவர்க்கென்று உலகில் மனதில் ஓர் ‘தனி இடம்’ . அதை மறுக்க எவராலும் முடியாது. ஆனால், அப்படி ஒன்று இல்லாதவர்களும்  இருக்கின்றனர்.

நான் திருமணமான நாளில் இருந்து பார்த்து வருகிறேன். உங்கள் சுயநலமும், பணத்தாசையும்தான் உங்கள் எல்லா விதமான நடவடிக்கைகளிலும் எந்தவிதமான திரைகளும் இன்றி வெளிப்படுகிறது. அது எனக்கு பல நேரங்களில், உண்மையாக சொன்னால் அருவருப்பையே தோற்றுவிக்கிறது. நான் பட்டியலாக நிகழ்ச்சிகளை விவரிக்க விரும்பவில்லை. அது இன்னும் அசிங்கம், ஆபாசம்.

இந்த நிலையில் நாம் இருவரும் பிரிவதே நல்லது என்று தோன்றுகிறது. நான் எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி பிரிவதற்கு ஒப்பு கொள்கிறேன். நான் ஏன் இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்றால், உங்கள் எதிர்காலத்தில் நீங்கள் உங்களுக்கு ஏற்ற, பிடித்த வாழ்க்கையை அமைத்து கொள்ள உதவியாக இருக்கும் என்பதற்காக.

என் நிபந்தனைகள் அற்ற கடிதத்தை இதனுடன் என் நண்பரான ஓர் வக்கீலிடம் கேட்டு எழுதி வைத்திருக்கிறேன்.

இருப்பது ஓர் பிறவி; அதில் ஏகப்பட்ட உடன்படிக்கைகள், தியாகங்கள் செய்து கொண்டு வாழ நான் கண்ணகியோ, நளாயினியோ அல்ல.

என்னை தேட முயற்சிக்க வேண்டாம். என்னை மறந்து நீங்கள் உங்கள் புது வாழ்க்கையை தொடரலாம்.

கவிதா.

********

கடிதத்தை மடித்து ஓர் உரையில் போட்டுவிட்டு, ஹாலில் இருந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் மேல் வைத்தாள்.  தனக்கு தேவையான பொருட்களுடன் தயார் செய்து வைத்திருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு, வீட்டை பூட்டி விட்டு, சாவியை தபால்களுக்காக வைத்திருந்த கதவுக்கு அருகில் இருந்த பெட்டியில் போட்டு விட்டு கிளம்பினாள் கவிதா.

*********

ஆனால், அவளுக்கு கிட்டத்தட்ட இதே போன்ற ஓர் கடிதத்தை அவள் கணவன் சோமசேகர் படுக்கையறை மேசை மேல் வைத்து விட்டு போயிருக்கிறான் என்று தெரியாது.

*********

காலை பத்து மணிக்கு திருவனந்தபுரம் செல்லும் விமானத்தில் கவிதா ஏறிய அதே நேரத்தில், அவள் கணவன் சோமசேகர் கொல்கத்தா செல்லும் விமானத்தில் அதே சென்னை விமான நிலையத்தில் ஏறி அமர்ந்திருந்தான்.

Series Navigationகாலம் மாறுதும்மாகாற்றுவெளி மின்னிதழின் சிறப்பிதழ்கள்:2026