அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
சேனைகளின் கர்த்தரே நின்
திருவிலம் அளவற இனிதினிதே
வானவானங்கள் கொள்ளாத
ஈன ஆன்மாவைத் தள்ளாத
திருவருளிலமே கணுறும் உணரும்
தெருளம்பகமே இனிதுறும் நிசமிது
ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே இனிதே
இகபர நலமொளிர் இதமிகு பெயருள
எமதரசெனும் நய
கிறித்துவக் கீர்த்தனை
குத்தீட்டி மாமா, சிம்பாரி மலை, பாபுவா நியூ கினியா
காலைப் பொழுதில், நான் எனது குடிலில் இருந்து, காட்டு வேலைகளுக்காகக் கிளம்பிக்கொண்டு இருந்தேன். பனைமரங்களில் ஏறி, காய்ந்துபோய்க் கிடக்கும், பனை ஓலைகளை, வெட்டி விட வேண்டும்,
பனங்குருத்துக்களைச் சீவி விட்டு, பனங்கள்ளுப் பானைகளை பொருத்திவிட வேண்டும். பொருத்திவிட்ட பானைகளில் இருந்து, பனங்கள்ளு சேகரிக்க வேண்டும்.
நிறைய வேலைகள் இருந்தது. ஆனால், நேற்று அந்த ஜேம்ஸ் பாதர் பேசிய பேச்சைக் கேட்டு, எனது மனது மிகவும் பாரமாக இருந்தது. மனசு சரியில்லாததால், எனக்கு கொஞ்சம் களைப்பாகவும் இருந்தது
நேற்றைய சொற்பொழிவில், புதிதாக வந்திருக்கும் பாதர் பேசிய பேச்சுக்கள், எனக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதுவும், அவர் பேசிய அனைத்தையும். அங்கே இருந்த, சிம்பாரி இளைஞர்கள், கைதட்டி ஆமோதித்ததை, என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
ஜேம்ஸ் பாதர், கிறித்தவ மதத்தின் புகழ் பற்றி என்ன வேண்டுமாலும் பேசிவிட்டுப் போகட்டும். எனக்கும் கூட இயேசுவின் பாடுகள் குறித்து மற்றவர் பேச, அதைக் கேட்க, நிறையவே பிடிக்கும்.
ஆனால், அதற்காக, ஏன் சிம்பாரி மதத்தைக் கேவலப்படுத்த வேண்டும்? ஒரு சிம்பாரி இன மனிதன், காட்டிலே வாழ்ந்ததால், அவனுக்கு மூளை இல்லாமல் போய் விடுமா? அவன் எதையும் சிந்தித்துச் செயல்பட மாட்டானா?
நான், இப்படி நினைத்துக்கொண்டு இருக்கையிலேயே, வில்லாளன், எனது குடிலுக்குள் வந்து நின்றான்.
“குத்தீட்டி மாமா, எப்படி இருக்கீங்க?” என்று அவன் கேட்டபோது, நான் எதுவும் பேசவில்லை.
“என்ன மாமா.. எதுவுமே பேச மாட்டேங்கறீங்க? நான், உங்கள் ஆண்பால் குடித்து வளர்ந்தவன் மாமா… நீங்கள் எனது வனவாசத்தின்போது, எனக்கு எத்தனையோ அறிவுரைகள் சொன்னிர்கள். அன்று நீங்கள் சொன்ன அறிவுரைகளே, இன்று, என்னை ஒரு மனிதன் ஆக்கியிருக்கிறது மாமா” என்று வில்லாளன் என்னிடம் சொன்னபோது, எனக்கு அந்த வார்த்தைகள், வேதனையைக் கொடுத்தது.
“வில்லாளா.. அதனால்தான் நேற்று அந்த ஜேம்ஸ் பாதர், நம் மதத்தை அவமதித்த போது, நீ பார்த்துக்கொண்டே இருந்தாயா?”
வில்லாளன், எதுவும் பேசாது, என்னையே பார்த்துக்கொண்டு இருந்தான். எனக்குக் கோபம் வந்தது.
“வில்லாளா.. நம்மைக் காட்டுமிராண்டி என்று சொல்கிறார் அந்த ஜேம்ஸ் பாதர். காட்டுப் பறவைகளை, வேட்டையாடிப் பிடித்த வெற்றியின் அடையாளமாக, நம் இன ஆண்கள், அதன் இறக்கைகளை, தங்கள் தலையில் செருகிகொள்கிறார்கள். காட்டுப் பன்றிகளை, வில்லேந்திக் கொன்ற வெற்றியின் நினைவாக, மூக்கில், அந்த பன்றிக் கொம்புகளை, மூக்கில் அணிந்துகொள்கிறார்கள். இப்படி எப்போதும், தங்கள் வெற்றியையும், ஆண்மையையும், உலகிற்கு சொல்பவன் பெயர், காட்டுமிராண்டியா?”
இப்போதும் வில்லாளன் எதுவும் பேசவில்லை.
“வில்லாளா.. நான் இப்படியே, தலைநகரில் இருக்கும், உங்கள் தெருச்சபைத் தெருவில் நடந்துபோனால், நாய்கள் என்னைக் கடிக்கலாம். ஆனால், அதே போல், நீ உனது கீழே போட்டு இருக்கும் குழாய்த் துணி, மார்பில் போட்டு இருக்கும் சட்டை, இவற்றோடு, நம் காட்டிற்குள் போய்ப் பார்… காட்டுப்பன்றி கூட, உன்னைப் பார்த்து பயப்படாது.”
“இடத்திற்கு தகுந்த உடை. காட்டுக்குத் தகுந்த உடை. இதில், எங்கே இருந்து வந்தது… காட்டுமிராண்டித்தனம்? தன்னைத் தானே, தற்காத்துக் கொள்வதற்கு ஏற்ப அல்லவா நாங்கள் அணிகிறோம் உடை?”
வில்லாளன் நயந்து பேசினான். “மாமா.. ஜேம்ஸ் பாதர் மிகவும் நல்லவர். ஆண்பால் குடிப்பது போன்ற நமது பழக்கவழக்கங்களை, பொதுமேடையில், அப்படிக் கேவலமாகப் பேசுகிறாரே ஒழிய, ஜேம்ஸ் பாதர் ஒரு நல்ல சிந்தனாவாதி.” என்று வில்லாளன் என்னிடம் சொன்னபோது, எனக்கு கோபம் இன்னும் வந்தது.
“வில்லாளா… என்னிடம்தானே, நீ ஆண்பால் குடித்தாய். ஆனால், இப்போது, நீ ஒரு குழந்தைக்குத் தந்தை என்று. நேற்று நான் கேள்விப்பட்டேன். இப்போது சொல்.. ஆண்பால் குடித்ததால், நீ என்ன பெண்ணாகி விட்டாயா?”
“இல்லை மாமா.. நீங்கள் சொல்வது உண்மைதான். சொடோமி என்ற தன்பாலின ஈர்ப்பை, கிறித்துவமதம் ஏற்றுக்கொள்ளவில்லை மாமா.. அதனால்தான், அவர் அப்படிப் பேசுகிறார் மாமா” என்று வில்லாளன் சொன்னபோது நான் சிரித்தேன்.
“ஆனால் நம் மதம் அப்பேர்ப்பட்டோர் மீதும் கருணை காட்டுகிறது வில்லாளன். அப்பேர்ப்பட்டோரை க்வொலு ஆட்ம்வால், என்ற மூன்றாம் பாலினம். ஆக்கி, அவர்களையும் நம் இனம் வாழ வைக்கிறது வில்லாளன். ஆனால், கிறித்துவமதம் மூன்றாம் பாலினத்தை என்ன செய்கிறது? அவர்களை சாகடிக்க அல்லவா செய்கிறது வில்லாளன்?”
“இப்போது சொல், எந்த மதம், காட்டுமிராண்டித்தனமான மதம்? காரணமின்றிக் கொலை செய்யும் கிறித்துவ மதம் அல்லவா?
எனது இந்த வார்த்தை, வில்லாளனைக் கோபப்படுத்தி இருக்கவேண்டும். அவன் உரக்கக் கத்தினான். “மாமா.. அது காலப்போக்கில், கிறித்துவ மதத்தில் சரியாகிப் போய்விடும் மாமா.. ஆனால், உண்மையை நீங்கள் ஒத்துக்கொள்ளுங்கள். மசளையான் போன்ற மாந்தரீகவாதிகள்தான், இந்த சிம்பாரி இனத்தை ஆள்கிறார்கள். இது கேவலம் இல்லையா மாமா?”. அவனது, இந்தப் பேச்சுக்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.
“மந்திரவாதமும், தந்திரவாதமும் தெரிந்த ஒருவன், எப்படி இறைவனின் தூதர் இயேசுவைப் போல், இறைவனுடன் பேசமுடியும்? எப்படி இறைவனின் தூதன் ஆக முடியும் மாமா? மசளையான் போன்ற அயோக்கியர்களை நம்பும், உங்கள் மதம், ஒரு காட்டுமிராண்டி மதம்தானே மாமா?”
என்னிடம் சரியான பதில் இல்லை. “மாப்பிள்ளை, நம் இன மக்களை பயமுறுத்தி வைக்க, மசளையான் போன்ற ஒருவர் தேவை மாப்பிள்ளை..”
நான் இப்படிச் சொன்னவுடன், வில்லாளன் இன்னும் அதிகமாகக் குரல் உயர்த்தினான்.
“மாமா.. நீங்கள் பேசுவதில் எந்த நியாயமும் இல்லை மாமா.. பயமுறுத்துகிறேன் என்ற பேரில், மசளையான், நம் இன மக்களை, ஒவ்வொருவராகக் கொன்று கொண்டு இருக்கிறான் மாமா. அதுவும், கிறித்துவ மதத்தைத் தழுவியவர்கள் ஆகப் பார்த்துப் பார்த்து, அந்த அப்பாவிகளை, மசளையான், கருணையே இல்லாமல், கொல்கிறான் மாமா.. அவனை தண்டிக்கவே, இங்கே ஜேம்ஸ் பாதர் வந்து இருக்கிறார் மாமா”
வில்லாளன் இப்படிச் சொன்னபோது, எனது குரல் தாழ்ந்து போனது.
“சரி வில்லாளன் மாப்பிள்ளை.. நீ இந்த அதிகாலையில், எனது குடிலுக்கு வந்ததன் காரணம் என்ன? அதைச்சொல்லு” என்றேன்.
வில்லாளன், தயங்கித் தயங்கி பேசினான்.
“மாமா.. நான் பூவரசியைப் பார்க்க வேண்டும் மாமா.. அவள் எங்கு இருக்கிறாள் என்று, நிச்சயம் உங்களுக்குத் தெரியும் மாமா..” வில்லாளன் இப்படிச்சொன்னபோது, எனக்கு மறுபடியும் கோபம் வந்தது.
“நீதான் அவளை விட்டுவிட்டு ஓடிப்போய் விட்டாயே.. இப்போது இன்னொரு பெண்ணைக் கட்டிக்கொண்டு, குடியும் குடித்தனமும் ஆக இருக்கிறாயே… அப்புறம் எதற்கு உனக்கு பூவரசி?” நான் சிரித்தேன். ஆனால், வில்லாளனோ அழுதான்.
“குத்தீட்டி மாமா.. காதல் என்பது என்னைப்பொறுத்தவரை ஒரு முறைதான். பூவரசியை விட்டுவிட்டுச் சென்றதுதான், நான் செய்த பாவங்களில் பெரிய பாவம். அதற்கு நான் ஏதாவது, பிராயச்சித்தம் செய்யவேண்டும் மாமா. அவளுக்கு ஏதாவது நல்லது செய்யவேண்டும் மாமா.. அவளைப் பார்க்கவேண்டும் மாமா” வில்லாளன், என் கால்களைப் பிடித்து கெஞ்சினான். எனக்கு அவன் மீது இரக்கம் வந்தது.
“சரி.. அவள் தூரத்து கிராமத்தில், இப்போது இருக்கிறாள். அங்கே உன்னை நான் கூட்டிப்போகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை” என்றேன்.
வில்லாளன், எதுவும் பேசாது என்னைப் பார்த்தான். நான், தொடர்ந்தேன்.
“மசளையான் குறித்த உனது கோபத்தை நீ கைவிட வேண்டும். அவனோடு, இனி எப்போதும் நண்பனாக இருக்கவேண்டும். அவனை நீ ஒன்றும் செய்யமாட்டாய் என்று, சத்தியம் செய்” என்று, என் கைகளை, வில்லாளன் முன் நீட்டினேன்.
வில்லாளன் ரொம்ப நேரம் யோசித்தான். அவன் யோசிக்க நான் அவகாசமும் கொடுத்தேன்.
கடைசியில் வில்லாளன், “சரி மாமா.. இது சத்தியம்” என்றான்.
நாங்கள் இருவரும், ஒருவரை ஒருவர், ஆரத் தழுவிக் கொண்டோம்.
யாரோ, வாசலில் இருந்து, விருட்டென்று ஓடும் சத்தம், எனக்குக் கேட்டது.
நான் வாசலுக்கு விரைந்தேன். என்னைப் பின்பற்றி, வில்லாளனும் வாசலுக்கு ஓடி வந்து பார்த்தான்.
அது யாருமல்ல.. ராபர்ட் பையன்தான், இங்கே பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு ஓடுகிறான்.
“போகட்டும் மாமா.. இவனால் நமக்கு ஒன்றும் பாதிப்பில்லை… சுள்ளான் பையன்” என்று வில்லாளன் சொன்னவுடன், நான் சிரித்தேன். வில்லாளனும் சிரித்தான்.
பாதிரியார் ஜேம்ஸ், சிம்பாரி மலை, பாபுவா நியூ கினியா
நான் காலையிலேயே எழுந்து விட்டேன். எனது காலைக்கடன்களையும் முடித்து விட்டேன். எனது காலைக்கடன்களைக் கழிக்க, தலைநகரில் இருக்கும் திருச்சபை போல, இந்த மலையில் எந்த வசதிகளும் இல்லை.
எனக்கோ வெளிப்புறத்தில், குத்தவைத்து வெளிக்குப் போய், அவ்வளவு பழக்கமும் இல்லை. நான், நிறையவே சிரமப்பட்டுவிட்டேன். நான் முன்னர் வேலை பார்த்த லாமிங்டன் மலையில், திருச்சபை இருந்தது. ஆனால், இங்கே, இன்னும் திருச்சபை எழுப்பப்படவே இல்லை.
எப்படியோ எல்லாம் முடிந்து, நான் பைபிள் படிக்க உட்கார்ந்து விட்டேன். இன்று, மறுபடியும் எனது சொற்பொழிவு இருக்கிறது. “நல்ல குடும்பம்” என்ற தலைப்பில் இன்று நான் பேசவேண்டும். அதற்கான குறிப்புக்களை, பைபிள் வசனங்களில், நான் தேடிக்கொண்டு இருந்தேன்.
“பாதர்… நீங்க செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லை பாதர்…” என்றபடியே, எனது குடிலுக்குள், கோபமாக நுழைந்தான் வில்லாளன்.
நடந்தது என்னவாக இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அதனால், நான் அமைதி காத்தேன்.
வில்லாளன் கண்களில், இப்போது கண்ணீர். “பாதர்… நீங்க என்னை சந்தேகப் படலாமா? நானும் கிறித்துவின் பிள்ளைதான் பாதர்…” வில்லாளன் லேசாக அழுதான்.
“என்ன நடந்தது வில்லாளன்? நடந்ததைச் சொல்” என்றவுடன், வில்லாளன், குத்தீட்டி வீட்டிற்குப் போனது.. அங்கே பேசியது… ராபர்ட் அங்கே, வில்லாளனை வேவு பார்த்தது, என எல்லாவற்றையும், வில்லாளன் சொல்லச் சொல்ல, நான், அமைதியாகக் கேட்டுக்கொண்டேன்.
வில்லாளன் பேசி முடிப்பதற்குள், ராபர்ட்டே உள்ளே நுழைந்தான். வில்லாளன் அங்கே நிற்பதைப் பார்த்து அவன் பயந்து போனான்.
நான், நிலைமையை இன்னும் தீவிரப்படுத்த விரும்பவில்லை. எனவே, வில்லாளன் மற்றும் ராபர்ட் இருவரையும் சமாதானப்படுத்தினேன்.
“வில்லாளன்.. உன்னை உளவு பார்க்க, ராபர்ட்டை அனுப்பியது நான்தான். நேற்று நீ, குத்தீட்டியிடம் பேசியதைப் பார்த்து, எனக்கு உன் மீது சந்தேகம் வந்தது. எனவேதான், ராபர்ட்டை, உன் பின்னால் அனுப்பி வைத்தேன்.
வில்லாளன் இடைமறித்தான். “எதுக்காக என்னை உளவு பாக்கணும் பாதர்.. உங்களைத் தாண்டி, இதுவரை, நான் என்ன செய்து இருக்கேன் பாதர்?”
இப்போது ராபர்ட் குறுக்கிட்டான்.. “அப்புறம் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க குத்தீட்டிமாமாக்கிட்டே ஏன் அப்படிப் பேசினீங்க வில்லாளன் அண்ணா?” என்றபோது, நான் வில்லாளன் முகத்தைப் பார்த்தேன்.
“ராபர்ட்.. நீ என்னைத் தப்பாகப் புரிந்து வைத்து இருக்கிறாய். பாதர் பேசிய கூட்டத்தில், குத்தீட்டி மாமா, பாதரை எதிர்த்துப் பேசியதில், எனக்கு முழு உடன்பாடில்லை. ஆனாலும், அன்று பாதர் சொற்பொழிவில், ஆண்பால் குறித்து, அப்படிக் கொஞ்சம் கடுமையாகப் பேசி இருக்கவேண்டாம்… அதுதான் குத்தீட்டி மாமாவை அதிகம் கோபப்பட வைத்த விஷயம்… அதனால், நான் குத்தீட்டி மாமாவை, கொஞ்சம் நடித்து, சமாதானம் செய்ய வேண்டியதாயிற்று.” என்றவுடன், ராபர்ட், மறுபடியும் குறுக்கிட்டான்.
“ஏதோ குத்தீட்டி மாமாவிடம் சத்தியம் செய்தீர்களே வில்லாளன் அண்ணா?” என்றவுடன், வில்லாளன் சிரித்தான்.
“ஆமாம்.. சத்தியம்.. சர்க்கரைப் பொங்கல்.. எனக்கு உண்மையில் பூவரசி தங்கியிருக்கும் இடம் பற்றித் தெரியவேண்டும். அவள் இருக்கும் இடம்.. குத்தீட்டி மாமாவுக்கு நிச்சயம் தெரியும்.. அதனால்தான் அந்தப் போய்ச் சத்தியம்” வில்லாளன் சிரித்தான். ராபர்ட்டும் சிரித்தான். நானும் சிரித்தேன்.
“நாம் கிறித்துவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது..” என்றேன்.
நான் பேசியதற்கு, வில்லாளன் எதுவும் பேசாமல், கொஞ்ச நேரம் இருந்தான். அவன் ஏதோ, யோசிக்கிறான் என்று தெரிந்தது.
“என்ன யோசிக்கிறாய் வில்லாளன்? என்ன பலமான யோசனை?”
வில்லாளன் பேசினான்.. “இல்லை பாதர் எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.
நான், ‘என்ன சந்தேகம்?’ என்பது போல, அவனைப் பார்த்தேன். வில்லாளன் தொடர்ந்தான்.
“இல்லை பாதர்.. நமது கிறித்துவ சபையின், ஒரு முக்கியக் கொள்கை.. பன்முகத்தன்மை.. தம்பி ராபர்ட் கூட, மலையேறும்போது, இது பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்.” வில்லாளன் நிறுத்தி, நிதானமாகப் பேசினான். நான், அவன் பேசுவதை, கவனமாகக் கேட்டேன்.
“பாதர்.. நம் கிறித்துவ மத, பன்முகத்தன்மைக் கொள்கையின் படி, மற்ற மதங்களின் எல்லா சாமிகளிலும், நமது கர்த்தர்தான் இருக்கிறார், என்று நம்புகிறோம். அப்படி, இருக்கையில், எங்களது, சிம்பாரி இனத்தின் நல்ல பழக்க வழக்கங்களையும், இங்கே, இந்தத் திருச்சபையில், இணைத்துக் கொள்ளக் கூடாதா? அப்படி, நாம் இணைத்தால், இங்கே இருக்கும், நமது எதிரிகள், குறைந்துபோய் விட மாட்டார்களா பாதர்?”. வில்லாளன் பேச்சை நிறுத்தினான். நான், தொடர்ந்தேன்.
“அது அடுத்த கட்டம் வில்லாளன். முதலில், இங்குள்ள மக்கள், கிறித்துவத்தை நம்பவேண்டும். அதற்கு, முதலில் அந்த மாந்தரீகவாதி, மசளையான் ஒழிய வேண்டும். மசளையானை ஒழிக்கத் தடையாக, யார் இருந்தாலும், அவர்களும் அழிக்கப்பட வேண்டும்” என்று, நான் சொன்னபோது, வில்லாளனும், ராபர்ட்டும் அதை ஆமோதித்தார்கள்.
“வில்லாளன்.. யாரோ, இந்த மலையின் நாட்டாமையாமே.. குத்தீட்டியைப் போல, அவருக்கும் மசளையான் இருக்கும் இடம் தெரியுமாம்.. இங்குள்ள நம் மக்கள் பேசிக்கொள்கிறார்கள். யார் அந்த நாட்டாமை வில்லாளன்?”
“எனக்கு பழைய நாட்டாமையைத்தான் தெரியும். இப்போதுள்ள நாட்டாமை யார் என்று தெரியாது. எனவே புதிய நாட்டாமையை, நான் முதலில் கண்டுபிடிக்கிறேன் பாதர்” என்றான் வில்லாளன்.
நான், கொஞ்சம் ஆவேசமாகச் சொன்னேன். “கண்டுபிடித்தால் மட்டும் போதாது வில்லாளன். அந்த நாட்டாமையைக் கண்காணிக்கவேண்டும். அவன் மூலம், மசளையான் இருக்கும் இடம் தெரிந்துகொண்டு, மசளையான் கொல்லப்பட வேண்டும்… அப்போதுதான், இங்குள்ள மக்கள், நம்மை நம்புவார்கள்”
“செய்கிறேன் பாதர்” என்று வில்லாளன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, குத்தீட்டி, அவனது குடிலை விட்டு, எங்கோ வெளியே கிளம்பிப் போவதை, நாங்கள் மூவரும் பார்த்தோம்.
ராபர்ட், குத்தீட்டியைப் பின் தொடர்ந்தான். வில்லாளன், நாட்டாமையைத் தேடிப் போனான். நான் சொற்பொழிவிற்குத் தயார் ஆனேன்.
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்