This entry is part 4 of 8 in the series 26 ஏப்ரல் 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

பாடித் துதி மனமே பரனைக்

கொண்டாடித் துதி தினமே

நீடித்த காலமதாகப் பரன் எமை

நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்து

பாடித் துதி மனமே பரனைக்

கொண்டாடித் துதி தினமே

தீர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்

செப்பின் தேவபரன் இந்தக் காலத்தில்

மார்க்கமதாகக் குமாரனைக் கொண்டு

விளக்கின அன்பை விழைந்து தியானித்துப்

பாடித் துதி மனமே பரனைக்

கொண்டாடித் துதி தினமே

தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் – கீர்த்தனை

பாதர் ஜேம்ஸ், சிம்பாரி மலை, பாபுவா நியூ கினியா

“சுமை சுமந்து சோர்ந்திருப்போரே, என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற மத்தேயு 11:28 வசனத்தை, உரக்கச் சொல்லி, அந்த சிம்பாரி மலையில், நான் எனது, முதன்முதல் சொற்பொழிவைத் தொடங்கினேன்.

மேடையில், என்னோடு சிம்பாரி போதகர் வில்லியம்ஸிம், வில்லாளனும் அமர்ந்து இருந்தார்கள். அந்த சிம்பாரி போதகர் வில்லியம்ஸ், நான் ஆங்கிலத்தில் பேசுவதை, சிம்பாரி மொழியில், மொழி பெயர்த்து, சிம்பாரி மக்களுக்குப் புரியும்படி, பேசிக்கொண்டு இருந்தார்.

நேற்று என்னோடு மலை அடிவாரத்தில் இருந்து ஏறி வந்த அத்தனை சிம்பாரி மாணவர்களும், இன்றும் எனது சொற்பொழிவைக் கேட்க வந்து இருந்தார்கள்.

கூடவே, அந்த மாணவர்கள் கூட்டி வந்து இருந்த உறவினர்களும், ஒரு பெருங்கூட்டமாக, சொற்பொழிவைக் கேட்க, ஆர்வமாக வந்து இருந்தார்கள். நான், உண்மையில் இவ்வளவு கூட்டத்தை எதிர்பார்க்கவில்லை.

“பிதா, சுதன், பரிசுத்த ஆவி… இவர் மூவரும், நமது கிறித்தவ மதத்தின், திரியேக இறைவன் (Trinity) கொள்கை சொல்லும் ஆன்மீகக் கோட்பாடுகள். இது தந்தை, மகன் (இயேசு), மற்றும் தூய ஆவியானவர் ஆகிய மூன்று நபர்களும், ஒரே இறைவனாக இணைந்திருப்பதைக் குறிக்கும்,” கூட்டம், அமைதியாக இருந்தது. நான், கேள்வி கேட்டேன்.

“கர்த்தரின் பிள்ளையான இயேசுவை, நம் நல்வாழ்விற்காக, ஆண்டவர் நமக்கு, இந்த பூலோகத்துக்கு அனுப்பி வைத்தார் என்பதை, நீங்கள் நம்புகிறீர்களா?” என்று நான் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டேன்.

எனது கேள்விக்கு, கூட்டத்தில், பலரும், “ஆம்.. ஆம்” என்று குரல் எழுப்பினர். நான், தொடர்ந்தேன்.

“உங்கள் சிம்பாரி மதத்தில், கர்த்தர் நமக்காக அனுப்பிய இயேசு போன்ற, கடவுளோடு பேசக்கூடிய தெய்வம் இருக்கிறதா? “கடவுளோடு நான் பேசுகிறேன்” என்று, உங்கள் மதத்தில், சொல்லிக்கொண்டு திரிபவன், உண்மையில், ஒரு மாந்தரீக வாதி என்பது உங்கள் அனைவருக்கும் தெரியுமா?”

இப்போது, “ஆம் ஆம்” என்று, வந்திருந்த கூட்டத்தின், ஒரு பாதியினர் மட்டுமே சொன்னார்கள். மறு பாதியினர், எந்த வித பதிலும் சொல்லாமல், அமைதியாக இருப்பதை, நான் கவனித்தேன்.

நான் தொடர்ந்தேன். “நீங்கள் இதுவரை நம்பிய இந்த சிம்பாரி மதம்.. ஒரு காட்டுமிராண்டி மதம் என்பதை, நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?”

நான் சிம்பாரி மதத்தை, காட்டுமிராண்டி மதம் என்று சொன்னபோது, கூட்டத்தில், பெரிய சலசலப்பு எழுந்ததை நான் கவனித்தேன்.

என் பேச்சில், இப்போது ஆவேசம் வந்தது. “மக்களே.. மாந்தரீகம், தாந்த்ரீகம் தெரிந்தவர்கள், உண்மையில், கடவுளோடு பேசுகிறவர்கள் அல்ல. மாறாக, சைத்தானோடு பேசுகிறவர்கள்…”

“சைத்தான்களுக்கு, மனிதர்களை விட அதிக வல்லமை இருந்தாலும், அவை கடவுளின் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவை. இயேசு கிறிஸ்துவின் பெயரால் அப்படிப்பட்ட சைத்தான்களைத் துரத்தப்பட முடியும் என்று பைபிள் கூறுகிறது.”

“எனவே.. உங்கள் மாந்தரீகவாதி, மசளையானை நம்பாதீர்கள். நீங்கள், கர்த்தரின் பிள்ளையான, இயேசுவை நம்புங்கள்.. அல்லேலூயா” என்று நான் உரக்கக் குரல் கொடுத்தபோது, “அல்லேலூயா.. அல்லேலூயா” என்று, கூட்டத்தில் பாதிப் பேர், உறசாகமாக மறுகுரல் கொடுத்தார்கள்.

“சிம்பாரி மக்களே.. நம்புங்கள்.. எந்த மதத்திலும், ஒரு ஆணுக்கு, இன்னொரு ஆண், விந்து பருகக் கொடுப்பது இல்லை. ஆனால், சிம்பாரி மதம்.. அந்த விந்துவை, புனிதமான ஆண் பால் என்று, உங்களிடம் பொய்யுரைக்கிறது”

நான் அப்படிச் சொன்னவுடன், கூட்டத்தில் இருந்து ஒருவர் ஆவேசமாக எழுந்தார். “நீங்கள் சொல்வதுதான் பொய். நாங்கள் ஒரு பெண்ணின் முலைப்பாலைப் போலவே, ஆணின் பாலையும், புனிதமாக நினைக்கிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்று அந்தப் பெரியவர் சொன்னபோது, நான் அவரிடம், நிதானமாகப் பேசினேன்.

“அய்யா பெரியவரே.. ஒரு ஆணின் விந்தில், கிருமிகள் இருக்கிறது என்பது, உங்களுக்குத் தெரியுமா? என்றேன். பெரியவரும், நிதானமாக பதில் சொன்னார்.

“அய்யா பாதரே.. ஆண்டாண்டு காலமாய், இந்த ஆண்பாலை புகட்டும், எங்களுக்கு அது தெரியாதா? ஏன், எங்கள் சிம்பாரி இனத்தில், நாட்டு வைத்தியர்களே இல்லையா?”. பெரியவரே, தொடந்தார்.

“பாதர்.. உங்கள் நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்.. உங்கள் மதப் பெண்கள், யாரும், உடலுறவின் போது, வாய்வழி உறவு செய்வதே இல்லையா? உங்கள் மதத்தில், எந்த ஆணும், இன்னொரு ஆணோடு, வாய்வழி உறவு செய்வதே இல்லையா?”.. பெரியவர் பேச்சை, நான் இப்போது இடைமறித்தேன்.

“பெரியவரே.. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாய் வழி உறவு நடக்கலாம். ஆனால், எங்கள் மதம் அதை ஆதரிக்கவில்லை. வாய்வழி உறவு செய்து, யாராவது ஆண்கள் அகப்பட்டுக் கொண்டால், அவர்களை நாங்கள் கொலையும் செய்வோம். ”.

“பாதர்.. எங்கள் மதமும், ஆண்-ஆண் வாய்வழி உறவை ஆதரிக்கவில்லைதான். ஆனால், ஒரு திருவிழாவில் நடக்கும், அந்த புனிதமான ஆண்-ஆண் வாய்வழி உறவை, அன்று மட்டுமே, நாங்கள் ஆதரிக்கிறோம். மற்ற  நாட்களில், அதை ஆதரிப்பதில்லை.” பெரியவர் தொடர்ந்தார்.

“ஆனால், அதே நேரத்தில், ஒரு ஆணிடம் வாய்வழி உறவைத் தொடரும், பிற ஆண்களை, உங்கள் கிறித்தவ மதம் போல, நாங்கள் கொலை செய்வதில்லை. மாறாக, அவர்களை  மூன்றாம் பாலினம் ஆக்கி, க்வொலு ஆடம்வால் என்று அழைத்து, அவர்களையும், எங்கள் இனத்தில் ஒருவராக, வாழத்தான் கற்றுக்கொடுக்கிறோம்.”

எனக்கு, இப்போது கொஞ்சம் கோபம் வந்தது. “பெரியவரே.. சின்னஞ்சிறு பிள்ளைகளின், வாயில், விந்து விடுவது என்பது, சிறுவர் பாலியல் வன்புணர்வு. ஆகாதா? சட்டப்படி அது குற்றம் என்று உங்களுக்குத் தெரியுமா”.

நான், கேட்ட இந்தக் கேள்விக்கு, அந்தப் பெரியவர் சொன்ன பதில், உண்மையில் என்னை, ஆச்சரியம் அடையச் செய்தது.

“பாதர்.. அதை ஏன் சிறுவர் பாலியல் வன்புணர்வு என்று நினைக்கிறீர்கள்? அது ஒரு உடலுறவுக் கல்வி என்று, உங்கள் மனம் ஏன் நினைக்கவில்லை?” என்று பெரியவர் சொன்னபோது, நான் பேசாமல், அவர் அடுத்து என்ன பேசுகிறார் என்று கவனித்தேன்.

“உடலுறவு குறித்த, சரியான அறிவு, இன்னும் வராத பதின்ம வயதைத் தொடும் பிள்ளைகளுக்குத்தான், இந்த உடலுறவுக் கல்வியைச் சொல்லிக் கொடுக்கிறோம்” பெரியவரே தொடர்ந்தார்.

“பாதர்.. இதோ, உங்கள் கூட நிற்கிறாரே.. இந்த கிறித்துவத்திற்கு மாறி, இங்கே போதகம் செய்யும், எங்கள் இன மனிதர் வில்லியம்ஸ்.. இவர் பேச்சை நான், கடந்த ஐந்து வருடங்களாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இவர் சொல்லிக் கொடுக்கும், ஆங்கிலத்தை, நானும்தான் கற்றுக் கொண்டுதான் வருகிறேன். இவர் கொடுக்கும் ஆங்கிலப் புத்தகங்களை, நானும்தான் படிக்கிறேன். உலகமும் தெரிந்து கொள்கிறேன்” என்ற போது, “உண்மைதான்” என, என் கூட இருந்த, சிம்பாரி போதகர் வில்லியம்ஸ் தலையசைத்தார்.

பெரியவர் தொடர்ந்தார்.

“பாதர்.. வேப்பம்பாலை, இறைவன் தந்த பாலாக நினைத்துக் குடிக்கும் மனிதர்களும் பிற மதத்தில் இருக்கிறார்கள். மாட்டின் கோமியத்தை, இறைவன் தந்த பானமாகக் குடிக்கும் மனிதர்களும், பிற மதத்தில் இருக்கிறார்கள். மனிதனின் சிறுநீரை, மருந்தாகக் குடிக்கும் மனிதர்களும், பிற மதத்தில் இறுக்கிறார்கள். மூத்திரமும், விந்துவும், ஒரே இடத்தில் இருந்துதான் வெளியே வருகிறது. இது அவரவர் மத நம்பிக்கை.”

“மருந்தாக நினைத்து, மனிதனின் மூத்திரத்தைக் குடிப்பவர்களும், இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஒரு ஆணின் மூத்திரமும், விந்தும், அவனது ஒரே ஆண்குறியில் இருந்துதான் வருகிறது. அப்படி ஒரு ஆண், இன்னொரு ஆணின் மூத்திரத்தைக் குடித்தால், அது உங்கள் மதக்கொள்கையின்படி, தன்பாலின ஈர்ப்பு ஆகி விடுமா?”

“நாங்களும், எங்கள் பிள்ளைகளுக்கு புகட்டும், ஆண்பால், அவர்களுக்கு வீரத்தைத் தரும்.. ஆண்மையைத் தரும் என்று, எங்கள் இறைவன் பெயரால் நம்புகிறோம். .எனவேதான், அதனை உற்சாகத்தோடு செய்கிறோம் அவ்வளவுதான்” என்று அந்த சிம்பாரிப் பெரியவர் பேசிய போது, அது எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.

“பெரியவரே.. உங்கள் பெயர்?” என்று நான் வினவியபோது, அந்தப் பெரியவர், “எனது பெயர் குத்தீட்டி” என்றார். அப்படி அவர் சொன்னவுடன், “மாமா..” என்று, வில்லாளன் உணர்ச்சியில் சத்தம் போடுவதை, நான், பார்க்க நேர்ந்தது.

நான் இறுதியாக கூட்டத்தில் சொன்னேன். “மாந்தரீகமும், தாந்தரீகமும், ஒரு நல்ல மதம் ஆக முடியாது. இந்த சைத்தானின் பிடியில் இருந்து, நான் எல்லோரையும் காப்பாற்றியே தீருவேன். இனி நாளை மறுபடியும், இதே இடத்தில் சந்திப்போம்” என்று சொன்னவுடன், எல்லோரும் சாப்பாடு இருக்கும் இடத்திற்குச் சென்றார்கள்.

நான் சாப்பிட்டுக்கொண்டே, குத்தீட்டி என்ற அந்தப் பெரியவரை கவனித்தேன். வில்லாளன் அவரது கைகளைப் பிடித்துக்கொண்டு, ஏதோ சந்தோசமாக பேசிக்கொண்டே இருந்தான். எனக்கு, அது ஆச்சரியத்தைக் கொடுத்தது. கூடவே, வில்லாளன் மீது சந்தேகமும் வந்தது.

நான் இன்னொரு புறம் நடந்து போனேன். அங்கே, எங்களோடு மலையேறி வந்த அந்த சிம்பாரி மாணவன் ராபர்ட், சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். நான் மெல்ல அவனை அணுகினேன்.

“ராபர்ட்… நீ, நமது வில்லாளன் மீது, ஒரு கண் வைத்துக்கொள். வில்லாளன் எங்கு சென்றாலும், அவனைப் பின் தொடர்ந்து போ” என்று, ராபர்ட்டின் காதுகளில் கிசுகிசுத்தேன்.

ராபர்ட், சரி என்று தலையாட்டினான். நான் அவன் தோள்களைப் பிடித்துக்கொண்டு சொன்னேன்.

“ராபர்ட்.. சாத்தான், யாரிடம் எப்போது இருப்பான் என்று நம்மில் யாரும் சொல்லமுடியாது. வில்லாளன், சாத்தானின் மடியில் போய்த் தவழ்வதை, என்னால் அனுமதிக்க முடியாது. எனவே, அவனைத் தொடர்ந்து போய், அவன் நடவடிக்கைகள் அனைத்தையும், அவ்வப்போது எனக்குத் தெரிவி”

சொல்லிக்கொண்டே, நான் அந்த இடத்தை விட்டு நகன்றேன்.

வில்லாளன், இன்னும் அந்த குத்தீட்டியோடேயே பேசிக்கொண்டுதான் இருந்தான்.

வில்லாளன், சிம்பாரி மலை, பாபுவா நியூ கினியா

அந்த இரவு, எனக்கு மிகவும் நிம்மதியில்லாத இரவாக இருந்தது. இன்று காலை, பாதர் ஜேம்ஸ் நடத்திய அந்தச் சொற்பொழிவிற்கு, குத்தீட்டி மாமாவே வருவார் என, நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

நான் அந்தச் சொற்பொழிவு முடியும் தருவாயில், மேடையில் இருந்தபடியே, கீழே உட்கார்ந்து இருந்த, குத்தீட்டி மாமாவை, ஒருமுறை ஆர்வமாகப் பார்த்தேன்.

அன்றும், குத்தீட்டி மாமா திடகாத்திரமாகவே இருந்தார். இன்றும் அப்படியே  திடகாத்திரமாகவே இருக்கிறார். வெள்ளை நரை முடிகள் மட்டும், அங்கும், இங்கும் கொஞ்சம் தெரிகிறது. அவ்வளவுதான்.

ஆனால், அவர் ஏன் கிறித்துவச்சபைக்கு வர வேண்டும்? இந்த வயதிலும், என்னைப் போல, ஆங்கிலம் படித்து இருக்கிறார். என்னைப் போல, பல மதங்களின் புத்தகங்கள் படித்து இருக்கிறார். இந்த வயதில், இவையெல்லாம், ஏன் அவர் செய்யவேண்டும்?

நினைக்க நினைக்க, எனக்கு குழப்பம்தான் அதிகம் வந்தது. ஆனால், அவர் ஒருவருக்குத்தான், பூவரசி எங்கு இருக்கிறாள் என்று தெரிந்து இருக்கும்.

“பூவரசி.. பூவரசி.. அன்று நான் ஏன் உன்னைப் பிரிந்தேன் பூவரசி”.. இப்போது நான் கதறிக் கதறி அழுதேன்.

பத்து வருடங்களுக்கு முன்னர், நானும் பூவரசியும், எப்போதும் சந்தித்துக் கொள்ளும், அந்த அழகிய, பெரிய, மந்தாரை மலர் வனத்தில், அன்று நடந்த பயங்கரம், இப்போது என் முன் நிழலாடியது. நான், அந்த பயங்கரத்தை, இப்போது அசை போட்டேன்.

புனிதக்குழல் திருவிழா முடிந்து நான் குத்தீட்டி மாமாவுடன், வனாந்திரம் சென்றேன்.

அந்த ஐந்து வருடங்கள் வனவாச காலத்தில், அந்த வனாந்திரத்தில், குத்தீட்டி மாமாவுடன், நான் இருந்தபோது, பல விசயங்களை, அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். செக்ஸ் குறித்தும் நாங்கள் அதிகம் பேசினோம்.

வில் வித்தை, ஈட்டியைக் குறிபார்த்து எறிதல், மிருகங்களை வேட்டையாடுதல், எதிரிகளைத் துவம்சம் செய்தல், என்று பல வீர வித்தைகளை, நான் அவரிடம் கற்றுக் கொண்டேன்.

கூடவே, ஒரு பெண்ணிடம் எப்படி உடலுறவு கொள்வது, அவளுக்குப் பிடித்தால், எப்படி அவள் மயங்கும்படி, வாய்வழி உறவு கொள்வது, பிள்ளைகள் பிறக்கும் காலங்களில், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் போன்ற இல்லறக் கலைகளையும், குத்தீட்டி மாமா, எனக்கு நிறைய கற்றுக் கொடுத்தார். அவர் சொல்லிக் கொடுத்த உடற்பயிற்சிகளை, நான் ஐந்து வருடங்களிலும், தவறாது பயிற்சி செய்தேன்.

நான், அந்த’ ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு. ஆமொலுக்கு என்ற, நிறைந்த பலசாலியான ஆண்மகன் ஆனேன். எனக்கு எனது ஆண்குறியில் ஏற்பட்ட விந்து மாற்றமும், எனக்கு அப்போது புரிந்தது.

எனது இரவின் கனவுகளில், அடிக்கடி, பூவரசி வந்தாள். அந்தக் கனவுகளில் எல்லாம், பூவரசி எனக்கு முத்தம் கொடுக்கிறாள். நான், அவளுக்கு, எனது ஆண்பால் புகட்டுகிறேன். அப்புறம் அவளோடு உடலுறவு கொள்கிறேன்…

கற்பனையில், பூவரசியை நினைத்து நினைத்து, எனது உடல், இரவுகளில் மிகவும் சூடாக ஆரம்பிக்கும். பின்னர் சொப்பன ஸ்கலிதத்தில் அது முடிந்து போகும்.

வனாந்திர வாசம் முடிந்ததுதான் தாமதம். நான் பூவரசியைப் பார்க்க, மந்தாரை வனத்திற்கு ஓடினேன்.

மந்தாரை வனம் முழுவதும், மலர்கள் பூத்துக் குலுங்கின. எனது ஆசை மனதைப் போலவே.

நான், வனத்தில், பூவரசியைத் தேடினேன். பூவரசி, ஒரு பெரிய மரத்தின் கீழ் உட்கார்ந்து இருந்தாள். பூவரசி, இப்போது நன்கு வளர்ந்து இருந்தாள்.

நான், ஓடோடிப் போய், அவளை முத்தமிட்டேன். எனது உடல் சூடானது. ஆனால், அவள் அதைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

நான், எப்போதும் போல, இப்பொழுதும், ஒரு மந்தாரை மரத்தில் ஏறி, ஒரு அழகிய மந்தாரை மலரைப் பறித்து வந்தேன். அவள் கூந்தலில் பூவை வைத்தேன்.

திரும்பிய நிலையில், முகத்தை வைத்து இருந்த பூவரசிக்கு, அந்தப் பூ, மிக அழகாக இருந்தது.

நான் பேசினேன். “பூவரசி.. எனது ஐந்து வருட வனவாசம் முடிந்தது. நான் இப்போது, ஆமொலுக்கு என்ற, ஆண்மகன் ஆகி விட்டேன் பூவரசி. என்னைப் பாரேன் பூவரசி” என்றேன்.

பூவரசி, என்னைத் திரும்பிப் பார்க்கவே இல்லை. அவள் வெட்கப்படுகிறாள் என்று நான் நினைத்துகொண்டேன்.

“பூவரசி.. நான் உன்னைக் கல்யாணம் செய்துகொள்ளவே வந்து இருக்கிறேன் பூவரசி. வா, நம் பெற்றோரிடம் இருவரும் போவோம். நான், கல்யாணத்திற்கான, எல்லா ஏற்பாடுகளும் செய்கிறேன் பூவரசி…” என்றவுடன்தான், பூவரசி திரும்பினாள்.

அவள் கண்கள் நிறையக் கண்ணீர். அவள் அழுது, அழுது, அவள் முகம் வீங்கிப் போய் இருந்தது.

நான் பதறிப் போனேன். “பூவரசி…பூவரசி.. என்ன ஆயிற்று பூவரசி.. ஏன் அழுகிறாய் பூவரசி.. என்னைக் கல்யாணம் செய்து கொள்ள மாட்டாயா பூவரசி?” நான் பதறினேன்.

அவள் மௌனமாக எழுந்தாள். அவள் இடுப்பில் கட்டியிருந்த கச்சையைக் கழற்றி, நிர்வாணமானாள். நான், இதை எதிர்பார்க்கவேயில்லை.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் சுதாரித்துக்கொண்டு அவளை உற்று நோக்கினேன்.

அவள், நிர்வாணமாக, என் கிட்ட நடந்து வந்தாள். நான், இன்னும் உற்று நோக்கினேன்.

அவளுக்கு, அவளுக்கு, மயிர் முளைத்த பெண்குறி இருந்தது. அதன் கீழேயே.. கீழேயே, அவளுக்கு ஒரு ஆண்குறியும் இருந்தது.

“ஆஆ வென, அலறிக்கொண்டே நான், பத்து அடி பின்னால் சென்றேன்.

பூவரசி கதறினாள். “வில்லாளன்.. நீ என்னைப் பார்க்க வந்த நாளில், எனக்கு சிறு வயசு.. அப்போது எனக்குத் தெரியவில்லை. ஆனால், இப்போது எனக்குப் புரிகிறது.”

பூவரசியின் கதறல் அடங்கவேயில்லை. 

“நான் க்வொலு ஆட்ம்வால், என்ற மூன்றாம் பாலினம் வில்லாளன்.. எனக்கு ஆண்குறியும் உண்டு, பெண் குறியும் உண்டு”. இப்போது, அவள் முகத்தை, என் கிட்டக் கொண்டு வந்தாள்.

“என் முகத்தைப் பார் வில்லாளன்.. என் முகத்தில் அரும்பு விடும் மீசையைப் பார் வில்லாளன்”.. அவள் ஓவென்று பெருங்குரலெடுத்து அழுதாள்.

அந்த இடத்தில்தான், நான் பெரிய தவறு செய்தேன்.

நான், பூவரசியைத் திரும்பிப்பார்க்காமல், எதிர்திசையில் ஓடினேன்..

ஓடினேன்… ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்.

மலையடிவாரம் வந்து சேர்ந்து இருந்தேன். அங்கே, நான் வாய்விட்டுக் கதறிக் கதறி அழுதேன்.

“நான் ஆண்மை உள்ளவனாக மாறவேண்டும் என, எனக்கு ஆண்பால் புகட்ட ஏற்பாடு செய்த கடவுளே.. நான் ஆசை ஆசையாய், காதலித்த பூவரசிக்கு, இப்படி ஒரு மாபெரும் தண்டனையைக் கொடுத்து விட்டாயே கடவுளே.. நீ உண்மையில் கடவுள்தானா.. இல்லை வெறும் மந்திரவாதியா?”

“ஐந்து வருடங்கள், பூவரசியைப் பிரிந்து வனாந்திரத்தில் குத்தீட்டி மாமாவுடன், வாழ்ந்த ஒவ்வொருநாளும், நான், பூவரசியை அல்லவா நினைத்தேன். ஆனால், அவளை இந்தக் கோலத்தில், என்னைச் சந்திக்க வைத்த, நீ கடவுளே இல்லை.. நீ கடவுளே இல்லை”

நான் மறுபடியும் ஓடினேன். கண்போன போக்கில் ஓடினேன். கடைசியில், லாமிங்டன் மலைக்கு ஓடி வந்த போதுதான், நான் பாதர் ஹென்றியை சந்தித்தேன்.

கருணையுள்ளம் கொண்ட பாதர் ஹென்றி, என்னை கிறித்துவன் ஆக்கினார்.

நான், எனது கதையை, எனது காதல் பூவரசியின் கதையை, பாதரிடம் சொன்னேன்.

எல்லாவற்றையும் நிதானமாகக் கேட்டுக்கொண்ட பாதர் சொன்னார். “வில்லாளன்.. உலகத்தில் ஒரு சிலர், ஆண்குறியோடும், பெண் குறியோடும் உள்ள, இடைய லிங்கங்கள் ஆகப் பிறக்கிறார்கள்.. அதுவும் கடவுளின் படைப்புதான் வில்லாளன்” என்று பாதர் சொன்ன போது, எனக்கு, என்னையும் அறியாமல் குற்ற உணர்ச்சி வந்தது.

பாதர் தொடர்ந்தார். “வில்லாளன்.. இப்படி ஆண்குறியோடும், பெண் குறியோடும் உள்ள, இடையலிங்கங்களோடும், உன்னால் உடலுறவு கொள்ளவும் முடியும், உன்னால் சந்தோசம் ஆக இருக்கவும் முடியும் வில்லாளன்”.

“இவ்வளவு ஏன், சில இடையலிங்கப் பெண்களால், பிள்ளை பெற்றுக்கொள்ளவும் கூட முடியும் வில்லாளன். ஆனால், அதற்குக் கர்த்தரின் அருள் தேவை.”

பாதர் என்னைக் கருணையுடன் பார்த்தார். “கொஞ்ச நாள் பொறுமையாக இரு. நான் உன்னை, மறுபடியும் சிம்பாரி மலைக்கே அனுப்பி வைக்கிறேன். நீ, உன் பூவரசியையே கல்யாணம் செய்து கொள்ளலாம்” என்ற போது, எனது உள்ளம் அமைதியானது.

ஆனால், அந்த அமைதி, நிறைய நாள், நீடிக்கவில்லை. ஜப்பானியர்கள், பாபுவா நியூ கினியா வந்த போது, நிறைய கிறித்துவப் பாதிரிமார்கள், கொல்லப்பட்டார்கள்.

அப்படி, பூனா கடற்கரையில் கொல்லப்பட்டவர்தான், பாதர் ஹென்றி. அந்தக் கலவரத்தில், நானும், பாதர் ஹென்றிக்குக் கீழ் வேலை செய்த பாதர் ஜேம்சும், தப்பி ஓடினோம். நாங்கள் இருவரும் தப்பி ஓடி, பாபுவா நியூ கினியாவின், தலைநகர் மோர்ச் பியில் உள்ள, திருச்சபை வந்து சேர்ந்தோம்.

அந்தத் திருச்சபையில்தான், நான் கோயிலில், மணியடிக்கிறேன். திருச்சபையைச் சுத்தம் செய்கிறேன்.

நான், அங்கேயே, ஒரு பெண்ணையும் கல்யாணம் செய்து கொண்டேன். இப்போது, ஒரு பெண் பிள்ளையும் எனக்கு உண்டு.

இருப்பினும், பூவரசிக்கு, நான் செய்த துரோகத்தை, என்னால், மறக்கவே முடியவே இல்லை.

“நாளை குத்தீட்டி மாமாவைப் பார்க்க வேண்டும். பூவரசி குறித்து விசாரிக்க வேண்டும்”

நினைத்துக்கொண்டே, நான் தூங்கிப் போனேன்.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationமழை புராணம்: 29 ஆண் பால் – 8