This entry is part 9 of 9 in the series 17 மே 2026

                                                                                                        மீனாட்சி சுந்தரமூர்த்தி.

                               

வழக்கம்போல் ஐந்து மணிக்கு அலாரம் கணீரென்று குரல்கொடுத்து தன்பணியைச் செய்தது.மதிவாணன் விழித்துக்கொண்டான். அலாரத்தை நிறுத்திவிட்டுப் புரண்டு படுத்தான். சன்னல் திரைச்சீலைகளின் இடைவெளியில் புகுந்த மெல்லிய ஒளிக்கீற்று அவன் முகத்தில் பட்டது.

என்னவாக இருக்கும் ? எழுந்து உட்கார்ந்து கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டான். சன்னல் அருகில் வந்து திரைச்சீலைகளை விலக்கினான். தேவதாரு மரங்களின் நடுவில் மேற்றிசை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த முழுநிலா முகம் காட்டிச் சிரித்தது. அருகிலிருந்த பனிச்சிகரங்கள் நிலவின் ஒளியில் தகதகத்தன.கால்களில் உல்லன் சாக்சு அணிந்திருந்தான். தரை மரத்தால் ஆனது.வழுவழுவென்று இருந்தது.

அறையின் ஒரு புறமிருந்த மேசையில் பூச்சாடி ஒன்றில் வண்ணப் பூக்கள் சிரித்துக்கொண்டிருந்தன. அருகில் வெந்நீர் வைப்பதற்கான கெட்டில் ஒன்று இருந்தது, அருகிலிருந்த டிரேயில் பச்சைக்கிளிகளின் படமிட்ட வெள்ளை வெளேறென்ற பீங்கான் கோப்பைகள்  இரண்டோடு,,தேனீர், பால்பவுடர்,காபி,சர்க்கரைப் பாக்கெட்டுகள்  அடுக்கியிருந்தன. அதோடு ஈர டிஷ்யூக்கள் அடங்கிய பாக்கெட் ஒன்றும் இருந்தது.கால்களில் செருப்பை அணிந்துகொண்டு சென்று பல்தேய்த்து முகம் கழுவிக்கொண்டு வர ,குழாய்களில் வெந்நீர் வருவதற்கான வசதி செய்யப்பட்டிருந்தது உதவியது.

பாரம்பரியமான அமைப்பில் நவீன வசதிகளோடு இயற்கைச் சூழலில் இருந்த விடுதி அது.படுக்கைக்கு அருகில் இருந்த சிறிய மேசையில் தொலைபேசி இருந்தது.எப்போது வேண்டுமானாலும் அழைத்தால் என்னதேவை என்றாலும் செய்து தருவதற்கு ஆட்களிடம் சொல்லிவிட்டிருந்தான் மதியின் நண்பன் சுக்தேவ். சன்னல் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்தான். இந்த விடுதியின் பின்புறம் நதிஒன்று ஓடுகிறது. மலைச்சரிவில் நிறைந்துள்ள கற்பாறைகளில் இறங்கினால் நதியைத் தொடலாம். நீராடலாம். ஆனால் பாதுகாப்பு என்று சொல்லிவிட முடியாது.ஆழத்தையும் கணித்துக்கூற இயலாது. அவ்வப்போது சாகசம் செய்வோர் இரப்பர் படகுகளில் ஆரவாரக் கூச்சலிட்டுக்கொண்டு பயணிப்பதைக் காணலாம். இமயத்தின் மடியிலிருந்த இந்த அழகியச் சிற்றூர் ஆண்டுதோறும் சத்தமில்லாமல் இயற்கைப் பிரியர்களை குறைந்த அளவில்  வரவழைத்துக் கொண்டிருக்கிறது. படகுச் சவாரிகள், குதிரையேற்றங்கள், தங்கும் நவீன விடுதிகள், ஆடம்பரமான உணவகங்கள், நீர் விளையாட்டுகள் என்று எதுவும் இங்கு இல்லை.அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விடுதிகள் மட்டும் இருந்தன.ஆனால் மற்ற கோடைச் சுற்றுலாத்தலங்களை விடவும் அழகான இடங்கள் பல காணக்கிடந்தன. மலையேற்றம் விழைவோருக்குப் பிடித்தமான இடம் இது.

தேவதாரு மரங்களும் பைன்மரங்களும் நிறைந்த காடுகள், அதில் பலவிதப் பறவைகள், காட்டு அணில்கள்,முயல்கள்,பழுப்பு நிறக்கரடிகள். காட்டுமான்கள் நடமாடுவதைக் காணலாம். கடல்மட்டத்திலிருந்து பல ஆயிரம் மைல்கள் உயரத்தில் உள்ளதால் கோடையில் மட்டும் நல்ல சீதோஷ்ணநிலை இங்கு நிலவுகிறது.சிறிய மலைக்குன்றுகளில் ஏறிநின்று சுற்றுப்புற எழிலைப் பார்க்க  கண் இரண்டு போதாது. இலேசான வெயில்  தாமதமாக வந்து நிற்கும், திடீரென மேகங்கள் சூழும்,கருமுகில்கள் தலையைத் தட்டிச் சின்னத் தூறல்களை உதிர்த்துச் செல்லும்.. இயற்கையை நேசிக்கும் மதிவாணன் விடியலை இரசித்துக்கொண்டிருந்த வேளையில் அறைக்கதவு தட்டப்பட்டது. வேலையாள் ஒருவன் வந்து மணக்க மணக்க சின்னப் பீங்கான் கெட்டிலில் தேனீரும், பீங்கான் கோப்பைகளும் கொண்டு வந்தான். மேசையில் வைத்து தேனீரை ஊற்றித்தந்தான். அலைபேசி அழைத்தது சுக்தேவ்தான் பேசினான்,

‘என்ன மதி வழக்கம்போல எழுந்துட்டியா?’

‘ஆமாம் பா, நல்ல காட்சி, நிலாவும், மரங்களும், பார்த்துட்டிருந்தேன்’

‘சரி பா,எங்கள் கிராமத்தினரே கைத்தொழிலாகச் செய்த மூலிகைச் சோப்பு தருவார்கள்’

ஓ அப்படியா’

” குளித்துப்பார். நாள் முழுவதும் வாசம் இருக்கும், முகம் பளபளக்கும்’

‘அட போப்பா, இதற்கு மேல் என்ன அழகு வேண்டியிருக்கு’

‘இனிமேல்தானப்பா தேவை, சரி எட்டு மணிக்கு வரேன் தயாராயிரு’ என்று முடித்தான் நண்பன். நேற்று மதியம்தான் இங்கு வந்தான் மதிவாணன். நண்பன் சுக்தேவின் சொந்தக் கிராமம் இது. இந்த விடுதியும் அவனுக்குச் சொந்தமானதுதான்.

 கோவை மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஒன்றுதான் மதியின் சொந்த ஊர்.அப்பா விவசாயி, அதிகமாக இல்லை என்றாலும் ஐந்து காணி நெல் விளையும் வயலும், தென்னந்தோப்பு ஒன்றும் அருகில் ஒரு குளமும் சொந்தமாக இருந்தது. மூன்று பெண்கள் ,கடைசியில் வந்தவன்தான் மதிவாணன். நான்கு பிள்ளைகளையும் படிக்க வைத்தார். பெண்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியைகளாக உள்ளனர். திருமணமும் ஆனது. மதிவாணன் பொறியியல் படித்தான், நிறையப் போட்டித்தேர்வுகள் எழுதியதில் மத்திய அரசின் தொழிலகத்துறை ஒன்றில்உயர் அதிகாரியாகும் வாய்ப்பு கிடைத்தது. ஐதராபாத்தில் இரண்டாண்டுகள் பணிபுரிந்தான்.

‘மதி உனக்குப் பெண் பார்க்கலாம்னு நெனைக்கறேன்’

‘ பாருங்க அப்பா, நெறைய சீரெல்லாம் கேக்காதீங்க’

‘நம்ம வீட்டு மாப்பிள்ளைங்க யாரும் நம்மகிட்ட அப்படிக் கேக்கலப்பா’

‘ நான் எப்படிக் கேப்பேன்?’ என்றார் அப்பா.

தூரத்துச் சொந்தமான நடுத்தரக் குடும்பத்துப் பெண் கல்யாணியை மகனுக்குத் திருமணம் செய்து வைத்தார்.ஐதராபாதில் தனிக்குடித்தனம் வைத்துத் திரும்பினர் இரண்டு வீட்டினரும்.  அதன் பின் பெங்களூருக்கு மாற்றலில் வந்தான். இப்போது ஒரு வருடத்திற்கு முன் பதவி உயர்வோடு மாற்றலும் வர டெல்லிக்கு வந்தான். இங்குதான் சுக்தேவ் பழக்கம். ஏறத்தாழ ஒரே வயது, ஒரே பதவியில் உள்ளனர். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது, பழகுவதற்கு இனிய குணங்கள் கொண்டவன். மதியின்மீது மிகுந்த பாசம் வைத்திருந்தான். அரசு தந்த குடியிருப்பில் தங்கியிருந்தனர். ஏழு வயது மகளையும், ஐந்துவயது மகனையும் கோவையில் ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டு அப்பாவையும், அம்மாவையும் கல்யாணிக்குத் துணையாக வீடு பார்த்து வைத்துவிட்டுதான் டெல்லிக்கு வந்திருந்தான்.

அம்மாவும், அப்பாவும் மனைவியையும், பிள்ளைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறார்கள் என்ற நிம்மதி இவனுக்கு. அவர்களும் கண்போலக் காக்கிறார்கள். விடுமுறையில் அங்கு சென்று விடுவான்.

சென்ற முறை நான்குநாள் விடுமுறையில் சென்றபோது சுக்தேவையும் அழைத்துச் சென்றான். தங்கள் கிராமம், ஊட்டி  என்று எல்லாமும் சுற்றிக் காட்டி மகிழ்ந்தான். கல்யாணியின் இட்டிலி, சாம்பார்,மசாலாதோசை, வடை சுக்தேவிற்கு மிகவும் பிடித்துப்போனது. இந்த ஒருவார விடுமுறையில் சுக்தேவின் ஊருக்குச் செல்வதாக அப்பாவிடமும், கல்யாணியிடமும் சொல்லியிருந்தான்.

எட்டுமணிக்கெல்லாம் ஜீப்பை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான் சுக்தேவ்.

‘மதி இன்னக்கி மதிய உணவு எங்கள் வீட்டில்தான்’ என்று சொல்லி அழைத்துப்போனான். சுற்றிலும் இயற்கையெழில் கொஞ்சும் மலைச்சாரலில் பாரம்பரிய முறையில் அழகாகக் கட்டப்பட்டிருந்த இரண்டடுக்கு மரவீடு அது.  வாசலில் டேலியா பூக்கள் மஞ்சள், ஊதா,அரக்கு, வெள்ளை நிறங்களில், அதேபோல் ரோஜா மலர்கள், இன்னும்  பலவித கொடிகள்,செடிகள் இரம்யமான சூழலைத் தந்தன.

‘ வருக மகனே, என்று வாஞ்சையோடு வரவேற்றனர் அவனுடைய பெற்றோர்.’ இவள் எனது ஒரே தங்கை சமேலி’ என்று அறிமுகம் செய்தான் சுக்தேவ்.

கைதேர்ந்த சிற்பி ஒருவன் செதுக்கிய சந்தனச்சிலை போல இருந்தாள், வணக்கம் சொன்னாள்,அடடா குரலில் இத்தனை இனிமையா? இங்கே எல்லாப் பெண்களுமே அழகுதானா,இல்லை இவள் மட்டும் தனிவரம் வாங்கி வந்தாளோ! என்று மலைத்தான் மதி.அவளே மதிய உணவு பறிமாறினாள். சப்பாத்தி, மூன்றுவகை காய்கள், டால், பாசுமதி கீர், ஹல்வா, நறுக்கிய பழத்துண்டுகள் என்று சுவையாக இருந்தது.அதன்பின் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டார்கள்.

இங்கு வந்து மூன்று நாட்கள் ஓடிவிட்டது, தங்களுக்குச் சொந்தமான ஆப்பிள்தோட்டம், தேயிலைத்தோட்டம், ஸ்ட்ராபெரி தோட்டம் இவற்றையும் சுற்றிக்காட்டினான் சுக்தேவ்.நான்காம் நாள் காலையில் விடுதிக்கு வந்த சுக்தேவ் தேவதாரு மரங்களின் இடையில் நடந்து சரிவில் இறங்கி நதிக்கு அழைத்துச் சென்றான் ,கால்களை நனைத்தபடி பாறையில்  அமர்ந்ததனர், காலை வெயில் இதமாக ஒற்றடம் தருவதுபோல் இருந்தது.

‘மதி எங்க ஊர் உனக்குப் பிடிச்சிருக்கா?’

‘உங்க ஊரை பிடிக்காதவங்க யாரும் இருக்கமாட்டாங்க’

‘சரி எங்க அம்மா,அப்பா பத்தி ?’

‘ரொம்ப அன்பானவங்க, ‘

‘என்தங்கை சமேலி’

‘அவளுக்கென்ன தேவதை’

‘அவளை நீ கல்யாணம் பண்ணிக்கறியா’

‘டேய் வெளையாடறியா,’

‘ இல்லை, உண்மையாதான் சொல்றேன், அவளுக்கு உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு’

‘அம்மா,அப்பாவுக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு’

‘அதனால, கல்யாணம் பண்ணிக்க முடியுமா?, எனக்கு பெண்டாட்டியும்,பிள்ளைகளும் இருப்பது உனக்குத் தெரியாதா?’

‘அதனால் என்ன, இந்த விடுதியும், ஆப்பிள் தோட்டமும், உனக்கு எழுதித் தரேன்’

‘அப்பா முப்பது இலட்சம் பணம் தருவார் அதை உன் குடும்பத்திற்குத் தந்து செட்டில் பண்ணிவிடு.’

‘சுக்தேவ் உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?’

உடனே சிரித்துக்கொண்டே நான் தெளிவாத்தான் இருக்கேன், நீ யோசிச்சு சொல்லு, ஆனா நல்லமுடிவா இருக்கணும்’ என்றான். அதற்கு மேல் அவனோடு வாதாடவில்லை மதி,ஒருவேளை நீச்சல் தெரியாத தன்னை இந்த நதியில் பிடித்துத் தள்ளிவிடுவானோ என்ற அச்சமும் சூழ்ந்துகொண்டது.

‘சரி வா போவோம்’ இன்னக்கி விடுதியிலேயே சாப்பிட்டுக்கறேன்’

‘சரி நல்லா யோசி, நாளைக்கு காலையில ஒன்பது மணிக்குப் தயாரா இரு,வீட்டிற்குச் சென்று சொல்லிவிட்டுப் புறப்படலாம்,சாயந்திரம் டேராடூன் போயிடலாம்’

‘ப்ளைட் ஆறுமணிக்குதான் சரி’ என்றான் மதி.

அறைக்கு வந்தவன் பெரிய தவிப்பில் இருந்தான், என்ன மனிதர்கள் இவர்கள்,

ஒரு பெண்ணுக்குத் துரோகம் செய்வதைச் சாதாரணமாகச் சொல்கிறார்கள்,

உலகத்தில் இல்லாத பேரழகு என்று வியந்து போனதற்கு தண்டனையா இது?

தன்னையே உலகம் என்று நம்பி இத்தனை தூரம் அனுப்பியிருக்கும் கல்யாணி சாதாரண அழகுதான்,மாநிறம்தான், பணக்காரி இல்லை ஆனால் மனம் நிறைந்த மனைவி, இந்த அழகுக்கான விலை என்கண்மணியா ? என் அன்புக் குடும்பமா?

நல்ல மனிதர்கள் என்றாலும் சுயநலம் ஒளிந்திருக்கும் போலும்.’அதிக சினேகம் பிராண சங்கடம்’ என்று எங்கோ படித்தது நினைவில் வந்து நின்றது. இங்கிருந்து இவன் உதவி இல்லாமல் வெளியேறுவது எப்படி என்று யோசித்தான். அலைபேசியில் தேடியபோது வாடகைக் கார்களின் எண்கள் கிடைத்தது. அதிகக் கட்டணம் சொன்னார்கள், பரவாயில்லை என்று உடனே வரச் சொன்னான் தன் பொருட்களை, உடைகளை எடுத்துப் பெட்டியில் அடுக்கித் தயாராக இருந்தான். ஒரு மணி நேரத்தில்  கார் வந்துவிட்டது. அவன் அங்கிருந்து கிளம்பியபோது  மதியம் இரண்டு மணி.  மறுநாள் காலை பத்துமணிக்கு டெல்லி  வந்து விட்டான். அன்றே அலுவலகத்தில் ஏற்கெனவே சென்னைக்குக் கேட்டிருந்த மாறுதல் நிலவரம் பற்றி விசாரித்தான்,இன்னும் ஒருவாரத்தில் கிடைத்துவிடும் என்றார்கள், இன்னும் பத்து நாட்களுக்கு விடுப்பை நீட்டிக்க விண்ணப்பம் தந்துவிட்டு மாலை சென்னைக்கு விமானம் ஏறினான். அவன் சென்னையில் இறங்கிய வேளையில் அவன் விடுதியில் தந்துவிட்டு வந்திருந்த கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்தான் சுக்தேவ்,

‘ நண்பா வணக்கம், உன்னை நம்பி வந்ததற்கு நல்ல பரிசு தந்தாய்,

நம்பிக்கைத் துரோகம் அழகுக்கான விலை என்றாய்,இனியாவது கண்ணீரில் உன் தங்கைக்கு மணமேடை போடாதே, உன்னை நம்பி வருபவளுக்கும் துரோகம் செய்யாதே’

Series Navigationமழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை