This entry is part 4 of 8 in the series 19 ஜூலை 2026

பாலமுருகன்.லோ

பசங்களா, இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுக்குள்ள ஒரு குட்டிக் கதையை சொல்லிடுறேன். ஏன்னா நேரமாச்சு, இரவு உணவு வழங்கணும். சின்னக் கதைதான். உடனே முடிஞ்சிடும் என்று சொல்லி.

அண்ணன், தம்பி இருவர் நிலத்தை இரண்டாக வேலிப் போட்டு பிரித்து, இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்று வாதம் செய்துகொண்டிருந்தனர். உண்மையில் இதைக் கடவுள் பார்த்து சிரித்தார். சிரித்தது மட்டும் அல்லாமல் தனக்குத் தானே சொன்னார், “இந்த அண்ட சராசரமே என்னுடையது. இவர்கள் இருவர் என்னடானா இந்தப் பகுதி என்னுடையது, அந்தப் பகுதி உன்னுடையது என்று பேசுகிறார்களே!” என்றார்.

எங்கே பசங்களா, சொல்லுங்க பார்ப்போம். இதிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? என்றார். கூட்டத்திலிருந்த சிறுவன், “ஐயா, நீங்க சொன்னதை வைத்து சொல்லுறேன்.”

“சொல்லுப்பா, அதைத்தானே நானும் எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு எப்படிப் போய்ச் சேர்ந்திருக்கிறது?”

“அது வந்து ஐயா, இந்த லோகத்தில் எதுவுமே நம்முடையது இல்லை. எல்லாம் இறைவனுடையது என்பதுதான் விளங்குகிறது.”

“யப்பா சண்முகசுந்திரம், சரியா சொன்னப்பா. அதானப்பா இந்தக் குட்டிக் கதைக்கு ஒரு அர்த்தம். நாம தேவையில்லாமல் அடிச்சுகிட்டு, பிடிச்சுகிட்டு, என்னது உன்னுதுன்னு போட்டி போட்டுக்கொண்டு, அவனவன் வாழ்க்கையை அழகாக வாழாமல் வீண் செய்துகொண்டு இருக்கிறான்.”

அப்போது ஒரு குரல் இடையில் ஒலித்தது.

“நித்தியானந்த ஐயா, நல்லா இருக்கீங்களா?” என்று. குரல் வந்த திசையில் பார்வையைச் செலுத்தினார் நித்தியானந்தம்.

“யாரு வேணும்? நான்தான் நித்தியானந்தம். சொல்லுங்க. நீங்க யாருன்னு தெரியலையே.”

“ஐயா, நான்தான் குருமூர்த்தி. இங்க உங்க குருகுலத்தில்தான் படித்தேனே.”

“யப்பா குருவா! நீ ஆளே அடையாளமே தெரியாம போயிட்டியேப்பா. இங்கிருந்து படிப்பை முடித்து வெளியே போன பிறகு உன் உருவம், நடை, உடை, பாவனை எல்லாம் மாறிப்போச்சு. ஆனா உன்னோட அந்தப் பணிவு மட்டும் உன்னை விட்டு போகவில்லையப்பா.”

“என்னப்பா, இப்ப எங்க இருக்க? என்ன பண்ணிக்கிட்டு இருக்க?”

“ஐயா, நான் இப்போ அமெரிக்காவுல ஒரு நல்ல வேலையில இருக்கேன். ஐயா, இதெல்லாம் உங்களாலதான்னு சொல்லுவேன்.”

“குருமூர்த்தி, எல்லாம் தெய்வ கிருபைப்பா. நான் ஒரு கருவி மட்டும்தான். உன்னோட சொந்த முயற்சியால நல்லா படிச்சு முன்னுக்கு வந்திருக்க.”

“சரி, நாம இன்னும் கொஞ்ச நேரம் கழித்து பேசலாமா. இப்ப உனக்குத் தெரியுமுல்ல, உணவு நேரம்.” என்று புன்னகைத்தார்.

“ஆமாம் ஐயா, நீங்க அதைப் முதல்ல கவனிங்க. பின் நாம பேசலாம்,” என்றான் குருமூர்த்தி. மேலும் வேர்த்து வழிய, தனது பேன்ட் பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்து நெற்றியை ஒற்றியெடுத்தான். வெப்பம் தாளாமல். இதைக் கவனித்த நித்தியானந்தம், “குருமூர்த்தி, நீ போய் முன் ரூமுல போய் உட்காருப்பா. பாரு, வேர்க்குது பாரு,” என்றார்.

“பசங்களா, அமைதியா அவங்கவங்க தட்டையும் டம்ளரையும் எடுத்துக்கிட்டு வாங்க பார்ப்போம்.”

“கணேசா, வேலாயுதம், தயார் செய்த உணவை அப்படியே கொண்டு வந்து வையுங்கப்பா. நேரம் ஆகுதுல்ல. சரியான நேரத்துக்கு குழந்தைகளுக்குச் சாப்பாடு கொடுக்கணுமுல்ல.”

“ஐயா, இதோ வந்துட்டோம். இரண்டு நிமிஷம் கொடுங்க. சமைச்சதையெல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுறோம்,” என்றனர் வேலாயுதமும், கணேசனும்.

அரைமணி நேரம் கழித்து நித்தியானந்தம் முன் வரவேற்பறைக்கு வந்தார். குருமூர்த்தி அவரைப் பார்த்ததும் எழுந்தான்.

அட, உட்காருப்பா. மரியாதை என்பது மனசுல இருந்தா போதும்பா. சொல்லு, இப்ப நமக்கு நிறையவே நேரம் இருக்கு. கல்யாணம் காட்சி ஏதாவது செஞ்சுகிட்டையா? இல்ல காதல் கீதல்னு ஏதாவது பண்ணுறையா?

“அதுவந்து ஐயா! அட சும்மா தொல்லுப்பா. நான் ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டேன். அதென்ன, காதலுக்கு விரோதியா என்ன!”

“ஐயா, லாவண்யா கூட வேலைப் பார்க்கிறா. பழகப் பழக புடிச்சுப் போச்சு இருவருக்கும் மனசு. இப்ப கல்யாணம் செஞ்சுக்கலாமுன்னு தீர்மானிச்சிருக்கோம்.”

“நல்லதுப்பா. நல்ல விஷயம்தான் சொல்லியிருக்க.”

“அதான், உங்களையும் பார்த்து ஒரு ஆசீர்வாதம் வாங்கிட்டுப் போலாமுன்னு வந்தேன்.”

“ஏம்பா குருமூர்த்தி, என்னோட ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு. கவலையே வேண்டாம். நல்லா இருங்கப்பா நீங்க இரண்டு பேரும்.”

“ஐயா, இங்க எதுவுமே மாறல. அதே மடப்பள்ளி, ஸ்டோர்ஸ், சீலிங் பேன், சாப்பாடுக்கு உபயோகப்படுத்தும் டேபிள், சேர் முதற்கொண்டு எல்லாம் அப்ப எப்படி பார்த்தேனோ அப்படியே இருக்கு ஐயா.”

“ஏப்பா குரு, நீ இங்கிருந்து கிளம்பி சுமார் ஐந்து வருஷம் இருக்குமாப்பா?”

“ஆமாம் ஐயா. சரியா சொல்லணும்னா ஐந்து வருஷம் நாலு மாசம் ஆகுதுங்க. நான் வந்ததுக்கு இன்னுமொரு காரணமும் உண்டு. நம்ம ஆசிரமத்துல வருடா வருடம் அரசாங்கம் அனாதையாகக் கைவிடப்பட்ட பிள்ளைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பாங்க.”

“ஏன், நானே ஒரு வகையில் அனாதைதானே!”

“ஏம்பா குரு, அதான் நாங்க இவ்வளவு பேரு இருக்கோமுல்ல. உனக்கு ஏன் மறுபடியும் அந்த ‘அனாதை’ங்கிற வார்த்தையை உபயோகப்படுத்துற? நாங்க இருக்கிற வரைக்கும் நீ அனாதை இல்ல. தெரிஞ்சுக்கோ.”

“ஐயா, இப்ப நான் நல்லா இருக்கேனா, அதுக்கு காரணமும் நீங்களும் இங்க இருக்கிற சூழலும்தான். என்றும் என்னை ஒரு அனாதையா நினைச்சதில்லை.”

“ஆனா இந்த ஐந்து வருஷமா தனியா ஒரு வாழ்க்கை வாழ்ந்தபோது, உங்களையும் இந்தப் பிள்ளைகளையும், என் பழைய நண்பர்களையும்தான் நினைச்சுப்பேன்.”

“உண்மையான வெறுமை எனக்கு அப்பத்தான் புரிஞ்சது. சின்ன வயசுல இருந்தப்பக்கூட எனக்கு தெரியல. என் அம்மா இறந்துட்டாங்கன்னு, அப்பா வேறொரு பெண்ணை திருமணம் செஞ்சுகிட்டு என்னை தனியா விட்டுப் போயிட்டாருன்னு. என்னோட சொந்தம் கூட என்னை இங்க வந்து விட்டுட்டாங்க. இப்ப இந்த தனிமை எனக்கு அந்த ஞாபகத்தையெல்லாம் மீண்டும் கொண்டுவந்து என் கண்முன் அவ்வப்போது நிறுத்தி, ‘நீ ஒரு அனாதை’ன்னு சொல்லும்போதெல்லாம், ஏன்டா இந்த உலகத்தில் பிறந்தோம்னு தோணும்.”

“அப்பெல்லாம், இதோ பாருங்க, என் மணிபர்ஸ்ல யாரு படம் இருக்கோ இல்லயோ, உங்க படம் இருக்கு. இதைத்தான் ஒரு முறை எடுத்துப் பார்த்துப்பேன்.”

நித்தியானந்தத்தின் கண்கள் குளமாகின. தன் இரு கைகளையும் வைத்து தன் இரு கண்களையும் துடைத்துக்கொண்டார்.

சரி விடுப்பா குரு. ஏன் பழைய சோகமெல்லாம்? உனக்கு நான் கதை சொன்னா பிடிக்குமுல்ல. இப்ப ஒண்ணு சொல்லுறேன்.

நீ செய்யும் ஒவ்வொரு செயலும் விழிப்புடன் செய்ய வேண்டும். சாலையை நீ கடக்கும்போதுகூட விழிப்புடன் கடக்க வேண்டும். ஏன், நீ உண்ணும்போதுகூட விழிப்புடன்தான் இருக்க வேண்டும். நீ எதைச் செய்தாலும், கடந்த காலமும் எதிர்காலமும் அதில் குறுக்கிட நேரிடலாம். அதை நீ அனுமதிக்கக் கூடாது. நிகழ்காலத்தில் இருக்கப் பாரு. அதுவே உண்மையான விழிப்புணர்வு.

“கடந்த காலம் இல்லை. எதிர்காலம் இல்லை. இந்தத் தருணம் மட்டுமே.” இதுதான்பா மகான் ஓஷோவின் தத்துவும் கூட.” என்றார் நித்தியானந்தம்.

“ஆம் ஐயா. நிகழ்காலத்தில் இருக்கத்தான் பழகிக்கொள்கிறேன். நீங்க அப்ப சொன்னதையும் மனதில் வைத்துக்கொண்டு செயல்படுவேன்.”

நல்லது. வாயேன், சாப்பிடலாம்.

இல்ல ஐயா, நான் உங்களிடம் ஒண்ணு சொல்லணும். சொல்லலாமா?

ஏம்பா, சொல்லு. சொல்ல வேண்டியதை முழுசா சொல்லு.

ஐயா, நான் இங்க இருக்கிற இரண்டு பிள்ளைகளைத் தத்தெடுத்துக்கிறேன். அவர்களுக்கு உண்டான முழுச் செலவையும் நானே ஏத்துக்கிறேன்,” என்றான்.

நித்தியானந்தம் மகிழ்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். பின் குருவைப் பார்த்து, “ஏம்பா, நீதான் உன்னாலான பண உதவியை எங்களுக்கு செஞ்சுட்டு வர்றியே. அதையும் தாண்டி இரண்டு பிள்ளைகளுக்கான செலவையும் ஏத்துக்கிறியா?” என்றார்.

“ஆமாம் ஐயா. பூமியில் ஜனிப்பதே பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது நம்மை அனாதையா விட்டுப் போகும் தந்தை, தாய்மார்களின் எண்ணிக்கை குறைய வேண்டும்.

இனி ஆதரவற்றோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைய வேண்டும் என்பது என் எண்ணம். என்னைப்போல் உள்ளவர்கள் அவரவர் வசதிக்கேற்ப குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தால், இந்த உலகத்தில் ஆதரவற்றோர், அனாதை என்ற சொல்லே அகராதியிலிருந்து மறைந்துவிடுமல்லவா!” என்றான் குருமூர்த்தி.

நித்தியானந்தம் வாயடைத்து, மகிழ்ச்சியால் அவனைக் கட்டித் தழுவினார்.

“உன்னைப்போல ஒவ்வொருத்தனும் நினைச்சா போதும்பா… ‘அனாதை’ங்கிற வார்த்தையே ஒரு நாள் இந்த உலகத்திலிருந்து மறைந்திடும்.” என்று சொல்லி அவனது கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தார்.

-பாலமுருகன்.லோ✍️

Series Navigationபலியாடுபிரசவிக்காத மெய்