சோம. அழகு
ஒரு சராசரி Gen Z/ Gen Alpha உடனான உரையாடல் எப்படி இருக்கும்?
“ஹாய்!”
“ஹே ப்ரோ!” – ஆண் பெண் வித்தியாசமில்லாமல் அனைவரும் ப்ரோ தானே இந்த Gen Zயினருக்கு!
“நீங்க என்ன பண்றீங்க?”
“சாப்பிடுவேன். ஊர் சுத்துவேன்”
“இல்ல… ஓய்வு நேரத்துல பண்றத கேக்கல”
“ஓய்வு நேரத்துல ஓய்வு மட்டுந்தான் எடுப்பேன். அப்போ வேலை பார்க்க மாட்டேன்”
“அதான் என்ன வேலை பாக்குறீங்க?”
“அதத்தான் சொன்னேனே? சாப்பிடுறது, ஊர் சுத்துறது, அப்பப்போ ஆடவும் செய்வேன்”
“இல்லங்க… இப்ப உதாரணத்துக்கு நான் XYZ நிறுவனத்துல ‘…..’ வேலை பாக்குறேன். நீங்க?”
“Self employment”
“என்ன மாதிரியான வேலை?”
“எத்தனை தடவைதான் சொல்லுறது?”
“அடேய்! சோத்துக்கு என்ன பண்ற?”
“சோறுதான் சாப்புடுறேன்”
“ஸ்ஸ்ஸ்ஸ்……. அதுக்கு காசு எங்கருந்து வருது?”
“நான் சோறு திங்குறத பாக்குறவங்க கிட்ட இருந்து”
“எதே?”
“ஆமா… நான் என்ன சாப்பிடுறேன்?, எவ்வளவு சாப்பிடுறேன்?னு கடைசி வரை உக்காந்து பாக்க ஒரு கூட்டமே இருக்கு”
“பாக்க வச்சு சாப்பிடாதன்னு சொல்லி கேட்டுருக்கேன். இது என்ன புதுசா? ஒருத்தன் திங்குறத பாக்க என்ன இருக்கு?”
“மில்லியன் கணக்குல பாக்குறாங்க, நீங்க வேற. அதனாலதான் அப்படியே சைடுல இன்னொரு vlog ஆரம்பிச்சுட்டேன். எங்கெல்லாம் போறேன்? என்னென்னவெல்லாம் பண்றேன்? எல்லாத்தையும் காணொளிகளாக்கி ஏத்திட்டே இருக்குறதுதான் என் வேலையே.”
“Looks like any damn thing sells in this era”
“ஹா ஹா ஹா… actually you the viewers are the product here”
“ ‘உழைப்பு’, ‘career’ போன்ற வார்த்தைகளைக் கேள்விபட்டிருக்கிறீர்களா?”
“அதெல்லாம் காலாவதியாகிப் போன சொற்கள். பணம்தானே வேணும்? இப்பிடியும் கிடைக்குது. அவ்வளவுதான்”
“அதற்காக இதெல்லாம் ஒரு முழு நேர வேலையா?”
“பின்ன ? Shooting, editing அது இதுன்னு எவ்ளோ வேலை தெரியுமா?”
“எல்லாத்தையும் கேமரா கண் வழியாவே பாக்குறது அலுக்கவில்லையா?”
“காசு ப்ரோ”
“உங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கைன்னு எதுவும் இல்லையா?”
“அப்டீனா? Whatever… It’s not necessary”
“சரிங்க. நன்றி. நமக்கம்”
The Ant and the Grasshopperன் classic versionஐ தூக்கிப் போட்டு விட்டு Somerset Maugham அந்த கதைக்குத் தந்த மறுவிளக்கத்தை சத்தியமாக இவர்கள் வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும் எப்படி?
சான்றாண்மை என்ற சொல் வழக்கொழிந்து போய்விடும் போல! ஒருவருக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரிகிறது என்பதை விட அவர் எவ்வாறு/எவ்வளவு தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார் என்பதில்தான் அவரது அடையாளமும் அங்கீகாரமும் இருக்கிறது எனில் ஒரு சமூகமாக மிக மோசமாகத் தோற்று வருகிறோம். இவ்வுலகில் தமது இருப்பைக் (எதிர்மறையாகவேனும்!) காத்திரமாகப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற வெறியின் பின் உள்ள உளவியல்….. ஐயா சாமி, எனக்குப் புரியவே தேவையில்லை.
இந்த mukbang கலாச்சாரம் ஏன் அல்லது எப்போது பெருமைக்குரிய விஷயமாக மாறியது? ஒரு தனி மனிதனால் ஐந்து பேரின் உணவை உண்ண முடிகிறது என்பதில் என்ன சாதனை மனநிலை? அதிலும் சிலர் வராக பகவான் வாந்தி எடுப்பதைப் போலவே தின்று தொலைக்கும் போது கேமரா அவரது வாய்க்குள் சென்று தொண்டையைத் தொட்டு விட்டு வெளியே வரும். இதில் ரசித்துப் பார்க்க என்ன இருக்கிறது? எப்படித்தான் இவ்வளவு பார்வையாளர்களோ?
முழுதாக உண்டு முடிக்க முடியாத பட்சத்தில் நடுநடுவே மடியில் இருக்கும் குப்பைத் தொட்டியில் துப்பி விட்டு காணொளியை வெட்டி ஒட்டிக் கொள்ளும் தகிடுதத்தங்கள் வேறு. உணவை வீணடிப்பது எவ்வளவு தவறோ அதைவிட அளவுக்கு அதிகமாக உண்பதைக் குற்றமாகக் கருதி தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இவர்களது உலக வரைபடத்தில் சூடான், சோமாலியா, ஏமன் போன்ற நாடுகள் கிடையாது போலும்.
******************************************
“ஹே ஃப்ராண்ச்/கைஸ்!” – இந்நூற்றாண்டின் அதிக எரிச்சலூட்டக்கூடிய சொல்லாக இதை அறிவித்து விடலாம். “இங்க பாருங்க… இப்ப நாம எங்க வந்திருக்கோம்னா…” , “திடீர்னு சடார்னு எதேச்சையா பொசுக்குனு சடக்குனு இந்த பிரியாணி அண்டாக்குள்ள தெரியாம தடுக்கி விழுந்துட்டேன்…” போன்ற அலறல்களுடனேயே எப்போதும் திரியும் ஜெல்லி மீன்கள் [அதுவும் எல்லோருக்கும் ஒரே விதமான கடுப்பேற்றும் தொனி ஒன்று இருக்கிறது. எவனோ ஒரு மடப்பயல் எப்படி பேசுவது என்று தெரியாமல் இதை ஆரம்பித்து வைக்க அதுதான் இலக்கணம் என வரையறுத்து விட்டார்கள் போலும்.];
தம்பதி சகிதமாகக் காட்சி தந்து நகைச்சுவை என்ற பெயரில் எதையோ கொடூரமாகக் கக்கி வைப்பவர்கள்;
குழந்தையைப் பாடாய்ப் படுத்தி சேட்டை செய்ய வைத்து/அதிகப்பிரசங்கித்தனமாகப் பேச வைத்து/வயதுக்கு மீறிய பாட்டுக்கு அசிங்கமான உடல் அசைவுகளுடன் ஆட வைத்து முறையே குழந்தையின் துடுக்குத் தனத்தை/அறிவுத் திறனை/கலை நயத்தைத் தாம் வலுக்கட்டாயமாக வியந்து உலகையும் வியக்கச் சொல்லி மிரட்டும் பெற்றோர் என்னும் பபூன்கள்;
உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், உடைகள் உள்ளிட்ட பலவற்றுக்கும் மதிப்பெண் அளித்துக் கொண்டிருக்கும் பாதி வெந்த மேதாவிகள்;
இட்லி தோசையெல்லாம் உண்டால் உடனே இயற்கை எய்திவிடுவீர்கள், வீட் பிரெட் சாப்பிட்டால் வீடு பேறு அடைவீர்கள், முக்காடிட்டு முட்டை சாப்பிட்டால் முக்தி பெறுவீர்கள் என்னும் ரீதியில் பதறுபவர்கள்;
உலகின் எந்த பொருளை எடுத்தாலும் அதை விடச் சிறந்த பொருள் இல்லவே இல்லை என்று வரிந்து கட்டிக் கொண்டு முட்டுக் கொடுப்பவர்கள் ஒரு புறம் – அப்பொருளைக் காட்டிலும் விஷம் இருக்கவே முடியாது என்று கூப்பாடு போடும் இன்னொரு கூட்டம்……..
இவர்கள் அனைவருக்கும் நடுவில் அய்யோ பாவமாக மலங்க மலங்க விழித்துக் கொண்டிருக்கும் நாம்தான் ஏமாறுவதற்கென்றே அளவெடுத்து நேர்ந்து விடப்பட்டவர்கள்.
வலைதளங்களில் பெரும்பான்மை இவர்கள்தாம் என்பதால் அந்த வெகு சில உருப்படியானவர்களை விதிவிலக்காகவோ எடுத்துக்காட்டாவோ காண்பித்து நேர்மறையான வாதம் எதையாவது தூக்கிக் கொண்டு வராதீர்கள். மேற்கூறியவற்றில் இன்னும் வசைபாட வசதியாக நிறைய வகைப்பாடுகள் இருக்கின்றன எனினும் இதற்கு மேல் பட்டியலிட பொறுமையில்லை, பேமிலீசு!
எங்கெங்கு காணினும் இவர்கள் இரைச்சலடா! இவர்களது பண வெறிக்கும் புகழ் வெளிச்சத்திற்கான ஏங்குதலுக்கும் பொதுசனத்தின் மடைமையே மூலதனம். இவர்களையெல்லாம் கண்டுங் காணாமல் புறந்தள்ளுவது ஒன்றும் கடினமான காரியம் இல்லை. இத்தனை வருடங்களாக அதைத்தான் செய்து கொண்டிருந்தேன். ஆனால் இக்கூட்டத்தின் மூடத்தனம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என இப்போதுதானே புரிகிறது. அதனால் எழுந்த கோபத்தில் இனி இவர்களை நோக்கி …..
உங்களது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவர்களது கட்டைவிரலைப் பிச்சையெடுக்கவும் என்ன கருமத்தையும் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் இரண்டு விஷயங்களைக் கண்டிப்பாகச் செய்யாதீர்கள் :
ஒரு பொருளின் தரம், அதன் உட்பொருட்களின் தன்மை, அதனால் உண்டாக வாய்ப்பிருக்கும் பக்க விளைவுகள் என எதுவும் தெரியாமல் காசை வாங்கிக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு ஆவின் பால் விளம்பரத்தில் வரும் கறவை மாட்டைப் போல் அத்தனை பற்களையும் ஈஈஈ எனக் காட்டியபடியே விளம்பரப்படுத்தித் தொலையாதீர்கள். ஒருவேளை இப்படிச் சம்பாதிக்கலாம் என்பதற்காகத்தான் ஒரு சமூக வலைதள கணக்கைத் துவங்கினீர்களோ?
‘எனக்கும் உரிமை இருக்கிறது; கூடவே வாயும் இருக்கிறது; நானும் கருத்து சொல்கிறேன்’ பேர்வழி என்று அரசியல் வல்லுநராக உங்களை நீங்களே (சந்திரமுகியாகக்!) கற்பனை செய்து கொண்டு ஸ்பெயின் நாட்டுக் கொடியை இறுகப் பிடித்துக் கொண்டு வௌவால்களைப் போல் தலைகீழாக ஆடுவது சகிக்கவில்லை. 75 வருடங்களாக உங்களை வைத்துக் கொண்டுதான் பெரியாரியம், அம்பேத்கரியம், சமூக நீதி, பொதுவுடைமை, பொது ஒழுக்கம்(civic sense) எல்லாம் பேசிக் கொண்டிருந்தோமா? Why should we (நாம் அல்ல! நாங்கள்!) bear the brunt for your arrogant gullibility?
உங்கள் பேதைமையையும் அபத்தத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் என்ன பெருமைப் புன்னகை? அப்படி எவ்வளவிற்குத்தான் விலை போனீர்கள்? “சுயமாகத்தான் பேசுகிறோம்” என்கிறீர்கள் எனில் உங்களது மானம், (அடிப்படை)அறிவு ஆகியவற்றின் மறைவுக்காக என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
இப்படியும் பிழைக்கணுமா?
இப்படியும் வாழணுமா?
- சோம. அழகு
- மழை புராணம் : 40
- பழுப்பேறிய காகிதம்
- பலியாடு
- அனாதை…
- பிரசவிக்காத மெய்
- இதெல்லாம் ஒரு பொழப்பு!
- மரணம்
- சீதை பல்