-சுந்தரிமணியன்
உச்சிவெயிலின் தாக்கம் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. இனியாவுக்கு நாளை பூச்சொரிதல் விழாவிற்காக ஊருக்குப் போகிறோம் என்று சொன்னவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் அவள் பத்தாவது படிக்கிறாள். சிவகங்கையின் பக்கமிருக்கும் அம்மாச்சியின் கிராமம் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளும் தட்டான்களும் ஆலமரத்தின் விழுதுகளும் பனைமரத்தின் நொங்கு சாப்பிட்ட நினைவுகளும் அவள் மனதில் மகிழ்ச்சிப் பூக்களைப் பூக்கச் செய்தன.
அம்மாச்சி செய்யும் இனிப்புப் பனியாரம் அவள் வாயில் எச்சில் ஊறவைக்கும் பொழுதுகளும் அவள் வருடா வருடம் போகும்போது விளையாண்ட தோழிகளும் அவள் மனதில் நங்கூரமிட்டு அமர்ந்திருந்தனர். அம்மா நாளை அம்மாச்சியின் ஊருக்கு விழாவுக்குப் போகிறோம் என்றவுடன் இரண்டு நாளாகப் படிக்கப் பிடிக்கவில்லை. ஊர் நினைவும் என்ன டிரெஸ் எடுத்துவைக்கலாம், இந்த தடவை தலைச்சுட்டி வாங்கி வரவேண்டும், பனியாரம் சாப்பிடனும், நொங்கு சாப்பிடனும், புளியோதரை அம்மாச்சிய செய்யச் சொல்லிச் சாப்பிடனும் என கனவில் மிதந்தாள் இனியா.
மறுநாள் காலையிலேயே டிரஸ்ஸையெல்லாம் எடுத்து வைத்து அம்மாச்சியின் ஊருக்குப் போய் பஸ்ஸில் இறங்கியதுதான் தாமதம் இறக்கைகட்டிப் பறக்கலானாள் இனியா. கால்கள் தரையில் படாமல் அங்கு இருக்கும் தனது தோழி நித்யாவின் வீட்டிற்குப் போனாள். நித்யா அவளை வரவேற்று அவர்கள் வீட்டில் அவித்த வேர்க்கடலையைக் கொடுத்தாள். அதை சாப்பிட்டுக் கொண்டே ஆலமர ஊஞ்சலாடியதில் நேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்கு வந்தவுடன் அம்மா கட்டையைத் தூக்கி அடிக்க ஓடிவந்தாள்.
“பொம்பிளைப் பிள்ளைக்கு அப்படி என்ன விளையாட்டு. வீட்டுக்குச் சாப்பிட வர நேரமில்லாம? உன்னை வௌக்கமாத்தால அடிக்கப் போறேன் பாரு. மத்தியானம் போனவ நாலுமணிக்கு வந்திருக்க? ” என்றவுடன்,
“அம்மா சாரிம்மா. அப்பாட்ட சொல்லிராத, நாளைக்கு எங்க போனாலும் சரியான நேரத்துக்கு வந்திர்றேன்மா” என்றவுடன் அம்மாச்சி,
“அட விடுறி. புள்ள உங்க வீட்ல வீட்டுக்குள்ளேயேதான கிடக்கும். இங்கயாவது ப்ரியா இருந்துட்டுப் போவட்டுமே” என்றதும் இனியாவுக்குக் குஷியாகிவிட்டது.
இனியாவின் அம்மா நர்மதாவுக்கும் பாவம் பிள்ளை டவுணில் வீட்டுக்குள்ளயே கிடக்கும். இங்கயாவது சுதந்திரமாக இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது.
“சரி எங்கிட்டுப் போனாலும் சொல்லிட்டுப் போனும் சொன்ன டயத்துக்கு வீட்டுக்கு வரணும். போ போய்ச் சாப்பிடு போ” என்றாள். மகிழ்ச்சியாக கிச்சனுக்கு ஓடிப்போய் அம்மாச்சி வைத்த விதவிதமான உணவுகளை ருசித்து ரசித்துச் சாப்பிட்டாள்.
இனியாவுக்கு அந்த ஊர் முத்துமாரி அம்மனை மிகவும் பிடிக்கும். கோவிலில் அம்மனின் எழிலும் பூச்சொரிதல் விழாவின் போது சந்தனக்காப்போடு பூக்களால் அலங்காரம் செய்த அம்மனின் அழகும் கண்கொள்ளாக் காட்சிதான். பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொருவராக வந்து கூடை கூடையாக மலர்களைக் கொடுக்க பூசாரி மலர்களை அம்மனின் தலையில் சூட்டி ஏற்கனவே சூட்டியிருந்த மலர்களை எடுத்து வருவோர், போவோருக்கெல்லாம் கொடுக்க, முளைப்பாரி எடுத்தலும் கொட்டுச் சத்தமும் பக்தியில் தன்னாலே ஆடவைக்கும் வைபவமாக விளங்கும்.
மறுநாள் பூச்சொரிதல் விழாவன்று அதிகாலையில் எழுந்திரித்துக் குளித்து புது ஆடை அணிந்து தனது குடும்ப சகிதம் காலை உணவிற்குப் பின்னர் கோவிலுக்குப் பூக்கூடையோடு சென்றனர். பூக்களை வரிசையில் நின்று அம்மனுக்குக் கொடுத்துவிட்டு சிறப்பாகத் தரிசனத்தை முடித்தனர். தரிசனம் முடிந்து அங்கு வெளியில் இருக்கும் கடைகளைப் பார்வையிட்டவள் தனது அம்மாவிடம்,
“அம்மா எனக்குத் தலைக்கு ஹேர்பேண்டு வாங்கனும், காசு கொடு. நானும் நித்யாவும் போய் வாங்கிட்டு வாரோம்” என்றவுடன்
“வேண்டாம் இனியா. கூட்டம் அதிகமாக இருக்கு. கூட்டம் குறைஞ்சவுடன் வந்து வாங்கலாம்” என்றவுடன்,
“போம்மா நானும் நித்யாவும் கடைக்குப் போயிட்டு முளைப்பாரியப் பார்த்துட்டு வாரோம்” என்றவளிடம்,
“வேண்டாம் கடைக்குப் போயிட்டு வா. நானும் அம்மாச்சியும் ஒரமா நிக்கிறோம். சேர்ந்து போகலாம். பத்திரமாக போய்ட்டு வாங்க” என்றாள்.
“சரிம்மா” என்று சொல்லிக் கொண்டே நித்யாவின் கையைப் பற்றிக் கொண்டு கடையை நோக்கிப் போன இனியாவைக் கண்கொட்டாமல் பார்த்தாள் நர்மதா. இந்தக் கூட்டத்தில் ரெண்டும் பத்திரமா போய்ட்டு வரணுமே என்ற அங்கலாய்ப்பு அவள் மனதில் ஓடியது.
கடைக்குப் போன இனியா தனக்குப் பிடித்த கலரில் ஹேர்பேண்டும் வளையலும் வாங்கிக் கொண்டு கடையை விட்டு நித்யாவுடன் வெளியில் வந்தாள். இனியா ‘வா நாம ரெண்டுபேரும் முளைப்பாரி பார்க்கலாம்’ என்று கூற, நித்யா ‘வேண்டாம் உங்க அம்மாவோடு போலாம்’ என்றவுடன் ‘வா நாம ரெண்டுபேரும் ஒரு தடவ தனியா பார்க்கலாம்’ என்று சொல்லி நித்யாவின் கையைப் பற்றிக்கொண்டு ஓடினாள்.
கூட்டம் அதிகமாக மொய்த்துக் கொண்டிருந்த இடத்தில் இளவட்டங்கள் பலர் இவர்கள் இருவரையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டுகொள்ளாமல் சென்ற இனியாவும் நித்யாவும் கூட்டத்தின் இடையில் புகுந்து முளைப்பாரி அருகில் செல்ல ஆவல் கொண்டனர். கூட்டத்தில் செல்லும்போது இளைஞர்களின் கைகள் இனியாவின் உடலின் பல பாகங்களைத் தொட தன்னையும் அறியாமல் அந்தத் தொடுதல் பயத்தைத் தர அலறினாள். கூடவே வந்த நித்யா என்ன ஆச்சு எனத் திரும்பிப் பார்த்தாள். அவளால் இனியாவின் உணர்வைப் புரிந்து கொள்ளவோ, பேசவோ முடியாமல் திகைத்தாள். வா என அவளைத் தனது கரங்களால் இழுக்கவும் ஆண்களின் பிடியிலிருந்து தப்பித்து வந்தவள் தன்னையும் அறியாமல் மூர்ச்சையாகிக் கீழே விழுந்தாள். நித்யா அவளின் மயக்கத்தைப் பார்த்து பயந்து என்னவோ ஆகிவிட்டது என அழ ஆரம்பித்தாள். பக்கத்தில் இருந்த பெரியவர்,
“இங்கிட்டு வாம்மா” என்று நித்யாவைக் கூப்பிட்டு, சரிந்திருந்த இனியாவின் முகத்தில் தனது கையிலிருந்த வாட்டர்கேனில் இருந்த தண்ணீரைத் தெளித்தார். தண்ணீர் பட்டதும் கண்களை மெதுவாக விழித்த, இனியா பயத்தில் தனது அருகில் யார் இருக்கிறார்கள் எனச் சுற்றுமுற்றும் பார்த்தாள். பக்கத்தில் நித்யா இருப்பதைப் பார்த்ததும் நிம்மதியுற்று எழுந்தாள். தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள இனியாவால் முடியவில்லை. அவளது துள்ளல் எல்லாம் முற்றிலும் வடிந்துபோனது.
இப்போது இனியாவுக்கு இருபத்தோரு வயதாகின்றது. தனது அம்மாச்சியின் ஊருக்குப் போகும் ஆவலே இனியாவுக்கு இல்லாமல் போனது. இப்போதும் அதை நினைத்தாலே இனியாவுக்குத் தன்னையும் அறியாமல் மனதில் இனம்புரியாத பயமும் அருவருப்பும் அழுகையும் எட்டிப்பார்க்கின்றது. நர்மதாவுக்கு முத்துமாரியம்மனின் மேல் இருந்த அதிகமான பக்தியும் தனது மகளுக்கு ஏற்பட்ட துன்பத்தால் வத்திப்போனது. உன்னைக் கும்பிடுகின்ற எங்களுக்கு நன்மை தராத நீயெல்லாம் தெய்வமா, இனிமேல் உன் சன்னிதிக்கு வரமாட்டேன் என்று முடிவெடுத்தாள். அவ்வப்போது தனது அம்மாவை மட்டும் போய் பார்த்துவருவாள்.