This entry is part 8 of 8 in the series 19 ஜூலை 2026

 

   இரா.ஜெயானந்தன். 

பத்தாவது தெரு முனையில்தான், 

சீத்தாராமன் வீடு. ஒரு நடுத்தர வர்க்கவாசி. 

சீத்தாவுக்கு கீழ் வரிசையில் இரண்டு பல் உடைந்துவிட்டது என்பதுஅந்தவீட்டிற்கேதெரியும்.  கடுவாய் பல்லில் பூச்சியும் பிடித்துவிட்டது. வாழ்ந்த வாழ்க்கையில் இந்த பல் அழகாக, வரிசையாக, முத்துக்களாக மின்னிய இளமை பருவத்தில்தான் சீத்தாராமன் கைப்பிடித்தான். 

கட்டியணைக்கும் போதும், முத்தமிடும் போதும், முத்துப்பல் அழகியே என கொஞ்சுவான். கூடவே காமம் அதிகரிக்கும் போது, சில நடிகைகள் பெயர் சொல்லி அழைப்பான். மனைவி, நடிகைகளாக மாறும் தருணங்களை, மனைவிகளும் கண்டுக்கொள்ளாமல் போன காலங்கள்,ஆண்களுக்கு பொற்காலம். முத்துப்பல் அழகில் கிடைத்த முத்துக்கள்தான் 

 இரண்டு பெண்களும், ஒரு ஆணும்.

 இவர்களுடைய இல்லற சுகத்தில் விளைந்த பயிர்கள். 

இன்று அதுகள் வளர்ந்து, நிமிர்ந்து  திரிகின்றனர்.  

 சீத்தாவுக்கு அறுபது முடிந்துவிட்டது. நான்கு வருடங்களுக்கு முன்னால் சீத்தாராமனுக்கு அறுபது. 

திருக்கடையூரில் அறுபதாம் கல்யாணம், 

காசிநாத குருக்கள் விமர்சையாக செய்து வைத்தார். அவருடைய பொய் பல்செட் அடிக்கடி மந்திரம் சொல்லும் போது வெளியே வருவதை சீத்தா கவனித்தாள். 

 இன்று உடைந்த சீத்தா பொய்பல் கட்ட,  செலவிற்கு சீத்தாராமன் எண்பது யோசனை செய்தான். வளர்ந்து நிற்கும் பெண்களின் நிலைக்கண்டு, சீத்தாவும் வாய் மூடி பயணித்தாள்.  பூச்சிப்பல்லில் வலி அதிகமாகியது. எதையும் சாப்பிட முடியாமல் திணறினாள். தாகத்திற்கு தண்ணீர் குடித்தால் கூட பூச்சிப்பல் கூசியது. 

ஐஸ் வைத்து ஒத்தடம் கொடுக்க சொன்னாள் மல்லிகா. சிங்கப்பூர் கிராம்பு தைலம் சிறந்த நிவாரணி என கூறினாள். 

கீழ் வரிசை இரண்டு பற்கள் இல்லாததால் ,பேசும் போது காற்றே வந்தது. வார்த்தை குழறியது. சீத்தாராமனுக்கு கோபம் பொங்கியது. இப்படி ஒரு கிழவியை தன் தலையில் கட்டிவிட்டதாக புலம்பினான். சீத்தா பல இரவுகளில் கண்ணீர் வடித்தாள். வாழ்க்கை நதியில் ஓடிய படகு கரைசேற இன்னும் கொஞ்சம் காலம் இருப்பதாக அவள் நினைத்தாள். இதற்குள் அவள் தானாக முடிவு தேடிக்கொள்ள விரும்பவில்லை. 

வளர்ந்த பிள்ளைகளை அநாதையாக விட்டுச்செல்ல அவள் மனம் இடம்கொடுக்கவில்லை. பல் வலி அதிகமாகிக்கொண்டே சென்றது. 

அரசாங்க பல் மருத்துவ மனையில் பக்கத்து வீட்டு கோமளா  கட்டிய பல் ஆட்டம் கண்டது. திரும்பத்திரும்ப அரசாங்க டாக்டரிடம் கேட்டதற்கு, தனது அசோக்நகர் தனியார்

 கிளீனிக்கு வரச்சொன்னதாக கோமளா கூறினாள். 

கடைசியாக ஒரு நாள் மகன் மாதவன்தான், சீதாவை தனியார்

பல் மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றான். பல் டாக்டர் அந்த ஏரியாவில் பிரபலம். நாலைந்து பேர்கள்தான் அமர்ந்திருந்தார்கள். ஒரு ஐந்து நட்சத்திர அறைபோல் இருந்தது அந்த கிளீனிக். சுவற்றில் உயர்ரக பெயிண்ட் மின்னியது. டாக்டர் வாங்கிய உள்நாட்டு, வெளிநாட்டு டிகிரி சர்டிஃபிகேட்கள், அழகான தங்க பிரேம் போட்டு மாட்டியிருந்தனர். டாக்டர் சில வெள்ளைக்கார டாக்டர்களோடு சேர்ந்து நின்ற போட்டோக்கள் அவரது மதிப்பையும், பீஸ் தொகையை கேட்பதற்கும் நியாயம் கற்பித்தன. 

நர்ஸ் என்று சொல்லிக்கொள்வதுபோல், நடுத்தர வயதுடைய பெண், சீதாவின் பல்வலி சரித்திரத்தை எழுதிக்கொண்டாள். சீத்தா அந்த பெண்ணின் பல்லையே கவனித்தாள் . அவள் பல் சீராகத்தான் இருந்தது. அட்வான்ஸ் பணமாக பத்தாயிரம் போனது. 

சீத்தா  பக்கத்தில் அமர்ந்திருந்த வயதான அம்மாள் சீத்தாவுடன் பேச்சுக்கொடுத்தாள். அந்த அம்மாள் எல்லா பற்களையும் எடுத்துவிட்டு, பொய் செட் பற்களை கட்டப்போவதாக கூறினாள். அதற்கு ஆகும் செலவிற்கு காட்டுப்பாக்கத்தில் உள்ள அவளது காலியான பிளாட் ஒன்றை விற்க முடிவுசெய்து புரோக்கரிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறினாள். 

என்பது வயது மூதாட்டிக்கு பொய் பல் தேவைப்பட்டது. ஒரு பெண்ணிற்கு பல் எவ்வளவு முக்கியம் என அந்த மூதாட்டிதான் கூறினாள். பக்கத்து வீட்டு பாலம்மா பேரன் தொட்டில் நிகழ்ச்சிக்கு கிழவியை அழைக்கவில்லையென கூறினாள். பல் இல்லாதவள் வாழ்த்தினாள் குறைப்பட்டுவிடும் என பாலம்மா கூறியதாக அவளது எதிர்வீட்டு செல்லம்மாதான் கூறினாள் என முதியவள் குறைப்பட்டுக்கொண்டாள். 

மூதாட்டியின் பிள்ளைகள் அமெரிக்காவில் ஒன்றும்,கனடாவில் ஒன்றும் வாழ்வதாக கூறினாள். சொந்த ஆட்டோவும்,அதற்கொரு டிரைவரையும் பிள்ளைகள் அமைத்துக்கொடுத்திருந்தார்கள்.

சிலருக்கு வாழ்க்கை இப்படியும் அமைகின்றது. 

புரசைவாக்கத்தில் சொந்த வீட்டில் வாழ்வதாக அவளது எல்லா கதைகளையும் அரைமணி நேரத்தில் கூறிவிட்டாள். போனவருடம்தான் கணவர் தவறிப்போனதையும் கூறினாள்.அடுத்த இரண்டு மாதங்களில் கனடா போவப்போவதாக பெருமையாக கூறினாள். அதற்குள் பற்களை கட்டிக்கொண்டு வர, இரண்டாவது மகன் கூறியதையும் கூறி விட்டாள். கனடாவில் பல் கட்ட பல்லாயிர டாலர் செலவாகும் என்ற காரணத்தால் சென்னையிலேயே பல் கட்டிக்கொள்ளுமாறு ஏற்பாடும் செய்துவிட்டதாக கூறினாள் மூதாட்டி. சீதாவுக்கு அயாசமாக இருந்தது. ஒரேடியாக ஒருத்தி சுயபுராணம் பாடுவது கேட்பதற்கு சங்கடமாக இருந்தது. 

சீதாவுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. அவளுக்கோ அல்லது சீதாராமனுக்கு எங்கும் பிளாட் கிடையாதே என கவலைப்பட்டாள். சீத்தாராமன் சர்வீஸில் இருக்கும் போதே அவனது நண்பர்கள் அம்பத்தூர் பக்கத்தில் காலி மனைகள் சல்லிசாக கிடைப்பதாக புரோக்கர் மூலம் அறிந்து, அவனுடைய செக்ஷன் நண்பர்கள், மாத தவணையில் பிளாட்டுகளை இருபதைந்து வருடங்களுக்கு முன் வாங்கிப்போட்டனர். இன்று அது கணிசமான விலைக்கு போவதாக கேள்விப்பட்டு சீத்தராமன் கவலையடைந்தான். சில பிளாட்களில் வேறு சிலர் வீடுக்கட்டிக்கொண்டு, பலர் போலீஸ் ஸ்டேசன், கோர்ட் என அலைந்தனர். அதனைப்பார்த்து கொஞ்சம் ஆறுதலடைந்தான். மற்றவர்கள் அவஸ்தை சில நேரங்களில் ஆறுதலாக அமைகின்றது. மனிதன் மிருகமாகும் சில தருணங்கள் எல்லார் வாழ்க்கையிலும் வரும்போகும். 

சீத்தாவின் பற்களை ஆராய்ந்தார் பல் டாக்டர். எக்ஸ்-ரே எடுத்தார்கள். பூச்சிப்பல்லில் ஏதோ ஒரு மருந்தை தடவினார்கள். வலி நின்றது. தலைக்கு மேலே லைட். சாய்ந்த நாற்காலி, பக்கத்தில் நர்ஸ் கையில் கோப்பையோடு நின்றாள். வாய் திறந்து கிடக்க, ஈறில் சிறிய ஊசிப்போட்டார்கள். அரைமணி நேரம் வாய் மறத்துப்போனது .

திறந்த வாயில் சிறிய குழாய் வழியாக தண்ணீர் அடித்தார்கள். 

திக்திக்கென மனசு அடித்துக்கொண்டது. பேச்சு வரவில்லை. கண்கள் மட்டும் அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தது. 

சீத்தாவின் மகனிடம் டாக்டர் ஆங்கிலத்தில் பேசினார். பூச்சிப்பல் அதற்கு அடுத்த பல்லும் எடுக்க வேண்டும். பிறகு ரூட் கனால் செய்துவிட்டு, புதுப்பற்களை கட்ட வேண்டும் என ஒருவித கணக்கை போட்டு, கிட்டதட்ட இரண்டு லட்சம் ரூபாய் செலவாகும் என கூறினார். 

சீத்தாராமன், பல் கட்ட எந்தவித இன்ஸ்யூரன்ஸூம் எடுக்கவில்லை. 

சீத்தா  தொங்கிய முகத்துடன் வீட்டை அடைந்தாள். மாதவன் தந்தையிடம் செலவைப்பற்றி கூறினான். 

இதைக்கேட்ட சீத்தாராமன், மற்ற சுற்றுவட்டார டாக்டர்களிடம் கேட்கலாம் என கூறினார். பிராட்வேயில் சைனா டாக்டர்கள் குறைந்த செலவில் பல் கட்டுவதாக, சீத்தாராமன் நண்பர்கள் கூறினார்கள். காலம்காலமாக சைனா டாக்டர்கள் பூக்கடை, பிராட்வேயில் பல்கட்டும் தொழில் செய்து வருகின்றனர். அவர்களுடைய சைனா களிமண் வைத்து, பல் செட் கட்டுவதில் நிபுணர்கள். நாராயண சாமி தாத்தாக்கூட அங்கு கட்டிய பல்லோடு தான், கடைசி வரைக்கும் வாழ்ந்தார். அவரது சடலத்தை எரிக்கும் போது, அந்த பல்செட்டையும் வைத்து எரித்தனர். ஆனால் அந்த சைனா பல் செட்டை தினமும் இரவில் கழற்றி, பிரஷ் செய்து வைக்க வேண்டும். காலையில் மாட்டிக் கொள்ள வேண்டும். இது ஒரு தொல்லையான வேலை. ஏமாந்தால் இரவில் எலி தூக்கி சென்றுவிடும். 

பத்து வயது பெண் குழந்தையை அழைத்து வந்தார்கள். அவளுக்கு முன் பல் எடுப்பாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. அதை எடுத்துவிட்டு, வரிசையாக கட்ட வேண்டும் என காத்திருந்தனர். பெண்ணிற்கு பல் தானே அழகு என அந்த பெண் குழந்தையின் தாய் அவளின் கல்யாண கதைவரை சென்றுவிட்டாள். இந்த பல்லே, ஒரு பெண்ணின் வாழ்வில் பல தரிசனங்களை காட்டுகின்றது என சீத்தா உணர்ந்தாள். 

ஒருவழியாக குடும்பத்தில் பேசி முடித்து, சீத்தாவுக்கு முதலில் பூச்சிப்பல்லை எடுத்துவிட்டு, பொய்பல் கட்ட முடிவு செய்தனர். 

மூத்தப்பெண் திருமணத்திற்காக சேமித்த தொகையிலிருந்து கொஞ்சம் பணம் எடுக்கலாமென முடிவு செய்தார் சீத்தாராமன். 

புரோக்கர் தங்கப்பல் பொன்னம்பலம் தீடீரென, சீத்தாராமன் வீட்டிற்கு வந்தார். அவரது தங்கப்பல்லையே பார்த்துக்கொண்டிருந்தாள் சீத்தா. 

பெரிய பெண்ணிற்கு நல்ல வரன் வந்திருப்பதாக கூறினார். பத்து பொருத்தம் உசிதம். பையனுக்கு கனடாவில் வேலை. கைநிறைய சம்பளம், சொந்த வீடு, வசதியான குடும்பம் என்றார். ஆனால் கொஞ்சம் அதிகமாக எதிர்பார்க்கின்றனர் என்ற ஒரு மிளகாய் துண்டையும் போட்டார். 

ஊஞ்சலில் உட்கார்ந்துக்கொண்டே 

சீத்தாராமன் ஏதோ யோசித்தார். 

சீத்தா அவர் அருகே அமர்ந்து அந்த வரனையே முடித்துவிடலாம் என கூறினாள். மூத்தவளுக்கு வயது ஏறிக்கொண்டே போவது அவளது வாழ்வை கசக்கிப்பிழிவது போல் தெரிந்தது.

சீத்தாராமன் அவளது பல் சிகிச்சைப்பற்றி யோசித்தான். அது தற்போது அவசரம் இல்லையென கூறினாள். இந்த நேரத்தில் ரெண்டு லட்சம் என்பது அவசியமானதாக தெரிந்தது. 

மூத்தவளின் திருமணம் நல்லவிதமாக முடிந்தது.அவளும் வருகின்ற தைமாதம் கனடா செல்ல ஏற்பாடானது. 

சீத்தாவின் பல்வலி அதிகமாகியது. 

இந்த முறை எப்படியாவது, பல்லை கட்டிவிட முடிவு செய்தாள். 

மாதாந்திர செலவை சிக்கனமாக இழுத்துப்பிடித்தாள். ஆனாலும் குதிரை தீடீரென எங்கோ விலைவாசி ஆற்றில் பாய்ந்தது. 

தேதி குறித்து கொடுத்தார் பல் டாக்டர். இன்னுமொரு ஸ்பெஷலிஸ்டும் சேர்ந்துதான் இந்த ஆப்ரேஷன் செய்ய ஏற்பாடு செய்தார். சீத்தாவிற்கு பல் கட்ட ஆகும் செலவை நினைத்து அந்த குடும்பத்தில் அத்தனை நபர்களும் கவலைப்பட்டனர். 

சின்னவள் வீட்டின் மூலையில் அமர்ந்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். சீத்தா பயந்து விட்டாள். எங்காவது ஏமாந்து விட்டாளா என யோசித்தாள். பக்குவமாக அவளிடம் பேசியதில், நாளைக்கு ஒரு லட்ச ரூபாய் கட்ட வேண்டும். அப்போதுதான் அந்த எ.ஜ. கோர்ஸில் சேர முடியும் என்றாள். அந்த சர்டிபிகேட் இருந்தால் உடனே நல்ல வேலையும், கைநிறைய சம்பளமும் கிடைக்கும் என்றாள். 

சீத்தாவின் பல் கட்டும் அறுவை சிகிச்சை ரத்தானது. 

ரசத்திற்கு உப்பு பார்த்துக்கொண்டே, அடுப்பைப்பார்த்து சிரித்துக்கொண்டாள் சீத்தா. 

கைகால் கழுவிக்கொண்டு, டைனிங் டேபிளுக்கு வந்தான் சீத்தாராமன். 

≈≈============///=============

Series Navigationமரணம்