வளவ. துரையன்
இப்பாடலில் அக்காலப் பெண்டிர் தம் கூந்தலை ஐந்து பகுப்புகள் கொண்டதாக அமைத்திருந்தனர் என்பது தெரிகிறது. அவையாவன: கொடை, சுருள்,பனிச்சை குழல், முடி.
தலைவன் பொருள் தேடிப் பிரிந்து சென்றுள்ளான். கார்காலத்தில் வந்துவிடுவேன் எனக் கூறிச் சென்ற அவன் இன்னும் வீடு திரும்பவில்லை. எனவே தலைவி கவலைப்படுகிறாள். வருந்துகிறாள். தோழி அவளுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துகிறாள்.
“அதோ பார்; முல்லை நிலத்தில் வெண்காந்தள் மலர்கள் மலர்ந்து விட்டன. எனவே கார்காலம் தோன்றிவிட்டது. தலைவன் வந்துவிடுவான்” என்று மொழிகிறாள். வெண்காந்தள் மலர்ந்திருப்பதற்குப் பாம்பின் படம் உவமை கூறப்படுகிறது.
”புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார்
வணர் ஒலி ஐம்பாலாய்! வல் வருதல் கூறும்
அணர்த்து எழு பாம்பின் தலைபோல் புணர்கோடல்
பூங்குலை ஈன்ற புறவு”
குழற்சி என்பது சுருண்டிருப்பதைக் கூறும்.ஒலி என்பது தலைவி கூந்தல் தழைத்திருப்பதைக் காட்டுகிறது. ”ஒலி நெடும்பீலி” என்று நெடுநல்வாடை காட்டும். ”வணரொலி ஐம்பாலார்” என்று இன்னா நாற்பது கூறும்.
பாடலின் பொருள்: ”குழற்சியை உடைய தழைத்த கூந்தலை உடையவளே! மேல் நோக்கி எழும் பாம்பின் படத்தைப் போன்ற வெண்காந்தள் பூக்கொத்துகளை காடுகள் காட்டுகின்றன. எனவே பொருள் தேடிச் சென்ற தலைவர் விரைவில் வந்து விடுவார் என்பது தோழியின் கூற்றாகும்.
12. மயில் அன்ன சாயலாய்!
கார்காலத்தில் வந்துவிடுவேன் எனக் கூறித் தலைவன் பிரிந்து சென்றான். தலைவி அவன் பிரிவை எண்ணி வருந்தி இருக்கிறாள். அப்போது அருகிலிருக்கும் தோழி அவளுக்கு ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்துகிறாள்.
”மை எழில் உண்கண், மயில் அன்ன சாயலாய்!
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்;
நெய் அணி குஞ்சரம் போல, இரும் கொண்மூ
வைகலும் ஏரும் வலம்”
தலைவிக்கு மயிலை உவமையாக்குவது ஓர் இலக்கிய மரபாகும். ”மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு” என்று திருகுருகாற்றுப்படை காட்டும். மேலும் தலைவன் கல்வி மற்றும் அறிவினில் தேர்ந்தவன். அதையே தோழி, “கற்றதுடைமை காட்சியின் அறிப” என்கிறாள். தலைவன் அத்தகைய அறிவுடையவன் ஆதலின் விரைவில் வருவான் என்னும் குறிப்புத் தோன்ற தோழி கூறுகிறாள். குஞ்சரம் என்பது யானையைக் குறிக்கும் சொல்லாகும். ”வானத் தன்ன வளமலி யானை” என்று மலைபடுகடாம் காட்டும். யானைகள் வலப்பக்கம் வருவது போல மேகங்கள் வலமாக எழுகின்றன என்பது கருத்தாகும்.
பாடலின் பொருள்: கருமையும் அழகும் பொருந்தி உள்ள மை உண்ட கண்களை உடைய மயில் போன்ற அழகுள்ள தலைவியே எண்ணெய் பூசப்பட்ட யானைகளைப் போல கரிய மேகங்கள் நாள்தோறும் வலமாக எழுகின்றன. எனவே ஐயம் தீர்ந்த அறிவு கொண்ட நம் தலைவர் மீள வருதல் உறுதியாகும்.
13. வாளரவம் போல மழை
தலைவர் பிரிவால் தலைவி வருந்துகிறாள். பிரிந்து சென்ற தலைவர் விரைவில் வந்துவிடுவார்; கார்காலம் வந்துவிட்டது. மழைபெய்கிறது என்று தோழி தலைவியைத் தேற்றுகிறாள். அரவம் எனும் சொல் மழையின் முழக்கத்தைக் குறிக்கிறது. மழையானது முழங்கிக் கொண்டே பெய்கிறது. மின்னல்கள் மின்னுகின்றன. அவற்றின் ஒளி வாளைப் போல் உள்ளது.
அதுவும் அந்த வாள் அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற வாளைப் போன்றதாகும். களிறு எறி வாளரவம் போல எனும் சொல் அதைக் காட்டுகிறது. ”அருஞ்சமத் தெறிந்த பெருஞ்செயல் ஆடவர் கழித்தெறி வாளின் அழிப்பன விளங்கு, மின்னுடைக் கருவியையாகி நாளும் கொன்னே செய்தியோ அரவம் மழையே என்பது அகப்பாட்டு. மேலும் மழைபெய்வதற்கு மகளிரின் சரிந்த கூந்தலும் உவமையாகக் காட்டப்படுகிறது.
”ஏந்து எழில் அல்குலாய்! ஏமார்ந்த காதலர்
கூந்தல் வனப்பின் பெயல் தாழ, வேந்தர்
களிறு எறி வாள் அரவம் போலக் கண் வௌவி,
ஒளிறுபு மின்னும் மழை”
பாடலின் பொருள்: அழகினை உடைய, ஏந்து அல்குலாய்! தம் தலைவரோடு கூடி இன்பம் துய்த்த மகளிரின், சரிந்த கூந்தலின் அழகுபோல மழை பெய்கிறது. மேகம் அரசர் யானையை வெட்டி வீழ்த்துகின்ற ஒலியை உடைய வாளைப் போல கண்களைக் கவர்ந்து மின்னுகிறது. அவர் சொன்ன காலம் இது. அவர் விரைவில் வந்து விடுவார்
14. முல்லை சிரிக்கும்
செல்வம் தேடிக் கொண்டுவரச் சென்றுள்ளான் தலைவன். கார்காலத்தில் வந்து விடுவேன் என்று கூறிச் சென்றான் அவன். ஆனால் இன்னும் வரவில்லையே எனத் தலைவி வருந்துகிறாள். அப்போது தோழி ஆறுதல் கூறுகிறாள்.
“அதோபார் கார்காலம் வந்துவிட்டது. முல்லைப் பூக்கள் சிரிக்கின்றன அவர் வந்து விடுவார். வருந்தாதே” என்கிறாள்.
”செல்வம் தரல் வேண்டிச் சென்ற நம் காதலர்
வல்லே வருதல் தெளிந்தாம்; வயங்கிழாய்!
முல்லை இலங்கு எயிறுஈன, நறுந்தண் கார்
மெல்ல இனிய நகும்”
இப்பாடலில் முல்லை அரும்புகளை எயிறு என்னும் சொல்லால் ஆசிரியர் குறிப்பிடுகிறார். “முல்லை எயிறீன” என்பதை ஐந்திணை எழுபதில் காணலாம்.
பாடலின் பொருள்: விளங்குகின்ற அணிகளை உடையவளே! முல்லைக் கொடிகள் மகளிரின் பற்களைப் போல் விளங்குகின்ற அரும்புகளை ஈனுகின்றன. நல்ல குளிர்ந்த மேகம் மெதுவாகவும் இனிமையாகவும் முன்னுகிறது; எனவே பொருள் தேடிக் கொள்ளும் பொருட்டுப் பிரிந்து சென்ற நம் தலைவர் விரைந்து வருவார்.
- கார்நாற்பது 11. ஐம்பாலாய்
- புள்ளும் சிலம்பின காண்
- பவிழிதழ் (Pavizhithazh) என்ற தமிழ் இணைய இலக்கிய இதழ்
- முகமெலாம் மத்தாப்பூ
- இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்
- கார் நாற்பது – 8. புகழே நிலையானது
- தி கேம்
- தங்கக் கொலுசு
- பூவரசு பூத்திருக்கு
- வன்மக் கிடங்குகள்!
- சேரனின் இலக்கியப் புலம்: நவீன இலங்கைக் கவிதை, போர்க்கால சாட்சியம், புலம்பெயர்வு இலக்கியம்
- நிம்மதி
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- அம்மையும் குதிரைத்தலைப் பிடிலும்
- காற்றுவெளி கார்த்திகை(2026) இதழ்