அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 30வது (2025) ஆண்டின் “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். பேராசிரியர் ஸ்டாலின் ராஜாங்கம், பேராசிரியர் மோனிகா வேங்கடதுரை, எழுத்தாளர் கே. விட்டல் ராவ் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழுவின் பரிந்துரைகளிலிருந்து 2025 ஆம் ஆண்டின், விருதுக்குரியவர்களாக கீழ்காணும் எழுத்தாளர்களையும், கலைஞரையும் விளக்கு செயற்குழு தேர்வு செய்துள்ளது.
- சுரேஷ்குமார இந்திரஜித் – புனைவிலக்கியம்
- தியடோர் சு. பாஸ்கரன் – புனைவிலி இலக்கியம்
- வெளி ரங்கராஜன் – கலை
ஒவ்வொன்றும் ரூ 1,50,000 மதிப்புள்ள இவ்விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
விருதாளர்களின் பங்களிப்புகளின் முக்கியத்துவங்களைப் பற்றிய நடுவர் குழுவின் குறிப்புகளும், அவர்களைப் பற்றிய குறிப்புகளும், அவர்களின் படைப்புகளின் பட்டியல்களும் அடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தச் செய்தியை தங்கள் தொலைகாட்சி, செய்தித்தாள், அல்லது பத்திரிகையில் விரிவாக வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
‘விளக்கு’ செயற்குழு
நவம்பர் 2, 2026
சுரேஷ்குமார இந்திரஜித்

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பணிகளும்
தமிழ் நவீன இலக்கியவுலகில் அரை நூற்றாண்டாக இயங்கிவரும் சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் என்று பரவலாக பங்களித்திருக்கிறார்.1953 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்து அங்கேயே பள்ளிப் படிப்பை முடித்து மதுரை கல்லூரிகளில் இளங்கலை முதுகலைப் படிப்புகளை நிறைவு செய்த சுரேஷ்குமார எழுத்துலகில் தன்னுடைய பெயரை சுரேஷ்குமார இந்திரஜித் என்றாக்கிக் கொண்டார். வருவாய்த்துறையில் பல நிலைகளில் பணியாற்றி வட்டாய்ச்சியராகி பணி ஓய்வு பெற்று மனைவி மல்லிகாவோடு மதுரையில் வசித்து வருகிறார்.
ஜெயகாந்தன் வழியாக புனைவுலகம் அறிமுகமாகி அவரையே ஆதர்சமாக கொண்டு எழுதத் தொடங்கினார். சிறுகதை வடிவத்தில் வெளிப்பட்ட இவர் 1975 ஆம் ஆண்டு முதல் எழுதத்தொடங்கினார். இவ்வாறு 1970 களின் மத்தியில் எழுத வந்து எண்பதுகளின் தொடக்கத்தில் முதல் நூலாக அலையும் சிறகுகள் என்னும் சிறுகதைத் தொகுப்பை ( 1982) வெளியிட்டார். முதல் தொகுப்பிலேயே கவனம் பெற்றார் எனினும் மறைந்து திரியும் கிழவன் என்ற இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு மூலம் தமிழின் இன்றியமையாத எழுத்தாளராக அறியப்பட்டார். தமிழ் நவீன எழுத்தில் புதிய சொல்முறை கொண்ட படைப்பாளியாக கவனம் பெற்றார். தொடர்ந்து எழுதி வந்த கதைகளில் பலவகையான கதை கூறல் முறைகளையும் கையாண்டார்.தமிழ் நவீன எழுத்தாளர்களில் வடிவம் பற்றி ஓர்மை கொண்ட படைப்பாளிகளில் முக்கியமானவர். குறைந்த சொற்களால் விவரிப்பவர். அவர் உரைநடை கச்சிதமும் செறிவும் கொண்டவர். அவர் எழுத்து புறவிவரணைகளை தேவையற்ற ஜோடனைகளாக ஒதுக்குபவை. இந்த வகையில் அவரின் கதையுலகத்திற்கும் எழுத்து முறைக்கும் நெருக்கமான தொடர்புண்டு.அவர் படைப்புகளில் புனைவுக்கு இணையாக கதாமாந்தர்களின் உளவியலும் இணைந்து வந்திருக்கின்றன. பாத்திரங்களின் செயற்கையான உணர்ச்சிகளுக்கோ, கதை திருப்பங்களுக்கோ அவர் புனைவில் இடமில்லை. மனித உலகம் அதன் போக்கில் இயங்கிக் கொண்டிருப்பதை அதன் போக்கில் எழுதிக் காட்டுபவை அவர் கதைகள். மனித மனதின் பல அடுக்குகளையும், அதில் மறைந்திருக்கும் உணர்வுகளையும் காட்டுபவை. படைப்புகளில் கதைகளை உருவாக்குவதைக் காட்டிலும் மனித மனங்களின் சிக்கல்களை, வினோதங்களை எழுதியிருக்கிறார். கதையென்பது நுட்பம் தான் என்பதை அவர் புனைவுகள் பலவாறாக உணர்த்துகின்றன. இந்த அம்சங்கள் வழியே பார்த்தால் அவர் கதைகளில் வாசகர்களுக்கான இடம் அதிகம். புனைவுகள் புதிய தடங்களை தேடிச் செல்லுபவை ஆகையால் பலவிதமான கற்பனை சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. தன் எழுத்தைப் பற்றிக் கூறும் போது “ஒரு வரைபடத்தை அளிப்பதே என் வேலை. இந்த இடத்துக்குத்தான் போய்ச்சேரும் என்பது எனக்கே திட்டவட்டமாகத் தெரியாது. ஆனால் வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரவரின் அனுபவத்திற்கும், இயல்பிற்கும், வாசக பரப்புக்கும் உகந்தது போல் ஓரிடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள்” என்கிறார்.
சிறுகதைகளில் தொடங்கிய அவர் நாவல், குறுநாவல், குறுங்கதைகள் என்று விரிந்தார்.புனைவெழுத்தாளரான அவர் புராணங்கள், தொன்மங்கள் மீது விமர்சன பார்வை கொண்டவர். ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு சரித்திரத்தன்மை கொண்ட கதைகளை பின்னாட்களில் எழுதினார். ஆனால் அவற்றின் வழியாக உன்னதங்களை பேசுவது அவரின் நோக்கமாய் இருந்திருக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து பயின்று வந்த புற விவரணைகளிடமிருந்த விலகல் அவரை பின்னாட்களில் நிறைய குறுங்கதைகளை எழுத வைத்தது எனலாம். ஆண் பெண் உறவுகளின் நுட்பங்களும், தற்செயல்களின் ஊடாட்டமும் குறுங்கதைகளின் அடிநாதமாய் இருந்தன. இவரும் ராஜமார்த்தாண்டனும் இணைந்து 1986ஆம் ஆண்டு முதல் 1989ஆம் ஆண்டு வரை சந்திப்பு என்ற பெயரில் மதுரையில் நடத்திய மாதாந்திர இலக்கியக் கூட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. 38 சந்திப்புகள் வரை நடத்தப்பட்ட இக்கூட்டங்களில் பலரும் கலந்துக் கொண்டு பேசினர். மா.அரங்கநாதன் விருது (2023) விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது (2020) உள்ளிட்ட விருதுகளை சுரேஷ்குமார இந்திரஜித் பெற்றுள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான புனைவு பிரிவிலான விருது சுரேஷ்குமார இந்திரஜித்
அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
சுரேஷ்குமார இந்திரஜித் படைப்புகள்:
1) அலையும் சிறகுகள் (சிறுகதைகள்) – 1982
2) மறைந்து திரியும் கிழவன் (சிறுகதைகள்) – 1993
3) மாபெரும் சூதாட்டம் (அலையும் சிறகுகள், மறைந்து திரியும்
கிழவன் தொகுப்புகளின் கதைகளும் அதற்குப் பின் எழுதிய
கதைகளும் அடங்கிய தொகுப்பு) – 2005
4) அவரவர் வழி (சிறுகதைகள்) – 2009
5) நானும் ஒருவன் (சிறுகதைகள்) – 2012
6) நடன மங்கை (சிறுகதைகள்) – 2013
7) நள்ளிரவில் சூரியன் (தேர்ந்தெடுத்த சிறுகதைகள் ) – 2014
8) இடப்பக்க மூக்குத்தி (சிறுகதைகள்) – 2017
9) பின்நவீனத்துவவாதியின் மனைவி (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்) – 2018
10) கடலும் வண்ணத்துப்பூச்சிகளும் (நாவல்) – 2019
11) பின்னணிப் பாடகர் (குறுங்கதைகள்) – 2020
12) அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் (நாவல்) 2020
13) ஒரு பாடகி ஒரு மாயப்பிறவி (நாவல்) – 2021
14) நான் லலிதா பேசுகிறேன் (நாவல்) – 2022
15) சுரேஷ்குமார இந்திரஜித் நேர்காணல்கள் – 2022
16) தாரிணியின் சொற்கள் (குறுங்கதைகள்) – 2022
17) சுரேஷ்குமார இந்திரஜித் சிறுகதைகள்: 1981 – 2020 (மொத்தச் சிறுகதைகள்) – 2022
18) எடின்பரோவின் குறிப்புகள் (குறுநாவல்கள்) – 2023
19) பெரியம்மை (கதைத் தொகுப்பு) – 2023
20) பிறவிப் பெருங்கடல் (நாவல்) – 2024
21) அபூர்வ கணம் (குறுங்கதைகள்) – 2024
22) சாந்தினியைத் தேடி (கதைத்தொகுப்பு) – 2025
தியடோர் சு. பாஸ்கரன்

வாழ்க்கைக் குறிப்பும் இலக்கியப் பயணமும்
திரைப்பட வரலாற்றாய்வு, தொல்லியல், சூழலியல், காட்டுயிர் ஆகிய துறைகளில் தொடர்ந்து பங்களித்து வரும் வரலாற்று ஆய்வாளர் தியடோர் சு. பாஸ்கரன். தமிழ்ப் பகுதி சார்ந்து தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் எழுதி வந்திருப்பவர் இவர். 1940 ஆம் ஆண்டு தாராபுரத்தில் பிறந்து பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியிலும், சென்னை தாம்பரம் கிறித்தவக் கல்லூரியிலும் படிப்பை முடித்தார். தமிழ்நாடு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய பாஸ்கரன் குடிமைப் பணித் தேர்வில் நேர்ச்சிப் பெற்று 1964 ஆம் ஆண்டு இந்திய அஞ்சல் துறை பணியில் சேர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பல நிலைகளில் பணியாற்றி தமிழ்நாட்டின் தலைமை அஞ்சல் அதிகாரியாகி ஓய்வு பெற்றார். உணவியல் நிபுணரான மனைவி திலகாவோடு தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.
சூழலியல், காட்டுயிர், திரைப்படம் ஆகிய துறைகள் சார்ந்து எழுதினார் என்பது மட்டுமல்ல இந்த துறைகள் யாவற்றிலும் முன்னோடி ஆய்வாளராக இருந்து பங்களிப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த துறைகள் சார்ந்து இன்றைக்கு தமிழில் நிலை பெற்றிருக்கும் பார்வைகளையும், தகவல்களையும் உருவாக்கியவர். இவருடைய ஆய்வுகள் எல்லோராலும் படிக்க இயலுபவை. தமிழ் சிற்றிதழ் மரபு சார்ந்த தாக்கம் இருந்ததால் நடையில் கல்விப்புல இறுக்கத்தையும் கோட்பாட்டு அழுத்தத்தையும் தளர்த்திய எழுத்து இவருடையது. அதேவேளையில் சிற்றிதழ் மரபு கொண்டிந்த சிடுக்கிலிருந்தும் விலகியவை. அந்த வகையில் இவரின் நடை நேரடியானது. சிறிய வாக்கியங்களால் ஆனவை. சிறிய சிறிய தகவல்களைத் தேடி இணைத்துக் காட்டுபவை. அவை தகவல்களாக மட்டுமல்லாமல் நுட்பமான புரிதலுக்கு வழிகாட்டுபவையாகவும் இருந்தன. அறிவியல் சார்ந்த, தர்க்கம் சார்ந்த எழுத்துகள் எளிய சொற்களால் அமைய முடியும் என்பதை காட்டின. அதேவேளையில் புதிய கலைச்சொற்களும் கவித்துவமும் இவர் எழுத்துகளில் பயின்றன.
இவருடைய வரலாறாய்வு என்பது ஒருபுறம் ஆவணங்கள் அடிப்படையில் அமைந்தவை. அதேவேளையில் மரபார்ந்த ஆவணங்களாக காட்டப்படும் கல்வெட்டு, கோயில் ஆகியவற்றிலிருந்து நகர்ந்து ஊர்ப்பெயர்கள், பயணம், மலைக்குகைகள், கலையியல் ஆகியவற்றையும் துணை கொண்டவை. இவருடைய திரைப்பட ஆய்வுகளும் தொல்லியல் கருத்துகளும் அந்த வகையிலானவை. அந்த வகையில் இவருடைய வரலாற்றாய்வுகள் பண்பாட்டு ஆய்வுகளாகவும் அமைகின்றன. கசடதபற இதழில் 1975 ஆம் ஆண்டு சிவதாண்டவம் ஓர் அஞ்சலி என்ற தலைப்பில் முதல் தமிழ்க் கட்டுரையை எழுதினார். அதற்கு முன்பே ஆங்கிலத்தில் கலை வரலாறு சார்ந்தும் திரைப்படங்கள் சார்ந்தும் கட்டுரைகளை எழுதி வந்தார்.
ஆவணங்களை பயன்படுத்தி தமிழ் திரைப்படங்கள் குறித்த கல்விப்புல ஒழுங்குடன் கூடிய ஆய்வுகளை தொடங்கி வைத்தார். 1974 ஆம் ஆண்டு Tamil Nadu Council of Historical Research நிதி நல்கை பெற்று சுதந்திர போராட்டத்தில் தமிழ்த் திரைப்பட பங்களிப்பு பற்றி எழுதினார். தொடர்ந்து அவர் எழுதி வந்தவை யாவும் அதுவரையிலும் ஆய்வுப் பொருளாக கருதப்படாதவையாக இருந்தன. திரைப்பட தணிக்கை முறையினால் ஏற்பட்ட அரசியல் கட்டுப்பாடுகள், திரைப்பட தொழிற்சங்கம், நாடக மரபிலிருந்து திரைப்படம் உருவான போது ஏற்பட்ட மாற்றங்கள், திரைப்பட மௌன யுகம், திரைப்படங்களில் தேசியவாத அரசியல், மேடை நாடகம் போன்றவற்றை பற்றி உரிய சான்றுகளுடன் எழுதினார். திரைப்படம் ஒரு காட்சி மொழி என்பதையும், அந்த இலக்கணத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இயங்கி வந்த தமிழ்த் திரைப்பட வரலாற்றையும் எழுதினார். எதிர்கால ஆய்வுகளுக்கான விரிவான தகவல்களை இவர் நூல்கள் உருவாக்கியிருக்கின்றன. திரைப்பட சமூக வரலாற்றை சொன்ன அதேவேளையில் அதுவொரு கலைப்பிரதி என்ற புரிதலையும் தம் ஆய்வுகளில் அழுத்தமாக வெளிப்படுத்தி வந்தார்.
இவருடைய சூழலியல் சார்ந்த எழுத்துகள் தமிழில் உருவாகி வரும் பசுமை இலக்கியம் என்னும் வகைமைக்கு அடிப்படைகளாக உள்ளன. சூழலியல் சார்ந்த கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார். அதற்காக புதிய சொற்களை உருவாக்கியதோடு தமிழில் புழக்கத்திலிருந்து மறைந்து போன சொற்களையும் கண்டடைந்து பயன்படுத்தியிருக்கிறார். சூழலியல் சார்ந்த எழுத்துகளை வரலாற்று ஆய்வு என்ற வடிவமாக மட்டும் இல்லாமல் பயணக்குறிப்புகள், நடைச்சித்திரங்கள் என்ற வடிவத்திலும் எழுதினார். சூழலியல் சார்ந்த எழுத்துகளை தொகுத்தார், மொழிபெயர்த்தார்.மா. கிருஷ்ணனின் எழுத்துகளைத் தொகுத்தார்.
மேற்கண்ட துறைகள் சார்ந்த பல ஆளுமைகளை தம் எழுத்தின் மூலம் தொடர்ந்து கவனப்படுத்தி வந்தவர். பல ஆளுமைகளோடு நேரில் பழகியும் தேடல்களை அதிகப்படுத்திக் கொண்டவர். மயிலை சீனி. வேங்கடசாமி, சுரேஷ் பிள்ளை, ஜீவபந்து ஸ்ரீபால் ஆகியோரோடு நேரில் பழகியவர். தொடர் பயணங்களையும் மேற்கொண்டவர். தமிழ் வரலாற்றில் சிரமண மரபுகளுக்கு (பௌத்தம், ஜைனம், ஆசீவகம்) இருக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எழுதி வந்திருக்கிறார். மா. கிருஷ்ணன், சுவாமிக்கண்ணு வின்சென்ட், ராஜா சாண்டோ, ஜாப் தாமஸ் ஆகியோரின் இன்றியமையாமையை தொடர்ந்து குறிப்பிட்டு வந்தவர். மேலை நாட்டு ஆய்வாளர்கள் பலருடனும் தொடர்பு கொண்டிருந்தார். அதன் பயன்களை எழுத்தாக்கியிருக்கிறார். மேற்கண்ட துறைகள் சார்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் இவர் எழுதியது மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கட்டுரைகளையும் நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்த்து இருக்கிறார்.
கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது (2013), இந்திய குடியரசுத் தலைவர் வழங்கும் ஸ்வர்ண கமல் விருது (1997) உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிருக்கிறார். சூழலியல் திரைப்படம் சார்ந்து உலக அளவிலும் இந்திய அளவிலும் பல்வேறு குழுக்களில் இடம் பெற்றிருக்கிறார். பெங்களூர் தேசிய உயர்கல்வி நிறுவனத்தில் (National Institute of Advanced Studies) முதுநிலை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். பிரின்ஸ்டன் பல்கலை, ஆஸ்திரேலிய தேசியப் பல்கலை, சிகாகோ பல்கலை உள்ளிட்ட கல்விநிலையங்களில் இந்திய திரைப்படம் பற்றி உரையாற்றியிருக்கிறார். மிச்சிகன் பல்கலையில் வருகைதரு பேராசிரியராக இருந்தார் (2001). சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குனராக (1998 -2001) பணியாற்றியிருக்கிறார்.
தியடோர் பாஸ்கரனுக்கு 2026 ஆம் ஆண்டுக்காக அபுனைவு பிரிவில் விளக்கு விருது வழங்கப்படுகிறது.
தியடோர் பாஸ்கரனின் நூல்கள்:
I. திரைப்படம்
- எம் தமிழர் செய்த படம் (2004)
- சித்திரம் பேசுதடி (தொகுப்பாசிரியர்)
- தமிழ் சினிமாவின் முகங்கள் (2004)
- பாம்பின் கண், The Eye of the Serpent மொழியாக்கம் (2011)
- ராஜா சாண்டோ – டி.வி. ராம்நாத், தொகுப்பாசிரியர், (2012)
- சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, (2014)
- சினிமா கொட்டகை (2018)
- தண்டோராக்காரர்கள், The Message Bearers மொழியாக்கம் (2020)
- திரையில் விரியும் சமூகம் 2023
- இது நம் சினிமா (திரைப்பட கட்டுரைகளின் பெருந்தொகுப்பு) (2026)
- ஊருக்கு நூறு பேர். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (2026)
II. தொல்லியல்
- கல் மேல் நடந்த காலம் (2016)
III.சூழலியல்
- மழைக்காலமும் குயிலோசையும் (மா. கிருஷ்ணன்), தொகுப்பாசிரியர் (2003)
- தாமரை பூத்த தடாகம் (2005)
15) இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)
16) வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)
17) நம்மைச்சுற்றிக் காட்டுயிர் (2014)
18) சோலை எனும் வாழிடம் (2014)
19) இந்திய நாயினங்கள் (2017)
20) கையில் இருக்கும் பூமி, (சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு 2018)
21) விண்ணளந்த சிறகு (2021)
IV. மொழியாக்கம்(தமிழில்)
22) கானுறை வேங்கை. உல்லாஸ் கரந்த் (2005)
23) சோழர் காலச் செப்புப் படிமங்கள், ஐ. ஜோப் தாமஸ் (2021)
24) யானைகளும் அரசர்களும், தாமஸ் டிரவுட்மன், ஜகநாதனுடன் இணைந்து தமிழாக்கம் (2022)
25) ஏழு பேராளிகள், ராமசந்திர குஹா (2022)
26) இயற்கையுடன் பேசியவர்கள், ராமசந்திர குஹா, (2026)
V. மொழியாக்கம் (ஆங்கிலத்திற்கு)
27) Dark Interiors தமிழ் மூலம்: தலித் பண்பாடு – ராஜ்கெளதமன் (2021)
VI. ஆங்கிலத்தில்
28) The Message Bearers: The Nationalist Politics and the Entertainment Media in South India, 1880-1945 (1981)
29) The Eye of the Serpent: An Introduction to Tamil Cinema (1996)
30) The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist (1999)
31) Trade Unionism in South Indian Film Industry (Monograph 2002)
32) History through the Lens: Perspectives on South Indian Cinema (2009)
33) Sivaji Ganesan: Profile of an Icon (2009)
34) The Spirit of the Black Buck, editor (2010)
35) The Book of Indian Dogs (2017) (இந்திய நாய் இனங்கள் பற்றிய கட்டுரைகள்)
36) My Native Land. Essays on Nature. By M.Krishnan ( S.Theodore Baskaran and A.Rangarajan edited) 2019
37) A Day with the Shama (articles on birds) (2020)
38) The Story of a Movie Mogul. S S Vasan (2020)
வெளி ரங்கராஜன்

வாழ்க்கைக் குறிப்பும் கலைப் பயணமும்
தமிழில் நாடகம் மற்றும் அரங்கக் கலை நிகழ்வுகளுக்கென்றே வெளியான அபூர்வமான நாடக வெளி என்ற சிற்றிதழை பத்தாண்டுகளுக்கு மேலாக நடத்தி தொன்னூறுகளில் அரங்கச் செயல்பாடுகளுக்கு பெரிதும் ஊக்கமளித்ததால் அந்த இதழின் பெயரையே தன்னுடைய அடைமொழியாகக் கொண்டவர் ‘வெளி’ ரங்கராஜன். இந்த இதழில் அவருடைய விடாமுயற்சியால் பலராலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியான பிற மொழி நாடகங்கள் பல தமிழ் நாடகக் குழுக்களால் அரங்கேற்றப்பட்டன. நீண்ட நெடிய பண்பாட்டுப் பாரம்பரியம் கொண்ட முத்தமிழ்களில் ஒன்று எனக்கருதப்படும் நாடகத் தமிழுக்கு இருபதாம் நூற்றாண்டில் இறுதியில் பெரும்பங்காற்றிய இதழ் வெளி எனலாம்.
ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவரான ரங்கராஜன் அதன் அழகியல் சூழலால் தாக்கம் பெற்றவர். பல்வேறு இலக்கிய ஆளுமைகள் உருவாக க் களம் அமைத்த திருச்சி வாசகர் அரங்கின் துவக்க கால உறுப்பினர்களில் ஒருவர். நாடகத்தில் தனித்த ஈடுபாடு கொண்டிருந்தாலும் பொதுவாக கலை இலக்கியம் சார்ந்த அழகியல் பார்வைகளை, அனுபவங்களை முன்னெடுப்பதில் பெரும் ஈடுபாடு கொண்டவர் ரங்கராஜன். மொழியாக்கங்கள், இலக்கிய விமர்சனம், நிகழ்கலை மரபுகள் என பல முக்கிய இயல்களில் இருபது நூல்கள் வரை இவரது ஆக்கங்களாக உள்ளன. உதாரணமாக “வெளிச்சம் படாத நிகழ்கலை படைப்பாளிகள்” என்ற நூல் பல்வேறு அறியப்படாத கலைஞர்களை ஆவணப்படுத்திய முக்கிய படைப்பாகும்.
வங்க நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரால் சென்னையில் 1980-ஆம் நட த்தப்பெற்ற பயிற்சிப் பட்டறையில் தமிழ்நாட்டின் பல முன்னணி கலை இலக்கியவாதிகளுடன் பங்கேற்ற ரங்கராஜன் தொடர்ந்து வீதி நாடகங்களில் பங்கேற்றவர், பல்வேறு நாடகக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டவர், ஊக்கத்துணையாக விளங்கியவர். அவரே பத்துக்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கி அரங்கேற்றியுள்ளார். கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து சிலப்பதிகாரக் காட்சிகளையும், ஆண்டாள் வாழ்வையும் அரங்க நிகழ்வுகளாக காட்சிப்படுத்தியவர். கல்லூரிகளில் நடிப்பு பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தியுள்ளார். இவ்வாறு பல்வேறு வகைகளிலும் நாடகத் தமிழுக்கு, அரங்கக் கலை குறித்த சிந்தனைகளுக்கு நாற்பதாண்டுகளுக்கும் மேலாகக் கணிசமான பங்காற்றியவர் வெளி ரங்கராஜன்.
வெளி ரங்கராஜனின் நூல்கள்
- தமிழ் நாடகச் சூழல் ஒரு பார்வை (2003)
- இடிபாடுகளுக்கிடையில்
- நாடகம் நிகழ்வு அழகியல்
- ஊழிக்கூத்து
- வெளிச்சம் படாத நிகழ்கலைப் படைப்பாளிகள்
- புத்தகங்கள் பார்வைகள்
- தமிழ் நவீன நாடக நிகழ்வுகள்
- சமகால இலக்கிய உரையாடல்கள்
- இலக்கிய வாசிப்பும் நாடக வாசிப்பும்
- உடல்மொழியின் கலை
- தற்காலத் தமிழ் நாடகங்கள் தொகுப்பு
- வெளி இதழ் தொகுப்பு
- புரிசை கண்ணப்ப தம்பிரான் தொகுப்பு நூல்
- இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசை – கு.அழகிரிசாமி
- நடுக்கடலில்(மொழிபெயர்ப்பு நாடகங்கள்) தொகுப்பு
- இலக்கியக் குரல்கள்
- தமிழ் நவீன நாடக வரலாறும் அழகியலும்
- கலையும் மனப்பிறழ்வும் (மொழிபெயர்ப்பு கட்டுரைகள்)
- வரலாற்றுப் பார்வையில் தமிழ் நாடகம் (தொகுப்பு)
- ஜெனேயின் பிரெஞ்சு நாடகம் `The Balcony` (மொழிபெயர்ப்பு)
வெளி ரங்கராஜனின் நாடக நிகழ்வுகள்
- அகலிகை
- வஞ்சமகள்
- மாதவி ஊழிக்கூத்து
- மாதரி கதை
- ஆற்றைக் கடத்தல்,
- அன்பின் பெருவெளி ஆண்டாள்
- காலம்
- காலமாக,கொடுங்கோலர்கள்
- பெர்னாதா இல்லம்
- மரண வீட்டின் குறிப்புகள்
- காற்று
- பல குறுநாடகங்கள்
விளக்கு அமைப்பின் முகவரி
Dr N Gopalswamy
11205 Green Watch Way
North Potomac, MD 20878
- கார்நாற்பது 11. ஐம்பாலாய்
- புள்ளும் சிலம்பின காண்
- பவிழிதழ் (Pavizhithazh) என்ற தமிழ் இணைய இலக்கிய இதழ்
- முகமெலாம் மத்தாப்பூ
- இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்
- கார் நாற்பது – 8. புகழே நிலையானது
- தி கேம்
- தங்கக் கொலுசு
- பூவரசு பூத்திருக்கு
- வன்மக் கிடங்குகள்!
- சேரனின் இலக்கியப் புலம்: நவீன இலங்கைக் கவிதை, போர்க்கால சாட்சியம், புலம்பெயர்வு இலக்கியம்
- நிம்மதி
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- அம்மையும் குதிரைத்தலைப் பிடிலும்
- காற்றுவெளி கார்த்திகை(2026) இதழ்