This entry is part 11 of 15 in the series 22 நவம்பர் 2026

ஏ.நஸ்புள்ளாஹ்

​நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் இலங்கை தமிழ் இலக்கியத்திற்குத் தனித்துவமான இடமும் வரலாற்றுக் கனதியும் உண்டு. நிலவியல் எல்லைகளைக் கடந்து, உலகத் தமிழ் வாசகர்களின் மனசாட்சியை உலுக்கிய படைப்புகளை இலங்கைப் படைப்பாளிகள் உருவாக்கியுள்ளனர். அத்தகைய இலங்கை இலக்கிய மரபில் கவிதையை அழகியல் வெளிப்பாடாகவோ தனிமனித உணர்வுகளின் கற்பனைப் பெருக்காகவோ மட்டுமன்றி, காலத்தின் வன்முறையையும் மனித அவலங்களையும் வரலாற்றுப் பொறுப்புணர்வோடு பதிவு செய்யும் கூர்மையான பிரதியாக மாற்றியமைத்த முன்னோடி ஆளுமைகளில் ஒருவர் சேரன்.

​இலங்கை நவீன கவிதை ஆளுமைகளில் முதன்மையானவரான மஹாகவி துரைசாமி ருத்திரமூர்த்தி அவர்களின் புதல்வராகப் பிறந்தாலும் தந்தையின் புகழ் நிழலில் தஞ்சம் புகாமல் தனக்கெனத் தனித்த கவிதைத் தடத்தையும் மொழியமைப்பையும் அரசியல் சமூகப் பார்வையையும் உருவாக்கிக் கொண்டவர் சேரன். இலங்கையின் இனமுரண்பாடுகள் உள்நாட்டுப் போர், வன்முறை ஆயுதப் போராட்ட இயக்கங்களின் அகமுரண்கள், இனப்படுகொலை, இடப்பெயர்வு, புகலிட வாழ்வின் தனிமை, கலாச்சாரப் பரிமாற்றங்கள் மற்றும் உலகளாவிய அகதிகள் அரசியல் எனப் பல பரிமாணங்களைத் தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் விமர்சனங்களிலும் ஓவியங்களிலும் சமூகவியல் ஆய்வுகளிலும் அவர் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

​ சேரனின் பன்முக இலக்கியப் புலத்தை அவரது வரலாற்றுப் பின்புலம், நவீன இலங்கைக் கவிதைப் போக்கில் அவரது வகிபாகம், தந்தை மஹாகவியின் இலக்கிய மரபும் சேரனின் தனித்த பயணமும், போர்க்கால சாட்சியமும் அதிகார விமர்சனமும், புலம்பெயர்வு அனுபவத்தின் நுட்பங்கள், சமூகவியல் மானுடவியல் பார்வை, காதல் உடல் இயற்கை ஆகியவற்றின் அழகியல் மற்றும் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் அவரது இடம் ஆகியவற்றை விரிவாக பேசவேண்டிய நேரம் இது.

​1960ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் அளவெட்டி என்ற கிராமத்தில் பிறந்த ருத்திரமூர்த்தி சேரன் இலக்கியமும் கலையும் சுவாசிக்கும் குடும்பச் சூழலில் வளர்ந்தார். அவரது தந்தை மஹாகவி இலங்கை நவீன கவிதையின் போக்கை மாற்றியமைத்த பெரும் கவிஞர் தாயார் பத்மாசினி இலக்கிய ரசனையும் குடும்பப் பொறுப்பும் கொண்டவர். வீட்டில் எப்போதும் புத்தகங்கள், இலக்கிய இதழ்கள், நாடக ஒத்திகைகள், சமகால அறிஞர்களின் உரையாடல்கள் என ஒரு பண்பாட்டுக் கூடம் இயங்கிக் கொண்டிருந்தது.

​இளமையிலேயே வாசிப்புப் பழக்கத்தையும் சொற்களின் நுட்பத்தையும் ஓவியம் வரையும் ஆற்றலையும் சேரன் வளர்த்துக் கொண்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானம் பயின்ற அவர், மாணவப் பருவத்திலேயே இலக்கியச் செயற்பாடுகளிலும் சமூக அரசியல் விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். விஞ்ஞானப் பின்புலம் அவருக்குத் தந்த துல்லியமான அவதானிப்புத் திறனும் தர்க்கரீதியான சிந்தனையும் பின்னாளில் அவரது கவிதைக் கட்டமைப்பிலும் சமூகவியல் ஆய்வுகளிலும் பெரும் பங்காற்றின.

​சேரன் கவிதை எழுதத் தொடங்கிய 1970களின் பிற்பகுதியும் 1980களின் தொடக்கமும் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்புமுனைக் காலமாகும். 

​1981ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வு, ஒரு இனத்தின் அறிவுசார் வரலாற்றையே அழிக்கும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த இனக்கலவரம் கறுப்பு ஜூலை இலங்கைத் தமிழ் அரசியலை முழுமையாக ஆயுதப் போராட்டப் பாதைக்குத் தள்ளியது. இந்தக் கொந்தளிப்பான சூழலில்தான் சேரனின் முதல் கவிதைத் தொகுப்பான இரண்டாவது சூரிய உதயம் (1983) வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து யமன் (1984), கானல் வரி (1989), எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990), எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993) ஆகிய தொகுப்புகள் வெளிவந்து, இலங்கை தமிழ்க் கவிதையின் திசையைத் தீர்மானித்தன.

​சேரன் வெறும் கவிஞராக மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. 1980களில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த முரசொலி போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியதன் மூலம் போர்க்காலச் செய்திகளையும் மக்கள் அவலங்களையும் நேரடியாகக் களத்தில் நின்று அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இதழியல் அனுபவம் அவரது கவிதை மொழிக்கு ஒருவித நேரடித்தன்மையையும் யதார்த்தக் கூர்மையையும் வழங்கியது.

​அத்துடன், 1985ஆம் ஆண்டு வெளிவந்த மரணத்துள் வாழ்வோம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கவிதைத் தொகுப்பைத் தொகுத்தவர்களில் சேரனும் ஒருவர். போர்க்காலச் சூழலில் வாழ்ந்த பல்வேறு இலங்கைக் கவிஞர்களின் குரல்களை ஒரே நூலில் தொகுத்த இம்முயற்சி, இலங்கை இலக்கிய வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. மேலும், சிறந்த ஓவியராகவும் விளங்கிய சேரன் தனது நூல்களுக்கும் சக படைப்பாளிகளின் நூல்களுக்கும் அட்டைப்பட ஓவியங்களை வரைந்ததன் மூலம் கோடுகளாலும் வண்ணங்களாலும் தனது காலத்தின் துயரத்தை வெளிப்படுத்தினார்.

​தமிழ் இலக்கிய வரலாற்றில் தந்தையும் மகனும் பெரும் கவிஞர்களாகத் திகழ்ந்த அரிய நிகழ்வுகளில் மஹாகவி சேரன் இணை குறிப்பிடத்தக்கது. எனினும் இவ்விருவரின் இலக்கியப் புலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, தொடர்ச்சியும் மாற்றமும் எவ்வாறு நிகழ்கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்.

​மஹாகவி (1927–1971) இலங்கை நவீன கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர். மரபுச் செய்யுள் வடிவங்களை குறிப்பாக வெண்பா, விருத்தம், குறள் ஆகியவற்றை நவீன வாழ்வின் அன்றாடப் பேச்சுமொழியோடும் நையாண்டியோடும் இணைத்துப் புதிய பரிமாணத்தை உருவாக்கியவர். கண்மணியாள் காதை, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கோடை, தலையங்கம் போன்ற அவரது படைப்புகள், சாதாரண மனிதர்களின் வாழ்க்கையையும் சமூகத்தின் போலித்தனங்களையும் எள்ளலோடு விமர்சித்தன. மரபின் இறுக்கத்தை உடைத்து, யாப்பு வடிவங்களுக்குள்ளேயே நவீனத்துவத்தைக் கொண்டு வந்தவர் மஹாகவி.

​மஹாகவி 1971ஆம் ஆண்டு தனது 44வது வயதில் அகால மரணமடைந்தபோது, சேரனுக்கு வயது பதினொன்று மட்டுமே. தந்தையின் மறைவு சிறுவனான சேரனுக்குப் பெரும் உணர்வுபூர்வமான இழப்பாக இருந்தது. பிற்காலத்தில் கவிதை எழுதத் தொடங்கியபோது, “மஹாகவியின் மகன்” என்ற அடையாளம் அவருக்கு ஒரு புறம் கௌரவத்தைத் தந்தாலும் மறுபுறம் பெரும் எதிர்பார்ப்புகளையும் சவால்களையும் முன்வைத்தது.

​சேரன் தனது தந்தையின் பாணியைப் பின்பற்றவில்லை என்பதே அவரது மிகப்பெரிய வெற்றியாகும்

​மஹாகவி மரபு யாப்பு வடிவங்களை நவீனப்படுத்தினார் என்றால், சேரன் யாப்பு மரபை முழுமையாகக் கடந்து, புதுக்கவிதை வடிவத்தைத் தனது இயல்பான ஊடகமாகத் தேர்ந்தெடுத்தார். அவரது கவிதைகளில் தாளக்கட்டு யாப்பிலக்கணத்திலிருந்து அது உணர்வுகளின் ஒழுங்கிலிருந்தும் சொற்களின் அடுக்கிலிருந்தும் பிறந்தது.

  சேரனின் கவிதைகளில் வரலாற்றுத் துயரமும் அபத்தத்தின் மீதான திகைப்பும் தார்மீகக் கோபமும் ஆழமான மென்மையும் இழையோடுகின்றன. மஹாகவி வாழ்ந்த 1950–60களில் இலங்கைத் தமிழ் சமூகம் ஜனநாயகப் போராட்டங்களையும் சமூகச் சீர்திருத்தங்களையும் எதிர்கொண்டிருந்தது. சேரன் எழுதத் தொடங்கிய 1980களில் சமூகம் முழுமையான போர், மரணம், இடப்பெயர்வு ஆகியவற்றின் விளிம்பில் நின்றது. மாறிய காலத்தின் நெருக்கடி, புதியதொரு கவிதை மொழியைத் தேவைப்படுத்தியது. அதனைச் சேரன் உருவாக்கினார்.

​தந்தைக்கான கவிதாஞ்சலியும் தொடர்ச்சியும்

​தந்தையின் பாணியிலிருந்து விலகி நின்றாலும் மஹாகவியின் மீதான அன்பையும் மரியாதையையும் சேரன் பல இடங்களில் பதிவு செய்துள்ளார். சாதாரண மனிதர்களின் வாழ்வை இலக்கியத்தின் மையத்திற்குக் கொண்டு வந்த மஹாகவியின் மானுட நேயமே, சேரனின் கவிதைகளிலும் போரினால் பாதிக்கப்பட்ட எளிய மனிதர்களின் குரலாகத் தொடர்கிறது. மஹாகவி நவீன இலங்கைக் கவிதைக்கு அடித்தளமிட்டார் என்றால், சேரன் அதனை உலகளாவிய நவீனத்துவத் தளத்திற்கும், போர்க்கால மற்றும் புலம்பெயர் இலக்கியப் பரப்பிற்கும் விரிவுபடுத்தினார்.

​1970களுக்குப் பிந்தைய நவீன இலங்கைக் கவிதைப் பரப்பில் முருகையன், சண்முகம் சிவலிங்கம், வ.ஐ.ச. ஜெயபாலன், நுஃமான்,அண்ணல்,அப்துல் கஹார், சிவசேகரம், சு. வில்வரத்தினம், கி.பி. அரவிந்தன், ஊர்வசி, செல்வி,அஷ்ரபா நூர்தீன்,சுழ்பிகா,பாமதி, சிவரமணி போன்ற பல முக்கியக் கவிஞர்கள் இயங்கினர். இவர்களுக்கிடையே சேரனின் கவிதை அழகியல் தனித்த அடையாளத்துடன் விளங்குகிறது.

​சேரனின் கவிதைகளைப் படிக்கும்போது உணரப்படும் முதன்மையான பண்பு, அவற்றின் கட்டுக்கோப்பான தர்க்க அமைப்பு ஆகும். போர், படுகொலை, துயரம் போன்ற தீவிரமான உணர்ச்சிகளைப் பேசும்போது கவிதை பெரும்பாலும் கூச்சலாகவோ, உணர்ச்சிவசப்பட்ட முழக்கமாகவோ மாறிவிடும் அபாயம் உண்டு. ஆனால் சேரன் உணர்ச்சிகளைக் கச்சிதமான வடிவத்திற்குள் ஒழுங்குபடுத்துகிறார்.

​அவரது பல கவிதைகள் ஒரு சிறிய காட்சியுடன் தொடங்கி, படிப்படியாக விரிந்து, இறுதியில் வாசகனின் சிந்தனையை அதிரவைக்கும் ஒரு தத்துவார்த்த அல்லது வரலாற்று முடிச்சுடன் நிறைவடைகின்றன. உணர்ச்சியின் வெப்பத்தையும் அறிவின் குளிர்ச்சியையும் சமநிலையில் கையாளும் இந்த உத்தி, அவரது கவிதைகளுக்குக் காலத்தால் அழியாத தன்மையைத் தருகிறது.

​சேரனின் மொழி செயற்கையான அலங்காரங்களையோ, கடினமான பண்டிதச் சொற்களையோ நாடுவதில்லை. யாழ்ப்பாணத்துப் பேச்சுமொழியின் இயல்பான ஓசையும், நவீன தமிழ் உரைநடையின் தெளிவும் அவரது கவிதைகளில் இணைந்துள்ளன. எளிய சொற்களை அடுக்கும் விதத்திலேயே அவர் கவித்துவத்தை உருவாக்குகிறார்.

​உதாரணமாக, மரணத்தையோ அழிவையோ விவரிக்கும்போது பெரிய வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், அன்றாட வாழ்வின் மிகச் சாதாரணமான பொருட்களை அவர் முன்வைக்கிறார். உடைந்த மண்பானை, சிதறி உலர்ந்த சோறு, வாசலில் கிடக்கும் செருப்பு, திறந்து கிடக்கும் கதவு, அணையாமல் எரியும் அடுப்பு போன்ற படிமங்கள், அங்கிருந்த மனிதர்கள் திடீரெனக் காணாமல் போனதையோ கொல்லப்பட்டதையோ சொல்லாமல் சொல்லி விடுகின்றன. இந்த மௌனத்தின் மொழி சேரனின் கவிதைகளின் பலமாகும்.

​படிமங்களும் குறியீடுகளும்

​சேரனின் கவிதை உலகில் இயற்கையும் அன்றாடப் பொருட்களும் ஆழமான குறியீடுகளாக மாறுகின்றன.

​இரவு, இருள், சாம்பல், அடக்குமுறை, ஊரடங்குச் சட்டம், காணாமல் போதல்கள் மற்றும் அழிவின் நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கின்றன.

​சூரியன், நிலா, நட்சத்திரங்கள்: நம்பிக்கை, மாற்றத்திற்கான ஏக்கம், அதே சமயம் பனிப்புயலுக்குப் பின் எழும் நிலாவைப் போலத் துயரத்திற்குப் பிந்தைய அமைதியையும் காட்டுகின்றன.

​ஆறு, கடல், மழை, பனி, கால ஓட்டம், இடப்பெயர்வின் பயணம், புகலிடத்தின் குளிர் மற்றும் நினைவுகளின் தொடர்ச்சியைப் பேசுகின்றன.

​பறவைகள், மரங்கள், மனிதர்களின் எல்லைகளையும் போர்களையும் கடந்து நிற்கும் இயற்கையின் சாட்சிகளாகச் செயல்படுகின்றன.

​

​சேரனின் இலக்கியப் புலத்தின் மைய அச்சாக விளங்குவது போர்க்கால சாட்சியமாகும். 1980கள் முதல் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அழிவு வரையிலும், அதற்குப் பின்னரும் இலங்கைச் சமூகம் எதிர்கொண்ட வரலாற்றுத் துயரங்களை அவர் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளார்.

​இலங்கை அரச படைகளின் இராணுவ நடவடிக்கைகள், விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள், குண்டுவீச்சுகள், இனக்கலவரங்கள், சோதனைச் சாவடிகள், கைதுகள் மற்றும் காணாமல் போதல்கள் ஆகியவை சேரனின் கவிதைகளில் நேரடியான சாட்சியங்களாகப் பதிவாகியுள்ளன.

​போர் வரலாற்றுப் புத்தகங்களில்  எண்களாகவும் வெற்றிகளாகவும் தோல்விகளாகவும் சுருக்கப்பட்டு விடுகிறது. ஒரு கவிஞனாகச் சேரன், அந்தப் புள்ளிவிவரங்களுக்குப் பின்னால் இருக்கும் தனிமனித உயிர்களின் வலியைப் பேசுகிறார். பிள்ளையைத் தேடி அலையும் தாய், கணவனை இழந்த மனைவி, பள்ளிக்குச் செல்ல முடியாமல் பதுங்குகுழிக்குள் முடங்கிய குழந்தைகள் எனப் போரின் நேரடிப் பாதிப்புக்குள்ளான சாமானிய மனிதர்களின் பக்கமே அவரது கவிதைகள் நிற்கின்றன.

​சேரனை இலங்கை தமிழ்க் கவிஞர்களிடையே தனித்து நிற்கச் செய்யும் மிக முக்கியமான பண்பு, அவரது தார்மீக நேர்மையும் சுயவிமர்சனப் பார்வையும் ஆகும். ஒடுக்குமுறைக்கு எதிராகத் தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்திருந்த அதே வேளையில், அந்தப் போராட்ட இயக்கங்களுக்குள்ளேயே உருவான சர்வாதிகாரப் போக்குகளையும் சகோதரப் படுகொலைகளையும் மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கும் வன்முறையையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

​1980களின் பிற்பகுதியில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்கள், பொதுமக்கள் மீது திணிக்கப்பட்ட அச்சம், அறிவுஜீவிகளும் கவிஞர்களும் (உதாரணமாக செல்வி, சிவரமணி போன்றோர்) எதிர்கொண்ட நெருக்கடிகள் ஆகியவற்றைச் சேரன் துணிச்சலுடன் கேள்விக்குட்படுத்தினார்.

​கவிஞன்  எந்தவொரு அதிகார பீடத்தின் புகழ்பாடியும் அல்ல அவன் மனித உரிமைகளின், பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவே இருக்க வேண்டும் ​என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருந்தார். வன்முறை எந்தத் தரப்பிலிருந்து வந்தாலும் அது அரச படைகளாக இருந்தாலும் சரி, விடுதலை இயக்கங்களாக இருந்தாலும் சரி அது மனித உயிரை அழிக்கும்போது அதற்கு எதிராகக் குரல் கொடுப்பதே உண்மையான இலக்கியத்தின் கடமை எனச் சேரன் நம்பினார். இந்தத் துணிச்சலான நிலைப்பாட்டிற்காக அவர் பல அச்சுறுத்தல்களையும் விமர்சனங்களையும் தனிமைப்படுத்தல்களையும் எதிர்கொள்ள நேர்ந்தது. ஆயினும் தனது மனசாட்சியின் குரலில் அவர் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளவில்லை.

​2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைப் போர் மிகக் கொடூரமான மனித அழிப்புடன் முடிவுக்கு வந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போனதும் இந்தப் பேரழிவிற்குப் பிறகு எழுதுவது என்பது சாத்தியமா என்ற கேள்வி பல படைப்பாளிகளுக்கு எழுந்தது.

​இந்த மௌனத்தையும் அதிர்ச்சியையும் உடைத்துச் சேரன் எழுதிய கவிதைத் தொகுப்புகளான காடாற்று (2011) மற்றும் அஞர் (2018) ஆகியவை போருக்குப் பிந்தைய இலங்கை இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்புகளாகும்.

​ காடாற்று போரில் இறந்தவர்களுக்கான ஈமக்கிரியைகளைக் கூடச் செய்ய முடியாத அவல நிலையையும் ஆறாத ரணங்களையும் ஆற்றுப்படுத்தும் முயற்சியாக இத்தொகுப்பு அமைந்தது.

அஞர் என்ற பழந் தமிழ்ச் சொல்லுக்குத் தாங்க முடியாத துயரம், மன உளைச்சல், நோய் என்று பொருள். போர் முடிந்த பிறகும் தொடரும் அடக்குமுறை, நில ஆக்கிரமிப்பு, காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டம், உலக நாடுகளின் மௌனம் ஆகியவற்றை இத்தொகுப்பு ஆழமான தத்துவார்த்தப் பார்வையுடன் அணுகுகிறது.

​1980களின் இறுதியில் இலங்கையிலிருந்து வெளியேறிய சேரன், நெதர்லாந்து, கனடா ஆகிய நாடுகளில் வாழ்ந்து, கனடாவின் வின்சர் நகரில் நிலைகொண்டார். அவரது இலக்கியப் புலத்தின் இரண்டாவது பெரும் தூணாக விளங்குவது புலம்பெயர்வு  மற்றும் புகலிட வாழ்வு பற்றிய பதிவுகளாகும்.

​புலம்பெயர்வு வெறுமனே ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் பயணம் செய்வதன்று அது ஒரு மனிதனின் நீட்சி பிடுங்கப்பட்டு, முற்றிலும் அந்நியமான மண்ணில் நடப்படும் செயல்முறையாகும். சேரனின் புலம்பெயர் கவிதைகளில் இந்த நிலப்பரப்பு மாற்றம் மிக நுட்பமாகப் பதிவாகியுள்ளது.

​ யாழ்ப்பாணத்தின் சுட்டெரிக்கும் சூரியனையும் பனைமரங்களையும் கடற்காற்றையும் அறிந்த கண்களுக்கு, கனடாவின் சாம்பல் நிற வானமும் மாதக்கணக்கில் பெய்யும் பனியும் உறைந்த ஏரிகளும் அந்நியமாகத் தெரிகின்றன. வானம் எப்போதும் ஒரே மாதிரி ஒளிர்வதில்லை என்ற உணர்வு, புலம்பெயர்ந்த மனிதனின் இருப்பின் நிச்சயமற்ற தன்மையைக் குறிக்கிறது.

​ புதிய தேசத்தின் வேகமான இயந்திர வாழ்க்கைக்குள் பொருந்த முயலும்போது ஏற்படும் மனப் பிறழ்வுகளைச் சேரன் அன்றாடக் காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார். சமையலறையில் அடுப்பில் வைத்த பாத்திரத்தை மறந்து தீ ஓங்கி வளர்வது, இரவுக்கும் பகலுக்கும் இடையிலான தூக்கமின்மை, தொலைபேசி அழைப்புகளுக்காகக் காத்திருப்பது போன்றவை, உடல் கனடாவில் இருந்தாலும் மனம் இன்னும் யாழ்ப்பாணத்துத் தெருக்களிலேயே அலைந்து கொண்டிருப்பதைக் காட்டுகின்றன.

​நினைவுகளின் அரசியலும் ஏக்கத்தைக் கடந்த யதார்த்தமும்

​புலம்பெயர் இலக்கியத்தில் கடந்த கால ஏக்கம் ஒரு பொதுவான பண்பாகும். பல எழுத்தாளர்கள் தாய்மண்ணை ஒரு கற்பனைச் சொர்க்கமாக, குறைகளற்ற பொற்காலமாக நினைவுகூர்கிறார்கள்.  சேரன் தாய்மண்ணை அப்படிக் கற்பனைப்படுத்திப் பார்ப்பதில்லை. அவரது நினைவுகளில் யாழ்ப்பாணத்தின் அழகிய நினைவுகளோடு சேர்ந்து, அந்த மண்ணில் நிகழ்ந்த வன்முறையும் சாதிய ஒடுக்குமுறைகளும், போரின் ரத்தக் கறைகளும் பதிந்துள்ளன. எனவே, அவரது நினைவுகூர்தல் உணர்ச்சிவசப்பட்ட ஏக்கமாக இல்லாமல், வரலாற்றை விமர்சனபூர்வமாக எதிர்கொள்ளும் செயலாக அமைகிறது.

​புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் துயரத்தை, உலகளாவிய அகதிகள் நெருக்கடியோடு சேரன் இணைத்துப் பார்க்கிறார். போரினால் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வெளியேறிய மனிதர்கள், மேற்குலக நாடுகளின் விமான நிலையங்களிலும் குடிவரவு அலுவலகங்களிலும் எதிர்கொள்ளும் விசாரணைகள், சந்தேகப் பார்வைகள், கடவுச்சீட்டு மற்றும் விசா சிக்கல்கள் ஆகியவற்றை அவர் கூர்மையாகப் பதிவு செய்துள்ளார்.

​ஒரு மனிதன் தனது சொந்த நாட்டில் உயிர் வாழ முடியாமல் வெளியேறுகிறான். புகலிடம் தரும் நாட்டிலோ, அவன் தனது துயரத்தை ஆவணங்கள் வழியாக நிரூபிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறான். தேசிய எல்லைகளும், நவீன அரசுகளின் அதிகாரக் கட்டமைப்புகளும் மனித நேயத்தை எவ்வாறு கட்டுப்படுத்துகின்றன என்பதை அவரது கவிதைகள் கேள்விக்குட்படுத்துகின்றன.

​வேற்று மொழிச் சூழலில் வாழும்போது, தாய்மொழியான தமிழ் தொடர்பு கருவியாக மட்டுமன்றி, தனது அடையாளத்தையும் வரலாற்றையும் தக்கவைத்துக் கொள்ளும் ஒரே புகலிடமாக மாறுகிறது. அதே சமயம், புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் இரண்டாம் தலைமுறைத் தமிழர்களின் வாழ்வையும் சேரன் அவதானிக்கிறார்.

​பெற்றோரின் போர்க்கால நினைவுகளுக்கும், தாங்கள் வாழும் மேற்குலகின் நவீன கலாச்சாரத்திற்கும் இடையே வளரும் இளைய தலைமுறையின் அடையாளச் சிக்கல்கள், மொழி இழப்பு, பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உரையாடல் இடைவெளி ஆகியவற்றை அவர் புரிதலோடும் விமர்சனப் பார்வையோடும் அணுகுகிறார்.

​சேரனின் இலக்கியப் புலத்தை மற்ற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் முக்கியமான அம்சம் அவரது சமூகவியல் மற்றும் மானுடவியல் புலமை ஆகும். கனடாவின் யோர்க் பல்கலைக்கழகத்தில்  சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர், வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

​இலக்கியமும் சமூக விஞ்ஞானமும் இணையும் புள்ளி

​கல்விப்புல ஆய்வுகளும் படைப்பிலக்கியமும் சேரனின் ஆளுமையில் ஒன்றையொன்று செழுமைப்படுத்துகின்றன.

​ சமூகத்தில் நிகழும் வன்முறை, இனமுரண்பாடு, இடப்பெயர்வு ஆகியவற்றை தனிமனித உணர்ச்சிகளாக மட்டும் பார்க்காமல், அவற்றிற்குப் பின்னால் இருக்கும் வரலாற்று, பொருளாதார, அரசியல் மற்றும் அதிகாரக் கட்டமைப்புகளைப் புரிந்து கொள்ளும் பார்வை அவரது எழுத்துக்களில் உள்ளது.

​அதிகாரம் மற்றும் அடையாள அரசியல் தேசியவாதம்  இன அடையாளம், புலம்பெயர் சமூகத்தின் அரசியல், பாலின உறவுகள், சாதியக் கட்டமைப்புகள் ஆகியவை குறித்து அவர் ஆழமான ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.

​

 அவரது கல்விப்புல அறிவு, கவிதைகளை வறண்ட கோட்பாடுகளாக மாற்றிவிடவில்லை மனித உறவுகளின் நுட்பங்களை புரிந்து கொள்ளவும், சமூக மாற்றங்களைத் துல்லியமாகப் பதிவு செய்யவும் உதவியுள்ளது.

​கட்டுரைகளும் நேர்காணல்களும்

​சேரனின் உரைநடைப் பங்களிப்புகளும் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான விவாதங்களைத் தூண்டியுள்ளன. அவரது நேர்காணல் தொகுப்பான கடவுளும் பிசாசும் கவிஞனும் மற்றும் பல்வேறு இதழ்களில் வெளிவந்த விமர்சனக் கட்டுரைகள் பின்வரும் முக்கியப் பிரச்சினைகளை ஆராய்கின்றன.

​இலங்கை தமிழ் இலக்கியத்திற்கும் தமிழக இலக்கியத்திற்கும் இடையிலான உறவும், வாசிப்பு இடைவெளிகளும்.

​போர்க்கால இலக்கியம் மற்றும் புலம்பெயர் இலக்கியம் ஆகிய வகைப்பாடுகளின் சாத்தியங்களும் வரம்புகளும்.

​நவீன கவிதையின் மொழி, வடிவம் மற்றும் சமூகப் பொறுப்பு.

​இலங்கையின் இனப்பிரச்சினை, போருக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் நீதிக்கான போராட்டம்.

​சேரனை போர்க்காலக் கவிஞர் என்ற ஒற்றை வட்டத்திற்குள் அடைத்துவிட முடியாது. அவரது கவிதை உலகில் காதல், உடல், இயற்கை மற்றும் நவீன தொழில்நுட்ப யுகத்தின் மனித உறவுகள் ஆகியவை மிக ஆழமாகவும் அழகியலோடும் பேசப்பட்டுள்ளன.

​மரணமும் அழிவும் சூழ்ந்த நிலப்பரப்பிலும் மனிதர்கள் காதலிக்கிறார்கள் நேசிக்கிறார்கள் ஏங்குகிறார்கள். சேரனின் காதல் கவிதைகள் போர்க்காலச் சூழலில் காதலுக்கு இருக்கும் தீவிரத்தையும் அவசரத்தையும் காட்டுகின்றன. நாளை உயிரோடு இருப்போமா என்ற நிச்சயமற்ற நிலையில், இன்றைய கணத்தின் தொடுதலும் அன்பும் எவ்வளவு விலைமதிப்பற்றவை என்பதை அவரது கவிதைகள் உணர்த்துகின்றன. காதல் இங்கே வாழ்க்கையிலிருந்து தப்பியோடும் கற்பனை உலகம் மன்று அது மரணத்திற்கு எதிராக மனிதன் நிகழ்த்தும் வாழ்வியல் கொண்டாட்டமாகும்.

​தமிழ் கவிதை மரபில் உடல் குறித்த வெளிப்படையான, இயல்பான பதிவுகள் குறைவு. சேரன் உடலையும், காமத்தையும், கறுப்பு நிறத்தின் அழகியலையும் எவ்விதக் குற்றவுணர்வுமின்றி, மிகுந்த கவித்துவத்துடன் எழுதியுள்ளார். மழையில் நனைந்த பனைமரம் போல ஒளிரும் கறுப்பு போன்ற படிமங்கள், ஐரோப்பிய அழகியல் அளவுகோல்களைத் தாண்டி, மண்ணின் இயல்பான நிறத்தையும் உடலின் உயிர்ப்பையும் கொண்டாடுகின்றன.

​புலம்பெயர் வாழ்விலும், 21ஆம் நூற்றாண்டின் நவீன உலகிலும் மனித உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சேரன் கூர்ந்து கவனிக்கிறார். கணினித்திரைகள், கைபேசிகள், மெய்நிகர் உரையாடல்கள் ஆகியவற்றுக்கு மத்தியில், மனிதர்களின் நேரடித் தொடுதலும் ஆழமான உணர்வுப் பரிமாற்றமும் எவ்வாறு சுருங்கி வருகின்றன என்பதை அவர் நுட்பமாகப் பதிவு செய்கிறார்.

​சேரனின் கவிதைகளில் இயற்கை பின்னணி அலங்காரம் மன்று மனித வாழ்வின் அபத்தங்களுக்கு எதிரான ஒரு தத்துவார்த்த ஆறுதலாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக நிற்கும் ஒற்றைப் பெருமரம், பனிப்புயலுக்கு நடுவே சன்னலோரம் சிறகடிக்கும் சிட்டுக்குருவி, இரவின் இருளைக் கிழித்து எழும் நிலா ஆகியவை, மனிதர்களின் போர்களுக்கும் பேரரசுகளின் வீழ்ச்சிகளுக்கும் அப்பால் வாழ்க்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்ற நம்பிக்கையைத் தருகின்றன.

​சேரனின் படைப்புகள் தமிழ் மொழிப் பரப்பைக் கடந்து உலகளாவிய வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அவரது கவிதைத் தொகுப்புகள் ஆங்கிலம், சிங்களம், ஜேர்மன், டச்சு, பிரெஞ்சு உள்ளிட்ட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

​சேரனின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளன. குறிப்பாக, The Second Sunrise (இரண்டாவது சூரிய உதயம்), In a Time of Burning (எரிந்து கொண்டிருக்கும் நேரம்) மற்றும் புகழ்பெற்ற கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான லட்சுமி ஹோம்ஸ்ட்ரோம் மொழிபெயர்த்த A Second Sunrise போன்ற தொகுப்புகள், இலங்கை தமிழர்களின் வரலாற்றையும் இலக்கியத் தரத்தையும் உலக இலக்கிய அரங்கிற்குக் கொண்டு சென்றன. சர்வதேச இலக்கிய விழாக்களிலும் பல்கலைக்கழகங்களிலும் சேரன் தனது கவிதைகளை வாசித்து, இலங்கை மக்களின் குரலை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

​இலங்கையின் இனமுரண்பாட்டுச் சூழலில், சேரனின் கவிதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது மிக முக்கியமான பண்பாட்டு நிகழ்வாகும். போரும் இனவாதப் பிரச்சாரங்களும் இரண்டு சமூகங்களுக்கிடையே பெரும் சுவரை எழுப்பியிருந்த காலத்தில், தமிழ் மக்களின்  துயரத்தையும், போரின் கொடூரத்தையும், மானுட நேயத்தையும் சிங்கள வாசகர்கள் புரிந்து கொள்ள இம்மொழிபெயர்ப்புகள் பாலமாக அமைந்தன. இலக்கியம் எவ்வாறு இன எல்லைகளைக் கடந்து மனித மனங்களை இணைக்க முடியும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.

​இலங்கயிலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் எழுத வந்த பல இளைய தலைமுறைக் கவிஞர்கள் மீது சேரனின் மொழியும் வடிவ நேர்த்தியும் அரசியல் நேர்மையும் ஆழமான தாக்கத்தைச் செலுத்தியுள்ளன. உணர்ச்சிப் பெருக்கை எவ்வாறு கட்டுக்கோப்பான கவிதையாக மாற்றுவது, வரலாற்றுத் துயரத்தை எவ்வாறு கலைத்துவத்துடன் பதிவு செய்வது என்பதற்குச் சேரனின் படைப்புகள் ஒரு பாடப்புத்தகமாக விளங்குகின்றன.

​சேரனின் இலக்கியப் பயணத்தைப் புரிந்து கொள்ள அவரது முக்கிய நூல்களின் பட்டியல் உதவுகிறது.

​கவிதைத் தொகுப்புகள்:

​இரண்டாவது சூரிய உதயம் (1983)

​யமன் (1984)

​கானல் வரி (1989)

​எலும்புக் கூடுகளின் ஊர்வலம் (1990)

​எரிந்து கொண்டிருக்கும் நேரம் (1993)

​நீ இப்பொழுது இறங்கும் ஆறு (2000) – (தொகுப்பு நூல்)

​மீண்டும் கடலுக்கு (2004)

​உயிர் கொல்லும் வார்த்தைகள் (2011)

​காடாற்று (2011)

​அஞர் (2018)

​தொகுப்பு நூல்கள்:

​மரணத்துள் வாழ்வோம் (1985 – இணைத் தொகுப்பாளர்)

​உயிர்ப்பின் அதிர்வுகள்

​நேர்காணல் மற்றும் கட்டுரை நூல்கள்:

​கடவுளும் பிசாசும் கவிஞனும் (நேர்காணல்கள்)

​Pathways of Dissent: Tamil Nationalism in Sri Lanka (ஆங்கிலம் – பதிப்பாசிரியர்)

​ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்புகள்:

​The Second Sunrise

​You Cannot Turn Away

​In a Time of Burning

​நவீன தமிழ் இலக்கிய வரலாற்றில் சேரனின் இடம்  தனித்துவமானது. அவர் ஒரு புகழ்பெற்ற இலக்கியப் பாரம்பரியத்திலிருந்து (தந்தை மஹாகவி) வந்தபோதிலும், தனது காலத்தின் வரலாற்று நெருக்கடிகளுக்கு ஏற்பத் தனது சொந்தக் குரலையும் கவிதை மொழியையும் கண்டடைந்தவர். யாழ்ப்பாணத்து மண்ணின் அழகியலையும், போர்க்காலத்தின் ரத்த சாட்சியத்தையும், புலம்பெயர் வாழ்வின் தனிமையையும், சமூகவியல் அறிஞரின் கூர்மையான பகுப்பாய்வையும் ஒரே புள்ளியில் இணைத்தவர் சேரன்.

​அவரது கவிதைகள் எந்தவொரு குறுகிய அரசியல் முழக்கத்திற்கோ, அதிகார பீடத்திற்கோ அடிபணியாமல், எப்போதும் பாதிக்கப்பட்ட சாமானிய மனிதர்களின் பக்கமே நின்றன. அரச வன்முறையாக இருந்தாலும் சரி, உள்ளக சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, மனித உயிரையும் சுதந்திரத்தையும் நசுக்கும் அனைத்து சக்திகளையும் அவர் தனது கவிதைகளால் கேள்விக்குட்படுத்தினார். அதே நேரத்தில், பேரழிவுகளுக்கு நடுவிலும் காதலையும், இயற்கையையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் அவர் கைவிடவில்லை.

​இலங்கையின் போர்க்கால வரலாற்றையும், உலகெங்கும் சிதறி வாழும் இலங்கை தமிழர்களின் புலம்பெயர் அனுபவத்தையும் புரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் சேரனின் இலக்கியப் புலம் ஒரு தவிர்க்க முடியாத வரலாற்று ஆவணமாகவும்,  முக்கிய  இலக்கியக சாட்சியாகவும் என்றும் நிலைத்திருக்கும்.

[சேரனுக்கு இதய அஞ்சலி]

19/11/2026

Series Navigationவன்மக் கிடங்குகள்!நிம்மதி