This entry is part 10 of 15 in the series 22 நவம்பர் 2026

சோம. அழகு

‘உறவுகள்’ என்னும் வகையினத்தில் வரும் உயிரினங்களிடம் உரையாடலை ‘அறவே’ தவிர்த்துவிடுவது உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும் (ஐ யாம் தான் கண்டுபிடிச்சது!) என்பதால் அந்த நல்ல பழக்கத்தைக் கன காலமாகக் கடைபிடித்து வருகிறேன். எனது கண்டுபிடிப்பு முற்றிலும் சரியானது என்பதற்கான வாழும் உதாரணம்….. நாந்தேன்!

தீபாவளி அன்று அந்த வகையினத்தைச் சார்ந்த ஒருவரிடம் அலைபேசியில் காணொளி அழைப்பைத் துவங்கினான் என்னவன். பண்டிகையும் பண்டிகை நிமித்தமும் – இதுவெல்லாம் ஒரு காரணக் குழல் என்று நானும் அன்று புத்தி மழுங்கிப் போய் வாழ்த்துகள் சொல்லும் பொருட்டு எட்டிப் பார்த்து லேசாக அளவளாவத் துவங்கினேன். அழைப்பின் அந்தப் புறம் இருந்தவர், “தீபாவளிக்கு என்ன ஸ்பெஷல்?” என்று மிக இயல்பாகக் கேட்டார். இவர் உறவுக்காரர்தான்; ஆனால் மோசமானவர் இல்லை ஆதலால் நானும் செய்தவற்றைக் காண்பிக்க அடுக்களையை நோக்கிச் சென்றேன்.

என்னவன் அலைபேசியை எடுத்துக் கொண்டே என்னைத் தொடர்ந்து வர நான் செய்த பலகாரங்களை எடுத்து உண்மேசையில் அடுக்கினேன். பின் ஒவ்வொரு டப்பாவாகத் திறந்து காண்பித்துக் கொண்டிருந்தேன். கேழ்வரகு முறுக்கு, துக்கடா, மைசூர்பாக், பாதுஷா, cupcakes (‘தீபாவளிக்கு இது எதுக்கு?’ போன்ற ஆக்கப்பூர்வமான கேள்விகள் சற்றும் கருணையில்லாமல் புறக்கணிக்கப்படும்!), தீபாவளியின் ஆஸ்தான இனிப்பாகிப் போன குலாப் ஜாமுன் – சும்மா சொல்லக் கூடாது! இந்தக் கடைசி வஸ்துவைத் தவிர எல்லாமே அருமையாக வந்திருந்தன. “WOW! சூப்பர் பா… பாக்கவே செம்மையா இருக்கே! அதுவும் அந்த மைசூர்பாக் ரொம்ப temptingஆ இருக்கு. கலக்கீட்டீங்க போங்க” என்று அலைபேசியின் எதிர்முனையில் இருந்து பாராட்டு மழை பொழிந்தது.   

“என்ன? இப்படியெல்லாம் நான் புளாங்கிதம் அடையும் சூழல் பொசுக்குனு வராதே?” என்று குழம்பியவாறே “சரி, பரவாயில்ல. பெருமைபட்டுக்குவோம்” எனக் கொஞ்சமாக மகிழத் துவங்கினேன். எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு எனது மகிழ்ச்சி துளிர் விடாமல் பார்த்துக் கொண்டார் பாராட்டியவரின் அர்த்தாங்கினி(‘அர்த்த’ என்பதற்குப் பதில் ‘திரிபாத’ என்று போட்டால் பொருத்தமாக இருக்கும்தான். ஆனால் ‘திரிபாதாங்கினி’ என்றொரு சொல் இருப்பதாகத் தெரியவில்லை!) 

“எங்க? காமி பாப்போம்?” என்று இளக்காரமாகக் கேட்டவாறே ஆஜரானார் அந்த நடமாடும் காளகூடம். நானும் எல்லா டப்பாக்களையும் மீண்டும் (ஆனால் இம்முறை வேண்டா வெறுப்பாகத்) திறந்து காண்பித்துக் கொண்டிருந்தேன். வரவிருந்த அவரது அடுத்தடுத்த பேச்சுக்களுக்கான எதிர்வினையாக இப்போதே என்னுள் இயல்பாகப் பரவிய வெறுப்பு தயாராய் நின்றிருந்தது. 

கால்வாசி குலாப் ஜாமுன்கள் கொஞ்சம் சரியாக வரவில்லை ஆதலால் “இது எல்லாரும் வழக்கமா செய்யுற குலாப் ஜாமுன்தான்” என்று அந்த டப்பாவைத் திறக்காமல் நழுவப் பார்த்தேன். அவரோ மிகச் சரியாக “பரவாயில்ல… திறந்து காமி” என்று அதே எரிச்சலூட்டும் தொனியில் ஆணையிட்டார். நட்டார்போல் சொல்லினும் ஒட்டார்சொல்லை ஒல்லையில் உணர்ந்தேன்.

என்னுடன் இதற்கு முன் பேசிக் கொண்டிருந்த அவரது சகதர்மன், “குலாப் ஜாமுன் யார் செஞ்சாலும் நல்லாத்தான் வரும். அதுல என்ன பாக்க வேண்டியிருக்கு ஒனக்கு?” என்று கேட்டு தம் மனைவியின் புலன் விசாரணையை முடக்க முயன்றார். ஆனாலும் அந்தப் பெண்மணி “எவ்ளோ நல்லா வந்துருக்குன்னு நான் பாக்கட்டும். தொற… தொறந்து காமி” என்று ‘எவ்ளோ’வில் ஓர் அழுத்தம் கொடுத்து விடாப்பிடியாக அழிச்சாட்டியும் செய்யவும், டப்பாவைப் பாதி திறந்தும் திறவாமலும் காண்பித்தேன். 

“ஹ்ம்ம்… நல்லாத்தான் வந்துருக்கு” என்று ஒரு சலிப்புடன் கூறிவிட்டு “பரவாயில்லையே… இவ்ளோ செய்ய நேரம் கெடைச்சுருக்கு? பாப்பா செய்ய விட்டாளா? யார்கிட்ட கேட்டு செஞ்ச? யூட்யூப் ஆ?” என்று வழ வழ கேள்விக்கணைகளாகத் தொடுத்தார். அவரது இல்லாளனோ “அந்த மைசூர்பாக்தான் பாத்தாலே சாப்பிடணும் போல இருக்கு. இதுக்காகவே ஃப்ளைட் ஏறி அங்க வரலாம் போலயே?” என மீண்டும் மீண்டும் பாராட்ட, “அடேங்கப்பா! அப்படியே நீங்க சாப்பிட்டுட்டாலும்…. அதான் டயட்ல இருக்கீங்களே?” என்று அவரைப் பார்த்தும் “சும்மா இப்படித்தான் ஏதாவது சொல்லிட்டு இருப்பாங்க. வேற வேலையே கிடையாது” என்று எங்களிடமும் கூறினார்…. அலுத்துக் கொள்கிறாராம்! இவரும் ஒரு நளபாக நாஜி போலும்!

*******************************

  வெகு நாட்கள் கழித்துப் பேசும் ஒருவரிடம் அதுவும் ஒரு பண்டிகை நாள் அன்று தேவையே இல்லாமல் குரோதத்துடன் எவ்வாறு பேச வருகிறது? It’s a rhetorical question. ஆனால் இதற்கும் பதில் வைத்திருப்பதாகக் கூறுபவர்கள் என்ன பெரிய வாதம் வைத்திருக்கப் போகிறார்கள்?

 ‘அவர்களுக்கு வாய்த்த அறிவும் பக்குவமும் அவ்வளவுதான்’, ‘சுற்றமாச் சூழ்ந்த சிறுமை, அவர்கள் வளர்ந்த விதம், புழங்கும் குண்டுச்சட்டி,’… – ‘இவையெல்லாம்தாம் ஒருவரது இயல்பைத் தீர்மானிக்கின்றன’ ….. இதானே? யாரை வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் நியாயப்படுத்த இவை போன்ற எண்ணற்ற சால்ஜாப்புகள் கூறலாம். இந்த மொன்னைத்தனமான நொண்டிச் சாக்குகளின் தூரிகை கொண்டு ஹிட்லர், முசோலினி, இடி அமீன், பெஞ்சமின் நெதன்யாகு, சங்கிகள், அணில்கள் என எல்லோருக்கும் ‘அய்யோ பாவம்!’ வண்ணம் பூசிவிடலாம். இன்னும் ஒரு படி மேலே சென்று ‘புனிதர்’ பட்டமே கூட சாற்றிவிடலாம்.

அப்படியே ஒருவரது சூழல் மோசமானதாக அமைந்திருந்தாலும் கூட ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு உலகைப் பார்க்க மாட்டார்களா? மனமுதிர்ச்சி அடைவதற்கான வழிகளைத் தேடிக் கண்டடைய மாட்டார்களா? எனக்கென்னமோ குதர்க்கமாகப் பேசுவதற்கெல்லாம் மனதின் அழுக்கைத் தவிர்த்த வேறு காரணம் புலப்படவில்லை. இன்முகத்துடன் நயமாகப் பேசுவதற்கு மேற்கூறிய எவையும் அவசியமில்லையே. அன்பு கூட வேண்டாம். பிறர்க்குக் கெடுதல் நினைக்காத நல்ல மனது அமைந்தால் மட்டுமே போதும். 

So not everyone is mentally sick, some are intentionally pernicious!

‘ஒரு குலாப் ஜாமுன் டப்பாவுக்கு இவ்வளவு அக்கப்போரா?’ என்று தோன்றலாம். ஆனால் அதற்கு முன்பிருந்தே பல காலமாக ஆலகாலத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் அந்த வன்மவாதியைப் பற்றி முழுதாக… ச்ச!ச்ச! ஒரு குணம்(முகத்தல் அளவையில் மிகச் சிறியது!) தெரிந்தால் கூட எனது வெறுப்புக்கான காரணம் புரியும். 

*************************

‘இப்படிக் கூட ஒரு மனித உயிர் இருக்குமா?’ என என்னை ஆச்சர்யத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கிய வன்மக் கிடங்கு அது. அப்படியாக என்னைத் திகைக்க வைத்த அவரது அரும்பெரும் குடைச்சல்கள்:

நான் பிள்ளை பெற்ற பத்தாவது நாளில் பெயர் சூட்டும் விழாவிற்கு வந்திருந்த அந்த வன்ம வல்லி என்னிடம் “பால் வருகிறதா? பிள்ளைக்குப் பத்துகிறதா? ஒரு நாளைக்கு எத்தனை தடவை எவ்ளோ pump பண்ற?” என்று சற்றும் கூச்சமில்லாமல் தோண்டித் துருவிக் கேட்டு முடித்து, “இப்போ வர்ற news எல்லாம் பாக்குற மாதிரியா இருக்கு? போன மாசம் டெல்லில ஒரு வயசு குழந்தைன்னு கூடப் பாக்காம…. போன வாரம் கேரளாவுல மூணு வயசு குழந்தையைக் கடத்திக் கொண்டு போய்….” – வாக்கியங்களை முடிக்காமல் புள்ளிகளாக வைத்து நான் நீட்டியிருப்பதைப் போல் அல்லாமல் அவர் விளக்க விலாவாரியாகக் கொடூரமாக எல்லாவற்றையும் கூறிக்கொண்டிருக்கவே எனக்கு உள்ளுக்குள் ஏதோ உதறல் எடுத்துப் பிசைய ஆரம்பித்தது. இயற்கையாகவே பிரசவத்திற்குப் பிறகு (Postpartum) estrogen, oxytocin கணிசமாகச் சரிந்து பச்சாதாபம் உச்சத்தை(empathy surge for kids) எட்டி தாயின் உடலையும் மனதையும் ஒரு வகையாகப் போட்டுப் படுத்தி எடுக்கும். நுண்ணுணர்வுகள் மிகவும் ஆழமாக நுட்பமாக உணரப்படும் அந்நேரத்தில் இதையெல்லாம் கேட்டதும் தலை கிறுகிறுத்து ஓக்காளமும் அழுகையும் ஒன்றாக வருவதைப் போன்று இருந்தது.

“உலகம் ரொம்ப மோசமா போய்க்கிட்டுருக்கு. அத விடுங்க!” என நான் பேச்சை மடை மாற்ற முயல, “அதான்…. நேத்து கூட சென்னையில…” என்று மீண்டும் தொடர்ந்த போதுதான் அவரது மனதின் வக்கிரம் எனக்குப் புரிந்தது. சற்றே பிள்ளை பெற்ற ஒருவளிடம் பேசும் கதைகளா இவை? உளவியல் ரீதியாகத் தொந்திரவு செய்தே ஆக வேண்டும் என்று ஏன் இவ்வளவு குரூரம்? 

அக்காலகட்டத்தில் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குப் பின், நான் பணிக்குச் செல்வது பற்றிய பேச்சை யாராவது துவங்கினால் உடனே பாய்ந்து கொண்டு வந்து வேலைக்குச் செல்வதில் உள்ள கஷ்டங்கள், எதிர்மறையான விஷயங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டு முடித்த பின்னர், முதன்முதலாகக் குழந்தை குப்புற விழுவது, தவழ ஆரம்பிப்பது, நடக்கத் துவங்குவது, முதல் வார்த்தை உச்சரிப்பது என நான் காணுறாமல் இழக்க நேரிடும் அரிய தருணங்கள், 24 மணி நேரமும் ஒரு குழந்தைக்குத் தாயின் இருப்பும் கதகதப்பும் எவ்வளவு அவசியமானது என்பது குறித்த பேருரை…. ஆத்து ஆத்துன்னு ஆத்தி என்னைக் கரை கரையென்று கரைக்க முயன்றார். 

இவ்வளவு ஏன்? அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ளச் சொல்லி வீட்டுப் பெரியவர்கள் கூறும் போதெல்லாம் தனிமையில் வந்து விலைவாசி உயர்வில் துவங்கி, பின் உள்ளூர் பொருளாதாரம் முதல் உலகப் பொருளாதாரம் வரை அலசி, எனது உடல்நிலை, முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கல்கள் என நீட்டி முழக்கி எனக்கு அவ்வெண்ணமே துளிர் விடாமல் பார்த்துக் கொள்ளும் முயற்சியில் அயராது ஈடுபட்டார்.

‘எங்கே வேலைக்குச் சென்று இவள் உருப்பட்டு விடுவாளோ?’, ‘எங்கே இன்னொரு குழந்தை பெற்றுக் கொள்வாளோ?’ என ஏன் இவ்வளவு பதற்றம்? ‘மக்களே போல்வர் கயவர்….’ 

***************************

மணமான புதிதில் எந்தத் தம்பதிக்கும் வருவது போலவே என்னவனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடுகள் பல வருவதுண்டு. அப்போதெல்லாம் “எனக்கு உன்னைப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. இவ்ளோ படிச்சுருக்க. கோல்டு மெடல் வாங்கிருக்க. எழுதுற வேற. ஆனா ஏன் அமைதியா வளைஞ்சு குடுத்துப் போற? இவங்கள்லாம் திருந்துற ஜாதி இல்ல. நான்லாம் உன்ன மாதிரி இருந்திருந்தா தன்மானம் என்னை எப்பவோ கெளம்பிப் போகச் சொல்லிருக்கும்” என்று பெரும்பாலும் உசுப்பேத்தி விட்டுக்கொண்டிருந்த அந்த நஞ்சுக் குடம், ஒருமுறை என்னிடம், “உன்னைப் பொண்ணு பாத்துட்டுப் போன பிறகு உன்னைப் பத்தி நான் என்ன நினைக்குறேன்னு கேட்டாங்க. நான் ஒண்ணும் வாயே தொறக்கல. ‘நீ யாரு? எப்படிப்பட்டவ? என்ன? ஏது?’ன்னு உன்னைப் பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீயே சொல்லு. நான் பாட்டுக்கு உனக்கு certificate குடுத்து ஒகே சொல்லப்போய் நாளப்பின்ன உங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனை வந்து பிரிஞ்சுட்டீங்கன்னா நானும்தான் ஓகே சொன்னேன்னு என்னைக் கேப்பாங்கள்ல?” என்று என் முகத்திற்கு நேரே கூறவும் அப்படியே ஆடி அசந்து போய்விட்டேன்.

 ‘இந்தாம்மா ஏய்! mindvoiceன்னு நெனச்சு உன் ஆசையெல்லாம் சத்தமா சொல்லிட்டு இருக்க…. மனசுல இவ்ளோ வன்மத்த வச்சுகிட்டு எப்படி தாயீ உசுரோட இருக்க?’ என்று கேட்கக் கூட வாய் வரவில்லை எனக்கு. ‘மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுட் சாப்புல்லற் பாற்று’மாறு நானும் அவரிடம் நடந்து கொள்ளலாம் என்று பார்த்தால் மனசாட்சி ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. அவரைப் போலவே தரங்கெட்டு நடந்து கொள்வதற்கெல்லாம் அவரைப் போலவே தடித்த நாகுத் தோல் அமையப் பெற்றிருக்க வேண்டும் போலும். 

Most of the times it takes me 2 business days to realize that she has spitted venom. எனக்கு எவையெல்லாம் பிடிக்காது, எதுவெல்லாம் என் மனதைச் சஞ்சலப்படுத்தும் என அட்டவணை போட்டு மிக அழகாக ஒவ்வொரு முறையும் மறவாமல் அவற்றைத் தொட்டுப் பேசி – நான் எவ்வாறு நெளிகிறேன், எனது முகம் எவ்வாறு சுருங்குகிறது, என் குரல் எவ்வளவு கம்முகிறது என்றெல்லாம் நோட்டம் விட்டால்தான் அவருக்கு அன்று உறக்கம் வரும். வேண்டுமென்றே செய்கிறார் என்று உணர்ந்த பிறகு நான் எவ்விதச் சலனமும் இன்றி பேசுவது அவருக்குச் சலிப்பைக் கொடுத்திருக்கும் போலும். உடனடியாக பேச்சை முடித்துக் கிளம்பிவிடுவார்.

*******************************

போதாக்குறைக்கு எதில் எதில்தான் ஒப்பீட்டில் ஈடுபடுவது என்ற விவஸ்தையே இல்லாத ஈனப்பிறவி. தன் குழந்தை பேதை பருவத்திலும் விரல் சூப்பும் பழக்கத்தைக் கை விடவில்லை என்பதற்காக, ஒன்றரை வயதில் pacifier பழக்கத்தைக் கைவிட்ட என் குழந்தையைப் பற்றி அடுத்த இரண்டு(!) வருடங்களுக்கு மீண்டும் மீண்டும் சளைக்காமல் ‘அப்பழக்கத்தை முற்றிலும் மறந்துவிட்டாளா?’ என்பதை செய்வினை, செயப்பாட்டு வினை, நேர்க்கூற்று, அயற்கூற்று (active voice, passive voice, direct speech, indirect speech) என விதவிதமான வழிகளில் கேட்டுக் கொண்டே இருந்தார். ஆம்! இரண்டு வருடங்களுக்கு!

அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்

இக்குறளுக்கெனவே அளவெடுத்துச் செய்யப்பட்ட தவக்களைத் தவ்வை அவர்.

அமெரிக்காவின் தொடக்க நிலை பள்ளிகளில் நிதானமாகத்தான் கற்றுத்தருவார்கள் என்பதால் என் குழந்தை ஒருவேளை வீட்டில் என்னிடம் இந்திய பாடத்திட்டத்தின் படி கற்றுவிடுகிறாளோ என்று ஓயாமல் என்னிடம் போட்டு வாங்கிக் கொண்டே இருப்பதில் அவரது பேரார்வக்கோளாறு பல்லிளிக்கும். முழு நாளும் தொலைக்காட்சியில் மூழ்கியிருக்கிறாள் என்ற பதிலைக் கேட்டால் குஷியாகிவிடுவார் ஆதலால் நானும் அவரை மகிழ்விக்கத் தயங்குவதேயில்லை. ‘இனம்போன் றினமல்லார் கேண்மை’ எவ்வளவு ஆபத்தானது என்பதை நொடிக்கு நூறு முறை நிரூபித்துக் கொண்டிருந்தது அந்த விஷ பாட்டில். இவ்வளவிற்கும் என் மகள் மழலை நிலைதான்(Kindergarten) செல்கிறாள். இப்போதே இப்படி!

இப்படியாகத் தினுசு தினுசாக ஒப்பிட்டும் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டும் வளைய வரும் இவரைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்தான். ஆனால் எனக்கு வேறு வேலை இல்லையா என்ன? மேற்கூறியவை அனைத்தும் மாதிரிகள்தாம்(samples). இவ்வளவிற்கும் அவருக்கும் எனக்கும் இருக்கும் கருத்தியல் முரண்கள் எவற்றையும் நான் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டது கூட கிடையாது. அப்புறம் ஏன் சதா சர்வ காலமும் இப்படி என் வீட்டினுள் தனது மூக்கை இருத்திக் கொண்டிருக்கிறது அந்த உயிரினம்? அடுத்தவர் விஷயங்களை அளவுக்கு மீறி தெரிந்து கொள்ளும் முனைப்பில் கேள்விகள் எழுப்பும் போது வெட்கமாகவே இருக்காதா?

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்

உட்பகை உள்ளதாங் கேடு.

Evil will pretend to be good but good won’t pretend to be evil. So anytime you see evil, believe it என்று எங்கோ வாசித்த ஞாபகம். அவருக்கு வஞ்சத்தை மறைக்கக் கூட வரவில்லை. தன்னை ஒருபடி மேலாகக் கருதும் அவரது பேச்சையெல்லாம் அவர் ஓரமாக நின்று கத்திக் கொண்டிருப்பதாகவே எடுத்துக் கொள்வேன் என்பது இன்னும் அவருக்குப் புரியவில்லை, பாவம்! 

*********************

இவரைப் போன்றோருக்கு அடிப்படையில் என்னதான் பிரச்சனை? தமது இருப்பையும் முக்கியத்துவத்தையும் தாமே உணரக் கூட அடுத்தவருடனான அர்த்தமற்ற ஒப்பீடு தேவைப்படுபவர்களுக்குச் ‘சுயம்’ என்ற ஒன்றே இருக்காதா? இவர்களது கவன ஈர்ப்பு நாடகங்களுக்குப் பின்னும் கிடைக்காத வெளிச்சம் எவ்வித முயற்சியும் இன்றி (just by existing) பிறர்க்குக் கிடைக்கும் போது எழும் கோபம்தான் இப்படி காழ்ப்புணர்வாக உருமாறுகிறது போலும். 

இவர்களைப் பார்த்தால் இரு கேள்விகள் மட்டுமே எழுகிறது. ஏன் இப்படி இருக்கிறார்கள்? எப்படி இவ்வாறு இருக்க முடிகிறது?

என்னுடன் சேர்ந்து கொஞ்சம் இப்படியான உலகைக் கற்பனை செய்யுங்களேன் – ஒரு பரந்துபட்ட பார்வையுடனான சமூக அக்கறையையே அடிப்படைக் குணமாகக் கொண்ட மனிதர்கள். குடும்பக் கட்டமைப்பைப் பொறுத்தமட்டில் தத்தமது வேலையைப் பார்த்துக் கொண்டு, தமது முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, பிறரது வளர்ச்சிக்காக உளமார மகிழ்ந்து, உதவ வேண்டிய நேரத்தில் இயன்றால் உதவி செய்து….. ரொம்ப utopian setupஆ இருக்கோ? சரி வேண்டாம். 

அவரவர் வாழ்க்கைப் பாட்டைப் பார்த்துக் கொண்டு முடிந்தால் இன்சொற்களை உதிர்த்தும் முடியவில்லை என்றால் ஒரேடியாகப் பிறர் வாழ்வில் இருந்து அகன்றும் ஒதுங்கியும் வாழ, சயனைடில் சர்க்கரை தடவிய மாதிரியே வலம் வரும் இந்த வன்மக்கிடங்குளை எது தடுக்கிறது? சரி… இந்’நகைவகைய ராகிய நட்பு’, ‘பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை’ – இவ்விஷ ஜந்துக்களிடம் இருந்து நாம் ஒதுங்கிக் கொள்ளலாம் என்று பார்த்தால் இவைகள் மரப்பிசினோடு போட்டி போடும் நோக்கில் நம்மீது அப்பி ஒட்டிக் கொண்டு அகல மறுக்கின்றன. 

உளவியல் ரீதியாகக் கூறுவதாய் இருந்தால் தீய எண்ணம் கொண்டவர்கள் எவ்வித நாணவுணர்ச்சியும் இன்றி மீண்டும் மீண்டும் அடுத்தவர் வெளியில் குறுக்கிட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போதுதானே பிறரது வாழ்வில் நடப்பதை அறிந்து கொள்ளவும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தீங்கு இழைக்கவும் இயலும். ‘இந்த விஷயத்தில் மான ரோசம் எல்லாம் பார்த்தால் முடியுமா?’ என்பதே இவர்களது தாரக மந்திரம்.

யாரையும் முதலில் நல்லவராகக் காணும் பண்பைப் பெற்றிருப்போமேயானால் அது நம்முள் உள்ள நல்ல பண்பின் எதிரொளிப்பே. அவரது முகத்திரையை அவரே அவ்வப்போது கிழித்துக் காட்டிய பின்னரும் நல்லனவற்றையே காண வேண்டும் என இருந்தால் அதன் பெயர் ஏமாளித்தனம்!

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் ஔவியம் பேசத் துவங்குபவர்களைச் சற்றும் தயங்காமல் நம் வாழ்வினின்று பிய்த்து எடுத்துத் தான் தூர எறிய வேண்டும். நான் எந்த முயற்சியும் எடுக்காமல் இவர்களது இயல்புக்குத் தாமாகவே இவ்வுறவுகள் முறிந்து முற்றிலும் ஒழிந்து போகும் அந்நாள் என் வாழ்வின் பொன்நாள்!

Robotics, AI என உலகம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களின் அறிவும் மனதும் மட்டும் சுருங்கிக் கொண்டே செல்கிறது. கிடைக்கும் நேரத்தில் நல்லதாக நான்கு புத்தககங்கள் வாசிப்பது கூட இவர்களது மனப்பிறழ்வுக்கு நல்ல மருந்தாக அமையும். அதை விடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை என்று சுற்றிக் கொண்டிருந்தால்….

***************************

வெகு காலத்திற்கு முன் தொ.ப. அவர்களுடனான உரையாடல்தான் நினைவிற்கு வருகிறது. “ஏன் மனிதர்களுக்குப் பொறாமை வருகிறது? தனக்குரியது தனக்கு; தனக்குரியதுதான் தனக்கு. பிறருடன் ஒப்பிட்டும் பொறாமை கொண்டும் என்ன கிடைக்கப் போகிறது?” என்று கேட்டதற்கு அன்னாரது அருமையான பதில் –   

“அழுக்காறு – அதற்குக் காரணமும் கிடையாது; மருந்தும் கிடையாது”

  • சோம. அழகு

Series Navigationபூவரசு பூத்திருக்குசேரனின் இலக்கியப் புலம்: நவீன இலங்கைக் கவிதை, போர்க்கால சாட்சியம், புலம்பெயர்வு இலக்கியம்