யுவராஜ் சம்பத்
எங்களுடைய திருப்பூர் மாவட்டத்தில், வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா மற்றும் மாட்டுச் சந்தை ஏப்ரல் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். காங்கேயம் காளைகளுக்கு பெயர் பெற்ற கொங்கு நாட்டில், காங்கேயம் காளைகள் என்று அறியப்படுகிற மயிலை, செவலை, காரி, பிள்ளை போன்ற காளைகளை விற்பதற்கும் வாங்குவதற்குமான சந்தையாக இது பெயர் பெற்றது. இங்கு தமிழகத்தில் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து கால்நடைகளை வாங்கிச் செல்கின்றனர். இதைப்பற்றி விரிவாக அறிந்திருந்த போதிலும், நேரில் பார்த்துவிட வேண்டும் என்று முடிவு செய்து இந்த முறை அங்கே சென்றிருந்தேன். அந்த மாடுகள் எப்படி இனம் காணப்படுகின்றன, அதற்கு எப்படி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பதைப் பற்றி அறிய மிகவும் ஆவல் கொண்டிருந்தேன்.
மயிலைக் காளை என்பது உடல் முழுவதும் வெண்மையாக அல்லது சாம்பல் கலந்த வெண்மையாக இருக்கும். இந்த காளைகளுக்கு கழுத்து, திமில் மற்றும் பின்துடைப்பகுதிகளில் கருமை கலந்த சாம்பல் நிறம் காணப்படும். செவலைக் காளைகள் பெயருக்கு ஏற்றாற்போல் சிவப்பு அல்லது செந்நிறம் கொண்டவை. உடல் முழுவதும் செங்கல் சிவப்பு அல்லது வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். சில மாடுகளின் நெற்றி அல்லது வால் பகுதியில் வெள்ளை அடையாளங்கள் இருக்கலாம். காரி என்பது கார்மேகம் போன்ற கருப்பு நிறம் கொண்டவை. உடல் முழுவதும் கருப்பு நிறத்தில் இருக்கும். பார்ப்பதற்கு கம்பீரமாகவும் இருக்கும்.
காங்கேயம் காளைகளுக்கு ஒரு சிறப்பு உண்டு. அவற்றின் கொம்புகள் பின்னோக்கிச் சென்று உள்புறமாக வளைந்திருக்கும். திமில் மிகவும் உயர்ந்து உறுதியாக இருக்கும். முகம் குறுகலாகவும், நெற்றி அகலமாகவும் இருக்கும். பொதுவாகவே “பூம் பூம் மாட்டுக்காரன்” என்று சொல்லப்படுகிற ஒரு நாடோடி குழு இந்த காளைகளைத்தான் அதிகமாக பயன்படுத்தும். அந்த திமிலின் மீது ஏதாவது ஒரு கடவுளின் அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, பொதுவாக யாசகம் செய்து வாழ்கிறவர்கள்.
குதிரைகளுக்கும் மாடுகளுக்கும் பற்களை வைத்து வயதை கண்டுபிடித்தார்கள். இரண்டு பல், நான்கு பல், ஆறு பல் என்று பற்கள்தான் அந்த கால்நடைகளுக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முதன்மையான பங்கு வகிக்கிறது. இருந்தபோதிலும் சில நேரங்களில் “சுழி” எனப்படும் மாட்டின் உடல் ரோமங்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் சுழன்று இருப்பதை அதிர்ஷ்டமாக கருதி, நல்ல சுழி, கெட்ட சுழி என்று பிரித்து அதற்கு ஏற்ப விலைகள் வைப்பார்கள். நெற்றிச்சுழி, முதுகுச்சுழி, மார்புச்சுழி, கழுத்துச்சுழி என்பதாக இது அமையும். கால்நடைகளின் விலையை நிர்ணயம் செய்வதற்கு முன் மேற்கண்டவற்றைப் பார்த்து, மாட்டின் நடை, மூச்சு விடும் விதம் மற்றும் தீவனம் எடுக்கும் ஆர்வம் ஆகியவற்றையும் சேர்த்துப் பார்த்து விலை வைப்பார்கள். இதனால்தான் கண்ணபுரம் மாட்டுச்சந்தை மிகவும் பரவலாக அறியப்பட்டு, சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது.
குதிரைகளை வாங்குவதற்கு முன்பும் இதே அளவுகோல்களை வியாபாரிகள் முன்னெடுப்பார்கள். “ராசி இல்லாத குதிரை கொன்றுவிடும்” என்றும் ஒரு பேச்சு இங்கு உண்டு. குறிப்பாக தேவமணி, மகுடம் போன்ற சுழிகள் நல்லது என்னும் கருத்தும் உண்டு.
இதைப் பற்றி ஒரு சிறிய ஆய்வை முடித்துக்கொண்டு வரும் வழியில் நண்பர் குமார் இரண்டு கேள்விகளை முன்வைத்தார். அது, ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக விற்கப்பட்டபோதும் இதைப் போன்றேதான் விலை நிர்ணயம் செய்யப்பட்டதா? மற்றும் இன்றும் வட இந்திய மாநிலங்களில் நடைபெறும் மனைவிகள் விற்பனையிலும் இது தொடருகிறதா? என்பதாக அவருடைய கேள்வி அமைந்திருந்தது.
அது தொடர்பாக பல்வேறு வரலாற்று ஆய்வுகளை பார்த்தபோது, ஆப்பிரிக்க கருப்பின மக்கள் அடிமைகளாக விற்கப்பட்ட சந்தைகள் பல இருந்தன. அவற்றில் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அட்லாண்டிக் வணிகப் பாதை, கானா, செனகல், நைஜீரியா போன்ற நாடுகளில் இருந்தது.
அமெரிக்க சந்தைகளுக்கு அடிமைகளை தாராளமாக வழங்கியது தெற்கு கரோலினா, சார்ல்ஸ்டன், நியூ ஆர்லியன்ஸ் மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்த சந்தைகள்.
அதுபோன்று கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து அரபு நாடுகளுக்கும் அடிமைகள் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். தான்சானியா, ஜான்சிபார் ஆகிய இடங்களில் ஸ்டோன் டவுன் முக்கியமாக இருந்தது. அதைப்போன்று எகிப்து, லிபியா, மொரோக்கோ ஆகிய இடங்களிலிருந்தும் சஹாரா பாலைவன வணிகப் பாதை மூலமாக இவர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், இன்று ஐரோப்பாவில் இருக்கிற போர்ச்சுகலிலும் அடிமைச் சந்தைகள் இருந்தன. இந்த சந்தைகள் அனைத்தும் மனித வரலாற்றின் கருப்பு பக்கங்களாக கருதப்படுகின்றன. பல்வேறு போராட்டங்கள் மூலம் 19ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில் இவை படிப்படியாக ஒழிக்கப்பட்டன.
பழைய காலத்து அடிமைச் சந்தைகள் சட்டபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிட்டாலும், “நவீன அடிமைத்தனம்” என்கிற பெயரில் மனித விற்பனை இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஐரோப்பாவின் காலனிகளாக இருந்த ஆப்பிரிக்க நாட்டு மக்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் வீட்டு வேலை உட்பட பல்வேறு வேலைகளை செய்வதற்காக புலம்பெயர்ந்தார்கள் அல்லது கள்ளத்தோணி மூலமாக இன்றும் பயணித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால், இவை அனைத்தும் இணைய வழியாக நடக்கின்றன. விஞ்ஞானத்தின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு மனிதகுல நாசத்திற்கு வழிவகுக்கிறது என்பது எவ்வளவு பெரிய முரண்பாடு.
இந்த இணைய வழி விற்பனை மியான்மார், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளிலும் மிகப் பிரபலமாக இருக்கின்றன. பழங்கால சந்தைகள் போல இவை ஊர் அறிய நடப்பதில்லை என்றாலும், சட்டத்தின் கண்களுக்கு தெரியாமல் இன்னமும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. தொழில்நுட்ப உதவியுடன் நிழல் உலக வணிகமாக நடைபெற்று வந்து பெரும் பொருள் ஈட்டுவதால், இது இன்றும் அரசுகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
பல நூற்றாண்டுகள் கடந்தும், அறிவியல் வளர்ந்தும் மனிதனின் மனதின் ஒரு பகுதி இன்னும் இவ்வளவு கருப்பாக இருப்பது வேதனைக்குரியது. முறைதான் மாறி இருக்கிறது; நோக்கம் மாறவில்லை. அன்று சங்கிலியால் பிணைத்து சந்தையில் ஏலம் விட்டார்கள்; இன்று பாஸ்போர்ட்டை பிடுங்கிக்கொண்டு, கடன் என்னும் பெயரில் மறைமுகமாக அடிமைப்படுத்தி இருக்கிறார்கள். பழங்கால அடிமைகள் வியாபாரத்தில் வெளிப்படையாக அடிமைத்தனம் இருந்ததால், போராட்டங்கள் மூலம் அதைத் தவிர்க்க முடிந்தது. இன்று அனைத்தும் நிழல் உலகத்தில் நடைபெறுகிறது. கண்ணபுரம் போன்ற சந்தைகளில் மாடுகளின் சுழிகளையும் பற்களையும் பார்த்து அவற்றின் தரத்தை கவனித்து வியாபாரி அதற்கு விலை வைப்பது போல், எத்தனை “சுழிகளை” கொண்ட மனிதனுக்கு என்ன விலை என்பது யாருக்குத் தெரியும்?
ஆண் கால்நடைகளை விட பெண் கால்நடைகளுக்கு விலை அதிகமாக கிடைத்தது. இனப்பெருக்கம் மற்றும் பால் போன்ற உணவு உற்பத்தியில் பெண் கால்நடைகளின் தேவை அதிகமாக இருந்தது.
மனிதர்களின் சந்தையிலும் இதேதான் நிலை. ஆண்கள் பொதுவாக தோட்ட வேலை, சுரங்க வேலை மற்றும் கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகளுக்கு பயன்படுத்தப்படுவதால் அதற்கு ஒரு விலை; பாலியல் சுரண்டலுக்கும் வீட்டு வேலைக்கும் பெண்கள் பயன்படுத்தப்படுவதால் அவர்களுக்கு அதிக விலை. இது நவீன அடிமைத்தனத்தின் இன்றைய நிலை. உழைப்பு அதிகம் தேவைப்படும் இடத்தில் ஆண்களுக்கு அதிக விலையும், உற்பத்தி அல்லது சுரண்டல் சாத்தியப்படும் இடத்தில் பெண்களுக்கு அதிக விலையும் கிடைக்கிறது. உயிர்களை சரக்குகளாக மாற்றும்போது அன்பு, மனிதநேயம் இவை அனைத்தும் காணாமல் போய்விடும்.
இன்றைய நாகரிக உலகில் திருமணம், வரதட்சணை, உழைப்பு சுரண்டல் இவை அனைத்தும் வெளிப்படையாகவே விலை கூறி விற்கப்படுகின்றன.
இந்த அநீதிக்கு எதிராக தந்தை பெரியார் போன்ற பெரும் தலைவர்கள் ஒரு நூறு ஆண்டுகாலம் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தாலும், இன்றைக்கும் வட இந்தியாவில் இதுபோன்ற நிலை இருக்கிறது என்பது மனிதன் தன்னை நாகரிகமானவன் என்று அழைத்துக்கொள்வது அர்த்தமற்றது என்பதாகவே படுகிறது.
பெரியார் திருமணத்தை ஒரு புனித சடங்காக பார்க்காமல், அது ஒரு ஒப்பந்தம் என்று வாதிட்டார். அவர் அறிமுகப்படுத்திய சுயமரியாதை திருமணத்தில் தாலி, புரோகிதர் மற்றும் சடங்குகளைத் தவிர்த்து பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார். “கணவன் மனைவி” என்பதற்கு பதிலாக “வாழ்க்கைத்துணை” என்றார். பெண் அடிமையாக இருக்கக்கூடாது, சுயமாக சிந்திக்க வேண்டும் என்றும் சொன்னார். பொருளாதார சுதந்திரம் மற்றும் சொத்துரிமை பெண்களுக்கு தேவை என்பதை மிகவும் வலியுறுத்திச் சொன்னவர் பெரியார். குறிப்பாக பெண்களுக்கு சுயமரியாதை வேண்டும் என்றும் சொன்னார்.
ஆனால் இத்தனைக்கும் பிறகும், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளில் “தாடிச்சா” என்ற பெயரில் இன்னும் பெண்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்படும் பழக்கம் நிலவுகிறது.
இங்கு ஒரு பெண்ணை குறிப்பிட்ட காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஒரு ஆணுக்கு அல்லது ஒரு குடும்பத்திற்கோ வாடகைக்கு கொடுக்கிறார்கள். முத்திரைத்தாள்களில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது. அந்தப் பெண் குறிப்பிட்ட காலம் வரை அந்த ஆணுக்கு மனைவியாக வாழ வேண்டும். இன்னும் எப்படி எல்லாமோ…
மத்திய பிரதேசத்தின் சிவ்புரி மற்றும் குவாலியர் பகுதிகளில் நிலவும் இந்த “தாடிச்சா”பழக்கம் குறித்த மேலதிக மற்றும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதோ. இவை ஏன் ஒரு நவீன அடிமைத்தனம் என்பதை இன்னும் ஆழமாகப் புரியவைக்கின்றன:
சந்தை மற்றும் பேரம்..
இங்கு சில குறிப்பிட்ட காலங்களில் ஒரு சந்தை போலவே ஆண்கள் கூடுகிறார்கள். வறுமையில் இருக்கும் குடும்பங்கள் தங்கள் வீட்டுப் பெண்களை (மனைவி அல்லது மகள்களை) அங்கு அழைத்து வருகின்றனர்.
அடையாளம்: மாடுகளைப் பற்களைப் பார்த்து வாங்குவது போல, இங்கும் பெண்களின் வயது, தோற்றம், நிறம் மற்றும் ஆரோக்கியத்தை வைத்தே விலை பேசப்படுகிறது.
முத்திரைத்தாள் : இதுதான் இதிலுள்ள மிகப்பெரிய சட்டவிரோத முரண்பாடு. ரூ.10 முதல் ரூ.100 வரையிலான அரசு முத்திரைத்தாள்களில் இந்த ஒப்பந்தம் எழுதப்படுகிறது. அதில் வாடகைத் தொகை, காலம் மற்றும் நிபந்தனைகள் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன.
வாடகை மற்றும் ஒப்பந்தம்..
தொகை: பெண்களின் “தகுதியைப்” பொறுத்து ரூ.15,000 முதல் ரூ.2 லட்சம் வரை ஓராண்டு காலத்திற்கு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
கால நீட்டிப்பு: ஒப்பந்த காலம் முடிந்தவுடன், அந்த ஆணுக்குப் பெண்ணைப் பிடித்திருந்தால் கூடுதல் பணம் கொடுத்து ஒப்பந்தத்தை நீட்டிக்கலாம். இல்லையென்றால், அந்தப் பெண் தன் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். பின்னர் அவளது குடும்பத்தினர் அவளை வேறொருவருக்கு மீண்டும் “வாடகைக்கு” விடுவார்கள்.
புரோக்கர்கள் : இந்த வணிகத்தைச் சீராக நடத்த தனி புரோக்கர்கள் உள்ளனர். அவர்கள் வாடகைத் தொகையில் பெரும் பகுதியைத் தரகாக எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்த அவலத்திற்குப் பின்னாலுள்ள காரணங்கள்
இந்தக் கேவலமான முறை தொடர்வதற்குப் பின்னால் சில சமூகச் சிக்கல்கள் உள்ளன:
பெண் சிசுக்கொலை மற்றும் விகிதாச்சாரம்: மத்திய பிரதேசத்தின் சில மாவட்டங்களில் (உதாரணமாக பிந்து – 837, சிவ்புரி – 877) ஆண்-பெண் விகிதாச்சாரம் மிகவும் குறைவாக உள்ளது. பெண்களுக்குப் பற்றாக்குறை இருப்பதால், வசதிபடைத்த ஆண்கள் அல்லது திருமணம் ஆகாதவர்கள் இத்தகைய குறுக்கு வழியைத் தேடுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடி: கடன் தொல்லை மற்றும் வறுமையால் வாடும் குடும்பங்கள், தங்கள் வீட்டுப் பெண்களை ஒரு “வருமானம் தரும் கருவியாக” மாற்றிவிட்டனர்.
வாரிசுத் தேவை: சில ஆண்கள் தங்கள் வம்சத்தை வளர்க்க ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே பெண்களை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
இந்த முறையில் விற்கப்படும் அல்லது வாடகைக்கு விடப்படும் பெண்கள் “பாரோ” அல்லது “மொல்கி” (இதற்கு “விலை” என்று பொருள்) என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் அந்த வீட்டிற்குச் சென்ற பிறகு ஒரு மனைவியாக மதிக்கப்படுவதில்லை; மாறாக, வீட்டு வேலை செய்யவும், பாலியல் தேவைகளை நிறைவு செய்யவும் பயன்படும் ஒரு “பொருளாகவே” நடத்தப்படுகிறார்கள்.
சட்டத்தின் நிலை..
இந்தியச் சட்டப்படி இது மனிதக் கடத்தல் மற்றும் விபச்சாரம் போன்ற குற்றங்களின் கீழ் வரும். இருப்பினும், இது ஒரு “சமூக வழக்கம்” என்ற போர்வையில் ரகசியமாக நடப்பதாலும், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பங்களே இதில் ஈடுபடுவதாலும் இதைக் கட்டுப்படுத்துவது காவல் துறைக்குச் சவாலாக உள்ளது.
ஒப்பந்த காலம் முடிந்த பிறகு, அந்தப் பெண்ணின் “உரிமையாளர்” அவளை வேறொருவருக்கு மீண்டும் வாடகைக்கு விடலாம். எவ்வளவு கேவலம்! ஒரு பெரியார் வடக்கில் பிறந்திருந்து பகுத்தறிவையும் பெண் விடுதலையையும் பெரிதாகப் பேசியிருந்தால் இந்த நிலைமை மாறியிருக்கும் என்பதில் இம்மி அளவும் சந்தேகம் இல்லை.
ஒரு பெண்ணின் உடல் மற்றும் உழைப்பின் மீது அவளுக்கே முழு உரிமை உண்டு என்கிற எண்ணம் சமூகத்தில் வேரூன்றாத வரை, சிவ்புரி முதல் கண்ணபுரம் வரை இந்த சந்தைகள் தொடரும். இந்த சுரண்டல்கள், பணத்தை அடிப்படையாகக் கொண்ட அநாகரிகங்கள் தொடரும். நாகரிகம் அடைந்துவிட்டதாக சொல்லிக்கொள்ளும் இந்த ஆண்டிலும், அதிகாரப்பூர்வ முத்திரைத்தாளில் ஒரு பெண்ணின் வாழ்வை ஏலம் விடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!.
மாடுகளின் சுழியைப் பார்த்து விலை பேசும் சந்தையிலிருந்து, பெண்களின் உடலை ஒப்பந்தத்தில் எழுதும் சமூகத்திற்குள் மனிதன் வந்துவிட்டான். நாகரிகம் வளர்ந்திருக்கலாம்; ஆனால் உயிர்களை பொருளாக அளக்கும் தராசு இன்னும் உடையவில்லை.
வழிமுறைகள் மாறினாலும், ஒரு பெண்ணை உடமையாகப் பார்க்க வந்த ஆணாதிக்க “சுழி” மாறாமல் இருப்பதுதான் இத்தனைக்கும் காரணம். வரும் காலம் இதற்கு ஒரு பதில் சொல்லியே ஆக வேண்டும். ஆனால், அது வரை காத்திருக்க வேண்டுமா ??
யுவராஜ் சம்பத் …… மே 12. 2026 ..
- யானைச் சுமை
- காற்றுவெளி இதழ்
- மாட்டு சந்தையில் விற்கப்படும் மனிதர்கள்….
- கவிதை
- தவம்
- அட!
- மழை புராணம் : 31
- மழை புராணம் – 32 -யோசித்தால் வாழும் மழை
- அழகே உன் விலை இதுதானா?
- வங்காளத்தின் மாற்றம் – எப்படி புரிந்து கொள்வது?