This entry is part 8 of 8 in the series 14 ஜூன் 2026

இராமானுஜம் மேகநாதன்

டெல்லியில் இருக்கும் எல்லா தமிழர்களைப்போலவே நாங்களும் வருடத்திற்கு ஒரு முறையவது ஊருக்கு போவது வழக்கம். ஆனால் இந்தமுறை மூன்று வருடங்களுக்கு பிறகுதான் போகின்றோம். முன்பெல்லாம் மூன்று மாதங்களுக்கு முன்பே இரயிலில் முன் பதிவு செய்து காத்திருந்தது ‘எப்போது ஊருக்கு போவோம்’ என்று ஆசையாய் ஊருக்கு போவோம். இப்போதெல்லாம் பெரும்பாலும் விமானப் பயணம்தான். அலுவகத்தில் விடுமுறை கிடைப்பதென்பது மிகவும் அரிதாகிவிட்டது. துறைத்ததலைவர் என்கிற பொறுப்பு வந்தபிறகு, விடுமுறை எடுப்பதே முடியாத ஒன்றாகிவிட்டது. இருந்தாலும் இந்த முறை எப்படியோ லீவு வாங்கியாகிவிட்டது.

தேவிக்கு மிகவும் மகிழ்ச்சி. எனக்கோ பழைய நினைவுகள்—அந்த ஊர்,வீட்டிற்கு பின்னால் ஓடும் பாண்டவை ஆறு, முன்னால் ஓடும் சிறிய வாய்க்கால், அந்த புளியமரம், கொல்லைப்புறம், தென்னை மற்றும் பாலா மரங்கள், எனது நண்பர்கள், நண்பர்கள் என்றால் பத்து கிராம மக்கள் எல்லோரும்தான், ஓவ்வொன்றாய் எல்லாம் நினைவிற்கு வரத் தொடங்கின. இவற்றையெல்லாம் நான் மறந்ததே இல்லை. என்னதான் படித்த அறிவாளி என்று நினைத்துக்கொண்டாலும் எப்போதும் பழைய நினைவுகளிலேயே மூழ்கிகிடப்பது பாமரத்தனம் என்கிற ஒரு ‘முற்போக்கு’ சிந்தனை என்று நினைத்து கொண்டிருக்கின்ற எண்ணம் இருந்ததாலும், நாஸ்டாலிஜியா என்கிற பழையதை, பழைய நினைவுகளை போற்றுகின்ற மனப்பாங்கு என்னை விட்டுப் போகவில்லை என்றே இந்த 58 வயதிலும் எனக்கு தோன்றுகின்றது.

ஒருவழியாக விடுப்பு அனுமதி வாங்கி ஒருவாரம் விடுமுறையும் கிடைத்தாகிவிட்டது. வழக்கம் போல ஒருவாரத்திற்கு முன்பே துணிமணிகளையெல்லாம் எடுத்து பேக் செய்து, ஊரில் கொடுக்க வேண்டியவர்களுக்கெல்லாம் பலகாரங்கள், புதுத்துணிகள் எடுத்துக் கொண்டு ஊருக்கு புறப்பட்டாகி விட்டது. டெல்லியிலிருந்து கோயம்பத்தூர் அங்கே நாங்கள்  வாங்கியுள்ள புது வீட்டில் ஒரு நாள் இருந்துவிட்டு எனது மச்சான்  குடும்பத்தினரை பார்த்துவிட்டு மறுநாள் இரயில் மூலம் திருச்சி-தஞ்சாவூர்-நீடாமங்கலம் வழியாக எங்கள் ஊருக்கு போகவேண்டும் என்பதுதான் எங்களுடைய பிளான். கோயம்பத்தூரில்  இருந்து சாலை வழியே பஸ்சிலேயோ அல்லது கார் வைத்துக்கொண்டோ போவது என்றால் எனக்கு வாந்தி வரும். முழு பயணமும் பாழாகிவிடும். எனவே கோயம்பத்தூரில் இருந்து ஊர் வரை இரயில் பயணம் என்று முடிவுசெய்து பயணத்தை ஆரம்பித்தோம். மேலும் எனக்கும் தேவிக்கும் தமிழ் நாட்டில் இரயிலில் பயணிப்பது என்றால் அவ்வளவு மகிழ்ச்சி.

கோவிடுற்கு பிறகு ஊருக்கு போவதற்கு உயிருடன் இருக்கின்றோம் என்ற ஒரு சந்தோசம் மனதில் ஓடிக்கொண்ட்டிருக்க விமானம் தரைத்தொடுகின்ற அந்த ‘கிர்க்’ சத்தம் என்னை என் நினைவுகளிலிருந்து எழுப்பியது. ஆஹா! கோவை வந்து விட்டதா என்று நினக்குமுன்னே, சக பயணிகள் பலர் உடனே எழுவதற்கு முயற்சி செய்ய அந்த அழகான ஏர் ஹோஸ்டஸ் பெண் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அன்புடனும் கண்டிப்புடன் ‘இப்போது எழவேண்டாம்’ என்று உள்ளே எரிச்சல் இருந்தாலும் அதனை வெளியே காட்டிக்கொள்ளாமல் வேண்டிக்கொள்ள அதனை ஒருவரும் காதுகொடுத்து கேட்டதாக தெரியவில்லை. ஒரு வழியாக எங்கள் உடமைகளை எல்லாம் எடுத்துக்கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே வந்தோம். 

ஊரைவிட்டு வருட கணக்கில் வெளியே, தில்லிபோன்ற நகரங்களில் வசிப்பவர்களுக்கும்,வெளி நாடுகளில் வேலை செய்பவர்களுக்குத்தான் தெரியும் நம்ம ஊர் வாழ்வில் இருக்கின்ற பல சுகங்கள். முக்கியமாக உணவில் ஆரம்பித்து உறவுகள், திருமணங்கள், திருவிழாக்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நண்பர்கள் என வாழ்வின் முக்கியமான விஷயங்களை நாங்கள் மிஸ் பண்ணுகிறோம் என்று. முக்கியமான உறவுகளின் நண்பர்களின் இறப்புக்களுக்கூட போகமுடியாமல் வருத்தப்பட்ட தருணங்கள் நிறைய உண்டு. கோயம்புத்தூர் விமான  நிலையத்திலிருந்து கோவைப்புதுர் சொல்லும்போது வழியில் உள்ள பல வகையான வாழைப்பழங்கள் என்னை ஈர்த்தன. டெல்லியில் ஒரேவகையான வாழைப்பழம்தான் கிடைக்கும். நம்ம ஊர்   வாழைப்பழங்கள் வேண்டுமென்றால் எங்கேயேயாவது மதராசி ஸ்டோரில்தான் வாங்கவேண்டும். விலையும் அதிகமாக இருக்கும். அதனால் எப்போதாவதுதான் வாங்குவோம்.

கோயம்புத்தூர் கோவைப்புதூரில் புதுவீட்டில் ஒருநாளும் மச்சான் வீட்டில் ஒருநாளும் தங்கிவிட்டு, மறுநாள் எனது ஊரான கண்கொடுத்தவனித்தம் கிராமத்திற்கு ரயிலில் புறப்பட்டோம். தஞ்சாவூர்வரை ஒரு இரயில் பிறகு நீடாமங்கலம் வழியாக திருவாரூர்-நாகப்பட்டினம் செல்லும் அடுத்த விரைவு வண்டியில் பயணித்து நீடாமங்கலம் வந்து இறங்கியாச்சு. இரண்டு பெட்டிகளுடன் இரயில் நிலையத்தைவிட்டு வெளியேவந்தவுடன் “வாங்க சார், வாங்க. இந்த பஸ் திருவாரூர் போகுது. உங்களுக்கு மட்டும்தான் டிக்கெட், மேடத்துக்கு டிக்கெட் கிடையாது, இலவசம்” என்றார் அந்த நடத்துனர்.

“நாங்க கொரடாச்சேரிதான் போகணும்” என்றேன் நான். எனக்குத்தெரியும் திருவாரூர் போகிற டிக்கெட்களைத்தான் பொதுவாக நடத்துனர்கள் எதிர்பார்ப்பார்கள். கொரடாச்சேரி நீடாமங்கலத்திற்கும் திருவாரூருக்கும் நடுவிலிருக்கிறது. இந்த கொரடாச்சேரி டு தஞ்சாவூர் சாலை எனக்கு மிகவும் பரிட்ச்சயமான  ஒன்று. பத்து வருடங்கள் இந்த சாலையும் இரயில் வழியும் எனது கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரில் நான் படித்தபோது எனக்கு ஒவ்வொரு அடியும் பரிட்சயம். அந்த பேருந்தும் சாலையும் எனக்கு அந்த நாட்களை நினைவுறுத்தின.

“பரவாயில்ல சார், வாங்க” நடத்துனர்

பஸ்சில் ஏறி உக்கார்ந்து ஒரு பக்கம் அகன்ற வெண்ணாற்றையும் மறுபுறம் அந்த பசுமையான வயல்வெளியையும் பார்த்துக்கொண்டே இருபது நிமிடங்களில் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் வந்து இறங்கினோம். அப்போது மணி காலை ஆறரை. இங்கிருந்து எங்கள் ஊர் நன்கு கிலோமீட்டர் தூரம் தான்.

எனது அண்ணன் அவரும் அவரது மகளும் வண்டியில் வந்து எங்களை அழைத்துக்கொடு போவதாக சொல்லியிருந்தார். அவருக்கு போன் பண்ணினேன் அவர் “வந்து கொண்டுஇருக்கிறேன்” என்றார். வெட்டாற்று பாலத்தின் அருகில் நானும் தேவியும் காத்திருந்தோம். அந்த பாலத்தை கடந்தால் நான் படித்த அரசினர் மேல்நிலைப்பள்ளி. “இதுதான் நான் பிளஸ் டூ படித்த பள்ளிக்கூடம்” என்று பெருமையாக எனது மனைவியிடம் சொன்னேன். அவளும் எனக்காகவாது ஒரு சந்தோசத்துடன் “அப்படியா’ என்று பார்த்தாள்.  சில நிமிடங்களுக்கு பிறகு, “வா டீ குடிக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அந்த  சாலையை கடந்து கொரடாச்சேரி ஊருக்குள் செல்லும் சாலை நோக்கி சில அடிகள் நடந்து ஒரு டீ கடையில் “இரண்டு டீ, ஒன்னு  சர்க்கரை இல்லாம கொடுங்க” என்று கேட்டேன். டீ கடைக்காரரும், “சரிங்க சார்” என்றவாறே டீ போடத் தொடங்கினார். அப்போது ஒருவர், நடுத்தர வயதிருக்கும் சாலையின் மறுப்பக்கத்திலிருந்து வந்தார்.  கைலியும் பனியனும் அணிந்திருந்தார். வந்து நின்று எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் சற்றே அவரை பார்த்துவிட்டு பிறகு டீ போடுபவரை பார்த்தேன். அவர் எங்களை வைத்த கண் எடுக்காமல் பார்த்துகொண்டிருந்தார் . டீ வந்தது ஒரு சிப் குடித்தேன் . “நீங்க எந்த  ஆளுங்க?” என்று கேட்டார் அந்த நபர். எனக்கு புரியவில்லை அவர் யாரை கேட்கின்றார் என்று.  ஒரு வழியாக எங்களைத்தான் கேட்கின்றார் என்று புரிந்தது. அங்கே வேற  யாரும் இல்லை. மணி காலை 6 45  தான் ஆகியிருந்தது. அதிக நபர்கள் நடமாட்டம் இல்லை.

“எங்களையா கேட்கிறீங்க?” என்றேன் நான்.

ஆமாம் என்பதாக தலையை ஆட்டினார்.

“இத எதுக்கு கேட்கிறிங்க?” நான்.

அவர் மீண்டும் கேட்டார் “நீங்க எந்த  ஆளுங்க, சொல்லுங்க?” எனக்கு சற்றே கோபமும் எரிச்சலும் வந்தது. வெளிகாட்டிக் கொள்ளாமல் “இத ஏன் கேட்கிறீங்க? இது தேவையா? எனக்கு உங்களை யாருன்னு தெரியாது. உங்களுக்கும் என்ன யாருன்னு தெரியாது. இது இப்போ தேவையா?” என்றேன்.  அவர் விடுவதாக தெரிய வில்லை. டீ கடைக்காரர் கடுப்பானார், “என்னையா உனக்கு வேறு வேலை இல்ல, காலையிலேயே ஆரம்பிச்சிட்ட போலிருக்கு” என்று கடிந்து கொண்டே, “நீங்க ஒன்னும் நினைச்சிக்காதிங்க சார், அவன் ஒரு மாதிரி” என்று என்னிடம் சொன்னார்.

தேவிக்கு நான் கோப ப்பட்டுவிடுவேனோ என்ற பயம்.

ஆனாலும் அவர் என்னை விடுவதாக இல்லை. மறுபடியும்  அதையேக் கேட்டார்.

“நீங்க எந்த  ஆளுங்க?”

அதற்கு நான், “இது மாதிரியெல்லம் புதுசா பார்க்கிறவர்கள்கிட்ட கேட்கலாமா? தப்பில்லையா?” என்றேன். பிறகு நான், “எனக்கு கண்கொடுத்தவனிதம்தான் இந்த பள்ளிக்கூடத்திலதான் பிளஸ் டூ படித்தேன். உங்கள்  எம்.எல்.ஏ. என்னோட சீனியர். நான் இன்னார்களின் தம்பி.” என்றேன். எனது சகோதர்களை இங்கு  ஏறத்தாழ எல்லோருக்கும் தெரியும். அதற்கு அவர் எந்த விதமான சலனமும் இன்றி மறுபடியும் கேட்டார், “எந்த ஆளுங்க  நீங்க?” என்றார். எனக்கு எரிச்சல் வந்தது. எனது சட்டை பையிலிருந்து ஒரு இருபது ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தேன், வாங்கிக்கொண்டார். எனக்கு அதற்கு மேல் கொடுக்கவேண்டாம் என்று தோன்றியது. அத்தோடு போய்விடுவார் என்று நினைத்தேன். இல்லை மீண்டும் அதனையே கேட்டார். நான் இந்த முறை, “இது தேவையா? டீ குடிக்கிறீங்களா?” என்றேன்.  டீ கடைக்கார்ருக்கும் கோபம். “போயா, போய் வேலையைப் பாரய்யா” என்றார். அவர் போவதாக தெரியவில்லை. மீண்டும் என்னை பார்த்து, “நீங்க பேசறதை பார்த்தா நம்ம ஆளுங்க போலதான் இருக்கு” என்றார். எனக்கு இந்த முறை உண்மையிலேயே  கோபம் வந்தது. அதற்குள் அண்ணன் வந்து விட்டார். டீ கடைக்கார்ருக்கு  காசை கொடுத்துவிட்டு பெட்டிகளை எடுத்துக்கொண்டு வண்டியில் ஏறி அந்த வெண்ணவாசல் வழியாக எங்கள் ஊருக்கு செல்லும் சாலையில் புறப்பட்டோம் .

எனக்கு பழைய நினைவுகள் மீண்டும் வரத்தொடங்கின. வெண்ணவாசலில் உள்ள அந்த வெண்ணாற்று ஷட்டர், அங்கே பிரியும் இரண்டு ஆறுகள். ஓன்று எங்கள் ஊர் வழியாக பாயும் பாண்டவையாறு அடுத்தது சற்று வடக்கு பக்கத்தில் அத்திக்கடை வழியாக பாயும் வெள்ளாறு. பாண்டாவை ஆறு எனது உணர்விலும் உள்ளத்திலும் கலந்த ஓன்று. பதினோறாம் வகுப்பு முதல் எம் பில் வரை இந்த சாலையில்தான் பழைய சைக்கிளில் காலையும் மாலையும் பயணித்த நினைவுகள். அப்போதெல்லாம் கப்பி போட்ட செம்மண் சாலை. சைக்கிளில் போவதுகூட சற்றே சிரமமாக இருக்கும். இப்போது நல்ல தார் சாலை. வேகமாக வண்டியை ஓட்டினார் அண்ணன். அந்த சாலையில் அடுத்து வந்தது அந்த இரட்டை சமாதி, இரட்டை மாரியம்மன் என்றும் சொல்வார்கள். நான் இன்றும் மறக்க வில்லை இந்த இடத்தை கடப்பதற்கு நான் மிகவும் பயப்படுவேன். ஒரு முதிய தம்பதிகள் பெரியம்மை வந்து ஒரே நாளில் இறந்து போனார்களாம். அதற்கு ஒரு கோவில் கட்டி மக்கள் வழிபட ஆரம்பித்துவிட்டனர். இது கடந்த 1970களிருந்து நடந்து வருகிறது. எனக்கு இந்த இடம் வந்தால் ஒரு விதமான பயம் பள்ளி படிக்கும்போதும் பிறகு கல்லுரிக் காலங்களிலும் கூட. பிறகு நாலில்ஓன்று, முசிரியம் என்ற கிராமங்கள் வரும், பல மாற்றங்கள் தெரிந்தாலும் அந்த கிராமங்கள் அதனுடைய பசுமையையும் உணர்வுகளையும் மாற்றிவிட வில்லை என்றே எனக்கு தோன்றியது. அதற்கு பிறகு விடயபுரம் என்ற ஊர் அங்கே ஒரு பெரிய கல்வெட்டு இருக்கிறது, பழைய கல்வெட்டு  இல்லை 1990களில் வைக்கப்பட்டது. பெரியார் ஈ.வே.ரா. இங்குதான் தனது சுயமரியாதைப் பிரச்சாரத்தை 1940களில் தொடங்கினாராம் அதன் நினைவாக இந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. எனக்கு சிரிப்பாகவும் சற்றே கவலையாகவும் இருந்தது. ஏனென்றால், அரைமணி நேரத்திற்கு முன்பு தான் ஒருவர் நான் ‘என்ன சாதி, நீங்க எந்த  ஆளுங்க?’ என்று கேட்டார். அதுவும் முன்பின் தெரியாத ஒருவரை பார்த்து. இங்கே பெரியாரின் பகுத்தறிவு சாதி மறுப்பு பிரச்சார கல்வெட்டு.

அந்த ஊரை கடந்து தக்களூர் வழியாக அண்ணன்  வீடு வந்து சேர்ந்தோம். அண்ணி 'வாங்க வாங்க' என்று வரவேற்றார். டிவியில் செய்தி போய்க்கொண்டிருந்தது "அந்த டிவிய நிறுத்துங்க" என்று அண்ணி சொன்னார். அதற்குள் அவர்கள் பேரன் ரிமோட்டை எடுத்து, "கார்ட்டுன் பொடுறேன்" என்றான். டிவி செய்தி என் கவனத்தை ஈர்த்தது. கார்ட்டூனுக்கு மாற்றப்போன பேரனை, "இரு இந்த ஒரு நியூஸை மட்டும் பார்த்துட்டு  பிறகு மாற்றலாம்" என்றேன். அந்த செய்தி, 'நேற்று தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராம ஆரம்பபள்ளியில் அரசு அலுவலர் ஒருவர் தனது குழந்தைக்கு சேர்க்கையில் சாதி பெயரை கொடுக்கமாட்டேன் என்று உறுதியாக மறுத்துவிட்டார்.' "பள்ளியில் சேர்க்கப்படும் அனைத்து குழந்தைகளின் சாதிப்பெயரை அவர்களின் மற்ற விவரங்களையும் பதிவுசெய்வது  பொதுவான வழக்கம். ஆனால் இந்த அரசு அலுவலர் சாதிப்பெயரை பதிவு செய்ய வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டார்" இவ்வாறு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் தெரிவித்தார். அதோடு ரிமோட்டை பேரனிடம் கொடுத்துவிட்டேன். அவனுக்கோ 'என்ன இவ்வளவு சீக்கிரம் கொடுத்துவிட்டராரே ' என்ற ஆச்சரியம். எனக்கோ அங்கே ஒருத்தன் இராயிரம் கிலோமீட்டர் தூரத்திலிருந்து வருகின்ற என்னை, யாரென்றே தெரியாத என்னை பார்த்து, 'நீங்க எந்த ஆளுங்க?' என்று கேட்கிறான். அதே மாவட்டத்தில் சில மைல்கள் தூரத்தில் ஒருவர் சாதி சாதிப்பெயரை பதிவு செய்ய மறுக்கிறார். 

வீட்டிற்கு வெளியே வந்தேன் அந்த புளிய மரம் சற்றே வலுவிழந்து கிளைகள் முறிந்துபோன அடையாளங்களோடு நின்றுகொண்டிருந்தது. எனக்கு தெரியும் அந்த மரத்திற்கு 100 ஆண்டுக்கு மேல் வயதிருக்கும். சில நிமிடங்கள் கடந்தன. மீண்டும் அந்த ‘நீங்க எந்த ஆளுங்க’ ஞாபகத்திற்கு வந்தது, உடனே அந்த சாதி மறுத்த அரசு அலுவலரின் ஞாபகமும் வந்தது. என்ன சொல்ல, ‘சாதிகள் இல்லையடி பாப்பாவா?” இல்லை ‘சாதிகள் உள்ளதடி பாப்பாவா’ இல்லை ‘சாதிகள் இருந்தாலும் சாதிகள் இல்லையடி பாப்பாவா?’

“தம்பி எங்க? குளிச்சிட்டு  வாங்க சாப்பிடலாம்” என்றார் அண்ணன். 
********

Series Navigationகாலாதீதம்