உண்மைச் சம்பவம். மகளுக்காக ஓடிய 47வயது ரமாபாய் ரான்வீர்
மகாராஷ்ட்ரா, இந்தியா செப் 2026
மகளின்
கல்விக்காக ஓடிய
தாயின் கதை
பள்ளிக்கனுப்ப
காசில்லை
விளக்கிருக்கு…
திரிக்கோ
பொறிக்கோ
எண்ணெய்க்கோ
காசில்லை
ஊறாத கேணி
உடைந்த வாளி
இத்த கயிறு
தாகம் தணிவதெப்படி?
விளம்பரம் ஒன்று
விதைத்தது நம்பிக்கை
மூவாயிரம் மீட்டர்
ஓடினால்
மூவாயிரம் பரிசாம்
செருப்பில்லை
சேலைக்கு வேறு
மாற்றில்லை
ஆனாலும் ஓடுகிறாள்
பாதம் பிய்ந்து
சாலையெலாம்
ரத்தவிதை
சேலை பிழிந்ததில்
வழிந்தது வியர்வையா
இல்லை உயிரா?
கிடைத்தது
முதல் பரிசு
பள்ளி செல்கிறாள் மகள்
சீருடை மகளே
உன் காலடியில்
செருப்பாய்த்
தேய்கிறாள்
உன் தாய்
மறக்காதிரு
நாளை
மலைகளும்
வசப்படும்
அமீதாம்மாள்