This entry is part 8 of 15 in the series 22 நவம்பர் 2026

ராஜேஷ் சிவன் செல்லப்பா

“அந்த சிவப்பு கலரு பலூனுதான் வேணும் எனக்கு, குடு சித்தப்பா!”

மகிழ்ச்சியில் குதித்தான் அண்ணனின் மகன் அர்ச்சுனன்.

“டேய் அச்சு, ‘நீ’ன்னு சொல்லக்கூடாதுன்னு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேண்டா? ‘நீங்க’ன்னுதான் சொல்லணும். மா…”

மழலைக் குரலுக்கு, உலகத்தோடு பேசுவதற்கான மரியாதை இலக்கணத்தைக் கற்பித்தாள் அண்ணி.

அடுப்பங்கரையிலிருந்து விசாலமான மைய அறைக்குள் நுழைந்தாள். ஒரு தட்டில் நான்கு குவளைகளில் தேநீரை இரு கைகளில் பிடித்துக்கொண்டு, வரும் வழியில் மூன்று சக்கர மிதிவண்டியையும், அவனுடைய பொம்மைகளையும் காலாலேயே ஒதுக்கிவிட்டு வந்துகொண்டிருந்தாள்.

அண்ணன் மட்டும் அச்சுவுடன் விடுமுறைகளில் எங்கள் வீட்டுக்கு தவறாமல் வந்துவிடுவான்.

நாங்கள் இங்கு வருவது குறைவுதான்.

எங்கள் வீட்டில் அண்ணி இருந்த ஒரு வருடத்தில், அவளுடைய வசதிக்காகத் தொலைக்காட்சியும், குளிர்சாதனப் பெட்டியும் வந்தன. எங்கள் தேவைக்காக அவற்றை எங்கள் வீட்டிலேயே விட்டுச் சென்றாள்.

“டேய் அச்சு, இங்க வா. இதெல்லாத்தையும் கொஞ்சம் ஓரமா வச்சிட்டு வெளையாடு. நீ..”

இடது கையில் தட்டை கவனமாகப் பிடித்துக்கொண்டு, வலது கையால் ஒரு குவளையின் விளிம்பைப் பிடித்துக்கொண்டாள். விளையாட்டுப் பொம்மைகளை குனிந்து சேகரித்துக்கொண்டிருந்த என் அம்மாவிடம் அதை மரியாதையுடன் நீட்டினாள்.

“அத்த, டீ.”

குவளையை நீட்டியபோது, அவளுடைய நான்கு தங்க வளையல்கள் ஒன்றோடொன்று மோதின. அந்த மோதலில் ஆர்ப்பாட்டமில்லாத தங்கத்தின் ஒலி எழுந்தது. அதே சமயம் ஒளியும் மின்னியது.

“சூடு போதுங்களாத்த? சக்கரை எதுவும் வேணுங்களா?”

அம்மா புன்னகைத்தாள். தேநீர்க் குவளையின் வாய்ப்பகுதியை இரண்டு கைகளாலும் கவனமாகப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்தாள்.

தேநீரிலிருந்து வெள்ளை ஆவி நெளிந்தபடி குவளையிலிருந்து எழும்பிக்கொண்டிருந்ததை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.

எந்த ஒலியையும் எழுப்பாத வகையில் இரண்டு கைகளிலும், கைக்கு ஒன்றாகக் கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள். அவை அம்மாவின் கண்களைப்போல ஒளியை மௌனமாகச் சிதறிக்கொண்டிருந்தன.

சோபாவில் அலைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான் அண்ணன்.

மூன்றாவதாகத்தான் தேநீர் எனக்கு வந்து சேர்ந்தது. அடுத்ததாக அண்ணி யாரையோ தேடினாள்.

“அண்ணி, அத எங்கிட்டே குடுங்க. இப்படி. அப்பா பின்னாடிதான் செடிக்கு தண்ணீர் ஊத்திக்கிட்டு இருப்பார்ன்னு நெனைக்கிறேன். நான் போயி குடுத்துட்டு வர்றேன்.”

காற்று ஊதப்படாத பலூன்களையும் அலங்காரக் காகிதங்களையும் அருகில் இருந்த சாப்பாட்டு மேசையில் வைத்துவிட்டு, தட்டோடு தேநீர்க் குவளையை வாங்கிக்கொண்டேன். அறையிலிருந்த கண்ணாடி மீன் தொட்டியைக் கடந்து, முதுகைத் திருப்பினேன்.

மைய அறையை நோட்டமிட்டேன். ஜொலிக்கும் அலங்காரக் காகிதங்கள் ஆங்காங்கே மின்னின. நான்கு என்ற எண் போன்ற பெரிய பலூன் ஒன்று மேல்தளத்தை முட்டிவிட்டு, பின்பு கீழே இறங்கி மீண்டும் முட்டிக்கொண்டேயிருந்தது.

“அலங்காரம் நல்லா இருக்குங்க, தம்பி.”

அண்ணியின் கண்கள் விரிந்திருந்தன.

அவள் என்னை எப்போதும் “தம்பி” என்றுதான் அழைப்பாள்.

“என்னங்க, கேக்கு எப்போ வரும்?” அண்ணனின் பக்கத்தில் சோபாவில் சென்று, கொஞ்சம் சிரமப்பட்டு ரெட்டணைக்கால் போட்டு அமர்ந்துகொண்டாள்.

அவளின் பட்டுப் புடவையின் ஜரிகை, ஜன்னல் வழியாக வந்த மாலை வெயிலில் என் கண்களைச் சுருங்கச்செய்தது.

மகிழுந்து வந்து நிற்கும் ஓசை கேட்டது. எழுந்து வாசலை நோக்கிப் பரபரப்பாகச் சென்றாள். அவளின் புன்னகை சிரிப்பாக மாறி காதில் விழுந்தது. அலைபேசியை அணைத்துவிட்டு, மெதுவாக அவளைப் பின் தொடர்ந்தான் அண்ணன்.

நான் தேநீருடன் தோட்டத்தை நோக்கிச் சென்றேன். அம்மா இரு கன்னங்களையும் உப்பவைத்துக்கொண்டு, அதில் அச்சுவின் இரு பிஞ்சுக் கைகளையும் பிடித்து கன்கனத்தில் குத்துவது போல ஏதோ செய்துகொண்டிருந்தாள். அடுத்த நொடி, “புர்ர்ர்” என்று அவள் குரல் கேட்டது.

கொல்லைப்புறத்தில் தண்ணீர் விடும் குழாய், அப்பாவின் காலடியில் வளைந்து நெளிந்து சுருண்டு கிடந்தது.

அதில் இருந்த சிறிய துவாரத்தில் வந்த தண்ணீர்ச் சாரலில் ஒரு வானவில் வளைவு அழகாகத் தெரிந்தது.

அண்ணனின் திருமணத்தில் உடுத்திய அதே பட்டுவேட்டிதான். அது இப்போது அப்பாவுக்குப் பொருத்தமில்லாமல் தெரிந்தது.

“டேய் சின்னவனே, வேட்டில கரை பெருசா இருந்தாதான் நல்லா இருக்கு இல்லடா?”

தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும்போது வேட்டியில் தெறித்திருந்த சில நீர்த்துளிகளை ஒரு கையால் உதறிவிட்டு, மறு கையில் தேநீர்க் கோப்பையை வாங்கிக்கொண்டார் அப்பா.

உடுத்தியிருந்த மேல் சட்டைகூட கொஞ்சம் பெரிதாகத்தான் மாறிப்போயிருந்தது.

“அப்பா, சுகர் மாத்தர போட்டுக்கிட்டீங்களா?”

அவரின் உதடுகள் விரிந்து, கன்னங்கள் அகலமாகின.

மூக்குக் கண்ணாடியின் உடைந்த சட்டத்தைத் திருத்திப் பயன்படுத்திக்கொண்டிருந்தார். என் பார்வை, அவர் ஒட்டிச் சரிசெய்திருந்த பகுதியின் மீதே நீண்ட நேரம் தங்கியது.

நீரிழிவு மாத்திரையை வாயில் போட்டுக்கொண்டார். தொண்டைக் குழி கீழிறங்கி மேல் ஏறியது. மெதுவாகத் தேநீரை ருசிக்கத் தொடங்கினார்.

அடுப்பங்கரையில் ஒத்தாசை வேலைகளை முடித்துவிட்டு, முழங்கை அளவுக்குக் கண்ணாடி வளையல்கள் ஒலி எழுப்ப, மேல்மூச்சும் கீழ்மூச்சுமாக இறைந்து மெதுவாக நடந்துவந்தாள் கயல்விழி.

“மாமா. அக்காவோட அம்மாவும் அப்பாவும் வந்துருக்காங்க, வாங்க,” என்னிடம் சொன்னாள்.

அண்ணியை எப்போதும் “அக்கா” என்றுதான் அழைப்பாள். அண்ணி மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.

கயல்விழியின் அப்பா இறந்தவுடன், படிப்பை நிறுத்திவிட்டிருந்தாள். அவள் மேலும் படித்திருந்தால், என் வாழ்க்கையில் வந்திருக்க மாட்டாளோ என்று தோன்றியது.

நெற்றியில் வியர்வைத் துளிகள் காதோரம் வழிந்திருந்தன. அதில் அவளின் கன்னத்தில் முடிகள் கேள்விக்குறிபோல் ஒட்டிக்கிடந்தன.

ஏதோ நினைவில் தேநீரில் மூழ்கியிருந்த அப்பா, அவள் வந்ததைக் கவனித்தவுடன்,

“பார்த்து நடக்கணும்மா. கிரானைட் தரை, நம்ம தரை மாதிரி இல்லை. நீ டீ குடிச்சியா?” பரிவோடு கேட்டார்.

“குடிச்சிட்டேன்ப்பா.”

அப்பாவை என் மனைவியும் அப்படித்தான் அழைப்பாள்.

கைகளில் காலி தேநீர்க் குவளைகளுடன் மீண்டும் மைய அறைக்குத் திரும்பி நடந்தாள். அவளின் நடையோசை ஒரு கிளுகிளுப்பை நினைவூட்டியது.

காற்றில் பலூன் மாதிரி சில மணி நேரங்கள் லேசாகப் பறந்தன.

“ஆ… காட்டு,ம்மா… ஆ…ம்மா… இந்தா… ஹா… ஹா…”

“இங்க பாருங்க… இங்கே… ஹே அச்சு!”

“க்ளிக்!”

புகைப்படக் கருவியின் திரையைப் பார்த்தேன். அண்ணனுக்கும் அண்ணிக்கும் நடுவில் அச்சு நின்றிருந்தான். உதடுகளில் ஒட்டிய இனிப்பைத் துடைத்துக்கொண்டிருந்தான். அண்ணியின் பக்கத்தில் அவளுடைய அம்மாவும் அப்பாவும் நின்றிருந்தார்கள். என் அம்மாவும் அப்பாவும் அண்ணனின் பக்கத்தில் நின்றிருந்தார்கள். அதில் பெரும்பான்மையான பகுதியை அண்ணியின் குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்தார்கள். அண்ணியின் அம்மாதான் அனைவரையும் விட ஒளிர்ந்தாள்.

திரையிலிருந்து கண்களை விலக்கினேன். என் அம்மாவைப் பார்த்தேன்.

என் மேல், கீழ்ப் பல் வரிசைகள் ஒன்றோடொன்று அழுத்தம் கொடுத்து நின்றன. கன்னம் சற்று வீங்கி, பின்பு சுருங்கியது. தொண்டையில் ஏதோ அடைத்தது.

அச்சுவின் பிறந்த நாளுக்காக உண்டியலில் பணம் சேர்த்து வைத்திருந்தாள். “பேரனுக்காக” என்று அன்றாடச் செலவுகளில் மிஞ்சும் சில்லறைகளைச் சேமித்திருந்தாள். சில சமயங்களில், அவளுக்காக வேண்டுமென்றே நடத்துநரிடம் சில்லறை வாங்கிக்கொண்டு வந்து அவளிடம் கொடுத்திருந்தேன்.

இன்று அச்சுவுக்குப் புதிய உடைகளை வாங்கியிருந்தாள்.

அண்ணி அச்சுவுக்கு அந்தப் புதிய உடைகளை உடனே அணிவித்திருந்தாள். அந்த நொடி அம்மாவின் முகம் சிவந்திருந்தது.

அண்ணன், அம்மாவின் உடையின் நிறத் தேர்வைப் பற்றி அன்போடு கேலி பேசிக்கொண்டிருந்தான். அம்மா கோபப்படவில்லை. சிரித்தாள். ஏதோ நினைத்தாள். மீண்டும் சிரித்தாள்.

அண்ணனின் மாமியார், அச்சுவுக்கு மீண்டும் உடைகளை மாற்றி, சிவப்பு நிறப் பட்டுச் சட்டையை அணிவித்திருந்தாள்.

இடது கை நடுவிரலில் இருந்த வளையம் அச்சுவின் சதையை அழுத்திக்கொண்டிருந்தது. அதில் ‘அ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்டிருந்தது.

சுருண்ட முடியை வாரிவிட்டிருந்தாலும், சிறிது நேரத்திலேயே அது மீண்டும் நெற்றியில் சுருண்டு விழுந்தது. அந்த இயல்பே அவனுக்கு ஒரு தனி அழகைக் கொடுத்தது.

கழுத்தில் தங்கச் சங்கிலி, அவன் உயரத்துக்குப் பொருந்தாமல் மிகவும் நீளமாகத் தொங்கியது.

“தாத்தா… தாத்தா…” என்று மழலை மொழியில் அழைத்தபடி, புகைப்படத்தின் இடதுபுறம் நின்றிருந்த என் அப்பாவை நோக்கி ஏதோ சைகை செய்தான்.

உடனே அப்பா நடுவில் சென்றார். அவரின் முழங்கைக்குக் கீழே எடை கூடியது. புடைத்த நரம்புகள் கைகளின் சுருங்கிய தோல் பரப்பில் நன்றாகத் தெரிந்தன. பாதங்களை அழுத்தமாகப் பதித்து நின்றார். அச்சு அவரின் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

அந்தக் கணத்தைப் புகைப்படமாகப் பதிவு செய்தேன். அண்ணன் கைகளை உயர்த்தி அச்சுவின் கன்னத்தை செல்லமாகக் கிள்ளினான்.

அடுத்த புகைப்படத்திற்காக, “எல்லாரும் சிரிங்க… ரெடி!” என்றேன்.

அப்பாவின் மூக்குக் கண்ணாடியிலும், அண்ணனின் மாமனார், மாமியார் மூக்குக் கண்ணாடிகளிலும் அறையிலிருந்த வண்ண விளக்குகள் பிரதிபலித்தன. அவை விட்டு விட்டு மின்னிக்கொண்டிருந்தன. இடையிடையே பலூன்கள் மேலே எழும்பிப் பறப்பதும் பதிவானது.

கயல்விழி பக்கத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி, அவளின் தோள்களைச் சற்று தளர்வாக்கிக்கொண்டிருந்தது. சற்று நேரம் அமர்ந்துவிட்டு அடுப்படியை நோக்கி நடந்தாள்.

திடீரென்று என் பார்வை அச்சுவின் காலில் நின்றது.

அச்சுவின் காலில் அணிந்திருந்த ஒரு தங்கக் கொலுசு காணவில்லை.

“இம்ம்… ஒரு கொலுசு காணோம்…”

அறையின் அமைதியை கேள்விக்குறியாக்கினாள் அண்ணி.

பாடிக்கொண்டிருந்த தொலைக்காட்சியை அண்ணனின் மாமனார் சென்று அணைத்தார். தொடர்ச்சியாக ஒலித்துக்கொண்டிருந்த பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் நின்றுபோனது. சட்டென்று அனைத்தும் அமைதியானது.

அண்ணி, அண்ணனைக் கண் சிமிட்டாமல் பார்த்தாள். அவனோ, அவளின் கண்களிலிருந்து பார்வையை விலக்கி, அணைத்து வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியின் திரையைப் பார்த்தான்.

அண்ணனின் முகம் மௌனமானது. இரு புருவங்களும் சுருங்கின. அந்த மாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. முகத்தில் சட்டென்று வியர்வை உதித்தது. மேசையில் இருந்த தண்ணீர் இல்லாத குவளையை அண்ணார்ந்து வாயில் ஊற்றிப் பார்த்தான்.

கழுத்தை இறுகப் பற்றியிருந்த அச்சுவின் கைகளை மெதுவாகப் பிரித்தார் அப்பா. சிரமப்பட்டுக் குனிந்தார். அவனைக் கீழே இறக்கினார். முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க முயன்றார். மூக்குக் கண்ணாடி நழுவி மூக்கு நுனியில் நின்றது. எல்லோரும் அவரைப் பார்ப்பதுபோல் ஒருவிதக் கூச்சம் அவரின் பார்வையில் தெரிந்தது.

மாமனார் அமைதியாக அலைப்பேசியை எடுத்துப் பார்த்தார். யாராவது அழைத்திருக்கிறார்களா என்பதுபோல் வெறுமனே அதன் திரையை உயிரூட்டிப் பார்த்துவிட்டு, அமைதியாக அறையில் இருந்த சோபாவில் அமர்ந்துகொண்டார்.

எதிர்ச் சுவரிலிருந்த கடிகாரத்தின் “டக்… டக்…” என்ற ஓசை மட்டும் தெளிவாகக் காதில் கேட்டுக்கொண்டிருந்தது. மாத நாள்காட்டி ஒன்று ஜன்னல் காற்றில் படபடத்ததும் தெளிவாகக் கேட்டது.

அண்ணன் தனிக்குடித்தனம் போவதற்கு முன்பு, இதே மாதிரியான அமைதியை எங்கள் வீட்டில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

“இங்கதா… எங்கையாவது… விழுந்திருக்கும்க்கா… தேடினாக்கா கெடைச்சிரும்…”

வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு சொல்லிவிட்டு, அடுப்பங்கரையின் நிலைப்படியில் தன் பாரத்தைச் சாய்த்துக்கொண்டு நின்றாள். ஒரு கை, அவளுடைய பெருத்த வயிற்றைத் தாங்கிக்கொண்டிருப்பது போல் இருந்தது.

“உஷ்…” என்று பெருமூச்சு விட்டாள். சேலைத் தலைப்பால் கழுத்திலும் நெற்றியிலும் வழிந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டிருந்தாள்.

“என்னாச்சு, கயலு? இப்படி வந்து உட்காரு. வா…”

அவளைக் காய் தாங்கலாகத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, நாற்காலி அருகே அழைத்து வந்தேன்.

என் பதற்றத்தின் வெளிப்பாடாக, மறு கையில் இருந்த புகைப்படக் கருவியின் வெளிச்சம் ஒரு வினாடி பரவி, மீண்டும் அணைந்தது.

“இச்…”

ஒலி வந்த திசையை நோக்கிப் பார்த்தேன்.

அங்கே, மாமியாரின் கண்கள் சிரிக்கவில்லை. அவளின் உதடுகள் ஏதோ சொல்லித் துடித்துக்கொண்டிருந்தன.

அந்த நேரத்தில், அம்மா விரைந்து வீட்டு முற்றத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தாள். முன் வாசல் கதவு பாதி திறக்கப்பட்டு, பாதி மூடியே கிடந்தது.

திடீரென்று உதயமானது போல இரண்டு மின் விளக்குகளின் வெளிச்சம் திறந்திருந்த வாசல் வழியாகவும், சமையலறை ஜன்னல் வழியாகவும் உள்ளே வந்துகொண்டிருந்தது. அது வீட்டின் உள்ளே இருந்த அலங்கார மின் விளக்குகளின் பிரகாசத்தைக் குறைத்துவிட்டது.

“இங்க எங்கையாவது வெளையாடும்போது வுழுந்திருக்குமோ?”

முற்றத்துக்குள் நின்ற அம்மாவின் பேச்சை என்னால் கேட்க முடிந்தது.

உள்ளங்கை வியர்வையால் நனைந்திருந்தது. என் கால்சட்டையில் துடைத்துக்கொண்டேன். முழுவதுமாக ஈரம் போகவில்லை.

“இங்க உட்காரு.”

என் விழி அசைவை கயல்விழி புரிந்துகொண்டாள். இருந்தாலும், முழுவதுமாக அவளால் நாற்காலியில் சாய்ந்து அமர முடியாமல் தவித்தாள்.

புகைப்படக் கருவியை அணைத்து அவளிடம் கொடுத்தேன்.

முதுகுக்குப் பின்னால் மாமியாரும் அண்ணியும் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். காதில் எதுவும் தெளிவாக விழவில்லை.

அம்மா, முற்றத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி வளர்ந்திருந்த செம்பருத்திச் செடியின் அடியிலும், முல்லைக்கொடிகளின் இடையிலும் கையை விட்டுத் துலாவிக்கொண்டிருந்தாள். அவளருகில் ஒரு நத்தை அமைதியாக ஊர்ந்துகொண்டிருந்தது.

தரையில் மண்டியிட்டு தேடிக்கொண்டிருந்தாள். உடலைச் சமநிலைப்படுத்த ஒரு கையை தரையில் அழுத்தமாக ஊன்றியிருந்தாள்.

வாசல் முகைப்பில் இருந்து வந்த பிரகாசமான வெளிச்சம், அவளுடைய நெற்றியில் வழிந்த வியர்வைத் துளிகளைத் தங்கம்போல் ஒளிரச் செய்தது. கையில் லேசான நடுக்கம் தெரிந்தது. பக்கத்தில் இருந்த புங்கை மரத்தின் காற்று அம்மாவின் நரைத்த முடியைக் கலைத்துக்கொண்டிருந்தது.

“யம்மா… வாம்மா… ஏதாவது பூச்சி, பொட்டு கிடக்கப்போவுதும்மா. இங்க வா நீ…!”

என் குரல் திடுக்கிட்ட கோபமாக வெளியேறியது.

“இல்லடா, இங்கனதான் தம்பி அச்சு வெளையாடிட்டு இருந்தாந். அதான் தேடிட்டு இருக்கே.”

அவள் மூக்கை ஓரிருமுறை உறிஞ்சியது காதில் கேட்டது.

வீட்டுக்குள்ளிருந்து ஒருவரும் வெளியே வரவில்லை.

அண்ணனின் குரல் மட்டும் வெளியே கேட்டது. உள்ளே யாரிடமோ சொன்னான்.

“தொலைஞ்சிருந்தா வுடு… நா… வேணா வேற வாங்கித்தந்துடுறேன்…”

மேற்கொண்டு வார்த்தைகள் முழுமையாகக் காதில் விழவில்லை.

எதுவும் பேசாமல், வீட்டு முற்றத்தில் ஒரு கோணத்தில் குனிந்தபடி, எல்லாத் திசைகளிலும் கண்களால் துழாவினேன். அம்மாவின் காலடியில் சில கரப்பான் பூச்சிகள் புதரிலிருந்து வெளியே வந்து திசையை மாற்றி மாற்றி ஓடி மறைந்தன.

“பெரியவனே… இந்தத் தோட்டத்து லைட்டை எப்படிப்பா போடணும்? கொஞ்சம் வாயேன்ப்பா…”

அப்பாவின் குரல் உடைந்திருந்தது. கயல்விழி நாற்காலியிலிருந்து கஷ்டப்பட்டு எழுந்தாள். புகைப்படக் கருவியை அவள் அமர்ந்திருந்த நாற்காலியிலேயே வைத்துவிட்டாள். அவளுடைய கொலுசின் ஒலி தூரமாகச் சென்று மறைந்தது.

மீண்டும் உள்ளே சென்றேன்.

அம்மா இன்னும் தேடிக்கொண்டே இருந்தாள்.

“ஏம்மா, டிரஸ் மாத்தும்போது எங்கயாவது விழுந்திருக்கலாமில்ல?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டான் அண்ணன்.

“இம்… எங்கம்மா வுள்ளேதான் மாத்தினாங்க. நீங்க வேணா போயி பாருங்க.”

தடாலடியாக பதிலை அண்ணன் எதிர்பார்த்திருக்க மாட்டான்.

நானும்தான்.

பதிலில் ஒரு அழுத்தமும், ஒரு தீர்மானமும் இருந்ததை மட்டும் உணர்ந்தேன்.

“உள்ள போயி, ஒண்ணு நா மாத்தலடியம்மா. ஹால்லேதானே மாத்திவுட்டேன். அப்போல்லாம் இருந்துச்சேடி. நா… பாத்தேனே,” என்று சொல்லிவிட்டு, அண்ணனின் மாமியார் தொலைக்காட்சிக்கு முன்னால் இருந்த அலமாரியிலிருந்து தன்னுடைய கைப்பையை வெடுக்கென எடுத்தாள். அதனிலிருந்து அலைப்பேசியை மட்டும் வெளியே எடுத்தாள்.

இந்தச் சூழ்நிலைக்கும், தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதுபோல் அவளுடைய செயல் இருந்தது.

எதுவும் புரியாமல் அச்சு, அண்ணியின் கைகளிலிருந்து சரிந்து இறங்கினான்.

“தாத்தா…”

இறங்கும்போது, அண்ணியின் ஒன்றிரண்டு தலைமுடியையும், அவள் அணிந்திருந்த புடவையின் நீளமான பட்டு ஜரிகைகளையும் அவன் மோதிரத்தின் விளிம்பு பிய்த்துவிட்டது.

“இஸ்… அப்பப்பா… எங்க போற நீ? இப்ப, இங்கேயே இரு… டேய்…”

என்று அதட்டினாள் அண்ணி.

சில வார்த்தைகளை வாய்க்குள்ளேயே முணுமுணுத்துக்கொண்டாள்.

“அந்தக் கொலுசையாவது கழட்டி வை நீ. இல்லனா அதுவும் லூசாகி எங்கயாவது போயிடப் போவுது.”

மாமியாரின் ஆலோசனைக் குரல் அண்ணிக்குத்தான்.

நெற்றியை விரல்களால் தேய்த்துக்கொண்டிருந்தாள். அண்ணியின் எரிச்சலான பார்வை அவளுடைய அம்மாவின் முதுகில்தான் முடிந்தது. மாமியாரின் முகத்துக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

வீட்டினுள் காற்று வெளியேறி பல பலூன்கள் சுருங்கிப்போய்விட்டன.

இரவு பத்து மணிக்குமேல்தான் நாங்கள் வீடு திரும்பினோம்.

நீண்ட பயணத்தின் வழியில் யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை.

வாகன ஓட்டுநரின் சில கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் தந்தேன். கூடவே கயலின் வளையல்கள் ஏதோ அவைகளுக்குள் பேசின.

மகிழுந்தின் வாடகைப் பணத்தை அண்ணனே கொடுத்திருந்தான்.

வழியனுப்ப, அண்ணன் மட்டுமே அச்சுவுடன் வாசல்வரை வந்திருந்தான்.

அவன் வாசலில் விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. அவனின் தலைமுடி கலைந்திருந்தது. இரவின் வெளிச்சத்தில் அவை நன்றாகத் தெரிந்தன.

எங்கள் வீட்டடைந்து கதவைத் திறந்தவுடன், கயல்விழிக்கு உதவச் சென்றாள் அம்மா. பெரிதாக வேலை எதுவும் இல்லையென்றாலும், வீட்டினுள் ஏனோ பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தாள். கண்களில் ஈரம் காயவில்லை.

நான் சுடுதண்ணீர்ப் பானையை அம்மாவிடமிருந்து வாங்கிக்கொள்ள முயன்றபோது,

வேண்டாம் என்பது போல் தலையை அசைத்தாள்.

கயலின் கால்கள் தண்ணீர் நிரப்பிய பலூன் போல இருந்தன.

மௌனம் எங்கள் வீடு முழுவதும் எதிரொலித்தது.

அப்பா மூக்குக் கண்ணாடியைக் கழற்றி, கைக்குட்டையால் துடைத்துவிட்டு மேசையின் மீது வைத்தார். தன்னுடைய சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்.

“அம்மா…”

பதில் எதுவும் வரவில்லை.

“சோறு கொஞ்சமா இருக்கும்மா… யாராவது சாப்புடுறீங்களா?”

பதில் இல்லை.

நான் மட்டும் சாப்பிட்டேன்.

அன்று இரவு எனக்கு உறக்கம் வரவில்லை.

எங்கள் வீட்டின் சமையலறையோடு சேர்ந்திருந்த வரவேற்பறையின் மின் விளக்கு எரிவதும், மீண்டும் அணைவதுமாக இருந்தது. சில முறை அதுவே தொடர்ந்தது.

மென்மையான பாதங்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்கும் ஓசை நீண்ட நேரம் கேட்டது.

கயல்விழி ஒருக்களித்துப் படுக்க முயற்சி செய்து தோற்றுப்போனாள். அசதியில் அவளுடைய குறட்டைச் சத்தம் வழக்கத்தைவிடக் கொஞ்சம் அதிகமாகவே கேட்டது.

அப்படியே, விடியற்காலையில் நானும் உறங்கிப்போனேன்.

அம்மா, அப்பா, அண்ணன், கயல்விழி எல்லோரும் என்னிடம் வந்தார்கள். எல்லோரும் ஒரு புல் வெளியில் எதையோ தேடினோம். புல் உயரமாக வளர்ந்துகொண்டே இருந்தது. சிறிது நேரத்தில், ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியாத அளவுக்கு புல் உயரமாகி நின்றது.

திடீரென்று வெள்ளைப் பனிமூட்டம்.

தூரத்தில் ஒரு உருவம்.

அது அச்சு.

“அச்சு!” என என்னைக் கூப்பிட்டேன்.

“சி–த்–த–ப்–பா.”

காலையில் முகத்தில் வெயில் சுரீரென்று பட்டதும் மெதுவாகக் கண் விழித்தேன். சுவரின் அலமாரியில் பழைய உண்டியல் இருந்த காலியான இடம் என் கண்ணில் பட்டது.

ஜன்னல் வழியே வந்த சூரிய ஒளியில் ஏதோ ஒன்று அறை முழுவதும் வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது.

அம்மாவின் கை அளவுக்காக வாங்கி வைத்திருந்த பழைய தங்கநிறக் கண்ணாடி வளையல், அது.

Series Navigationதி கேம்பூவரசு பூத்திருக்கு