(மதிப்பிற்குரிய திண்ணை ஆசிரியர் அவர்கட்கு,
மனம் நிறைந்த வணக்கங்கள்.
இப்போது, அம்மையும் குதிரைத்தலைப் பிடிலும் என்ற சரித்திரப் புதினத்தை எழுதி, பதினாறு அத்தியாயங்களாக பிரித்து, உங்கள் கனிவான பார்வைக்கு அனுப்பி இருக்கிறேன். இத்துடன், எனது முழு நாவலையும், இணைத்துள்ளேன்.
எனது நாவலில், ஒரு பெண்மையுள்ள மகிழ்வன்(gay), தனது தாயால் எப்படி எல்லாம் வெறுக்கப்படுகிறான் என்பதை, ஒரு மங்கோலிய சரித்திரம் மூலம் விளக்கி இருக்கிறேன்.
புத்தமதத் துறவிகள் இடையே நிலவும், ஓரினச்சேர்க்கை உறவு குறித்து எழுதி இருக்கிறேன். மங்கோலியச் சாமான்கள் என்ற மந்திரவாதிகளிடம் நிலவும், திருநங்கை, திருநம்பி வாழ்க்கை பற்றி எழுதி இருக்கிறேன். கூடவே, ரஷ்யாவின் தலைவர், ஸ்டாலின், மங்கோலிய மக்களை எப்படி எல்லாம் துன்புறுத்தினார் என்பது குறித்து எழுதி இருக்கிறேன்.
மங்கோலியப் பாலைவனத்தில் ஆரம்பிக்கும், எனது சரித்திரப் புதினம், சைபீரியாவில், ஆர்க்டிக் பெருங்கடலில் போய் முடிகிறது.
எனது சரித்திரப் புதினத்துக்கு ஆதாரமாய், மேற்கோள்கள் அனுப்பி இருக்கிறேன். (நாவலுக்கு உள்ளேயே கடைசி பக்கத்தில் இருக்கிறது)
ஐயா, நீங்கள் LGBTQIA என்ற பால் புதுமையினர் சமூகத்தை மனதார ஆதரிப்பவர் என்பதை உலகத் தமிழர்கள் எல்லோரும் அறிவார்கள். எனவே தயைகூர்ந்து, வாரா வாரம் பிரசுரியுங்கள்.
இத்துடன் தேவையான படங்களும் அனுப்பி இருக்கிறேன்
மிக்க நன்றிகளுடன்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்)
நாவல் – அழகர்சாமி சக்திவேல்
அத்தியாயம் ஒன்று
ஓ கோபி பாலை வனமே என் கோபி பாலைவனமே
சிலநேரங்களில் நீ
தகித்துக் கொண்டிருக்கும் உருகு கலன்
வறுபடும் தானியங்களைப் போலச் சத்தமிடும்
உன் வெட்டுக்கிளிகளும் பூச்சிகளும்
நிஜமான ஆறுகள் இப்போது ஏதுமில்லை
உன் ஆறுகள் பல வறண்டு உறிஞ்சப்பட்டுவிட்டன
அது வெறும் சரளைக் கற்கள் நிறைந்த நிலமாகிவிட்டது
ஓ கோபி பாலை வனமே என் கோபி பாலைவனமே
- மங்கோலியப் புலவர் பெக்சின் யவுக்குலன்
பில்கன், கோபி பாலைவனம், மங்கோலியா, கி.பி.1939
அந்தி மங்குவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது. மறையப் போகும் சூரியனின் வெளிச்சத்தில், எதிரில் இருந்த, கொன்கர் மணல் குன்றுகள், தங்கநிறத்தில் பிரகாசித்து, குதிரையில் அமர்ந்து இருந்த என் மனதை மயக்கியது.
இந்த சாயந்திர வேளையில், காற்று இன்று கொஞ்சம் அதிகமாகவே வீசிக்கொண்டு இருந்தது. வீசிய காற்றின் அசைவுக்கு ஏற்ப, கொன்கர் தங்க மணல் குன்றுகளில் இருந்த மெல்லிய மணல்துகள்கள், அங்கும் இங்கும் நகர்ந்து, ஒரு மெல்லிய ஒலியை எழுப்பிக் கொண்டு இருந்தன.
மணல்குன்றுகளின் மணல்கள் எழுப்பிய அந்த மங்கோலிய இசை, மணல்குன்றுகளின் அடிவாரத்தில், கொஞ்சம் நீரோடு ஓடிக்கொண்டு இருந்த, கொன்கர் ஆற்றுக்கும் கேட்டது. கொன்கர் ஆற்றை ஒட்டி இருந்த, அந்த பசுமையான, பாலைவனச் சோலைக்கும் கேட்டது.
அந்த பாலைவனச் சோலையில், என் குதிரையில் அமர்ந்தபடியே, எனது ஒட்டகங்களையும், ஆடுகளையும் மேய்த்துக்கொண்டிருந்த, எனக்கும் கேட்டது.
இப்போது, எனது குதிரை, மணல்குன்றுகளின் சங்கீதத்துக்கு ஏற்ப, உற்சாகத்தில், லேசாக ஆடியது. குதிரையின், ஆனந்த அசைவு கண்டு, எனக்கும் கூட, இப்போது உற்சாகம் தொற்றிக்கொண்டது.
இன்னும் கொஞ்ச நேரத்தில், இருள் கவிழத் தொடங்கிவிடும். அதற்குள், நான், எனது ஒட்டகங்களையும், ஆடுகளையும், பத்திரமாக, பட்டிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டும், என்ற பாதுகாப்பு உணர்வு, எனக்கு இப்போது வந்தது.
நான், எல்லா கால்நடைகளையும், குதிரையில் இருந்தபடியே, அங்கும் இங்கும் அலைந்து, ஒரே கூட்டத்துக்குள் கொண்டுவந்தேன். பின், தூரத்தில் இருந்த எனது கெர் குடிலுக்கு, கால்நடைகளை பற்ற ஆரம்பித்தேன். கால்நடைகளும், எனது கட்டளைக்குக் கீழ்படிந்து, கெர் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தன.
ஒவ்வொரு நாளும், இது போன்ற சாயந்திர வேளையில், கெர் குடிலுக்கு, திரும்ப வரும் என்னையும், கால்நடைகளையும், அம்மைதான் உற்சாகமாக வரவேற்பாள். ஆனால், அவள் இன்று வீட்டில் இல்லை.
நேற்றே அவள், எங்கள் குடிலில் இருந்து, முப்பது மைல்கல் தள்ளி இருக்கும், ஊருக்கு, அவளது மோரின்குர் குதிரைத்தலைப் பிடிலோடு போய் விட்டாள். இனி, நாளைதான், எங்களது குடிலுக்கு வந்து சேருவாள்.
இந்த சுற்று வட்டாரத்தில், மோரின்குர் குதிரைத்தலைப் பிடில் வாசிக்க, நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அம்மையைப் போல, ஒரு ஒட்டகத்தின் முன்னே, கண்களில் கண்ணீர் வரும் அளவிற்கு, கசிந்துருகி, மோரின்குர் குதிரைத்தலைப் பிடில் வாசிக்க, யாரும் இல்லை. அதற்காக, அம்மை மட்டுமே, இந்த சுற்று வட்டாரத்தில் இருக்கிறாள், என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்.
அம்மை, பிடில் மட்டுமே வாசிப்பதில் வல்லவள் இல்லை. கூடவே, குச்லோக்கும் நன்றாகப் பாடுவாள். குச்லோக் என்பது ஒரு வாய்ப்பாட்டு.
அதுவும், ஒட்டகங்கள் முன்னே பாடும் ஒரு ஆசுவாசப் பாட்டு.
கர்ப்ப வேதனை தாங்காமல், கன்றை ஈண்டு விட்டு, அந்த கர்ப்ப வலியையே, இன்னும் நினைத்துக்கொண்டு வேதனைப்படும் ஒட்டகங்கள், தான் ஈன்ற கன்றையே, தன்னோடு ஒட்டவிடாமல் விரட்டி அடிக்கும் போது, கன்றையும், தாயையும் இணைக்கப் பாடப்படும் பாட்டுத்தான் குச்லோக்.
குச்லோக் பாட்டை, அம்மை, அப்படி உருகி உருகிப் பாடுவாள். மோரின்குர் குதிரைத்தலைப் பிடில் வாசித்துக்கொண்டே, அவள் மனமுருகிப் பாடும் இந்த குச்லோக் பாட்டிற்கு, கல்லும் கரையும். அப்படி இருக்க, தனது சொந்தக் கன்றுக்கு, பாலூட்ட முரண்டு பிடிக்கும், ஒட்டகங்கள் மட்டும் எம்மாத்திரம்?
ஹோ சோ சோ சோ சோ
சோ சோ சோ சோ ஹோ
என்று அம்மை, கனிந்த குரலில், விடாமல் பாடுவாள். அவள் விடாமல் பாடும் அந்த இசைக்கு, கடைசியில், ஒட்டகம், மனம் இரங்கும். கண்ணீர் விட்டு அழுகும். தனது தவறை உணர்ந்து, தனது கன்றை, தன்னோடு சேர்த்துக் கொள்ளும். பாலூட்டவும் ஆரம்பித்துவிடும்.
சிலநேரங்களில், சில ஒட்டகங்கள், கன்றை ஈன்ற அடுத்த கணமே இறந்து போகும். அந்த மாதிரி நேரங்களில், அனாதையாய்ப் பிறக்கும் ஒட்டகக்கன்றுகளுக்கு, இன்னும் கொடுமையான நேரமாக இருக்கும்.
இந்த மாதிரி தாய் இல்லாமல் அநாதை ஆகும் கன்றுகளுக்கு, வேறு ஒரு ஒட்டகத் தாய், தேடி ஆகவேண்டும். அப்படி வேறொரு வளர்ப்பு ஒட்டகத்தாய் தேடும்போதும், அம்மைதான் அந்த இடத்திற்குப் போவாள்.
அவளே, வளர்ப்பு ஒட்டகத்தாயைக் கண்டுபிடித்து, அந்தத் தாயை, கன்றுடன் சேர்த்து வைக்கவும், குச்லோக் பாடவும், அந்த ஊரிலேயே தங்குவாள். ஒன்றல்ல, இரண்டு அல்ல, ஒரு வாரம் கூடத் தங்கி இருந்து, வேறு ஒரு தாய் ஒட்டகத்தைத் தேடிப்பிடித்து, விடாது குச்லோக் பாடி, அனாதையான அந்த ஒட்டகக்கன்றுக்கு, பால் கொடுக்க வைத்து விடுவாள் அம்மை.
அவ்வளவு திறமையானவள் அம்மை. அவள் திறமையைக் கண்டு, இந்த சுற்று வட்டாரமே, அவளை ஒரு மரியாதையுடன் நடத்தும். எனது அம்மைக்கு கிடைக்கும் மரியாதையைக் காணும் எனக்கும் பெருமைதான்.
நான், சின்ன வயதில் இருந்து, இன்று வரை, பல தடவைகளில், அம்மை குச்லோக் பாடுவதைக் கேட்டு இருக்கிறேன். அம்மை எனக்கும், தம்பிக்கும் பாடக் கற்றுக் கொடுத்து இருக்கிறாள். கூடவே, எங்கள் இருவருக்கும் மோரின்குர் குதிரைத்தலைப் பிடில் வாசிக்கவும், கற்றுக்கொடுத்து இருக்கிறாள்.
நானும் அவளைப் போலவே பிரமாதமாகப் பாடுவேன் என்றாலும், அம்மையின் அந்தக் கனிவு, எனது குரலில், எப்போதும் இருந்ததில்லை.
அம்மை, குச்லோக் பாடுவதொடும், குதிரைத்தலைப் பிடில் இசைப்பதோடும் நிறுத்திக் கொள்வதில்லை. கூடவே, ஊரில் உள்ள கர்ப்பவதிகளுக்கு, பிள்ளைப்பேறும் பார்ப்பாள். தாயாகும் பெண்டிர்க்கு, தேவையான பத்திய மருந்து போன்றவையும் செய்து கொடுப்பாள்.
அம்மை, மிக மிக தைரியமானவள். அவளுக்கு குதிரையேற்றம் தெரியும். ஒட்டகம் ஓட்டத் தெரியும் இந்த அகன்ற பாலைவனத்தில், அவள், சுற்றி அமைந்துள்ள பல ஊர்களுக்கு, பற்பல சமூக காரியங்களுக்காகவும், சொந்தக் காரியங்களுக்காகவும், தனது குதிரையில் ஏறிச் செல்லும் காட்சியே, கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பல நேரங்களில், எனது அம்மை, எனக்கு, ஒரு பேரரசின், ராணியைப் போலத் தெரிவாள். பெருமையில் நான் பூரித்துப் போவேன்.
“நான் செங்கிஸ்கான் பரம்பரையில் இருந்து வந்தவள்… என் முன்னோர்கள், செங்கிஸ்கான் பரம்பரையில் தளபதிகளாகவும், அமைச்சர்களாகவும் இருந்தவர்கள்.. எனது இறந்து போன கணவனும் ஒரு மாபெரும் வீரன்தான்” என்று அவள் வீரமாகச் சொல்லும் போது, எனக்கு மெய் சிலிர்க்கும்.
ஆனால், அவள் வீரமாக இருந்ததாலோ என்னவோ, சற்றே பெண்மையுடன் இருக்கும் எனது தம்பியை, அவளுக்கு, அவ்வளவு பிடிக்காது.
நான் மிக மிகப் பொறுப்பானவன். ஆனால், எனது பாசமிகு தம்பியோ, விளையாட்டுப் பிள்ளை.
நான் எப்போதும் அமைதியானவன். குடும்பத்தில், பொறுப்பானவன். அமைதியாக இருக்கும் எனக்கு, என் தம்பி செய்யும் சின்னச் சின்ன சேட்டைகள், மிகவும் பிடிக்கும். ஆனால், அம்மைக்கு அவ்வளவு பிடிக்காது.
தம்பி டெங்கருக்கு, நன்கு ஆடத்தெரியும். அவன் இடுப்பையும், கைகளையும் வளைத்து வளைத்து ஆடும் பயல்ஜி நடனத்தைப் பார்த்து, இந்த சுற்று வட்டாரமே பாராட்டும். ஆனால், அம்மை ஒரு போதும் பாராட்ட மாட்டாள்.
அம்மை, செங்கிஸ்கான் பரம்பரையில் வந்தவள். செங்கிஸ்கான் போலவே, டெங்கர் மத வழிபாடு செய்பவள் அம்மை.
டெங்கர் என்றால், நீல வானம் என்று பொருள்படும். பரந்து விரிந்த டெங்கர் நீல வானத்தையும், மழை, காற்று போன்ற இயற்கைகளையும், தனது முப்பாட்டன் செங்கிஸ்கான் போலவே, இன்றளவும், தெய்வமாக வணங்கி வருபவள் அம்மை.
செங்கிஸ்கான் போன்ற எங்கள் முன்னோர்கள், அவர்கள் வணங்கிய, இப்போதும் வணங்குகிற இயற்கை தெய்வங்களோடு, நேரடியாகப் பேச முடியாது என நம்பினார்கள். இன்றளவும் நம்புகிறார்கள்.
எனவே, இயற்கை தெய்வங்களோடு, நேரடியாக பேசும் சக்தி படைத்தவர்களாக, அந்த செங்கிஸ்கான் பரம்பரையினர், சாமான் என்ற மந்திரவாதிகளை நம்பினார்கள்.
எனவே, தங்கள் நல்லது கெட்டது விசயங்களில், அததகைய மந்திரவாதிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, அதன்படியே நடந்துகொண்டார்கள். எனது அம்மையும் அப்படித்தான்.
தூரத்துக் குன்றுகளில், தனித்து வாழ்ந்த அந்த சாமான் மந்திரவாதிகளிடம், அம்மை, குறிகேட்க, பல நேரங்களில் போவது உண்டு.
அந்த சாமான் மந்திரவாதிகளில் சிலர், பெண் உடை அணியும் ஆண்களாக இருப்பார்கள். சிலர், ஆண் உடை அணியும் பெண்களாக இருப்பார்கள்.
சில ஆண் மந்திரவாதிகள், ஆணோடு வாழ்க்கை நடத்துவார்கள். சில பெண் மந்திரவாதிகள், பெண்களோடு வாழ்க்கை நடத்துவார்கள். இவர்கள் எல்லோரையும், பக்தியுடன் வணங்கிவிட்டு வீட்டுக்கு வருவாள் அம்மை.
ஆனால் எனக்கு, இந்த மந்திரவாதிகள் சொல்லும், டெங்கர் மதத்தின் மீது கொஞ்சமும் நம்பிக்கை இல்லை. எனக்கு, திபெத்தில் இருந்து வந்து, மங்கோலியாவில் பரவிக்கிடக்கும், புத்த மதமே பிடித்து இருக்கிறது.
புத்த மதம், வான்வெளியில் தெய்வத்தை தேடச் சொல்லவில்லை. மாறாய், எனக்குள் தேடச் சொல்லுகிறது. “உனக்குள் இருக்கும் ஆசைகளை ஒழித்தால், உன்னால் சந்தோசமாக வாழ முடியும்” என்ற புத்தமதத்தின், வாழ்க்கைத் தத்துவமே, எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
ஓம் மணி பத்மே ஹம்
ஓம் மணி பத்மே ஹம்
ஒம் தரே துத்தாரே தூரே சோஹா
ஒம் தரே துத்தாரே தூரே சோஹா
“ஒம் மணி பத்மே ஹம்” என்று மந்திரம் சொல்லி, அவலோகிதேச்வர போதி சத்வரை வணங்கும் போதும், “ஒம் தரே துத்தாரே தூரே சோஹா” என்று மந்திரம் சொல்லி, தாரா மாதா புத்தரின், பெண் வடிவத்தை வணங்கும்போதும், நான் மெய்சிலிர்த்துப் போகிறேன்.
எங்கள் கெர் குடில்களில், ஒரு குடிலை, நாங்கள், புத்த மதத்துக்கென ஒதுக்கி இருக்கிறோம். அந்தக் குடிலுக்கு, முன்னூறு மைல் தூரத்தில் உள்ள, புத்தமத மடப்பள்ளியில் இருந்து, ஒரு புத்தபிக்கு வந்து போவார். அவர், எங்களுடனேயே கொஞ்ச காலம் தங்கி இருந்து, போதனைகள் செய்து, பின், மடப்பள்ளிக்கே திரும்பிப் போவார்.
நாங்கள் அந்த புத்தக் குடிலில், ஒன்று கூடுவோம். புத்தமதப் பாடல்கள் பாடுவோம். புத்தபிக்கு சொல்லித்தரும் வஜ்ராயன மந்திரங்களை மனப்பாடம் செய்வோம். அதையே, அங்கேயே, உரத்த குரலில், உச்சாடனமும் செய்வோம்.
ஆனால், அம்மை, அந்த புத்த குடிலுக்கெல்லாம் வரமாட்டாள். அவள் மதநம்பிக்கை வேறு. ஆனால், அதற்காய், மற்றவரது வழிபடுதல் நம்பிக்கையை, அவள் ஒருபோதும் தடுத்ததும் இல்லை.
இங்கிருந்து முன்னூறு மைல் தொலைவில், அந்த பெரிய புத்த மத மடப்பள்ளி இருக்கிறது. அங்கே, நான் பல முறை போய் இருக்கிறேன். அம்மை கூட அங்கே வந்து இருக்கிறாள். காரணம், எனது தம்பி டெங்கர்.
கடந்த பத்து வருடங்களாக, தம்பி டெங்கர், இந்த புத்த மத மடப்பள்ளியில் தான் தங்கி இருக்கிறான். பாசமிகு தம்பியைப் பிரிந்த மனவருத்தத்தில், நான், இன்றளவும், கொஞ்சம் வேதனையோடுதான் வாழ்கிறேன்.
எல்லாவற்றிற்கும் காரணம் அம்மைதான்.
அம்மை, நாங்கள் தங்கியுள்ள இடத்தில் இருந்து, குறி கேட்பதற்காய், தூரத்துக் குன்றுகளில் வாழும் சாமான் மந்திரவாதிகளிடம் குறி கேட்கப் போவாள். அப்போதெல்லாம், அங்கே, நிறைய பெண் தன்மை உடைய ஆண் மந்திரவாதிகளைப் பார்ப்பாள். அவர்களை வணங்கவும் செய்வாள்.
ஆனால், வீடு வந்ததுமே, எனது தம்பியைப் பார்த்தால் மட்டும், அவன் கொஞ்சம் பெண்மையுடன் இருப்பதைப் பார்த்தால் மட்டும், அவளுக்கு பற்றிக்கொண்டு வரும். எனது பாசமிகு தம்பியைப் பார்த்து, எரிந்து எரிந்து விழுவாள். எனக்குத்தான், உடனே, அமைதி போய்விடும்.
அம்மைக்காகவே, நான் தம்பியைப் பிரிந்தேன்.
ஒரு முறை, எங்களுக்கு புத்தமதம் போதிக்க, ஒரு தெய்வத்தன்மை நிறைந்த, ஒரு புத்த லாமா, எங்கள் புத்த குடிலுக்கு வந்து இருந்தார். அவரிடம், எனது தம்பியை அழைத்துப் போனேன்.
அவரின் ஆலோசனையில்தான், நான், எனது தம்பியை, முன்னூறு மைல் தள்ளி இருக்கும் அந்த புத்த மடப்பள்ளியில், நிரந்தரமாகத் தங்கிப் படிக்க, சேர்த்துவிட்டேன்.
இப்போது, எனது தம்பி, எனது அருகில் இல்லாமல், பத்து வருடங்கள் ஓடிப்போய் விட்டன.
இப்போது குடிலில் இருள் கவிழத் தொடங்கி விட்டது. நான், எனது குடும்ப நினைவுகளை, ஒரு புறம் ஒதுக்கி வைத்தேன்.
பட்டிக்கருகில் இருந்த, குழுதாளியில், நான் தண்ணீர் நிறைத்தேன். ஆடுகளுக்கு என ஒரு தனி குழுதாளி ஒட்டகங்களுக்கென ஒரு தனி குழுதாளி என எங்கள் குடிலில், பல குழுதாளிகளை அம்மை அமைத்து இருந்தாள்.
குழுதாளிகளில், கால்நடைகள் எல்லாம், நன்கு தண்ணீர் பருகின. நான், தண்ணீர் அருந்திக்கொண்டு இருந்த, எனது ஒட்டகச் செல்லக் குட்டி, டோப்ரோ ஒட்டகத்தை கவனித்தேன்.
டோப்ரோ என்றால் பட்டு என்று அர்த்தம். எனது பட்டுக்குட்டி டோப்ரோ ஒட்டகம், சமர்த்தாக நீர் அருந்திக்கொண்டு இருந்தது.
அதன் முகத்தில், ஒரு மலர்ச்சியை என்னால் காண முடிந்தது. அந்த மலர்ச்சியின் அர்த்தம், இன்று கால்நடைகளுக்கு, நல்ல மேய்ச்சல் கிடைத்து இருக்கிறது என்று அர்த்தம்.
குழுதாளிகளின் எல்லாத் தண்ணீரையும், கால்நடைகள், குடித்து முடித்து இருந்தன. நான், ஒட்டகங்களை கயிறு வைத்துக் கம்புகளில் கட்டினேன். ஆடுகளை, பட்டியில் அடைத்தேன்.
நான், நிம்மதியுடன், எனது கெர் குடிலுக்குள் போனேன்.
உள்ளே, எனது மூன்று பிள்ளைகளும், தூங்கிக் கொண்டு இருந்தன. நாள் முழுக்க, ஓடியாடி விளையாடிய களைப்பு போலும்.
மனைவிக்கு, பல காலம் ஆகவே, உடல் நிலை சரியில்லை. அவ்வப்போது இளைப்பு வந்து கஷ்டப்படுகிறாள். அம்மை, எவ்வளவு மருந்து கொடுத்தும், அவள் இளைப்பு, சரியாகவேயில்லை. பல நேரங்களில், எனது மனைவி, சீக்கிரமே படுத்து விடுவாள். இன்றும் அப்படித்தான் படுத்து விட்டாள்.
அம்மை இன்று இருந்தால், அவளே சமையல் வேலை அனைத்தும் செய்து விடுவாள். ஆனால், அம்மை, இன்று குடிலில் இல்லை. எனவே, எனக்குத் தேவையான உணவை, நானே சமைத்தேன்.
சாப்பிட்டு முடித்த பின்னர், குடிலுக்கு வெளியே வந்தேன். கும்மென்ற இருள், எல்லாக் குடில்களையும், கண்ணுக்குத் தெரியாமல், மறைத்து இருந்தது.
நான், சாணி பொறுக்க ஆரம்பித்தேன். இந்த சாணிதான், எங்களின் அடிப்படை எரிபொருள். சாணியைக் காயவைத்து, வரட்டி ஆக்கினால்தான், வீட்டில் நெருப்பு வந்து உலை எரியும்.
வறட்சியான இந்தப் பாலைவனத்தில், குற்றுச் செடிகளே அதிகம் உண்டு. தொலைதூரத்திற்குப் போய், கொஞ்சம் கட்டைகள் பொறுக்கி வந்து எரிக்கலாம். என்றாலும், சாணி வரட்டிதான் எங்கள் அடிப்படை எரிபொருள்.
இப்போது நான், கூட்டிப் பெருக்கிய சாணியை, பட்டிக்கருகில் இருந்த, சாணித் தொட்டியில் கொட்டப் போனேன்.
திடீரென்று, அந்தப் பெரிய, சாணித் தொட்டிக்கருகில் ஒரு சத்தம் வந்தது. சரேலென யாரோ, விலகி நகரும் சத்தம். நான், உண்மையில் பயந்து போனேன்.
ஏதாவது, பாம்பு அல்லது கரடி அல்லது புலி ஆக இருக்குமோ? எனக்குள், ஒரு உதறல் எடுத்தது.
வேகமாக குடிலுக்குள் போய், ஒரு நெருப்புப் பந்தம் எடுத்து வந்தேன். சாணித் தொட்டிக்குப் பின்னால், தீப் பந்தத்துடன், ஓடிப் போய்ப் பார்த்தேன்.
அங்கே நான் கண்ட காட்சி.. ஐயகோ…
அங்கே மறைந்து இருந்தவர்களில், ஒருவன் எனது பாச மிகு தம்பி. இன்னொருவர், எனது தம்பியை, புத்தமத மடப்பள்ளியில் சேர்க்க உதவி செய்த, அந்த புத்த லாமா.
நான் அதிர்ச்சியின் எல்லைக்குப் போனேன். இன்னும் கொஞ்சம் கிட்டப் போய், அவர்கள் இருவரையும் உற்று நோக்கினேன்,
புத்த மடப்பள்ளியில், புத்த பிக்குகளாக வாழ்ந்த அந்த இருவரின் தலைகளும், மழித்த தலைகளாக இல்லை. மாறாய், காட்டுத் தனமாய், தலை மயிர், இருவருக்குமே வளர்ந்து இருந்தது.
சவரம் செய்த முகத்துடன்தான், நான் இருவரையும், இந்தப் பத்து வருடங்களாக பார்த்து இருக்கிறேன். ஆனால், இன்றோ, அவர்கள் இருவர் முகத்தையும் மறைக்கும் தாடி.
குறைந்தது, ஒரு மாதத்திற்கு முன்னாலாவது, இவர்கள் இருவரும், அந்தப் புத்தமடப் பள்ளியில் இருந்து தப்பி வந்து இருக்கவேண்டும்.
நான் “ஆ..ஆ” என்று அலற எத்தனித்தேன்.
ஆனால், அதற்குள், தம்பி, என்னை, அலறவிடாது, எனது வாயைப் பொத்தினான்.
தம்பி கிட்ட வந்து, என் காதில் கிசுகிசுத்தான். “அண்ணா.. ரஷ்யாவின் செம்படைகள், நமது புத்தமடப் பள்ளியையே அழித்து ஒழித்து விட்டது. பல புத்த பிக்குகள் ரஷ்யச் செம்படையால் கொல்லப்பட்டார்கள் அண்ணா.”
“நாங்கள் இருவரும் தப்பி வந்து, பல நாட்கள் ஆகிவிட்டன. ரஷ்யச் செம்படைகள், எங்களைத் தேடி, இங்கே வந்தாலும் வரலாம் அண்ணா”
தம்பி சொன்ன, இந்தச் செய்தி கேட்டு, எனது சப்த நாடி ஒடுங்கியது. எனக்குப் பேச்சு வரவில்லை.
தம்பி தொடர்ந்தான். “அண்ணா.. நான் அம்மையை ஒரு தடவை, பார்க்கவே இங்கே வந்தேன். இங்கே வந்தவுடன்தான், அம்மை, வெளியூர் போய் இருக்கிறாள் என்று தெரிந்து கொண்டேன்.”
நான் எதுவும் பேசாது, அவன் பேச்சுக்கு, “சரி” என்று தலையை மட்டும் ஆட்டினேன். அவனே தொடர்ந்தான். “நாங்கள் இருவரும் நாளை வரை இங்கேயே பதுங்கி இருக்கிறோம் அண்ணா. நாளை, அம்மையைப் பார்த்த பின்னர், இங்கு இருந்து, நாங்கள் கிளம்பிப் போகிறோம் அண்ணா. நீங்கள் குடிலுக்குள் போய்த் தூங்குங்கள் அண்ணா..”
நான் பதட்டத்துடன், “தம்பி.. குடிலுக்குள் வா” என்றேன். தம்பியோ பதறினான். “வேண்டாம் அண்ணா, ரஷ்யச் செம்படையான் இப்போது வந்து, நான் குடிலில் இருப்பதைப் பார்த்தால், பின் நீங்களும் மாட்டிக்கொள்வீர்கள்” என்று சொன்னபோது, நான் பயந்து போனேன்.
நான் குடிலுக்குள் போனேன். அந்த இரவில், நான் தூங்கவே இல்லை
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
- கார்நாற்பது 11. ஐம்பாலாய்
- புள்ளும் சிலம்பின காண்
- பவிழிதழ் (Pavizhithazh) என்ற தமிழ் இணைய இலக்கிய இதழ்
- முகமெலாம் மத்தாப்பூ
- இனியவை நாற்பது காட்டும் வாழ்வியல் விழுமியங்கள்
- கார் நாற்பது – 8. புகழே நிலையானது
- தி கேம்
- தங்கக் கொலுசு
- பூவரசு பூத்திருக்கு
- வன்மக் கிடங்குகள்!
- சேரனின் இலக்கியப் புலம்: நவீன இலங்கைக் கவிதை, போர்க்கால சாட்சியம், புலம்பெயர்வு இலக்கியம்
- நிம்மதி
- 2025 ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு
- அம்மையும் குதிரைத்தலைப் பிடிலும்
- காற்றுவெளி கார்த்திகை(2026) இதழ்