இரா முருகன்
அந்தியோடு மிழவும் உயிர்த்தது மலையில். கடல்கோள் துயரம் பாடிக் கேட்க கணியனைச் சுற்றி பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.
நாகன் கணியன் கடல்கோளின் பதினெட்டாம் ஆண்டு நிறைவாகி, சூரிய மண்டல கிரகங்கள் திரும்ப நிலைக்கும் தினம் இன்று எனக் கணித்திருந்தான்.
கடல்கோள் தினத்தன்று சமவெளியில் கடல் பொங்கி உயர்ந்து உள்ளே புகுந்து எல்லாவற்றையும் எல்லாரையும் அலைகளில் பொதிந்து அடித்துப்போய் கடலில் உயிர் நீக்கச் செய்தது.
மலைப் பிரதேச மக்கள் எந்த உதவியும் செய்ய இயலாமல் மலை முகட்டிலே நின்றனர். கடலில் போன மனிதர்கள், பெண்கள், குழந்தைகள் என்று அடையாளம் கண்டனர். எனில், இவர்களால் ஒரு துரும்பும் எடுத்துப் போட முடியவில்லை.
உயிர்ப் பயத்தோடு கைகால் உதறி பிராணன் காக்க யாரேனும் வரமாட்டார்களா எனக் கதறி ஜல சமாதி ஆன கடற்கரை மனுஷ்யர்கள் நினைவோடு ஆண்டுகள் நகரும்.
குறிஞ்சி என்ற இந்த வனப்பான இளம்பெண் மலைச் சிறுமியாக தந்தையைப் பெற்ற அப்பனாத்தாள், அம்மையோடு நின்று அத்தனை உயிர்கள் கண்முன் போயொழிந்ததைக் கண்டது ஒவ்வொரு அந்தியிலும், ஒவ்வொரு முறை மிழவு அதிரும் ஒலி கேட்கும்போதும் அவளுக்கு நினைவு வரும். இன்றைக்கும் கணியன் மிழவு வாசித்தபடி குத்தியிருந்திட, மாலை நேரம் ஊர்ந்து இருட்டைப் பிடிவாதமாக மெல்ல சற்றே இழுத்து வரும்.
குறிஞ்சி எனும் இம்மங்கை நேற்று மாலை தினைப் புனத்தில் அறுவடை செய்து திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே வந்த காடன் அவளை ஆசையோடு பார்த்தபடி சொன்னான் – நாளைக்கு தினைப்புனம் மதியத்துக்குப் போனால் போதும். ஆசான் ஆடச் சொல்லி உன்னை கூப்பிடறார். விருந்தாளி வராராம்.
குறிஞ்சிக்கு அலுப்பும் எரிச்சலுமாக வந்தது. சமவெளி மனுஷர்களுக்கு கால்நடையாகவும், எருது இழுக்கும் வண்டி ஏறியும், குதிரை சவாரி செய்தும், ஒட்டகம் ஏறிப் பாலை நிலம் கடந்தும் சதா மலைகளுக்குத் தாவியேறி அங்கே திமிர்த்து அலையும் பெண்டிரைக் கண்ணிமைக்காது நோக்கி வருவதில் என்ன ஓர் ஈடுபாடு!
கொம்புத் தேன், தினை மாவு, வரகரிசி, உலர்ந்த உடும்பு மாமிசம் என்று பெருமளவு மலைபடு பொருள்கள் வாங்கி, அரிசியும், கேப்பையும், மதுவும் கொடுத்துப் பண்ட மாற்று செய்வதில் அவர்களுக்கு ஆர்வம் நிறைய உண்டு.
அவ்வப்போது, செல்வம் படைத்த சமவெளி மனிதர்கள் பொன்னும் முத்தும் கொடுத்து அழகிய சிறு குழந்தைகளை வாங்கிப் போய் வளர்ப்பது உண்டு.
அழகிய மலைப் பிரதேசக் கன்னியரைக் கடல் பிரதேசத்திலிருந்து வந்தவர்களுக்கும், நெல் செழித்துக் கதிர் தாழ்த்தி வளரும் ஆற்றுப் படுகை வயல்பூமிக் கிழார்களுக்கும் திருமணம் செய்வித்து அனுப்புவதுண்டு. அந்தப் பெண்கள் அப்புறம் மலையேறி உற்றாரையும் பெற்றோரையும் சந்தித்து உற வு கொண்டாடிப் போவது அரிதினும் அரிது.
வயல்காட்டில் விதைக்கவும், நாற்று நடவும், நீர் பாய்ச்சவும், களை எடுக்கவும், அறுவடை செய்யவும் கற்றுக்கொண்ட அவர்கள் மரமேறித் தேனடை பிழிந்து தேனீ கொட்டாமல் தேன் எடுக்கவும், ஆடவர் வேட்டையாடிக் கொண்டுவந்த பச்சை மாமிசத்தை மலையகப் பெருந்தெய்வம் முருகனுக்குப் படைத்து வேலாட்டமும், அவன் அம்மைக்காக துணங்கைக் கூத்தும் ஆடிப் புளிப்பு மதுவை மாந்தி மகிழ்ந்திருக்கவும் அநேகமாக மறந்திருப்பார்கள்.
விருந்தாளி அதிரசம் கொண்டு வருவதை எதிர்பார்த்திருக்கும் குழந்தைகள் போல், பிறதிணை மாந்தர் மலை ஏறி வரும்போது வெல்லம் கொண்டு வந்து தருவதை ஆவலோடு எதிர்பார்த்து மலைஞர்கள் இருப்பார்கள்.
ஆற்றோர நிலத்தில் கரும்பு பயிரிட்டு சாற்றைக் காய்ச்சி வார்த்து இறக்கும் வெல்ல மண்டைகளையும் வெல்ல அச்சுகளையும் பதம் தப்பாது உருவாக்கியும், வெண்மை பூத்த கடற்கரை அளங்களில் உப்பு வடித்தெடுத்தும் வருவார்கள் சமவெளி மனிதர்கள். அவற்றை நல்கி, மலைபடு மிளகும், காட்டுப் பிரதேச மூங்கில் ஊறுகாயும், கொக்கு மாமிசம் உணக்கிய உப்புக் கண்டமும் பண்டமாற்று செய்து திரும்பிப் போவார்கள் அவர்கள். ஆயிரமாண்டு பழக்கம் இது.
உறவாட வந்த, வராத மற்றைய பிரதேசத்தினர் வெல்லம் போல வேறே எதுவும் கொண்டு வந்து எளிதாக உறவு ஏற்படுத்திப் போவதைப் பொதுவாக வரவேற்பதில்லை. முக்கியமாக மலையகப் பெண்கள்.
”என்ன, துணங்கைக் கூத்து ஆடணும்னா வரேன்னும் சொல்ல மாட்டேங்கிறே, மாட்டேன்னு சொல்லவும் மாட்டேங்கிறே. பெரியோருக்கு தாக்கல் என்ன போய் சொல்ல”? காடன் குறிஞ்சியைக் கேட்டான்.
முகத்தைச் சுளித்துக்கொண்டு குறிஞ்சி நகர்ந்தபடி சொன்னாள் – “அவ்வளவு அவசியம்னா பெரியோரையே ஆடச் சொல்லு. இல்லே, கமுகு இடிச்சு வாயிலே சதா அதக்கிக்கிட்டு உட்கார்ந்தே தூங்கிக்கிட்டிருக்கிற கிழவிகளை ஆடச் சொல்லு. துணங்கைக் கூத்து முன்னூறு வருசமா ஆடறது. அதுகள் சிலது நானூறு வருஷம் உசிரோட இருக்கறது. தூக்கத்திலே கூட ஆடும்”.
சொல்லிவிட்டுச் சிரித்தாள் குறிஞ்சி. காடனும் சிரித்தான்.
”விருந்தாளிகளுக்காக அவங்கள் முன்னாலே கூத்தாடறது, வேல் நட்டு வச்சு சுத்தி வந்து குதிக்கறது, தேன் விட்டு தினை மாவைப் பிசைந்து பிரியமா பார்த்துக்கிட்டே பரிமாறறது, பச்சை முயல் கறியை, எலி மாமிசத்தை நெருப்பு வளர்த்து சுட்டுத் திங்கறது இதெல்லாம் நாம் செய்து காட்டலேன்னா விருந்தாளிகளுக்கு நாமெல்லாம் ஜீவிச்சிருக்கறதாவே தோணாது போல”.
சொல்லிக் கொண்டிருக்கும்போதே காடன் வளர்க்கும் வேட்டை நாய் காட்டுப் பூனை ஒன்றை ரணமாகப் பிடுங்கி வாயில் கௌவிக்கொண்டு ஓடி வந்தது குறிஞ்சியைப் பார்த்ததும் கொண்டு வந்த மாமிசத்தைக் கீழே இட்டு நெருங்கி அவள் இடுப்புக்குக் கீழ் வாடை பிடிக்க உற்சாகம் காட்டியது.
’குடிலுக்கு விலக்கா இருக்கேன் நான் எப்படி வந்து ஆடறது? உடம்பில் அசௌகரியத்தை எல்லாம் ஊருக்கு முரசறைஞ்சே ஆக வேணுமா”?
காடன் கொஞ்சம் யோசித்தான். சரி நான் பாத்துக்கறேன் என்றான்.
அதெல்லாம் பார்க்க முடியாது என்றாள் குறிஞ்சி குமிழ் சிரிப்போடு.
”அதைச் சொல்லலே பொண்ணு. இதை பெரியோர் தலையோர் கிட்டே சொன்னா அது அது பாட்டுக்கு வரும் அதுக்காக விருந்தாடி வர்றவனுக்கு முன்னாடி ஆடாம இருக்க முடியாது என்பார்”.
”குழுவிலே ஒரு பெரியோர் எதை எப்போ எப்படிச் சொல்றதுன்னு கவலைப்படாமல், ஆற்றுப் படுகை ஊர்லே கெட்டியாக நெய்த துணி வாங்கி வந்திருப்பீங்களே அதைக் கட்டிக்கிட்டு ஆடுங்கன்னு தீர்மானமாகச் சொல்லுவார்”.
”அரையும் குறையுமாக காதுலே வாங்கிக்கிட்டு இன்னொரு பெரியோர், வேல் நட்டு வச்ச மேடைக்கு பக்கம் மட்டும் போகாம குருதி வாடை நெருங்காம ஆடு போய் அப்படீன்னு அதிகாரம் பண்ணுவார்”.
காடன் யோசனையோடு குறிஞ்சியைப் பார்த்தான்.
என்ன செய்யணும் சொல்லு, செஞ்சுடலாம் என்றாள் குறிஞ்சி.
அதனாலே மலைப்பனி பிடிச்சிருக்கு ரெண்டு நாள் ஆடி ஓடக் கூடாதுன்னு வைத்தியன் மூலிகை கொடுத்திருக்கறதாக சொல்லிடலாம் என்றான் அவன்.
வைத்தியன் கிட்டே கேட்டு பொய்யினு தெரிஞ்சுக்க எவ்வளவு நேரமாகும்? போடா காடா மாடான்னு பேர் வச்சுக்கிட்டு வந்துட்டே. ஒரு சுக்கும் பிரயோஜனமில்லாதே.
வைத்தியர் கிட்டே யார் போவாங்க? அவர் பேச ஆரம்பிச்சா ஓய மாட்டாரே
அவர் கிட்டே நானும் வந்து சுகவீனம் சொல்லட்டா?
குறிஞ்சி சொல்லும்போதே நாயைப் பிடித்து நடத்திக்கொண்டு காடன் கிளம்பி விட்டான்.
கொஞ்ச நேரம் மலை ஏரிக்கரையிலே உட்கார்ந்திரு வந்துடறேன் என்று சொல்லியபடி அவன் ஓடினான். மலையில் யாரும் நடப்பதில்லை. ஓட்டம்தான் சாட்டம்தான் சீக்கிரம் போய்த் திரும்ப எங்கேயும். காடன் போன்ற இளந்தாரிகள் ஓடச் சொன்னால் பறப்பது போல் சிட்டாகப் பரிவார்கள், மனுஷன் மட்டும் பறக்க முடியும்னா என்ன எல்லாம் நடக்கும்!
அவன் குறிஞ்சியிடம் கற்பனை ஊற்றைக் கவிழ்த்தெடுத்து மனதில் இருந்து பெருங்கதையாகச் சொல்ல வைப்பான். புலவர்கள் போல் மலையும் தினையும் தேனும் பெண்ணும் அவனுக்குள்ளும் கற்பனை பெருக்கெடுக்க வைக்கும்.
ஓ குறிஞ்சி, இந்தா உன் மருந்து. வைத்தியன் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் மகன் தான் மருந்து எடுத்துக் கொடுத்தான். என்ன செய்ய இதை?
சரியாகப் போச்சு. நானா உன்னை வைத்தியனிடம் போகச் சொன்னேன்? வைத்தியனை நானா மருந்து எடுத்துத் தரச் சொன்னேன்? மூத்த மருத்துவன் இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று இளைய கத்துக்குட்டியிடம் இல்லாத சுகவீனத்துக்கு ஔடதம் சேர்த்து ஓலைக் கொட்டானில் பொதிந்து தர நானா சொன்னேன்?
கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டபடி குறிஞ்சி இரண்டு மரங்களுக்கு இடையே கட்டியிருந்த ஊஞ்சலில் மெல்ல ஏறினாள். அதில் ஆரோகணித்தபடி பின்னால் நின்ற காடனைத் திரும்பிப் பார்த்து ‘ஊக்கி’ என்றாள். அவன் புரியாமல் விழிக்க, ஊஞ்சலை ஆட்டிவிடு என்றாள். என்ன மொழியோ?
நம் மொழிதான். நம் புலவன் குறிஞ்சிக் கலி வகைப் பாடல்களாக எழுதியவை. நாம் இப்படித்தான் நடப்போம் என்று ஆருடம் சொன்ன பாடலில் அடுத்து என்ன செய்வோம் தெரியுமா?
குறிஞ்சி கேட்டபடி அவனைப் பார்த்தாள். தெரியாது என்று தலையசைத்தான் காடன்.
ஊஞ்சல் மேலே வரும்போது வேணுமென்றே கையை நழுவ விட்டு உன் மார்பில் சாய்ந்து விழ நீ என்னைத் தூக்கிக் கொள்வாய்.
குறிஞ்சி கொஞ்சம் மௌனத்துக்குப் பின் காடனைக் மீண்டும் கேட்டாள் – சொல்லு காடா, அதற்கு அப்புறம்?
அவனுடைய நாய் திரும்ப குறிஞ்சியைக் கால்களுக்கு நடுவே முகர முற்பட, அதைத் தள்ளியபடி, அப்புறம் இதுதான் என்றான் காடன். அவன் ஊஞ்சலில் பத்திரமாக வைத்த மருந்துகளை எடுத்துக்கொண்டு அவன் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு குறிஞ்சி ஓட்டமும் நடையுமாகப் போனாள்.
அவள் முதுகைப் பார்த்து நாளைக்கு என்று காடன் கேட்டது மேலே வட்டமிட்டுப்போன கழுகின் இரைச்சலில் கரைந்து காணாமல் போனது.
காலையில் நான்கு பானைகளில் புதியதாக எடுத்து மெழுகு அடைத்து வைத்திருந்த தேனை சுறுசுறுப்பாக இலை மடக்கில் வார்த்து, தினைமாவு சேர்த்துக் கைகளின் பலம் எல்லாம் நாட்டிப் பிசைந்து கொண்டிருந்தாள் குறிஞ்சி.
அவளுடைய சகவயதுத் தோழி மாடத்தி அவள் அருகே பாறாங்கல்லில் அமர்ந்து, கமுகு கொடடி என்று அதிகாரமாகக் கேட்டாள். அதைக் குறிஞ்சி கவனிக்காமல் இருந்தாள். அவள் இடுப்புத் துணி மறைப்பில் காதலன் காதலியை இடையோடு அணைக்கிற மாதிரி தொட்டுப் பிடித்து நெகிழ்த்து சிறு சுருக்குப் பையில் வைத்திருந்த வெட்டிய கமுகை, என்றால் பாக்கை சுவாதீனமாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டாள்.
மாடத்தி சொன்னாள் –
”இன்னிக்கும் தேனும் தினைமாவும் தான் காலை ஆகாரமாக கழிக்க வேண்டியிருக்கு. இந்த மாதம் நாலு விருந்தாளி வந்தாச்சு. யவனன், சீனன் என்று அவங்க எல்லோரும் நாம் தினம் சாப்பிடறது இதுதான், எது, தேன், தினைமாவு. இதைத் தான் வாழ்க்கை முழுக்க தின்னுட்டிருக்கோம்னு நினைக்கறவங்க”.
”அதை உறுதிப்படுத்த குரங்கு வாழைப்பழம் திங்கற மாதிரி அவங்க வந்து பார்க்கறபோது எல்லாம் இதை நாமும் சாப்பிட்டு அவங்களுக்கும் தரணும்.
”போன மாதம் நீ வரலே அப்போ வந்த பயணி நாம் தேனும் தினைமாவும் சாப்பிடறதை சித்திரமாக வரையணும்னு அழிச்சாட்டியம் பண்ணினார். மெழுகுசீலையிலே வர்ணம் தேச்சு வரைய ஆரம்பிச்சுட்டார். அவர் முடிக்கிற வரைக்கும் தினைமாவு திங்கற மாதிரி அபிநயம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்திருக்க வேண்டிப் போச்சு. ஆளாளுக்கு ரெண்டு மண்டை வெல்லமும், அரைப்படி கல் உப்பும் அதிகமாகக் கிடைச்சதுதான்.
மாடத்தி சொல்ல, அழறதா சிரிக்கறதா தெரியலே என்றாள் குறிஞ்சி.
”ஆற்றுப்படுகையிலே பொங்கல்னு அரிசியை வச்சுப் பொங்கி அருமையா சமைக்கறாங்க. உப்பு புளி மிளகு கலந்து காய்ச்சி குழம்பு செய்யறாங்க. நமக்கு அது சேர்த்தி இல்லையாம்.”.
மாடத்தி சலிப்போடு சொன்னாள்.
”பயணம் வந்தவங்க பார்த்து மகிழ ஆடறதும் பாடறதும் உனக்கு பிடிச்சிருக்கா”? குறிஞ்சி மாடத்தி கையைப் பற்றியபடி கேட்டாள்.
”என்ன பண்ணச் சொல்றே குறிஞ்சி? நமக்காக இருக்கறது மலையருவித் தண்ணீர், பழங்கள், மலை எலி, சமைக்காமல் நெருப்பில் வாட்டிய முயல் இறைச்சி, வருஷம் ஒரு முறை ஆற்றுப்படுகை ஊருக்குப் போய் கலிங்கமும் முண்டும் வாங்கி வந்து தினசரி மலையருவியிலே துவைத்து உடுத்திய மேனிக்குக் காயவைத்து இன்னொரு நாள் போக ஓடி ஆடி தினைப்புனம் காத்து, காக்கை, காடை, கிளி, புறா மேலே கவண் விட்டெறிந்து ஓட்டறது. பரண்லே இருந்து இறங்கி மூத்திரம் போக ஒதுங்கிக்கற முன்னாடி கண்ணு ஏதும் தட்டுப்படறதான்னு கவனிக்கறது. நேத்து பரண்லே இருந்து இறங்கும்போது காடன் வந்துட்டான். முண்டு நெகிழ்ந்து எதை பார்க்கக் கூடாதோ அதைக் காணக் கொடுத்தாச்சு”.
சொல்லிவிட்டு குறிஞ்சியைப் பார்க்க அவள் முகத்தில் ஒரு நொடி சினம் ஓடி மறைந்து சிரிப்பு நிறைந்ததைக் கண்டாள்.
காடனுக்கு பகல்லேயே பசுமாடு தெரியாது ராத்திரி எருமைமாடு எங்கே தெரிய என்று சிரித்தாள் குறிஞ்சி.
சரியம்மா நான் எருமை தான், நீ பசுதான் என்று அவள் தோளைத் தட்டியபடி உற்சாகமாக எழுந்தாள் மாடத்தி.
எக்காளமும் சங்கும் மத்தளமும் வெடியும் முழங்கும் கலவையான சத்தம்.
சீனன் வந்தாச்சு என்று எழுந்தாள் குறிஞ்சி. ஆடணுமாம். போய் ஆடு என்று மாடத்தியின் கருத்து நீண்ட கூந்தலில் காட்டு மல்லிகைச் சரத்தைச் சரியாகப் பிறைச் சந்திரன் போல் சாய்த்துச் செருகி வைத்துவிட்டாள்.
நீ ஆடாம தப்பிச்சுட்டே என்றபடி கையை நீட்டினாள் மாடத்தி. சொன்னேனே தூமை வாடை அடிக்கலியா? குறிஞ்சி சொல்லியபோது இல்லை என்றாள் விளையாட்டாக மாடத்தி.
சீன யாத்திரிகன் வழவழவென்று உடம்பு முழுக்க மூடி பட்டுத்துணி சுற்றி வந்திருந்தான். தலைமுடியை நீளமாகப் பின்னலிட்டுப் பெண்கள் போல் கீழே இறக்கியிருந்தான்.
ஒத்தப் பின்னல் மம்முதன் என்று ரகசியம் சொன்னாள் மாடத்தி குறிஞ்சி காதில். ஓ விருந்தோம்புதல் செய்நீ தோழி. குறிஞ்சி கிசுகிசுத்தாள். இருவரும் சேர்ந்து சிரித்து ஒருத்தி மற்றவளின் கைகொட்டி விலகி ஓடினர்.
பெரியதுகளில் ஒருவர் இவர்கள் இருவரும் தனியாக நிற்பதைப் பார்த்து வேகமாக அவர்கள் பக்கம் வந்தார். பனிரெண்டு இளம் பெண்கள் விருந்தாளியை உபசரிக்க ஆடத் தயாராக நின்றிருந்தார்கள்.
போய் ஆடு என்றபடி குறிஞ்சியைக் கோணலாகப் பார்த்தார் அவர்.
தாத்தா நான் குடில்லே இல்லே மாடத்தி இதோ உடுத்திட்டு வந்துடுவா என்றாள் குறிஞ்சி. நாமெல்லாம் சீனா போய்ச் சீனத்திப் பெண்களை ஆடச் சொல்வோம் ஒரு நாள். நினைக்கும் போதே சிரிப்பு வந்தது அவளுக்கு.
எப்போ போய் துணி உடுத்தி? அவர் சொல்வதற்குள் மரத்தடி பின்பக்கம் போய் மாடத்தி அணிந்து வந்தது சீனன் போல் ஆனால் நீல நிற பட்டுத் துணி. அதை நதியில் நீராடப் போகும்போது அணிவதுபோல் உடம்புக்குக் குறுக்காக அணிந்து மேலே மரவுரியும் அணிந்து தயாராகி விட்டாள் மாடத்தி.
சீனரோடு கூட வந்தவர் உயரமாக சமவெளி மனிதர். சீனருக்கு மொழிபெயர்த்து உதவ சமவெளியில் கட்டண அடிப்படையில் அமர்த்திக் கொண்டவர் என்று குறிஞ்சிக்குத் தெரிந்தது. அவர்கள் எல்லோருக்கும் முன்னால் கையில் ஓலைத் தூக்கும் எழுத்தாணியுமாக இருந்தான் உச்சிக் குடுமியும் நீண்ட சாரமும் அணிந்த மெலிந்த ஒருவன். அவன் புலவன் என்று குறிஞ்சிக்குப் பட்டது.
பட்டுடுத்திய குன்றின் மகளிர் மேகம் போல் கருத்த கூந்தலில் காட்டு மல்லிகை சரங்களை அணிந்து பூ பாரம் நோவித்த இமைகள் சற்றே மூடியிருக்க, துடிக்கும் செவ்விதழ்கள் பவிழமாக மின்ன ஆடத் தயாராக நிற்க, முழவு அதிக சத்தத்தோடு ஒலித்தது. குறிஞ்சி மனதில் கவிதை செய்தாள்.
இதை எங்கோ யாரோ எழுதியதாகப் படித்த நினைவு. எல்லாக் கவிதையும் அப்படித்தான் என்று மிழவின் ஒலி மிகுந்தது.
சட்டென்று கழுகுகள் துடைத்து வைத்தாற்போல் சுத்தமாக இருந்த வானத்தில் வட்டமிடலாயின.
சமவெளியில் ஒரு சிறு கூட்டம் நகர்ந்து மலையேற ஆயத்தம் செய்து கொண்டிருந்தது. ஓடக்குழல்களின் இனிய சங்கீதம் குளிர்ந்த வெளியில் பெருகிச் சூழ்ந்து மேலே எழும்பத் தொடங்கியது.
கண்மூடி இசையில் மூழ்கிய புலவன் சொன்னான் -இது இந்த உலகத்தின், இந்த விண்மீன் தொகுப்பின், இந்தப் பிரபஞ்சத்தின் இசை இல்லை. கேட்டாரைப் பிணைக்கும் மந்திர இசை அது.
புலவன் நின்றபடிக்கே பக்கவாட்டில் குனிந்து சுவடித் தூக்கைத் தரையில் வைத்தான். சிற்றோடைக் கரையில் ஆசனப் பலகை பரத்தியது போல் விரிந்து கிடந்த பாறாங்கல்லின் மேல் அமர்ந்து ஒற்றை ஓலையைத் தூக்கிலிருந்து எடுத்தான். கூடவே அதே போல் வெற்று ஓலைகள் நான்கைந்தை தூக்கின் கீழிருந்து உருவி மடியில் வைத்து மேலே எழுத்து ஓலையைப் பாந்தமாக வைத்தான். எழுதத் தொடங்கினான்.
சங்கேதம் போல் குற்றெழுத்தில் மடமடவென்று பாதி ஓலைக்கு எழுதி நிறுத்தி பள்ளத்தாக்கில் இருந்து உயரும் குழல் இசையைக் கேட்டபடி சீன விருந்தாளியிடம் அங்கே விரல் சுட்டினான்.
பின்னால் சற்றே பழைய பட்டுப் பட்டாடை உடுத்து நின்ற மொழிபெயர்ப்பாளன் எல்லோருக்கும் பொதுவாக வணக்கம் சொன்னான். இளைஞன். பல மொழி அறிந்த பெருமை பார்வையில் தெறித்தது. புலவர் அவனைப் பார்த்துத் தலையசைக்க சீன மொழியில் சுருக்கமாகப் பேசி நிறுத்தினான்.
விருந்தாளியாக வந்திருக்கும் சீனப் பயணி ஒரு சிரிப்போடு சுற்றும் முற்றும் பார்த்து நன்றி சொன்னான். நல்ல இசை என்று கூட்டத்திடம் பொதுவாகச் சொல்ல மலைப் பெரியோன் அவனைக் கரம் கூப்பி வணங்கினான்.
கீழே இருந்து மூங்கில் குழல் ஓசை இன்னும் பக்கத்தில் வந்து கொண்டிருந்தது. அந்த இசை இங்கே வந்த பின் துணங்கைக் கூத்தாடத் தொடங்கலாம் என்று மலைகிழவோன் பொதுவாகப் பார்த்து அறிவித்தான். அவன் இடுப்புத்துணி நெகிழத் தொடங்க, அவசரமாக நுண் சிறு தாம்புக் கயற்றால் இறுகக் கட்ட ஓரமாக பாறை மறைவில் போய் நின்றான். தேனும் தினைமாவும் உயர்த்தாத சூடான புத்துணவின் கந்தம் மலையைச் சூழ்ந்தது.
விருந்தாட வந்திருக்கும் நட்பு தேசத்தின் பிரதிநிதியான இளைஞரே உம் பெயர்தான் என்ன? கிழவோன் கேட்டான். ஹுவா தெ பெங்க்யு என்று அந்த இளைஞன் நிதானமாக ஒரு முறை தன் பெயரைச் சொல்லி, பூக்களின் நண்பன் என்று அந்தப் பெயர் பொருள்படும் எனவும் சேர்த்துக் கொண்டான்.
மலைகிழவோனின் மலைமொழிப் பெயர் காட்டு எருமை என்று பொருள் விரிவதைச் சொல்ல வேண்டாம் என்று மலைகிழவோன் ஓரமாக நின்றபடி மொழிபெயர்ப்பாளனிடம் சைகையில் தெரிவித்ததை கிட்டத்தட்ட அங்கே குழுமியிருந்த எல்லோருமே பார்த்தார்கள்.
சிற்றேரிக் கரையில் செடிகொடிகளுக்குப் பின்னால் குந்தி இருந்து அற்பசங்கை தீர்த்துக் கொண்ட மலைகிழவோன் ஏரி நீரில் கைகால் சுத்தச் செய்து கொண்டு திரும்பி வரும்போது, சிறு பந்தலில் கண்கள் புகையில் கலங்கி இருக்க, நீள உருளைகளில் அரிசிப் புட்டு வேக வைக்கப்படுவதை நோக்கினான். அருகிலேயே இன்னும் சில முது பெண்டிரும் நடுவயதுப் பெண்டிரும் உலர்ந்த ஆட்டு மாமிசத்தை மிளகுப் பொடி சேர்த்து அடுப்பெடுத்து ஏற்றி அது பய்ய வெந்து கொண்டிருப்பதை ஆர்வமாகப் பார்த்திருந்தார்கள்.
மலையேறி வந்தவர்கள் இரண்டு இளம் பெண்கள் என்று வளைந்து நெளிந்து குறுகி உயரம் செல்லும் மலைப்பாதையில் அவர்களுடைய தலை தட்டுப்பட்டதும் தெரிந்தது.
சீனப் பயணி கட்டற்ற மகிழ்ச்சியோடு அவர்களை நோக்கி ஓடினார். அவர்கள் கரங்களை அன்போடு சிறு பறவைகள் போல் தன் கைகளுக்குள் இருத்தி மகிழ்ச்சி நிமித்தம் கூவென்று பறவையாக ஒலி எழுப்பி விடுவித்தார்.
அந்தப் பெண்கள் சுமந்து வந்த பையில் இருந்து கன்றுக்குட்டிகளுக்கு வாயைச் சுற்றி அணிவித்து அதிகம் பாலுண்ணாமல் தடுக்க மிலேச்சர்கள் உருவாக்குவதாகச் சொல்லும் வாய்கட்டிகளை எடுத்து அணிந்து கொண்டார்கள்.
இதுபோல் வாய்கட்டிகள் எனக்கு வேணுமே என்று சீனப்பயணி அவர்களைக் கேட்க, வெகு விநோதமாகப் பதிலிறுத்தனர் அவர்கள் அதாவது அந்த இரு பெண்களில் ஒருத்தி.
நாங்கள் ஆயிர0க்கணக்கான ஆண்டுகள் உங்களுக்கு அப்புறம் பிறந்து உயிரோடு இருப்பவர்கள். காலத்தில் பின்னே போய் உங்களின் இந்தக் காலத்தில் வந்து சேர்ந்திருக்கிறோம். கொடுக்கல் வாங்கல் எதுவும் காலங்களுக்குக் குறுக்கே நடத்த அரசு அனுமதிக்கவில்லை நண்பரே. உங்களுக்குக் குயிலியின் வாழ்த்துகள். வானம்பாடியும் உங்களை வாழ்த்துகிறாள்.
சிரித்தபடி மற்றொரு பெண்ணைச் சுட்டி குயிலி என்ற அந்தப் பெண் சொன்னாள். சீனப் பயணி தோளைக் குலுக்கிக் கொண்டார். கூட்டம் மலைமுதுகிழவோனைப் பார்த்தது. சகலமும் அறிந்தவன் என்ற முறையில் அவனுக்குத் தெரியாவிட்டால் வேறு யாருக்கும் அது தெரியாது என்று வெகுவாக நம்பிக்கை உள்ளவர்கள் அவர்கள். அல்லது அந்தச் சமாசாரம் அல்லல்பட்டுத் தேடியலைந்து தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்றாக இருக்காது.
இப்படிப் பல மொழிகளை வாய்க்கட்டிக்குள் வைத்த விசை மூலம் பேசவும் கேட்க வைக்கவும் இயலும் என்பது தனக்குத் தெரியாத ஒன்று என்று அந்த மலைமுதுகிழவோன் தெரிவித்தான். ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுக்கு அப்புறம் இது நடப்பாகும் என்று கண்களை உருட்டிச் சிரித்து அதிசயம் அதிசயம் எனச் சொல்லி ஆச்சரியப்பட்ட விதம் அனைவரையும் கவர்ந்தது.
இவர்களை நான் கீழே சமவெளியில் பெருநகரில் சந்தித்தேன். சுவையான சந்திப்பு அது என்று சீனர் மொழிபெயர்பு மூலம் முதுகிழவோனுக்குத் தகவல் சொன்னார்.
நீங்களும் மலையேறப் போவதாகச் சொல்லியிருந்தால் இவரோடு வந்திருக்கலாமே. மாநகரில் இருந்து தரிசு மண்ணில் பல கல் வெய்யில் வாட்ட நீங்கள் தனியாகப் பயணம் மேற்கொண்டிருக்க வேண்டாமே என்று ஆதூரத்துடன் முது கிழவோன் சொன்னான்.
மேலும் அது கள்வர் அலையும் பூமி. அவர்கள் கையில் அகப்பட்டால் அவர்களின் மகிழ்ச்சிக்காக கொன்று போட்டிருப்பார்களே என்று பச்சாபதாபம் மிகுந்திடச் சொன்னார் அவர். ஆறலைக் கள்வர் இப்போது இல்லை என்றான் அவசரமாக பாறையில் இருந்து எழுந்த புலவன்.
அரசைக் குற்றமற்றதாகச் சித்தரிக்க அவன் ஒலைச் சுவடியும் நாவும் என்றும் காத்திருக்கும் போல. குறிஞ்சி நினைத்துக் கொண்டாள்.
கூவென்று குறிஞ்சிப் பெண் கூவ ஒரே வினாடியில் அங்கே அற்புதம் நிகழ்ந்தது. வண்ணம் சிதறிய ஆடைகளை உடுத்து காலில் ஒலி எழுப்பும் சதங்கை சப்திக்க இருபது குமரிகள் ஆட ஆரம்பித்தார்கள்.
நட்ட நடுவில் அமர்ந்து காடன் தும்தும்மென்று ஒற்றை மிழவு முழக்கி அதிரச்செய்ய, துணங்கைக் கூத்தாகவும், வேலனோடு இசைந்து ஆடும் வெறியாட்டமுமாக அவர்கள் ஆடினார்கள். நடை மாறும்போது உயர்ந்து மிழவு ஒலிக்க அந்தப் பெண்கள் மிழவோடு காலடிகள் ஒன்றுபட்டு அதிர ஆடினார்கள்.
இது என்ன கூத்து? புலவன் கேட்டான். இஃது பலபட்டடையாக வனைந்தது என்றான் முதுகிழவோன். புலவன் இது தவறு எனத் தலை குலுக்கிக் குரல் தாழ்த்திச் சொன்னான் –
”புத்தம்புதுக் கலைகளிங்கு செழிக்க வேணும். எனினும் விருந்தினர் வந்திருக்கும்போது தங்கள் பழக்க வழக்கமாக, என்றும் எப்போதும் செய்து கொண்டிருக்கிற செயல்களை நிகழ்த்தினாலே அவர்கள் திருப்தியடைவர்”.
விருந்தாளி கடமையும் வகுக்கப்பட்டது. புலவன் காடனிடம் சொன்னான்.
முடிந்து போகும்போது அவர்கள் சீனத்துப் பட்டும் சரிகைச் சல்லாத் துணியும் கொடுத்து வாயில் மெழுகு பூசிய சுரைக் குடுக்கைகளோடு திரும்புவார்கள். அவை பெரும்பாலும் புதிய தேனாக இருக்கும். அல்லது ஜாக்கிரதையாகப் புளிக்க வைக்கப்பட்ட அரிசி மதுவாகவும், வாழைப்பழ மதுவாகவும் கூட இருக்கலாம்.
மஞ்சள்நிற சீனப்பட்டு குறிஞ்சி உடுத்த எத்துணை அழகாகத் தெரியும்! காடன் நினைத்துப் பார்த்தான். பரவசமாக இருந்தது.
தொடரும்
- ஷேக்ஸ்பியர் நாடகம் ஒத்தல்லோ அங்கம் -1 காட்சி -2 பாகம் -7
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 288 ஆம் இதழ்
- இது நியூட்டனின் பிரபஞ்சம்
- பாடம்
- பெரு வெடிப்புக்கு முன் பிரபஞ்சத்தில் நேர்ந்தது என்ன ?
- கே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்
- மழை
- இருப்பதும் இல்லாதிருப்பதும்
- நானே நானல்ல
- தமிழா! தமிழா!!
- அகழ்நானூறு 14
- காதல் ரேகை கையில் இல்லை!
- இல்லாத இடம் தேடி
- 33 வருடங்களாக அஞ்னாத வாசம் செய்த தமிழர்கள்
- நாவல் தினை அத்தியாயம் இரண்டு CE 300
- பொறாமையும் சமூகநீதியும்
- எங்கள் தீபாவளி