This entry is part 9 of 33 in the series 12 ஜூன் 2011

குழந்தைகள் பற்றிய

எந்த கவிதையையும்

நினைக்கையிலும் வாசிக்கையிலும்

வரிகளினூடே திரிகின்றனர்

எண்ணற்ற குழந்தைகள்.

நமது குழந்தையோ

நண்பரின் குழந்தையோ

எதிர் வீட்டுச் சிறுமியோ

பயணத்தில் அருகமர்ந்த சிறுவனோ…

நினைவுகளில் புதையுண்டு

கனவுகளில் பிறப்பெடுக்கும்

தொலைந்த நம் பால்யமோ…

அலங்காரங்கள் அவசியப்படாத

எந்த குழந்தையைப் பற்றிய

கவிதையையும் சுகிக்கையிலும்

எழுதுகிற நானும்

வாசிக்கிற நாமும்

மீண்டும் மழலைகளாகிறோம்

கணமேனும்.

 

-வருணன்

 

Series Navigationஒரிகமிஅறிகுறி