சுஜாதாவின் குறுநாவல் “ஆஸ்டின் இல்லம்”

This entry is part 19 of 42 in the series 29 ஜனவரி 2012

“ஆஸ்டின்இல்லம்” சுஜாதாவின் குறுநாவல். பொதுவாய் சுஜாதா கதைகளில் மெசேஜ் இருக்காது என்பார்கள். அதில் பாதி உண்மை. பாதி பொய். சுஜாதா மெசேஜ் சொல்ல வேண்டும் என வலிந்து முனைவதில்லை. சில கதைகளில் நல்லதோர் மெசேஜ் இயல்பாய் இருக்கும். ஆஸ்டின் இல்லம் அத்தகைய ஓர் கதை.

ஆஸ்டின் இல்லம் என்கிற பெயர் கொண்ட வீட்டில் ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றாக வசிக்கிறது. அந்த வீட்டின் ஓனர் ” பெரியப்பா”. அவரது சொந்தங்கள் பலவும் அந்த வீட்டிலும் அந்த சிறு தெருவிலும் (தெருவின் பல வீடுகளுக்கு பெரியப்பா தான் ஓனர் !) வசிக்கிறார்கள்.

ஆஸ்டின் இல்லத்தில் உள்ள முகுந்தன் என்பவருக்கு இரு மகன்கள். முதல் மகன் நிகில் அமெரிக்கா செல்ல ஆயத்தமாக இருக்கிறான். இவனுக்கு ஒரு பெண் பார்த்து வைத்துள்ளனர். அடுத்த மகன் நந்து தான் கதையின் மைய இழை. பல திறமைகள் கொண்ட இந்த சிறுவனுக்கு உடல் நிலை சரியில்லை என டாக்டரிடம் செல்கிறார்கள். அவர் இவனை பல டெஸ்டுகளுக்கு உட்படுத்தி விட்டு அவனுக்கு எலும்பு சார்ந்த பெரிய நோய் வந்திருப்பதாகவும், இன்னும் சில வருடங்கள் தான் உயிரோடு இருப்பான் என்றும் கூறுகிறார்.

நந்துவின் தந்தையும், தாயும் மனம் உடைகிறார்கள். இன்னொரு மகனோ இவ்வளவு குழப்பம் இடையேயும் தான் அமெரிக்கா சென்றே ஆகணும் என போய் விடுகிறான்.

பெரியப்பாவின் பழைய கதை ஒன்று தெரிய வருகிறது. இந்த இடமே பெரியப்பா வேறு ஒரு ஆளை ஏமாற்றி வாங்கியதாகவும், பின் அவர் மனைவியை இவர் “சின்ன வீடாக” வைத்து கொண்டதாகவும் செய்திகள். இந்த பாவத்தால் தான் இப்படி நடக்கிறது என்றும் வீட்டை விட்டு போக வேண்டும் என்றும் நினைக்கிறார்கள் நந்துவின் பெற்றோர். அனைவரும் கேள்வி கேட்பதால் வயதான பெரியப்பா மனமுடைந்து இறக்கிறார்.

கதையின் கடைசி பக்கத்தில் நந்துவிற்கு அந்த நோய் வந்ததற்கான காரணத்தை சொல்கிறார் டாக்டர். ” சொத்து கை மாறிட கூடாதுன்னு சொந்ததுக்குள்ளேயே தொடர்ந்து கல்யாணம் பண்ணது தான் இந்த நோய் வர காரணம்; நீங்க நினைக்கிற மாதிரி பாவம், புண்ணியம் ஒண்ணும் கிடையாது ” என டாக்டர் சொல்வதுடன் கதை முடிகிறது.

கதையின் முதல் அத்தியாயத்தில், அந்த குடும்பத்தில் இருந்து ஏராளமான பாத்திரங்கள் அறிமுகம் ஆகும் போது நமக்கே சற்று குழப்பமாக உள்ளது. ஆனால் போக போக கதை மீது நாட்டம் வந்து பாத்திரங்கள் அதிக முக்கிய துவம் இன்றி ஆகி விடுகிறார்கள்.

வெளிநாடு போகணும் என நிற்கும் அந்த அண்ணன் , மற்றும் அவனுடன் ஈஷி கொண்டே இருக்கும் அவன் வருங்கால மனைவி ..இரண்டும் நம்மை கோபப்பட வைக்கும் பாத்திரங்கள். சுஜாதா இவர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் “selfish ” தான் என போகிற போக்கில் சொல்லி போகிறார்.

பெரியப்பா பாத்திரம் மிக புதிரானது. ஆஸ்டின் இல்லத்தின் நிஜ ஓனரை பெரியப்பா கொலை கூட செய்திருக்கலாம் என பேசிக்கொள்கிறார்கள். அவ்வளவு விலை உள்ள சொத்தை ஏன் ஆயிரம் ரூபாய்க்கு அவர் விற்க வேண்டும் என கேட்கும் போது பெரியப்பா சரியான பதில் சொல்லாமல் நழுவுகிறார்.

சுஜாதா அடிக்கடி சொல்லும் ஒரு விஷயம் தான்: ” எந்த பெரிய சொத்துக்கு பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது“

ஆஸ்டின் இல்லம் “Must read ” என்று சொல்ல மாட்டேன். ஆனால் சுஜாதாவின் தீவிர ரசிகர்கள் நிச்சயம் வாசிக்கலாம்

புத்தகம் பெயர்: ஆஸ்டின் இல்லம்
பதிப்பகம்: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூபாய் 30

Series Navigationபாரதி இணையதளத்தில்பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
author

மோகன் குமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *