சம்பத் நந்தியின் “ ரகளை “

This entry is part 9 of 44 in the series 15 ஏப்ரல் 2012

ராம் சரணின் ‘ மகாதீரா ‘ தமிழில் டப்பாகி மாவீரனாகச் சக்கை போடு போட்டதில் குதூகலம் மேலிட சூப்பர் குட் சவுத்திரி ‘ரச்சா’ அரவம் மாட்லாட ரகளை ஆக்கியிருக் கிறார். அவலை நினைத்து உரலை இடித்த கதைதான். இத்தனைக்கும் அவர் மகன் ஜீவாவின் படங்கள் தெலுங்கில் நன்றாகப் போவதாகத் தகவல்.
சூரியநாராயணன் ( பார்த்திபன் ), அவர் நண்பர் பெருநிலக்காரர் ( நாசர் ) இருவரும் தமக்கிருக்கும் நூறு ஏக்கர் நிலத்தைக் உழுபவர்களுக்கே குத்தகைக்கு விடும் காட்சி யிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. வழக்கம்போல, நாசரின் மச்சான் வில்லன். அவனுக்குத் துணை ஒரு அரசியல்வாதி ( கோட்டா சீனிவாச ராவ் ) பார்த்திபனுக்கு ஒரு மகன். நாசருக்கு ஒரு மகள். மச்சான் கோட்டாக்களால் குண்டு வெடித்து நாசரும் பார்த்திபனும் கூண்டோடு பரலோகம் போக, பையன் வளர்ந்து பெட் ராஜாவாகவும், பெண் தமன்னா சைத்ராவாகவும் வெள்ளித்திரைக்கு வருகிறார்கள். தமன்னா மேஜராகும்போது அவளிடம் கையெழுத்து வாங்கி பிறகு அவளைப் போட்டுத் தள்ளும் சதியில் மச்சானும் கோட்டாவும். நடுவில் நல்ல வக்கீல், அவர் பிள்ளை ஜேம்ஸ் (அஜ்மல்) கூட்டணி குட்டையைக் குழப்ப, ராஜா தமன்னாவைக் காப்பாற்றி, எல்லோரையும் போட்டுத் தள்ளி, அப்பாவின் ஆசைப்படி நிலத்தை விவசாயிகளிடம் ஒப்படைக்கும் சராசரிக் கதை.
படத்தில் சில சுவாரஸ்யங்கள் உண்டு. துல்லிய ஒளிப்பதிவு, சூப்பர் சண்டைக் காட்சிகள், பட்டையைக் கிளப்பும் நடனங்கள், சுமாரான பாடல்கள், புன்னகை புரிய வைக்கும் சில வசனங்கள். ( ‘அங்கிருக்கும்போது சைலண்ட் மோட்ல இருக்கே? இங்கே வந்ததும் வைப்ரேஷன் மோடுக்கு மாறிட்டே? ‘ )
ராம் சரண் விஜய்யைப் பார்த்து சூடு போட்ட பூனை. ஆனால் அக்கட தேசத்தில் நம் விஜயை அப்படித்தான் சொல்வார்கள். அருமையாக வளைகிறது அவரது உடல். இத் தனைக்கும் படத்தில் குத்துப் பாட்டு எல்லாம் இல்லை. தமன்னா பையா படத்தில் பார்த்தது போலிருப்பதால், நமக்கு போரடிக்கிறது. செண்டிமெண்டாக அருவியில் அரை குறை ஆடையில் நனைய வைத்து இன்னமும் கடுப்படிக்கிறார்கள்.
தெலுங்குப் படங்களில் முக்கியமான மாற்றம் தெரிகிறது. வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் என்கிற அடிப்படை வண்ணஙகளை விட்டு விலகி கொஞ்சம் நாகரீகமாகி இருக்கிறார்கள் உடை விசயத்தில். ஆனாலும் நாயகனின் நண்பர்கள் என்று வருவோர் சந்தானத்திற்கு சித்தப்பா போலிருப்பது ஒரு குறை.
ஊரின் பெரிய தாதா, நாயகனின் ஒண்ணாங்கிளாஸ் பையன் திட்டத்திற்கெல்லாம் ஏமாந்து விடுவது யானைக் காதுக்கு பூச்சுற்றல் தான்.
எடிட்டிங் வி டி விஜயன் காப்பாற்றி இருக்கிறார். கதை வேகமாகப் போகிறது.
அஜ்மல் உயிருக்குப் போராடுகிறான். ராஜா அவனை காரில் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கிறான். இடையில் தமன்னா வில்லன் பிடியில். இதில் தமன்னா பார்வையில் ஒரு டூயட். எடுத்து விட்டேன் என்று செருகி விட்டார்களா? என்ன லாஜிக் அது?
இனி டப்பிங் படங்களை அதுவும் தெலுங்கு என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.
#
கொசுறு
போரூர் கோபாலகிருஷ்ணா திரையரங்கை நவீனப்படுத்தி இருக்கிறார்கள். புதிய குசன் இருக்கைகள். போதிய இடைவெளி வரிசைகளுக்கிடையே. தரையில் புதிய நவீன டைல்ஸ். கக்கூசை மாற்றுவதற்குள் கைக்காசு தீர்ந்துவிட்டது போலும்.

Series Navigationகருணாகரன் கவிதைகள்குகை மனிதனும் கோடி ரூபாயும் – தமிழில் நூல் வெளியீடு
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *