முள்வெளி அத்தியாயம் -6

This entry is part 6 of 28 in the series 29 ஏப்ரல் 2012

இரண்டு கால் கட்டை விரல்களையும் இணைத்துக் கட்டியிருந்த கயிற்றை அருவாள் வெட்டியது. உடலின் மீது கட்டைகளை அடுக்கிப் பின் வரட்டிகளை அடுக்கினார்கள். நெய்ப் பந்தத்தை ஏந்தியிருந்த சிறுவனால் வரட்டிகள் மீது கற்பூரம் இருந்த இடம் எது என்று காண இயலவில்லை. ஒருவர் அவனைப் பின் புறத்திலிருந்து அணைத்துத் தூக்கிக் கொண்டார். கற்பூரத்தில் பந்தம் பற்றியதும் அது கொழுந்து விட்டு எரிந்தது.

திரும்பிப் பார்க்காமல் ஒவ்வொருவராய் கொள்ளிடம் நோக்கி நடந்தார்கள். ராஜேந்திரனும் அவர்கள் பின்னேயே சென்றான்.

ஒவ்வொரு திக்கில் ஒவ்வொருவரும் இரண்டடி ஆழ்த்தில் எப்படியோ முக்கிக் குளித்தார்கள். சுடும் மணலில் எங்கேயோ வெறித்தபடி ராஜேந்திரன் அமர்ந்திருந்தான்.

“நீங்க குளிக்கலியா?”

ராஜேந்திரன் மௌனமாக எழுந்து தண்ணீரில் முக்குப் போட்டு ஈர வேட்டி காலைத் தடுக்கி விட மணல் ஒட்டும் பாதங்களுடன் மீண்டும் கரைக்கு வந்தான்.

“அப்பா உங்க ஃபிரண்டா?”

வினவிய இளைஞனின் கண்களை ஊடுருவிப் பார்த்தான் ராஜேந்திரன்.

இளைஞன் மற்றவருடன் நடந்து மறைந்தான். வெய்யிலின் உக்கிரம் தாங்க முடியாமல் ராஜேந்திரன் படிகளைத்தாண்டி மரத்தடியில் அமர்ந்தான்.

சுடுகாட்டிலிருந்து காட்டமான வாடையுடன் புகை கிளம்பியது. கொள்ளிடக் கரையில் இடைவெளிகளுடன் துணிகளை மூட்டையாக அடுக்கிப் பலர் துவைத்துக் கொண்டிருந்தனர்.

“ஷாமியானாவுக்கு வாங்க” யாரோ அழைத்தார்கள். அவர் பின்னே நடந்து சென்றான். வாழை மட்டையை வளைத்து வட்டவடிவமாகச் செய்து காய வைத்த வட்டிலில் புளிசாதமும் இருந்தது. ராஜேந்திரன் அதை ஒரு நாற்காலியில் அமர்ந்து உண்டான்.

வி ட்ட இடத்திலிருந்து ப்டிக்க ஆரம்பித்தான் ரமேஷ்.

இரவு மணி மூன்று.

தூக்கத்திலிருந்த பிரேம் ராஜுக்கு தன்னை ஒருவர் அடித்து எழுப்பியதில் ஏற்பட்ட அதிர்ச்சியையும் திகைப்பையும், கேட்ட செய்தி தந்த அதிர்ச்சி, ஒன்றுமே இல்லை என்று ஆக்கி விட்டது.

“கன்பர்ம்டா தெரியுமாடா லோகேஷு?” என்றான்.

“இதப் பாருடா மச்சி” லோகேஷ் தனது மொபைலை மூன்று நான்கு முறை அழுத்த ஒரு முகம் தெரிந்தது. உயிரற்ற முகம்.

“சசிகலாவோட அண்ணன் இல்லே இது?”, பிரேம்ராஜின் வார்த்தைகள் குழறித் தடுமாறின.

“நம்ப குண சேகரு ஸ்ரீபெரும்புதூரில தாண்டா வேலை பாக்குறான். அவன் அனுப்பின எம் எம் எஸ் தாண்டா இது”

“ஆஸ்பிட்டல்ல சேத்தாங்களா?”
“எடுத்துக்கிட்டுப் போனாங்க.. போறதுக்குள்ளே எல்லாமே முடிஞ்சி போச்சு”

“சசிகலா அப்பாவுக்குத் தெரியுமா?”

“தெரியும். அவுருதான் ஒரு மணிக்கி என்னை எளுப்பி யாருக்கும் தெரியாம விசாரிக்கச் சொன்னாரு. நாம ரெண்டு பேரும் உடனே கிளம்பறோம்”

பிரேம்ராஜ் தன்னையுமறியாமல் கடிகாரத்தைப் பார்த்தான். “கலியாணத்துக்கு இன்னும் நாலு மணி நேரம் கூட இல்லேடா”

“அதாண்டா. நீயும் நானும் ஐஸூ பெட்டி வண்டியோட போயிட்டு சாயங்காலம் போல சசி வீட்டுக்கு பாடியைக் கொண்டு போறோம்.”

“மேரேஜு?”

“அது நடக்கறத்துக்காகத்தாண்டா ரெண்டு பேரும் போறோம்”

கார் வரும் சத்தம் வாசிப்பை நிறுத்தியது. லதா உள்ளே நுழைந்ததும் ரமேஷ் எழுந்து நின்று கை கூப்பினான். செகரெட்டரி அவனை அறிமுகப் படுத்தினாள்.

“குட். ..காற்றினிலே வரும் கீதம் பாட்டு கேட்டிருக்கீங்களா?”
“இல்லே மேடம்”
“முதல்ல அதைக் கேளுங்க. அது ஒரு ஸீரியலுக்கு ஓபனிங் ஸாங்கா வருது. கிருஷ்ணர் மாதிரி ஒரு குழந்தைக்கு வேஷம் போட்டு யூனிட் வரும். இந்த ஸாங்குக்கு நீங்க தான் காமரா மேன்”
“ரொமப தேங்க்ஸ் மேடம்”
“ஒரு அவுட் டோர்ல உங்க பேரு அடிபட்டுது. இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சீங்களா?”
“இல்லே மேடம். ஸீனியர்ஸ்கிட்டே கத்துக்கிட்டது.”
“நீங்க டேலன்டட்னு உங்க ஸீனியர் தான் சொன்னாரு”
“ஆல் த பெஸ்ட்”

கண்ணன் சுப்ரமணியத்தின் விருப்பம் என்னவென்று கேட்காமலேயே விஸ்கியை வரவழைத்தான். சுப்ரமணியத்தால் இரண்டு ‘பெக்’கைக்கூட ஒரு மணி நேரம் உறிஞ்சி உறிஞ்சி அருந்த முடியும். பாவனை செய்கிறானோ என்று கூட சந்தேகமாயிருக்கும்.

“ராஜேந்திரன் எங்கே தான் போயிருப்பன்னு எதாவது ‘க்ளூ’ கெடச்சுதா கண்ணன்?”

“யாரும் கடத்தலையின்னு மட்டும் போலீஸுகிட்டேயிருந்து தெரிஞ்சிது”. ஆக்ஸிடென்ட், டெத் கேஸ் எல்லாத்தையும் வெரிஃபை பண்ணிட்டாங்க”

“உங்களைக் கடைசியா எப்பப் பாத்தான்?”

“என்ன ஒரு மாசத்துக்கு மேலேயே இருக்கும். ஸ்ரீபெரும்புதூர் ப்ராஜெக்ட் பூமி பூஜைக்கி வந்துட்டு இதே போல ராத்திரி பார்ட்டி வரைக்கும் இருந்தாப்ல”

“குடிக்காம முளிச்சிக்கிட்டே இருந்திருப்பானே?”

“கண்ணன். நான் பல தடவை எடுத்துச் சொல்லியிருக்கேன். ஆம்பளைங்க அரை பெக்காவது அடிக்கணும். இல்லேன்னா மென்டல் ப்ரஷர் ஜாஸ்தியாயிடும்”

“ராஜேந்திரன் நம்ப ரெண்டு பேரோட மூணாவது ஆளா ஒரு பார்ட்னரா ஆகவேயில்லியே சுப்ரமணியம். தன்னோட க்ளயண்ட்ஸ் தவிர நமக்குப் பிடிச்சுக் கொடுத்த க்ளயண்ட்ஸ்க்கு கமிஷன் பேஸிஸ்ல வெளியாளு மாதிரி தானே இருந்தான்?”

“நல்லாப் பேசுவான். படிச்சவங்க கிட்டே நிறைய பேசணும். எனக்குத் தெரியாதாங்கற மாதிரியே பேசுவாங்க. ஆனா நாமா நிறைய விவரம் சொன்னா சந்தோஷப் படுவாங்க”

“படிச்சவங்களை விட சினிமாகாரங்க கிட்டே தான் அவன் நிறைய காசு பாத்தான்”

“யாரு லதாவைச் சொல்றீங்களா? லதா வீட்டு டிஸைனைப் பாத்து அசந்து போயி மத்த சினிமாக் காரங்க ராஜேந்திரனை புக் பண்ணினாங்க”

“சுப்ரமணீ. அவன் கிட்டே பேச நிறையவே விஷயம் இருக்கும். ஒரு டிரிப்பு ஒரு பெரியவரு வசதியான ஆளு. பசங்க யூஎஸ்லே செட்டில் ஆயிட்டாங்க. ராஜேந்திரன் தான் சரியான ஆளு அப்படீன்னு கூட்டிக்கிட்டுப் போனேன். அவரு பகவத் கீதையை டிராயிங்க் ரூம்ல பிரிச்சமாதிரி வெச்சிருந்தாரு. ஷேத்ரன் ஷேத்ரஞன்னு ரெண்டு பேரும் பேசினாங்க பாருங்க. நான் அசந்தே போயிட்டேன்.”

” அது எப்படி இவ்வளவு கஷ்டமான சமஸ்கிருத வார்த்தையையெல்லாம் ஞாபகம் வெச்சிரிக்கீங்க?”
“கண்ணன் .. அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசினாங்க. டீல் ஒண்ணு முடியப் போவுதேன்னு நானும் பொறுமையாய்க் கேட்டுக்கிட்டிருந்தேன். அதுல இந்த ஷேத்ரன் ஷேத்ரஞன் இந்த ரெண்டு வார்த்தை தான் அடிக்கடி அடி பட்டுது”

“சுப்ரமணி. எனக்காவது உங்க மூலமாகத்தான் ராஜேந்திரன் அறிமுகம். நீங்க காலேஜிலேயிருந்தே அவனோட ப்ரண்ட். உங்க கிட்டே கூட ஒட்டின மாதிரித் தெரியலியே?”
“அவன் எப்பவுமே தனியாத் தான் திரிவான். என் பக்கத்துலே உக்காந்திருந்ததாலே கொஞ்சம் பளகினான். அவ்வளவு தான்”

ராஜேந்திரனிடமிருந்து இன்றும் ஈமெயில் இல்லை. தினமும் ஒரு மெயிலாவது வரும். அதில் “சாந்தி.. சாந்தி” என்று எத்தனை இடத்தில் நேரில் பேசுகிற மாதிரி அழைத்திருப்பான். பட்டிமன்றத்தில் பேசுவத்ற்கான வழக்கமான குறிப்புகளை எடுக்கவில்லை. மனம் ஒரு நிலையிலில்லை. மொபலையும் ஸ்விட்ச் ஆஃப் செய்திருக்கிறான்.
இருபது வருடம் கழித்து மறுபடி சந்தித்த போது எவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேச ஆரம்பித்தான்? எவ்வளவோ தற்காத்துக் கொண்டும் அவன் விருப்பப் படி உடலாலும் நெருங்கி நெக்குருகியது எவ்வளவு பெரிய சறுக்கல். இப்போது ஆணுக்கே உரிய விட்டெரியும் சுபாவத்தோடு கத்தரித்துக் கொண்டு விட்டான்.

காலேஜ் படிக்கும் போது ஏன் பயந்தோ தயங்கியோ குழம்பியோ ஓதுங்கினான்? சேர்த்து வைத்து இப்போது எதற்காக இவ்வளவு வேகம் காட்டினான்? “எக்ஸ்க்யூஸ் மீ மேடம்.” கண்களைத் துடைத்துக் கொண்டாள். கன்னத்தையும். ஏதோ ஒரு மாணவியின் குரல். “வாம்மா”. “மிட் டர்ம் டெஸ்டுக்கு சிலப்பதிகாரத்தில கேள்வி வருமா மிஸ்?”
“நாளைக்கி க்ளாஸ்ல சொல்றேன்”

நல்ல வேளை. இந்தக் குழந்தை கேட்டதால் பட்டிமன்றத்தில் பேச சிலப்பதிகாரத்திலிருந்து சிலவற்றை எடுத்துக் காட்டும் யுக்தி தோன்றியது.

Series Navigationகுறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்சாதி மூன்றொழிய வேறில்லை
author

சத்யானந்தன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    punai peyaril says:

    நவீன கதை, எவ்வித பாசாங்கும் இன்றி. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  2. Avatar
    Sathyanandhan says:

    Sir, Thank you. The content and form of this novel is different. The border between the real life and creative mind’s existence is very thin. Like the main character the readers can also transgress the boundaries and be audience and artist of an endless drama. Regards. Sathyanandhan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *