” இந்தியனாக இரு. இந்தியப்பொருட்களையே வாங்கு ! இந்தியனாக இரு. இந்தியப் பொருட்களையே வாங்கு ! ”
” டேய் யார்றா அது. நேரம் காலம் தெரியாம கூவறது ? ”
” ஏனப்பா ? தேச பக்திச் சாரம் மிக்க வார்த்தைகளைத் தானே சொல்கிறேன் ? தவறென்ன இதில் ? ”
” பார்லிமெண்டே அமளி துமளி படுது ! எதிர்க் கட்சிக்காரவங்க எல்லாம் அன்னிய முதலீடு சில்லறை வணிகத்தில கூடாதுன்னு கத்தறானுங்க . இதுல நீ வேற கவர்மெண்டடை எதிர்த்து கோஷம் போடறயே . ஒனக்கு எதுக்கு இந்த வேலை ? ”
” நான் அரசாங்கத்துக்கு எதிராக ஒன்றும் சொல்லவில்லையே ! முதலீடுதான் அன்னியனுடைதே தவிர விற்கப்போகும் பொருட்கள் இந்தியப் பொருட்கள்தானே ? ”
” அது சரி! இந்தியப் பொருட்கள விக்கறதுக்கு அன்னியன் எதுக்கப்பா? நீ என்ன அன்னியன்னா நம்ம சீயான் விக்ரம்னு நினைச்சுக்கிட்டியா? ”
” நான் ஒன்றும் அப்படி நினைக்கும் அளவிற்கு அறியாமை உடையவனல்ல ! இந்தியப் பொருட்களை சந்தையில் விற்கும் அல்லது சந்தைப் படுத்தும் இந்தியத் தரகர்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தை, விவசாயிகளின் மீதான சுரண்டலை நீ அறிவாயா ? ”
” அட என்னப்பா நீயி ? சீம உருளக் கிளங்கு கணக்கா இருப்பாரே நம்ம சென்ட்ரல் மினிஸ்ட்டரு, அவரு பேரென்ன ? பளைய கிரிக்கெட் கேப்டன் பேராக்கூட வருமேப்பா ? ”
” கபில்சிபல் அவர்களா ? ”
” கரெக்ட் ! அவரேதான் ! அவர மாதிரியில்ல நீ பேசற ? நம்ம ஊரு யாவாரிங்கள அவரு இடைத் தரகர்னு பேர் வச்சு அவங்களைப் பத்தி [பேசும்போது எவ்வளோ காட்டத்தோட பேசறாரு, கேட்ட இல்ல ? அவங்க எல்லாம் என்னவோ எம்ஜியார் படத்துல கண்ணக்கண்ண உருட்டிக்கிட்டு, கூட கையவேறப் பிசஞ்சுக்கிட்டு ஊர்மக்களுக்கெல்லாம் கெடுதல் செய்யறத மாத்திரம் தொழிலா வச்சுக்கிட்டு வருவாரே நம்பியாரு ! அவரைவிட மோசமான வில்லன் மாதிரி இல்ல நம்ம யாவாரிங்களக் கரிச்சுக் கொட்றாரு! அப்பாடியோவ் ! அந்த மினிஸ்ட்டர் பேசும்போது காடு மாதிரி வளர்ந்துகெடக்கற புருவத்துக்குள்ளேந்து அம்புஅம்பா வார்த்தைகள்ளாம் கொட்டற மாதிரில்ல இருக்கு ! ”
” அவர் திறமையான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் தெரியுமா ? ”
” அப்படிப்போடு ! அதான் வார்த்தை எல்லாம் கமல் குணா படத்துல பாடறா மாதிரி அருவி மாதிரி கொட்டுது. என்ன ஒண்ணுன்னா இது அமில அருவியாயிருக்கு ”
“கபில்சிபல் பேசுவது வெளி நாட்டிலிருந்து மூலதனம் கொண்டுவருபவர்களைப் பற்றி. அவர்களை நம் நாட்டின் இடைத் தரகர்களோடு ஒப்பிடக்கூடாது ”
” அடேங்கப்பா! வெளி நாட்டிலேந்து வெறும் முதல்தான் கொண்டுவர்றாங்களா, இல்ல வேற எதுனாச்சும் சேத்துக் கொண்டு வர்றாங்களா? ”
” இதுவரை பேசியதிலேயே இதுதான் அறிவுபூர்வமானதாய் உள்ளது. நல்லது. வெளி நாட்டினர் வெறும் மூலதனம் மட்டும் கொணரப் போவதில்லை. செழுமைமிக்க அவர்களின் மேலாண்மைத் திறனையும் நம் நாட்டில் வர்த்தகத்தை மேம்படுத்தக் கொண்டுவருவார்கள். மூலதனமும் மேலாண்மைத் திறனும் சேர்ந்து சிறு வாணிபத்தை வேறொரு தளத்திற்கு கொண்டு செல்லும் பாருங்கள் ”
” முதலோட அவங்க யாவாரத் தந்திரத்த நம்மகிட்ட காட்டப் போறாங்க, அப்படித்தானே ? அதாவது… முதலப் போட்டுட்டு, வெறும் தரகு வேலையோட நிக்காம, பொருளுங்கள விக்கற வேலையையும் சேத்து பண்ணப்போறாங்க… இல்லையா? ”
” வால்மார்ட் போன்ற வர்த்தக ஜாம்பவான்களை வெறும் தரகர்கள் என்ற பதத்திற்குள் அடைத்துக் கொச்சைப் படுத்தக்கூடாது ”
” வால்மார்ட் என்ன அமெரிக்கால இருக்கிற கடைதானே ? அமெரிக்காவுல விவசாயிங்கக் கிட்டேந்து அடிமாட்டு விலைக்கு வெங்காயத்தை வாங்கி .. வாங்கின விலையைவிட ஒம்பது மடங்கு வெச்சு மக்கள்கிட்ட வித்தவங்கதானே அவுங்க ? என்னமோ.. தேசத்துக்கு சேவை செஞ்சு பாரத ரத்னா வாங்கப்போறவங்க மாதிரி , ஜாம்பவான் அப்படி இப்படின்னு கரடி விடறீங்களேப்பா? அது சரி நம்ம நாட்டுல தேர்தல்ல தோக்கறதுக்கும் வெங்காயத்துக்கும் என்ன ஒரு இறுக்கமான தொடர்பு இருக்கு பாத்தியா ? ஆனா அமெரிக்காவில ஒண்ணும் அப்படியில்ல பாரு ”
” வர்த்தகம் என்றால் வெறும் சேவை மட்டுமல்ல. சேவையோடுகூடிய இலாபம் ஈட்டுதலுமாகும். அவர்களின் வளர்ச்சி சமூகக்கடமைகளோடு என்றும் இணைந்திருப்பது என்பது தெரியுமா ? ”
” இது என்னப்பா புதுசா இருக்கு ? சமூகக்கடமையா ? நம்ம நாட்டுக்குப் பக்கத்துல இருக்கிற பங்களாதேசத்தில இருக்கிற தஸ் ரீனுங்கற ஒரு ஆடை வடிவமைக்கற கம்பெனி தீப்பத்தி எரிஞ்சு நூத்திப் பண்ணெண்டு பேரு செத்துப்போனதுல அந்தக் கம்பெனிக்கும் பொறுப்பு இருக்குன்னு அமெரிக்க பத்திரிகைங்களே எளுதியிருக்காமே ? கம்பெனியில வேலை செய்யறவங்க பாதுகாப்புக்கு செலவு பண்ணுறதவிட ட்ரெஸ்ஸுங்க விலையை கொறைக்கறதுல கவனம் செலுத்தலாம்னு அந்தக் கம்பெனியோட இயக்குனர் ஒருத்தரு சொன்னாருன்னு விசாரணையெல்லாம் நடக்குதாமே ..! நீ என்னவோ சமூகக் கடமை அது இதுன்னு அந்தக் கம்பெனிக்குப் பொருந்தாத கெட்ட வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு .. ! ”
ஏதோ இந்தியாவில் வெளி நாட்டு முதலீட்டாளர்களே இல்லாதது போலவும் .. இப்போதுதான் அவர்கள் வர்த்தகத்தில் நுழைவதுபோலவும் எதிர்க்கட்சிகள் போலவே பேசுகிறீர்களே ? ”
” நல்லாச் சொன்னப்பா நீயி ! வெளி நாட்டு ஆளுங்க இப்ப என்ன புதுசாவா வர்த்தகம் பண்ண வர்றாங்க ? எவ்வளவு வருஷமா யாவாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க . ஆனா இப்போ இந்த மினிஸ்ட்டருங்க எல்லாம் என்ன செய்யணும்னு நினைக்கிறாங்கன்னா , வெளி நாட்டுக்காரன் தனியா இல்லாம நமாளுங்களோடக் கூட்டு சேந்து யாவாரம் பண்ணனும்கிறாங்களே ..! அது சரி … இந்த வால்மார்ட் நம்ம அதிகாரிங்களுக்கு லஞ்சம் கொடுத்து வால்தனம் பண்ணியிருக்குன்னு விசாரணை நடக்குதாமே ? ”
” இந்தியாவிலா விசாரணை நடக்கிறது ? ”
” என்னப்பா வெளயாடறயா ? இந்தியாவுல இந்த மாதிரி அவ்வளவு சீக்கிரம் விசாரணை கிசாரணயெல்லாம் நடந்துடுமா? இது அமெரிக்காவிலேயே நடக்குதாம் ”
” இப்படி எல்லாம் சொல்லிப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட நினைக்கும் முட்டாள்களின் கூட்டம் இருக்கத்தான் செய்யும் ”
” இது ஒண்ணும் புது சீர்திருத்தம் இல்லையே ? ஏற்கனவே விமானப் போக்குவரத்து , டீவி பத்திரிகைன்னு எல்லாத்துலேயும் வெளி நாடு உள்ள வந்திடுச்சே ?
” நம் தேசத்தில் பொருளாதாரம் பொதிந்த அரசியல் ஞானம் இல்லாதது எவ்வளவு துரதிர்ஷ்டம் தெரியுமா? ”
” ஆஹா! அரசியலயே ஒரு பெரிய பொருளாதாரக் களமா வெச்சு வெளயாடற தேசமப்பா இது ! கருணாநிதி , முலாயம் சிங், மாயவதி ஷரத் பவார்னு இந்த சீமைத் தரகர் விஷயத்துல எப்படி அரசியல்ல பொருளாதாரத்தைக் கலந்து எப்படி வெளையாடினாங்க பாத்தியா ? ஷரத் பவார் , தன்னோட மஹாராஷ்ட்டிரத்தைத் தவிர்த்து எங்க வேணும்னாலும் வெளி நாட்டுக்காரன் சிறு வர்த்தகத்தில முதலைப் போட்டு எப்படி வேணும்னாலும் யாவாரம் பண்ணிக்கட்டும்னு சொல்லிட்டாரு. மாயாவதியும் முலாயமும் கருணாநிதியும் காவிக் கட்சி ஆட்சிக்கு வந்துடக் கூடாதுங்கற உன்னத நோக்கத்துல இந்திய யாவாரிங்க எக்கேடாவது கெடட்டும்னு விட்டுட்டாங்க ! ஆனாலும் அவுங்க மனசெல்லாம் சிறு யாவாரிங்க நலனைப் பத்தித்தான் யோசிச்சிக்கிட்டே இருக்காம் ! ”
” அரசியல்வாதிகளை விடுங்கள் ! நம் பிரதமர் அகில உலகமும் போற்றும் ஒர் ஒப்பற்ற பொருளாதார நிபுணர் . அவர் ஒரு தீர்க்க தரிசனத்தோடுதான் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது கூடவா உங்களுக்குப் புரியவில்லை ? ”
நம்ம நாட்டோட பிரதம மந்திரி பொருளாதார நிபுணர்தான் . ஆனா.. எந்த மாற்றமா இருந்தாலும் அதைத் தடாலடியா திணிக்கக் கூடாதே ..! நம்ம நாட்டுக்குத் தேவையானத நாமதான் தீர்மானிக்கணும் ? நம்ம யாவாரி அடுத்த நாட்டுக்காரங்கிட்ட இடத்தையும் பொருளையும் கொடுத்துட்டு தெருவில நிக்கறது நல்லாவா இருக்கும் ? ஏய் .. ஏய் .. நில்லு ! நான் சொல்றத முளுக்கக் கேட்டுட்டுப் போ .. ! ”
” … இந்தியனாய் இரு ! அப்படியே ஊமையனாய் இரு .. அதுதான் உனக்கும் நல்லது .. நாட்டுக்கும் நல்லது ”
— ரமணி
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13