சிலப்பதிகாரத்தில் சிவ வழிபாடு

This entry is part 8 of 31 in the series 10 பெப்ருவரி 2013

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

சமயம் என்பது மனிதனால் அரிதாக உணரக்கூடியதாகும். ஆனால் எளிதாகப் புலப்படக்கூடியது இதனை, “இயற்கைக்கு அப்பாற்பட்டு விளங்கும் ஒரு பேருண்மையை நம்புவதுதான் சமயம் ஆகும்” என்கிறது வாழ்வியற் களஞ்சியம். அன்புக்கு அடுத்தபடியாக மனிதனை அமைதிப்படுத்தி அவனது உணர்வுகளைப் பண்படுத்தும் சிறந்த கருவியாகச் சமயம் பயன்படுகிறது. இங்ஙனம் மனிதனின் நாகரீகமான வளர்ச்சியில் பங்கெடுத்து அவனுடைய வாழ்க்கைப் போரில் இரண்டறக் கலந்து அவனுக்குச் சிறந்த வழிகாட்டியாக அமைகின்ற சமயங்களைத் தொடாத இலக்கியவாதிகளே இல்லை எனக் கூறலாம். இவ்வகையில் சிலப்பதிகாரம் அனைத்துச் சமயங்களையும் தொட்டுச் செல்கிறது.

சிலப்பதிகார ஆசிரியர் சமயச் சார்புடையவர் என்றும் சமயச் சார்பு அற்றவர் என்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களாலும் பல்வேறு கருத்துக்களாலும் விமர்சிக்கப்பட்டாலும், காப்பியத்தின் கதைப்போக்கு சமயச் சார்பைச் சார்ந்து நிற்காவிட்டாலும், அவரால் உருவாக்கப்பட்ட கதைமாந்தர்கள் ஒவ்வொரும் ஒரு சமயத்தைச் சார்ந்துதான் நிற்கின்றனர். அதிலும் சைவசமயக் கடவுளாக விளங்கும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகள் பல சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் சமயங்கள்

சிலப்பதிகாரத்தில் சமணம், பௌத்தம், சைவம், வைணவம் ஆகிய சமயச் சிந்தனைகள் நிறைந்து காணப்படுகின்றன. கவுந்தியடிகளையும் சாரணர்களையும் படைத்து, அவர்கள் வாயிலாகச் சமண சமயக் கருத்துகளை வெளியிடுகிறார். ஆய்ச்சியர் குரவை என்னும் காதை திருமால் வழிபாட்டை எடுத்துரைக்கிறது. குன்றக்குரவை முருக வழிபாட்டைப் பேசுகிறது. வேட்டுவவரி கொற்றவை வழிபாட்டைச் சிறப்பிக்கிறது. மாதவி, மணிமேகலை துறவு மூலம் பௌத்தக் கோட்பாடுகள் சிறப்பிக்கப்படுகின்றன. இவை தவிர இந்திரவிகாரம், மணிவண்ணன் கோட்டம், இலகொளிச் சிலாதலம், நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம், ஊர்க்கோட்டம் எனப் பல கோவில்கள் இருந்ததைச் சிலம்பு சுட்டுகிறது.

பிறவா யாக்கைப் பெரியோன்

இந்திரவிழவூர் எடுத்தகாதையில்,

”பிறவா யாக்கைப் பெரியோன்” (170-வது வரி)

என்று சிவனைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. இதற்கு அரும்பதவுரையாசிரியர்,

‘‘பிறவா யாக்கை – ஒருதாய் வயிற்றில் கருவாகி உருவாகி ஏனை உயிரினங்கள் பிறக்குமாறு போலப் பிறவாத உடம்பு. அஃதாவது யாதானுமொரு காரணம்பற்றி நினைப்பளவிலே தானே தனக்குத் தோற்றுவித்துக் கொள்ளும் உடம்பு. இத்தகைய உடம்பினைச் சைவசமயத்தவர் உருவத்திருமேனி என்பர். இதனை,

‘‘குறித்ததொன் றாக மாட்டாக் குறைவிலன் ஆக லானும்
நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமை யானும்
வெறுப்பொடு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமை யாலும்
நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளி னாலே’’

எனவரும் சிவஞானசித்தியார் (பக்கம்-65)ச் செய்யுளால் உணர்க.

மற்றும் திருமால் முதலிய கடவுளர் தாயர் வயிற்றில் கருவிருந்து யாக்கை கோடலான் திருவருளாலே நினைந்தவுடன் திருமேனி கொள்பவன் ஆதலிற் பிறவா யாக்கைப் பெரியோன் என்றார். மேலும், இவனே முழுமுதல்வன் என்பதுபற்றிப் பெரியோன் என்றும் விதந்தார். மகாதேவன் என அரும்பதவுரையாசிரியர் கூறியதும், அடியார்க்கு நல்லார் இறைவன் என்றதூஉம் இக்கருத்துடையனவே யாகும்.

சிவந்த சடையினை உடைய சிவபெருமான் திருவருளினாலே வஞ்சிப்பதி விளங்குமாறு உதித்த சேரன் என்று சேரன் செங்குட்டுவனை,

‘‘செஞ்சடை வானவன் அருளின் விளங்க

வஞ்சித் தோன்றிய வானவன்’’ (கால்கோள்காதை: 98-99)

 

என்ற வரிகள் தெளிவாக உணர்த்துகின்றன.

சிவ வழிபாடு

சிவ வழிபாடு என்பது சிவநெறி ஆகும். இதனைச் சைவநெறி என்றும் கூறலாம். சைவம் என்ற தொடர் சிவனோடு தொடர்புடையது என்னும் பொருளைத் தரும். ”சைவம் சிவனுடன் சம்பந்தமாவது” (திருமந்திரம், 1486) என்று திருமூலர் கூறுகிறார். எனவேதான் சிவநெறியை சைவநெறி என்றும் சைவ சமயம் என்றும் சுருக்கமாகச் சைவம் என்றும் குறிப்பிடுகிறோம்.

சேரன் செங்குட்டுவன் வடநாட்டுப் படையெடுப்பை மேற்கொண்டு புறப்படுகிறான். எல்லாப் பணிகளையும் முடித்தபிறகு வஞ்சி மாநகரில் எழுந்தருளியுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று யாருக்கும் வணங்காத தன் முடியைத் தாழ்த்தி வணங்கிவிட்டு யானைமேல் ஏறுகிறான். அந்த நிலையில் ஆடகமாடத்து அறிதுயில் அமர்ந்த திருமாலை வழிபடவேண்டும் என்று அவன் நினைக்கவில்லை.

யானைமேல் ஏறிவிட்ட பிறகு திருமால் கோயில் பிரசாதத்தைச் சிலர் ஏந்தி வருகின்றனர். அதைப் பெற்றுக் கொண்ட அவன் சிவபெருமானுடைய திருவடிகளின் அடையாளமான வில்வத்தைத் தன் உச்சந்தலையில் தரித்திருப்பதால் திருமால் பிரசாதத்தை வாங்கித் தன் தோளில் தரித்துக் கொண்டான் என்பதை,

‘‘நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி

உலகுபொதி யுருவத் துயர்ந்தோன் சேவடி

மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து

இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு’’

(கால்கோள்காதை: 54-57 )

—————————————————————————

—————————————————————————

கடக்களிறு யானைப் பிடர்த்தலை யேறினன்

குடக்கோக் குட்டுவன் கொற்றங் கொள்கென

ஆடக மாடத் தறிதுயிலமர்ந்தோன்

சேடங்கொண்டு சிலர்நின் றேத்தத்

தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்

வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்

ஆங்கது வாங்கி யணிமணிப் புயத்துத்

தாங்கினனாகி—–’’ (கால்கோள்காதை, 60-67)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இதில் சேரன் செங்குட்டுவன் சிறந்த சிவபக்தனாக விளங்குவதையும் அவனது சிவவழிபாடு குறித்தும் ஆசிரியர் தெளிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சேரன் சிவபெருமான் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு, யானைமேல் ஏறினான் என்றும் மட்டும் இளங்கோ பாடியிருப்பின் அது பொருத்தமுடையதாக இருந்திருக்கும். திருமால் கோயிலுக்கு அரசன் செல்லவில்லை என்பதே அவன் திருமால் வழிபாட்டில் நாட்டம் செலுத்தவில்லை என்பதை அறிவிக்கின்றது. அவ்வாறு இருந்தும் திருமால் பிரசாதத்தை ஒரு சிலர் கொண்டு சென்று யானை மேல் இருப்பவனுக்குக் கொடுத்தார்கள் என்று கூறாது  நீட்டினார்கள் வாங்கிக் கொண்டான் என்று கூறுவது ஏன் என்பது சிந்தித்தற்குரியதாகும்.

அதோடு மட்டுமல்லாது சிவபெருமான் திருவடி தலைமேல் இருப்பதால் இப்பிரசாதத்தை வாங்கிக் தோளில் தரித்துக் கொண்டான் என்று ஆசிரியர் பாடுவது சிவபெருமானின் சிறப்பை மிகுத்துக் கூறவேண்டும் என்பதற்காகவும், ஆசிரியருடைய ஆழ்மனத்தில் சிவபெருமான் மீதிருந்த உள்ளார்ந்த சிறப்பை எடுத்துக் கூறுவதற்கும் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் எனலாம்.

 

பெரியோன் தந்த திருநுதல்

சிலப்பதிகாரம் சிவபெருமானை பிறவா யாக்கைப் பெரியோன் என்றும், செஞ்சடை வானவன் என்று குறிப்பிடுகின்றது. மனையறம் படுத்த காதையில் கண்ணகியை வருணிக்கும் கோவலன் கண்ணகிக்கு,

‘‘குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்
உரிதின் நின்னோடு உடன்பிறப்பு உண்மையின்

பெரியோன் தருக திருநுதல் ஆகஎன,’’ (39-41வரிகள்)

 

எனச் சிவபெருமான் திங்களை நுதலாகக் கொடுத்ததாகப் பாராட்டுகின்றான். இக்காதையில் பெரியோன் என்று சிவபெருமான் குறிக்கப்படுவது நோக்கத்தக்கது.

 

திரிபுரம் எரித்ததும் கொடுகொட்டிக் கூத்து ஆடியதும்

தேவர்கள் தமக்கின்னல் செய்கின்ற அசுரருடைய முப்புரமும் எரியும்படி வேண்டினர்.  சிவபெருமான் அவர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, வடவைத் தீயை நுனியிலுடைய பெரிய அம்பில் வைத்து ஏவி அசுரரை அழித்து முடித்தமையாலே; (அசுரர் வெந்து விழுந்தனர். இதனைக் கண்டு பைரவி ஆடியதனால் பாரதியரங்கம் என்னும் பெயர் பெற்ற சுடுகாட்டின் கண்; தனது ஒரு கூற்றிலே நின்று உமையன்னை பாணிதூக்குச் சீர் என்னும் தாளங்களைச் செலுத்த; தேவர்கள் யாரினும் உயர்ந்த தேவனாகிய இறைவன்; வெற்றிக் களிப்பாலே ஆடியருளிய கொடுகொட்டி என்னும் ஆடல் ஆகும். இதனை,

‘‘சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும், (கடலாடு காதை, 38-43)

என்ற கடலாடுகாதையில் சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது. திரிபுரம் தீமடுத்தெரியக் கண்டு இரங்காது கைகொட்டி நின்று ஆடிய கொடுமையுடைத்தாகலின் கொடுங்கொட்டி என்பது பெயராயிற்று. கொடுங்கொட்டி கொடுகொட்டி என விகாரமெய்தி நின்றது அரும்பத உரையாசிரியர் குறிப்பிடுவது சிறப்பிற்குரியதாக அமைந்துள்ளது.

சிவன் கொடுகொட்டிக் கூத்தினை ஆடிய முறையினை,

‘‘திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய் புலம்பவும்,
பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,
செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,
செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;

பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,
மேகலை ஒலியாது, மென் முலை அசையாது,
வார் குழை ஆடாது, மணிக்குழல் அவிழாது,
உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்’’ (நடுகற்காதை,67-75வரிகள்)

என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

அழகு நிலைபெற்றிருக்கின்ற சிவந்த அடியின்கண் அணிந்துள்ள சிலம்பு வாய்விட்டு முரலாநிற்பவும்; சிவந்த கையிலே ஏந்திய ஒலிபடுகின்ற துடிமுழங்கவும்; சிவந்த கண்கள் எண்ணிறந்த கருத்துகளை வெளியிட்டருளவும் சிவந்த சடை பரந்து சென்று எட்டுத் திசைகளையும் துழாவவும்; தனது ஒரு கூற்றிலமைந்த தேவியின் உருவின்கண் உள்ள சிலம்பு அசையாமலும் வளையல் குலுங்காமலும் மேகலை ஒலியாமலும் மெல்லிய முலை அசையாமலும் நீண்ட காதணியாகிய தோடு ஆடாமலும் நீலமணிபோன்ற நிறமுடைய கூந்தல் அவிழாமலும் இறைவி தனது ஒரு கூற்றிலே அமைந்திருப்ப; ஏனைக் கடவுளரினும் உயர்ந்த கடவுளாகிய பிறவா யாக்கையின் பெரியோன் ஆடி யருனிய கொட்டிச்சேதம் என்னும் கூத்தின் ஆடிக் காட்டுதலாலே கூத்தச் சாக்கையன் அரசனிடம் பரிசில் பெற்று மகிழ்வுடன் சென்றான் என்று கொடிகொட்டிக் கூத்து ஆடிய முறை பற்றிய செய்தியானது நடுகற்காதையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

சிவனின் மகன் முருகன்

 

சிவனின் மகன் முருகன். இதனை,

‘‘கயிலை நல் மலை இறை மகனை! நின் மதி நுதல்
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார்,
செயலைய மலர் புரை திருவடி தொழுதேம்
அயல்-மணம் ஒழி; அருள், அவர் மணம் எனவே’’

(வஞ்சிக்காண்டம், குன்றக்குரவை, 12 – 15 வரிகள்)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதில் கயிலாயம் என்னும் அழகிய மலையின்கண் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுடைய மகனாகிய முருகப் பெருமானே என்று குறிப்பிடப்படுவதிலிருந்து இதனை அறியலாம். ஆனால் “செங்குட்டுவன் சைவன்” என்பதை இளங்கோவடிகளே கூறியுள்ளமையைச் சுட்டிச் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளும் சைவரே என்று தோன்றுகிறது என்பார் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை.

கொற்றவையும் உமையம்மையும்

வேட்டுவ வரியில் கொற்றவையை தனிப்பட்ட சொற்களால் இளங்கோ புகழ்வதும், உமையம்மையைப் புகழ்வது போன்று உள்ளது. காடுகாண் காதையில் வசந்தமாலை வடிவில் வந்த சிறுதெய்வத்தை வெருட்டக் கோவலன் பாய்கலைப் பாவை மந்திரத்தைப் பயன்படுத்துகின்றான். இங்கு இளங்கோ குறிப்பிடும் பாய்கலைப்பாலை கொற்றவையாகும். சங்க இலக்கியங்களில் வரும் காடுகிழாள் என்றும் கொற்றவை என்றும் வரும் தெய்வம் போரில் ஈடுபடுபவர்க்கு வெற்றி வாய்ப்புத் தரும் தெய்வமாகவே பேசப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இளங்கோவடிகள் குறிக்கும் கொற்றவை சிவபெருமானின் இடப்பக்கம் உறைபவளாகவும், உமையம்மையின் இலக்கணங்களைப் பெற்றவளாகவும் பேசப்படுவது நோக்கத்தக்கது. அடிகள் கூறும் மதுராபதித்தெய்வமும் உமையொரு பாக வடிவத்தையே வருணிப்பதாக உள்ளது.  இவை அனைத்தும் சைவ சமய வழிபாட்டின் கூறுகளாகக் கொள்ளலாம்.

சிலம்பில் செஞ்சடைக்கடவுளான சிவபெருமானும் செஞ்சடை வானவன், பிறவாயாக்கைப் பெரியோன், நிலவுக்கதிர் முடித்த நீலிருஞ்சென்னி, உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் என்றெல்லாம் குறிக்கப்பட்டு அவன் ஆடுகின்ற கொடுகொட்டி, கூத்து வகைகளும், மதியினைப் சூடியமை நஞ்சுண்டகண்டம் கருத்தமை, சூலாயுதம் ஏந்தியமை போன்ற தோற்றப் பொலிவுகளும் சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளாகச் சிலம்பில் காணப்படுகின்றன. சேரன் செங்குட்டுவன், மிகச் சிறந்த சைவ பக்தனாக விளங்கியது சிறப்பிற்குரிய ஒன்றாகும். சைவ சமயத்தின் வினைக் கோட்பாடும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.

————————————————-

Series Navigationபோதி மரம் பாகம் ஒன்று – யசோதரா அத்தியாயம் – 7நிஜமான கனவு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Comments

  1. Avatar
    senthil kumar says:

    The author has done a splendid job! good research and estabilish that Siva is Tamil’s God from the unknown period!! The article written with several quotes from Silapadhigaram and the praising of Lord Siva is not different from the Nalvar’s Thevaram and Thiruvasagam.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *